Bhima saw the Saugandhika lotus! | Vana Parva - Section 151 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
பல தோப்புகளையும், ஆறுகளையும் கடந்து சென்ற பீமன் சௌகாந்திக தாமரையை அடைவது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த வானரங்களில் முதன்மையானவன் {ஹனுமான்} சென்றதும், மனிதர்களில் பலசாலியான பீமன், அந்தப் பெரும் கந்தமாதன மலையின் வழியில் சென்றான். அப்போது அவன் மனதில் ஹனுமானின் உடல் பிரகாசம் பூமியில் ஒப்பற்றது என்றும், தசரதன் மகனின் {ராமனின்} பெருமைகளையும், உயர்ந்த மதிப்பையும் நினைத்துக் கொண்டான். அந்த வகை தாமரைகள் நிறைந்த பகுதியைத் தேடி முன்னேறிய பீமன், அழகான கானகங்களையும், தோப்புகளையும், ஆறுகளையும், பூத்துக்குலுங்கும் மரங்கள் அடர்ந்த தடாகங்களையும், பலவண்ணங்களில் பூக்களைக் கொண்டிருக்கும் காடுகளையும் கண்டான்.
ஓ! பாரதா {ஜனமேஜயா}, மழை பொழியும் மேகங்களைப் போல, உடலெல்லாம் புழுதி பூசிய மத யானைக்கூட்டங்களை அவன் {பீமன்} கண்டான். அந்த அருள் நிறைந்தவன் {பீமன்} மிக விரைவாகச் செல்லும்போது கானகத்தின் பக்கங்களில், வாயில் புற்களுடனும், அருகில் தங்கள் துணையுடனும் மான்கள் நின்று கொண்டிருப்பதையும் கண்டான். பராக்கிரமத்தால் அச்சமற்ற பீமசேனன், தென்றலால் அசைந்த நறுமணமிக்க மலர்களும், தாமிர வண்ண கிளைகளும் கொண்ட மரங்கள் வரவேற்றது போல, எருமைகளும், கரடிகளும், சிறுத்தைகளும் நிறைந்த மலைப்பகுதிக்குள் நுழைந்தான்.
வழியில் மயங்கித் திரியும் கருவண்டுகளால் மொய்க்கப்பட்ட பல தாமரைத் தடாகங்களைக் கடந்து சென்றான் {பீமன்}. அழகிய உயிரினங்களையும், காடுகளையும் தாண்டி இருக்கும் தாமரை மொட்டுகள் அவனை {பீமனை} கரங்கள் கூப்பி வரவேற்பது போல இருந்தது. திரௌபதியின் வார்த்தைகளை வழியுணவாகக் கொண்டு பீமன் விரைவாகச் சென்று, பூத்துக் குலுங்கும் மலைச்சரிவுகளிலேயே தனது மனத்தையும், பார்வையையும் நிலைக்க வைத்தான். கதிரவன் உச்சியைக் கடந்த போது, மான்கள் பரவிய அந்தக் காட்டில், பொன்மயமான தாமரைகள் நிறைந்த ஒரு பெரும் நதியைக் கண்டான். அன்னங்களாலும், நீர்க்காக்கைகளாலும், சக்கரவாகப் பறவைகளாலும் நிறைந்த அந்த நதி, அழகான புதிய தாமரைகளால் ஆன மாலை {ஆரம்} அந்த மலை மீது போடப்பட்டது போல இருந்தது. அந்தப் பெரும்பலம்வாய்ந்தவன் {பீமன்}, அந்த நதியில் மகிழ்ச்சியை அளிக்கும் உதயசூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட சௌகாந்திக தாமரைகளின் பெரும் கூடத்தைக் கண்டான். அதைக் கண்ட பாண்டுவின் மகன் {பீமன்}, விரும்பியதை அடைந்தவனாக உணர்ந்து, கானக வாசத்தால் துன்பத்தில் இருக்கும் தனது அன்புக்குரியவளின் {மனைவியான திரௌபதியின்} முன்பாக மானசீகமாக நின்றான்.