Damayanti's speech unto a tiger | Vana Parva - Section 64a | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
வேடனை அழித்த தமயந்தி, நளனைத் தேடி காடு முழுவதும் அலைவது; நளனை நினைத்துப் புலம்புவது; புலியிடம் பேசுவது...
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட தமயந்தி அந்த வேடனை அழித்த பிறகு, வெட்டுக்கிளிகளின் கீச்சொலிகளால் நிறைந்த அந்தத் தனிமையான பயங்கரக் காட்டில் தொடர்ந்து முன்னேறினாள். அந்தக் காடு, சிங்கங்களாலும், சிறுத்தைகளாலும், ருருக்களாலும் {மான்களாலும்}, புலிகளாலும், எருமைகளாலும், கரடிகளாலும் நிறைந்திருந்தது. அது பலவகையான பறவைகளாலும், பாதிப்படைந்த திருடர்களாலும், மிலேச்ச குடிகளாலும் மொய்க்கப்பட்டிருந்தது. அது சாலம் {ஆலமரமாக இருக்க வேண்டும்}, மூங்கில், தவம், அஸ்வதம் {அரசு}, திந்துகம், இங்குதை, கின்சுகம் {பலாசு}, அர்ஜுனம் {மருது}, நிம்வம் {அரிஷ்டம்}, தினிசை {ஸ்யந்தனம்}, சல்மலை {முள்ளிலவு}, ஜம்பு {நாவல்}, மா, லோத்ரம், கதேச்சு {கருங்காலி}, தேக்கு, பிரம்பு, பத்மகம், அமலாஹம் [Amalaha] {நெல்லி}, ப்லக்ஷம், கடம்பு, உதும்பரம் [Udumbara]{அத்தி}, பதரி [Vadari]{இலந்தை}, வில்வம், ஆலமரம், பிரியாளம், பனை, பேரீச்சம், ஹரிதகம் {கடுக்காய்}, விபிதகம் {தான்றி} ஆகிய மரங்களைக் கொண்டிருந்தது.
பல பறவைகளால் இன்னிசையெழுப்பப்பட்டு, அற்புதமான காட்சிகளும், பல நதிகளும், ஏரிகளும், குளங்களும், பல்வகை பறவை மற்றும் விலங்குகளையும், பலவகைப்பட்ட தாதுக்களையும் கொண்ட பல மலைகளை விதரப்ப்ப இளவரசி {தமயந்தி} கண்டாள். அவள் எண்ணற்ற பாம்புகளையும், குட்டிச்சாத்தான்களையும், கடும் முகத்தோற்றம் கொண்ட ராட்சசர்களையும், தடாகங்களையும், குளங்களையும், சிறு குன்றுகளையும், சிற்றோடைகளையும், அழகான தோற்றம் கொண்ட நீரூற்றுகளையும் கண்டாள். அந்த விதரப்ப்ப இளவரசி {தமயந்தி}, எருமைக்கூட்டங்களை அங்கே கண்டாள். காட்டுப் பன்றிகளையும், கரடிகளையும், பல பாம்புகளையும் அந்தக் கானகத்தில் கண்டாள். அறம், புகழ், நற்பேறு, பொறுமை ஆகியவற்றால் பாதுகாப்பாக இருந்த தமயந்தி அந்தக் கானகத்தில் தனியாக நளனைத் தேடிக் கொண்டிருந்தாள். பீமனின் அரச மகள் {தமயந்தி}, தனது தலைவனின் பிரிவால் மட்டுமே துயருற்று, அந்தப் பயங்கரமான காட்டில் எதைக்குறித்தும் அஞ்சாமல் இருந்தாள்.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, துயர்நிறைந்த அவள் {தமயந்தி} ஒரு கல்லில் அமர்ந்து, கணவனால் ஏற்பட்ட துயரின் காரணமாக தனது உறுப்புகள் அனைத்தும் நடுங்கப் புலம்பினாள், "ஓ நிஷாதர்களின் மன்னா {நளரே}, ஓ அகன்ற மார்பும் பலம் பொருந்திய கரங்களும் கொண்டவரே, ஓ மன்னா, இந்தத் தனிமையான கானகத்தில் என்னை விட்டு நீர் எங்கு சென்றீர்? ஓ வீரரே, குதிரைவேள்விகளையும் {அசுவமேத வேள்வியையும்} இன்னபிற வேள்விகளையும் செய்தீர், (அந்தணர்களுக்கு} தாராளமாகப் பரிசுகளைக் கொடுத்தீர், என்னிடம் மட்டும் ஏன் பொய்யாக நடக்கிறீர்? ஓ மனிதர்களில் சிறந்தவரே, ஓ பெரும் பிரகாசம் கொண்டவரே, ஓ மங்களமானவரே, எனக்கு முன்பாக நீர் ஏற்ற உறுதிமொழியை நினைத்துப் பாரும்.
ஓ ஏகாதிபதி {நளரே}, வானத்தில் பறக்கும் அன்னங்கள் உமக்கு எதிரிலும் எனக்கு எதிரிலும் என்ன பேசின என்பதை நினைத்துப் பாரும். ஓ மனிதர்களில் புலியே, நீர் கற்ற அங்கங்கள், உப அங்கங்களுடன் கூடிய நான்கு வேதங்கள் முழுமையையும் ஒரு புறமும், உண்மை மறு புறமும் இருக்கும்போது சமமாகவே இருக்கும். ஆகையால், ஓ எதிரிகளைக் கொல்பவரே, ஓ மனிதர்களின் தலைவா, அவற்றை நினைத்து, முன்பு என்னிடம் சொல்லிய வார்த்தைகளை உண்மையாக்குவதே உமக்குத் தகும். ஐயோ, ஓ வீரரே, ஓ நளரே, ஓ பாவமற்றவரே, நான் இந்த பயங்கராமன கானகத்திலேயே அழியப் போகிறேன். ஓ நீ ஏன் எனக்கு பதில் அளிக்கவில்லை? கடும் பசியில் இருக்கும், கடும் முகத்தோற்றம் கொண்ட இந்தப் பயங்கரமான கானகத்துக்கு அரசன் {சிங்கம்}, தனது தாடைகளை விரித்து என்னை பயத்தால் நிறைக்கிறது. நீர் ஏன் என்னைக் காக்க வரவில்லை? 'உன்னைவிட எனக்கு அன்பானவள் யாரும் இல்லை' என்று சொன்னீரே.
ஓ அருளப்பட்டவரே, ஓ மன்னா, நீர் முன்பு பேசிய வார்த்தைகளுக்கு நன்மை செய்யும். ஓ மன்னா {நளரே}, உம்மால் காதலிக்கப்பட்டும், என்னால் நீர் காதலிக்கப்பட்டும், உணர்விழந்து அழுது கொண்டிருக்கும் உமது அன்பான மனைவிக்கு ஏன் பதிலளிக்க மறுக்கின்றீர்? ஓ பூமியின் மன்னா, ஓ மரியாதைக்குரியவரே, ஓ எதிரிகளை ஒடுக்குபவரே, ஓ அகன்ற கண்கள் உடையவரே, உடல் மெலிந்து, இடரால் பாதிக்கப்பட்டு வெளிர் நிறம் கொண்டு, நிறமாற்றம் அடைந்து, பாதி ஆடையுடன், மந்தையில் இருந்து பிரிந்த வெள்ளாடு போல அழுதுகொண்டு, புலம்பிக் கொண்டிருக்கும் என்னை ஏன் கருதிப்பாராமல் இருக்கிறீர்?
ஓ ஒப்பற்ற இறையாண்மை கொண்டவரே, உமக்கு என்னை அர்ப்பணித்திருக்கும் தமயந்தியான நான் இந்தப் பெரும் கானகத்தில் தனிமையில் உம்மிடம் பேசுகிறேன். அப்படியிருந்தும் ஏன் எனக்கு மறுமொழி கூறாமல் இருக்கிறீர்? ஓ மனிதர்களின் தலைவா, ஓ உன்னத பிறப்பும் நடத்தையும் கொண்டு அருள் நிறைந்த அங்கங்கள் கொண்டவரே, நான் இன்று உம்மை இந்த மலையில் காணவில்லையே! ஓ நிஷாதர்களின் மன்னா, ஓ மனிதர்களில் முதன்மையானவரே, ஓ எனது துயரை அதிகரிப்பவரே {நளரே}, சிங்கங்களாலும், புலிகளாலும் முற்றுகையிடப்படும் இந்தப் பயங்கரமான காட்டில் நீ படுத்துக் கொண்டிருக்கிறீரா? அமர்ந்திருக்கிறீரா? நின்று கொண்டிருக்கிறீரா? அல்லது இங்கிருந்து சென்றுவிட்டீரா? இதை அறிந்து கொள்ள, "மன்னன் நளரை இந்தக் கானகத்தில் கண்டீரா?" என உம்மீது கொண்டிருக்கும் துயரத்தால் நான் யாரிடம் கேட்பேன்? "என்னைப் பிரிந்தவரும், உயர் ஆன்மா கொண்ட, எதிரிகளின் படையை அழிக்கும் அழகானவருமான நளரைக் கண்டீரா?" என்று இந்தக் கானகத்தில் நான் யாரிடம் விசாரிப்பேன். "நீ தேடும் தாமரை இதழ் போன்ற கண்களையுடைய மன்னர் நளர் இங்கே தான் இருக்கிறார்" என்ற இனிமையான வார்த்தைகளை இன்று நான் யாரிடம் கேட்பேன்?"
இதோ கானக மன்னனான அழகான முகம் கொண்ட புலி, நான்கு பற்களுடனும், பெரிய கன்னங்களுடனும் வருகிறது. அதனிடம் நான் பயமில்லாமல் இப்படிப் பேசுவேன். நான் அதனிடம் "நீயே விலங்குகளின் மன்னன், நீயே இந்தக் கானகத்திற்கும் மன்னன். என்னை விதரப்ப்ப மன்னனின் மகளாகவும், எதிரிகளை அழிக்கும் நிஷாத மன்னனின் {நளரின்} மனைவியாகவும் இருக்கும் தமயந்தி என்று அறிந்து கொள். இடர்பாடுகள் மற்றும் துயரால் பீடிக்கப்பட்டு, நான் தனிமையில் இந்தக் கானகத்தில் எனது கணவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஓ விலங்குகளின் மன்னா, நீ அவரைக் கண்டிருந்தால் எனக்கு (நளர் குறித்த செய்தியைக் கூறி} ஆறுதல் கூறு. ஓ கானக மன்னா, நளரைக் குறித்து உன்னால் பேச முடியவில்லை என்றால், ஓ விலங்குகளில் சிறந்தவனே, நீ என்னை விழுங்கி இந்தப் பெரும் துன்பத்தில் இருந்து என்னை விடுதலை செய்." என்பேன் {என்றாள் தமயந்தி}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.