Showing posts with label தீர்த்தயாத்ரா பர்வம். Show all posts
Showing posts with label தீர்த்தயாத்ரா பர்வம். Show all posts

Sunday, June 01, 2014

நகுஷன் ஞானம்! - வனபர்வம் பகுதி 180

The wisdom of Nahusha! | Vana Parva - Section 180 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனிடம் திருப்தி கொண்ட பாம்பின் உருவத்தில் இருந்த நகுஷன், பல விஷயங்களை யுதிஷ்டிரனுக்குத் தெளிவாக்குவது; நகுஷன் தனக்கு பாம்பின் உருவம் ஏற்படக் காரணமான நிகழ்ச்சியைச் சொல்வது; நகுஷன் பீமனை விட்டுவிட்டு சுய உருவம் கொண்டு சொர்க்கம் சென்றது...

யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "இவ்வுலகில் நீ வேதங்களையும், வேதாங்கங்களையும் கற்றவனாக இருக்கிறாய். (எனவே) ஒருவன் முக்தியடைய என்ன செய்ய வேண்டும்? என்பதை எனக்குச் சொல்" என்றான்.

அந்தப் பாம்பு {நகுஷன்}, "ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, சரியான காரியங்களுக்குப் பிச்சை அளிப்பது {தானம்}, அன்பான வார்த்தைகள் பேசுவது {இன்சொல்}, உண்மை சொல்வது {சத்தியம்}, எந்த உயிரினத்துக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது {அஹிம்சை} ஆகியவற்றைச் செய்யும் மனிதன் சொர்க்கம் செல்கிறான் என்பது எனது நம்பிக்கை" என்று பதிலுரைத்தான் {நகுஷன்}.

யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! பாம்பே, இரண்டில் எது உயர்ந்தது, உண்மையா? {சத்தியமா?} அல்லது பிச்சையளிப்பதா? {தானமளிப்பதா?} அன்பான நடத்தை {இன்சொல்}, எவ்வுயிருக்கும் தீங்கிழையாமை {அஹிம்சை} ஆகியவற்றின் பெரிய அல்லது சிறிய முக்கியத்துவத்தையும் எனக்குச் சொல்" என்று கேட்டான்.


அந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்} , "உண்மை {சத்தியம்}, பிச்சையிடுதல் {தானமளித்தல்}, அன்பான பேச்சு {இன்சொல்}, எவ்வுயிருக்கும் தீங்கிழையாதிருப்பது {அஹிம்சை} ஆகியவற்றின் இந்தப் பண்பு ஒப்புமையிலான சிறப்புகள், அவற்றைச் செய்யும் நோக்கத்தின் ஈர்ப்பால் (பயன்பாட்டால்) {அளவிடப்பட்டு} அறியப்படுகிறது. (சில நேரங்களில்) தானச் செயல்கள் சிலவற்றை விட, உண்மை அதிகம் பாராட்டப்படுகிறது; தானங்களில் சில, உண்மை பேசுவதை விட வரவேற்கத்தக்கதாக இருக்கின்றன. அதே போல, ஓ! பெரும் வலிமைமிக்க மன்னா, பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, எவ்வுயிருக்கும் தீங்கிழையாமல் இருப்பது {அஹிம்சை} நல்ல பேச்சை விட முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது, அதேபோல நேர்மாறாகவும் தெரிகிறது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, விளைவுகளைச் சார்ந்து இருந்தாலும் அப்படியே ஆகிறது. இப்போது, உனக்குக் கேட்கவேண்டிய ஏதாவது இருந்தால், அனைத்தையும் கேள், நான் அவற்றை உனக்குத் தெளிவுபடுத்துவேன் {I shall enlighten thee}" என்று மறுமொழி கூறினான் {நகுஷன்}.

யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! பாம்பே, சொர்க்கத்திற்குச் செல்லும் உடலற்றவன் {உடலை விட்டவன்}, புலன்களால் உணர்வது மற்றும் புலன்களால் செய்யப்படும் மாற்றமுடியாத கனிகளை {பலன்களை} (இங்கே புவியில்) அனுபவிப்பது ஆகியவற்றை நாம் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?" என்று கேட்டான்.

அந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, "தனது செயல்களால், மனித இருப்பு, சொர்க்கவாழ்வு அல்லது தாழ்ந்த விலங்காய் பிறப்பு என மூன்று {3} நிலைகளை மனிதன் அடைவது காணப்படுகிறது. இவற்றில், சோம்பலற்று, எவருக்கும் தீங்கிழைக்காது, தானம் மற்றும் பிற அறங்களைக் கொண்ட மனிதன், மனிதர்களின் உலகைவிட்டு வெளியேறிய பிறகு, சொர்க்கத்திற்குச் செல்கிறான். இதற்கு நேர்மாறாகச் செய்வதன் மூலம், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்கள் மீண்டும் மனிதனாகவோ அல்லது தாழ்ந்த விலங்குகளாகவோ பிறக்கிறார்கள்.

ஓ! எனது மகனே {யுதிஷ்டிரனே}, குறிப்பாக இந்தத் தொடர்பில்தான், கோபம் மற்றும் காமம் மூலம் இயங்குபவனும், பேராசை மற்றும் துர்க்குணத்திற்குத் தன்னை அளித்தவனும், மனித நிலையில் இருந்து விழுந்து, தாழ்ந்த விலங்காக மறுபடியும் பிறக்கிறான். மேலும், தாழ்ந்த விலங்குகளும் மனித நிலைக்கு மாறுவதற்கு விதிக்கப்பட்டிருக்கின்றன; மாடு, குதிரை மற்றும் பிற விலங்குகள் தெய்வீக நிலையை அடைவதும் கவனிக்கப்பட்டுள்ளது.1 ஓ! எனது மகனே {யுதிஷ்டிரனே}, புலன் உணர்ச்சி கொண்ட ஒருவன், தனது செயல்களின் கனிகளை அறுத்து {செயல்களின் பலனைப் பெற்று}, இப்படி இந்த நிலைகளில் உடல் மாறிப் {வேறு உடலைப் பெற்று} பிறக்கிறான் {transmigrates}. ஆனால் மறுபிறப்பு பிறந்த ஞானி, நித்தியமான பரமாத்வாவில் தனது ஆன்மாவை இளைப்பாற்றுகிறான். உள்ளார்ந்த ஆவி {ஜீவாத்மா}, விதியால் கட்டப்பட்டு, தனது செயல்களின் கனிகளை அறுத்து, பிறப்புக்குப் பின் பிறப்பை அடைந்து கொண்டே இருக்கிறான். ஆனால், தனது செயல்களின் தொடர்பை இழந்த ஒருவன், பிறந்த அனைத்தினுடைய மாற்றமுடியாத விதியையும் உணர்கிறான்." என்று மறுமொழி கூறினான் {நகுஷன்}. 2

யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! பாம்பே, ஒலி, தொடு உணர்வு, உருவம், மணம், சுவை ஆகியவற்றை ஒரு பிரிந்த ஆவி {பிரிந்த உயிர்} எவ்வாறு உணர்ந்து அறிகிறது என்பதில் குழப்பமில்லாமல் எனக்கு உண்மையைச் சொல்வாயாக. ஓ! உயர்ந்த மனம் கொண்டவனே {நகுஷனே}, நீ ஏன் காரியங்களை ஒரே சமயத்தில் அறிவதில்லை? ஓ! பாம்புகளில் சிறந்தவனே, {நகுஷனே} இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிப்பாயாக" என்று கேட்டான்.

அந்தப் பாம்பு {நகுஷன்- யுதிஷ்டிரனிடம்}, "ஓ! நீண்ட ஆயுள் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, ஆத்மா {ஆவி} என்று அழைக்கப்படும் பொருள், உடலுக்குள் குடியேறி, உணர்வு உறுப்புகளின் மூலம் வெளிப்பட்டு, காணப்படும் பொருட்களை உணர்ந்தறிகிறது. ஓ! பாரதக் குலத்தின் இளவரசனே {யுதிஷ்டிரா}, உணர்வு, மனம், புத்தி, ஆகியவை பொருட்களைக் காண்பதற்கு ஆன்மாவுக்குத் துணைபுரியும் கரணங்கள் {காரணிகள்} என்று அழைக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள். ஓ! எனது மகனே, நித்தியமான ஆவி {ஆன்மா}, மனதின் துணை கொண்டு, தனது கோளத்தை விட்டு வெளியே வந்து, புலன்கள் மூலம் செயல்பட்டு, அனைத்து உணர்வுகளையும் வாங்கிக் கொண்டு, வெற்றிகரமாக அனைத்தையும் {ஒலி, உருவம் {காட்சி}, மணம் போன்றவற்றைக்} காண்கிறது {உணர்கிறது}. ஓ! வீரமிக்கவனே {யுதிஷ்டிரனே}, உயிரினங்களின் மனமே அனைத்து உணர்வுகளுக்கும் {அறிவுக்கும்} காரணமாக இருக்கிறது. எனவே, அது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை உணர்ந்தறிய முடியாது. அந்த ஆவி {ஆன்மா}, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, புருவ மத்தியில் தனது இடத்தை அடைந்து, பலவிதமான பொருட்களை அறிய உயர்ந்த மற்றும் தாழ்ந்த அறிவாற்றலை அனுப்புகிறது. யோகிகள் அறிவார்ந்த கோட்பாட்டைச் செயல்படுத்திய பிறகு, ஆன்மாவின் செயல்கள் வெளிப்படுவதைக் காண்கின்றனர்" என்று மறுமொழி கூறினான் {நகுஷன்}.


யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "மனம் மற்றும் புத்தியின் {அறிவாற்றலின்} தனித்துவமான பண்பு வேறுபாட்டை எனக்குக் கூறு. இவற்றின் ஞானமே பரமாத்மாவை தியானிக்கும் மனிதனுக்குத் தலைமை கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது" என்று சொன்னான்.

அந்தப் பாம்பு {நகுஷன்- யுதிஷ்டிரனிடம்}, "மாயையின் மூலம், ஆன்மா அறிவாற்றலுக்கு அடிபணிந்து போகிறது. ஆன்மாவுக்கு அடிபணிந்ததே அறிவாற்றல் என்பது அறியப்பட்டிருந்தாலும், பிந்தையது {அறிவாற்றல்} (பிறகு) இயக்குனராகிறது. உணர்வுகளின் செயல்களாலேயே அறிவாற்றல் செயல்படுத்தப்படுகிறது. மனம் என்பது சுயம்புவாகும். புத்தி (வலி, இன்பம் ஆகிய) எந்த உணர்வையும் விளைவிப்பதில்லை, ஆனால் மனம் அதைச் செய்யும். எனது மகனே {யுதிஷ்டிரா}, இதுவே மனதுக்கும் புத்திக்கும் உள்ள வேறுபாடாகும். நீ இந்த விஷயத்தை அறிந்தவனாக இருக்கிறாய். இதில் உனது கருத்து என்ன?" என்று கேட்டான் {நகுஷன்}.

யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! அறிவு மிக்கவனே, நீ, அறியத்தக்கது அனைத்தும் அறிந்து, நல்ல புத்திகூர்மையுடன் இருக்கிறாய். இந்தக் கேள்வியை ஏன் என்னிடம் நீ கேட்கிறாய்? நீ அனைத்தையும் அறிந்திருந்தாய்; அற்புதச் செயல்கள் பல செய்தாய்; மேலும் நீ சொர்க்கத்தில் வாழ்ந்தாய். அப்படியிருக்கும்போது மாயை உன்னை எப்படி ஆட்கொண்டது? இது குறித்து எனக்குப் பெருத்த சந்தேகம் இருக்கிறது" என்றான். அந்தப் பாம்பு {நகுஷன்}, செழிப்பு என்பது ஞானியையும், வீரமான மனிதனையும் கூட போதை கொள்ளச் செய்கிறது. ஆடம்பர வாழ்வு வாழ்பவர்கள் (விரைவில்) தங்கள் புத்தியை இழக்கிறார்கள். அதே போல நானும், ஓ! யுதிஷ்டிரா, செழிப்பால் ஏற்பட்ட மாய ஈர்ப்பால் ஆட்கொள்ளப்பட்டு, எனது உயர்ந்த நிலையில் இருந்து விழுந்தேன். {இப்போது} மீண்டும் எனது சுய உணர்வைப் பெற்று, உனக்கு இப்படித் தெளிவை உண்டாக்குகிறேன் ஓ! வெற்றிகரமான மன்னா {யுதிஷ்டிரா}, நீ எனக்கு நன்மையைச் செய்திருக்கிறாய். பக்திமானான உன்னுடன் விவாதித்ததில், எனது வலிநிறைந்த சாபம் சரி செய்யப்பட்டது.

பழங்காலத்தில், சொர்க்கத்தில், ஒரு தெய்வீகத் தேரில் நான்  பயணித்துக் கொண்டிருந்தபோது கர்வத்தில் களிப்படைந்து, எதையும் நினைக்காதிருந்தேன் {எவரையும் மதிக்கவில்லை}. பிரம்மமுனிவர்கள், தேவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள், மற்றும் அனைத்து பிற மூவுலகவாசிகளிடமும் நான் கப்பம் வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, எனது கண்ணால் எந்த உயிரினத்தைப் பார்த்து, எனது பார்வையை அதில் நிலைக்க வைத்தாலும், உடனே அதன் பலத்தை நான் அழிக்கிறேன். ஆயிரக்கணக்கான பிரம்ம முனிவர்கள் {பிரம்மரிஷிகள்} எனது தேரை இழுப்பது வழக்கமாக இருந்தது. கடமையாற்றாமையே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் எனது உயர்ந்த செழிப்பில் இருந்து விழுவதற்குக் காரணமாக இருந்தது. அவர்களில் {அந்த பிரம்மரிஷிகளில்} அகஸ்தியர் ஒரு நாள் எனது வாகனத்தை இழுத்துக் கொண்டிருந்தார். எனது பாதம் அவரது உடலைத் தொட்டது; கோபம் கொண்ட அகஸ்தியர், "அழிவு உன்னை ஆட்கொள்ளட்டும், நீ பாம்பாகப் போ" என்று என்னைச் சபித்தார். ஆகையால், எனது புகழை இழந்து, அந்த அற்புதமான தேரில் இருந்து நான் கீழே விழுந்தேன். அப்படி விழுந்து கொண்டிருக்கும்போது, நான் பாம்பாக மாறி தலைகீழே விழுவதைக் கண்டேன்.

"ஓ! வழிபடத்தகுந்தவரே {அகஸ்தியரே} இந்தச் சாபம் அணைக்கப்படட்டும். மயக்கத்தால் இப்படி மூடனாகிய ஒருவனை நீர் மன்னிப்பதே தகும்" என்று நான் அந்த அந்தணரிடம் {அகஸ்தியரிடம்} மன்றாடினேன். நான் (சொர்க்கத்தில் இருந்து) வீசி எறியப்பட்ட போது, அவர் என்னிடம் அன்பாக, "அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன் உன்னை இந்தச் சாபத்தில் இருந்து காப்பாற்றுவான். இந்தப் பயங்கரமான கர்வத்தின் பாவம் அப்போது உன்னால் அடைக்கப்படும். நீ முக்தியடைவாய்" என்றார். (அவரது) தவச் சக்தியைக் கண்டு அதிசயத்தால் தாக்கப்பட்டேன். எனவே, பரமாத்மா மற்றும் பிராமணர்களின் தன்மைகள் குறித்து உன்னிடம் கேள்வி கேட்டேன். உண்மை {சத்தியம்}, தானம், தன்னடக்கம், தவம், எவ்வுயிருக்கும் தீங்கிழையாமை {அஹிம்சை}, அறம் நிலைத்தல் ஆகியவையே, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, எப்போதும் ஒரு மனிதன் முக்தியடைவதற்கான வழிகள். குடும்பத் தொடர்புகளால் உண்டான குலத்தால் அதை {முக்தியை} அடைய முடியாது. உனது இந்தத் தம்பியான வலிமைமிக்கப் பீமசேனன் நல்ல அதிர்ஷ்டத்தைச் சந்திப்பான். மகிழ்ச்சியானது உன்னில் நிலைத்திருக்கட்டும். நான் மீண்டும் சொர்க்கம் செல்ல வேண்டும்" என்று பதிலுரைத்தான் {நகுஷன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்தார், "இப்படிச் சொன்ன அந்த மன்னன் நகுஷன், தனது பாம்புருவை விட்டு தெய்வீக உருவம் கொண்டு மீண்டும் சொர்க்கம் சென்றான். புகழ்மிக்கவனும், பக்திமானுமான யுதிஷ்டிரனும், தௌமியர் மற்றும் தனது தம்பி பீமனுடன் தனது ஆசிரமத்திற்குச் சென்றான். பிறகு, அறம் சார்ந்த யுதிஷ்டிரன் (அங்கே) கூடியிருந்த அந்தணர்களுக்கு அனைத்தையும் விரிவாக உரைத்தான். இதைக் கேட்ட அவனது மூன்று தம்பிமாரும் {அர்ஜுனன், நகுலன், சகாதேவனும்}, அனைத்து அந்தணர்களும், புகழ்பெற்ற திரௌபதியும் கூட வெட்கினார்கள். அற்புதமான அந்த அனைத்து அந்தணர்களும், பாண்டவர்களின் நன்மையை விரும்பி, பீமனை அவனது மடத்தனத்திற்காக நிந்தித்தனர். இது போன்ற செயல்களை மீண்டும் செய்யக்கூடாது என்று அவர்கள் அவனிடம் {பீமனிடம்} கூறினர். ஆபத்தைவிட்டு அகன்ற வலிமைமிக்கப் பீமனைக் கண்ட பாண்டவர்கள் மிகவும் திருப்தி கொண்டு, அங்கே தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்."

****************** தீர்த்தயாத்ரா பர்வம் முற்றிற்று ****************** 

*****************************************************************************

1. உண்மையான மொழியில் சொல்ல வேண்டுமானால் அது தேவர்களின் நிலை. வேதகாலத்துக்குப் பிந்தைய இந்துமதத்தின் சாதாரணத் தேவர்கள், பழங்காலத்து கிரேக்க, இத்தாலிய {ரோமானிய} தேவர்களைப் போல அசாதாரண மனித வர்க்கமாக, பரமாத்மா மற்றும் பரப்பிரம்மனுக்கு எதிர் வேறுபாடு கொண்டவர்களாக இருப்பதை இங்கே சரியாகக் குறிப்பிடலாம். மரணத்திற்குப் பிறகு, ஒரு அறம் சார்ந்த மனிதன், தேவர்களாக அழைக்கப்படுபவர்களில் ஒருவராக மாற்றப்பட வேண்டியவனாவான் என்கிறார் கங்குலி

2. இது, ஆன்மாக்களின் மறுபிறப்பு குறித்து நன்கு அறியப்பட்ட பிரபலமான கோட்பாடாகும் என்கிறார் கங்குலி  

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, May 31, 2014

யார் பிராமணன்? - வனபர்வம் பகுதி 179

Who is a Brahmana? | Vana Parva - Section 179 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
 பாம்பான நகுஷனின் கேள்விகளுக்குப் பதிலளித்த யுதிஷ்டிரன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார் "தனது அன்புக்குரிய தம்பி {பீமன்}, அந்தப் பாம்பின் சுருளுக்குள் அகப்பட்டிருப்பதைக் கண்ட யுதிஷ்டிரன், "ஓ! குந்தியின் மகனே {பீமா}, உனக்கு இந்தத் தீயூழ் {துரதிர்ஷ்டம்} எவ்வாறு வந்தது? மலையைப் போன்ற உடல் படைத்த இந்தப் பாம்புகளில் சிறந்தவன் யார்?" என்று கேட்டான். அதற்குப் பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வழிபடத்தகுந்தவரே {யுதிஷ்டிரரே}, இந்தப் பெரும்பலம்வாய்ந்தவன் என்னைத் தனது உணவுக்காகப் பிடித்திருக்கிறான். பாம்பின் உருவில் வாழும் இவன் அரச முனியான நகுஷனாவான்" என்றான். யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! நீண்ட ஆயுள் கொண்டவனே {நகுஷனே}, அளவிடமுடியாத பராக்கிரமம் கொண்ட எனது தம்பியை {பீமனை} விடு; நாங்கள் உனது பசிக்கு வேறு உணவு தருகிறோம்" என்றான். அதற்கு அந்தப் பாம்பு, "எனது வாய்க்கருகில் வந்த இந்த மன்னனின் மகன் {பீமன்} இன்று எனக்கு உணவு ஆவான். நீ போகலாம். நீ இங்கு நிற்கலாகாது. (அப்படி நீ நின்றாயானால்) நீ எனக்கு நாளைய உணவாவாய். ஓ! வலுத்த கரம் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, எனது இடத்திற்கு வருவபன் எனது உணவாவான் என்பது எனக்கு விதிக்கிப்பட்டிருக்கிறது. நீயும் எனது இடத்திற்குள்ளேயே நிற்கிறாய். நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று எனக்கு உணவாக உனது தம்பி கிடைத்திருக்கிறான். நான் அவனை விடமாட்டேன். வேறு எந்த உணவையும் நான் விரும்பவில்லை" என்றான் {நகுஷன்}.

அதற்கு யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! பாம்பே, நீ தேவனாகவோ, அசுரனாகவோ, அரக்கனாகவோ இருப்பின் என்னிடம் உண்மையைக் கூறு. நான் யுதிஷ்டிரன் கேட்கிறேன். ஓ! பாம்பே, பீமசேனன் உன்னால் எதற்குப் பிடிக்கப்பட்டான்? எதை அடைந்தால், அல்லது எதை அறிந்தால் நீ திருப்தியடைவாய். ஓ! பாம்பே, நான் உனக்கு என்ன உணவைத் தர வேண்டும்? எதன் காரணமாக நீ அவனை விடுவிப்பாய்" என்று கேட்டான். அதற்கு அந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாவமற்றவனே, நான் ஆயுவின் மகனான உனது மூதாதையும், சந்திரனில் இருந்து ஐந்தாமவனும் ஆவேன். நகுஷன் என்ற பெயரில் கொண்டாடப்பட்ட மன்னன் நான். வேள்விகள், தவம், வேத கல்வி, சுயக்கட்டுப்பாடு, பராக்கிரமம் ஆகியவற்றால் நான் மூன்று உலகங்களின் ஆட்சியுரிமையை அடைந்தேன். நான் அப்படி ஒரு நிலையில் இருந்த போது, அகங்காரம் என்னை ஆட்கொண்டது. எனது அரியாசனத்தைச் சுமப்பதில் ஆயிரக்கணக்கான அந்தணர்கள் ஈடுபட்டார்கள். மேலாதிக்கப் போதையில் இருந்த நான் அந்தணர்களை அவமதித்தேன். ஓ! பூமியின் தலைவன், அகஸ்தியர் என்னை இந்த நிலைக்குத் தாழ்த்தினார். இருப்பினும், ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, இந்த நாள் வரை {பழைய பிறவியைக் குறித்த} எனது ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர் ஆன்ம அகஸ்தியரின் அருளால், நாளின் ஆறாவது பாகத்தில், நான் உனது தம்பியை {பீமனை} எனது உணவாக அடைந்தேன். நான் அவனை விடவும் மாட்டேன், வேறு உணவை நான் விரும்பவும் மாட்டேன். ஆனால், இன்று நீ என்னால் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்தாயானால் நான் விருகோதரனை {பீமனை} விடுவிப்பேன்" என்றான் {நகுஷன்}.

அதற்கு யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! பாம்பே {நகுஷனே}, நீ உனது விருப்பப்படி கேள்! என்னால் முடிந்தால், நான் உன்னைத் திருப்திப்படுத்தும் நோக்கில் உனது கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன். அந்தணன் அறிய வேண்டிய அனைத்தையும் நீ அறிந்திருக்கிறாய். ஆகையால், ஓ! பாம்புகளின் மன்னா {நகுஷனே}, (நீ) கேட்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பேன்" என்றான்.

அந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, எவன் பிராமணன்? எது அறியப்பட வேண்டியது? என்பதைச் சொல். உனது பேச்சால் நீ மிகுந்த புத்திசாலி என்பதை உணர்கிறேன்" என்றது.

யுதிஷ்டிரன் {பாம்புருவில் இருந்த நகுஷனிடம்}, "ஓ! பாம்புகளில் முதன்மையானவனே {நகுஷனே}, எவனொருவனில் உண்மையும், கொடையும், மன்னிக்கும் குணமும் {(forgivness) பொறுமையும்}, நன்னடத்தையும், இரக்கமும், தனது வகைக்குரிய சடங்குகளை நோற்றலும் {தவம்}, கருணையும் காணப்படுகின்றனவோ அவனே பிராமணனென்று கருதப்படுவான் என்று ஞானம் கொண்டவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். ஓ! பாம்பே {நகுஷனே}, எதை அடைந்தால் உயிரினங்கள் துயரால் பாதிக்கப்படாதோ, எதில் மகிழ்ச்சியோ துயரமோ இல்லையோ அந்த உயர்ந்த பிரம்மமே அறியப்பட வேண்டியது. இதில் உனது கருத்து என்ன?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்} "ஓ! யுதிஷ்டிரா, உண்மை, கொடை, மன்னிக்கும் குணம், இரக்கம், அருளைடைமை, அன்பு, வேதம் ஆகியன நான்கு வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} நன்மையே செய்யும்.1 அறம் சம்பந்தப்பட்டவற்றில் இவை {இக்குணங்கள்} அதிகாரமிக்கவை. அது உண்மையே. இவை சூத்திரர்களிடமும் காணப்படுகின்றனவே. அறியப்பட வேண்டியது குறித்ததில், மகிழ்ச்சி, துயரம் என இரண்டும் அற்ற எந்தப் பொருளையும் நான் காணவில்லை" என்றான்.

யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "சூத்திரரிடம் இருக்கும் குணங்கள் பிராமணரிடம் இருப்பதில்லை; அதே போல் பிராமணர்களிடம் இருப்பவை சூத்திரரிடம் இருப்பதில்லை. ஒரு சூத்திரன் பிறப்பால் மட்டுமே சூத்திரன் அல்லன். அதே போல ஒரு பிராமணன் பிறப்பால் மட்டுமே பிராமணன் அல்லன். எவனிடம் அத்தகு குணங்கள் இருக்கின்றனவோ அவன் பிராமணன் என்று ஞானமுள்ளோர் சொல்லியிருக்கின்றனர். அறியத்தக்கது இல்லை என்றும், மகிழ்ச்சி துயரமற்ற எந்தப் பொருளும் இல்லை என்றும் நீ சொல்கிறாய். அது உன் எண்ணம். எப்படிக் குளிர்ந்த பொருளில் வெப்பம் {சூடு} இல்லையோ, சூடுள்ள பொருளில் குளிரில்லையோ அவ்வாறே மகிழ்ச்சியுள்ள பொருளில் துக்கமும், துக்கமுள்ள பொருளில் மகிழ்ச்சியும் இருக்காது. இவ்வாறாக மகிழ்ச்சி மற்றும் துயரங்களால் விடுபட்ட (ஆனந்தமயமான) இடம் ஓரிடத்தில் இருக்கிறது. இது என் எண்ணம். (நான் சொன்னவாறு) அறியத்தக்க பொருள் (என்று நான் உறுதி சொன்னது) எதுவும் இல்லை என்று நீ உறுதி கூறுகிறாய். இரண்டும் (மகிழ்ச்சியும், துயரமும்) அற்ற எந்தப் பொருளும் இல்லை என்பது உனது கருத்து. ஓ! பாம்பே, (அவை) இரண்டும் இல்லாத எதுவும் இல்லைதான். ஆனால் குளிரில் வெப்பம் இருப்பதில்லை. அதே போல வெப்பத்தில் குளிர் இருப்பதில்லை. ஆகையால், இரண்டும் (மகிழ்ச்சியும் துயரமும்) இல்லாத ஒரு பொருள் இருக்க முடியாதா?" என்றான்.

பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, நீ ஒருவனை அவனது குணத்தால் பிராமணன் என்று உணர்ந்தாயானால், ஓ! நீண்ட ஆயுள் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, நடத்தை என்பது அரங்கத்திற்கு வராதவரை சாதி வேறுபாடு என்பது வீணாகிவிடுமே" என்றான் {நகுஷன்}.

யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "மனித சமுதாயத்தில், ஓ! பலமும், புத்திகூர்மையும் கொண்ட பாம்பே {நகுஷனே}, நான்கு வகையினரின் வரைமுறையற்ற கலவியால், ஒருவனது சாதி இன்னதென்று உறுதி செய்வது சிரமமானதாகும். இது எனது கருத்து. அனைத்து வகையைச் சார்ந்த மனிதர்களும் (வரைமுறையற்று) அனைத்து வகைப் பெண்களிடமும் வாரிசைப் பெறுகிறார்கள். மேலும் மனிதர்களில், பேச்சு, கலவி, பிறப்பு, இறப்பு என்பது அனைத்து வகையினருக்கும் பொதுவானதாகும். மேலும், முனிவர்கள் இதற்குச் சாட்சி பகர்வது போல, வேள்வியின் ஆரம்பத்தில், "நாங்கள் எந்தச் சாதியாக இருந்தாலும், நாங்கள் வேள்வியைக் கொண்டாடுகிறோம்" என்று சொல்கிறார்கள் எனவே, குணமே அத்தியாவசியமான தலைமைத் தேவை, என ஞானமுள்ளோர் வலியுறுத்துகின்றனர். தொப்புள் கொடியை அறுப்பதற்கு முன் ஒருவனுக்குப் பிறவி விழா கொண்டாடப்படுகிறது {ஜாதகர்ம சமஸ்காரம் விதிக்கப்படுகிறது}. அவனுக்கு தாய் சாவித்ரியாகவும், அவனது தந்தை புரோகிதராகவும் அதில் செயல்படுகின்றனர். வேதங்களை {படிக்க} ஆரம்பிக்காத வரை ஒருவன் சூத்திரன் எனக் கருதப்படுகிறான். இதில் சந்தேகங்கள் எழுவதால், ஓ! பாம்புகளின் இளவரசனே {நகுஷனே}, ஸ்வாயம்புவ மனு {Swayambhuba Manu}, சுத்திகரிப்புச் சடங்குகள் செய்த பிறகும் பிந்தையவர் {சூத்திரர்} நன்னடத்தை விதிகளுக்கு ஒத்துப் போகவில்லையென்றால், அவர் சார்ந்த அந்த வர்க்கத்தை விட, கலப்புசாதிகளே சிறந்தவையாகக் கருதத்தக்கவை எனத் தீர்மானித்தார். ஓ! அற்புதமான பாம்பே {நகுஷனே}, தூய விதிகளுக்கும், அறம்சார்ந்த நடத்தைகளுக்கும் எவனொருவன் கட்டுப்படுகிறானோ அவனையே, நான் இப்போது பிராமணனாக அறிவிக்கிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}. அந்தப் பாம்பு {நகுஷன்}, "ஓ யுதிஷ்டிரா, அறியத்தகுதி படைத்த அனைத்தையும் நீ அறிந்து வைத்திருக்கிறாய், உனது வார்த்தைகளைக் கேட்ட பிறகு, நான் (இப்போது) எவ்வாறு உனது தம்பி விருகோதரனை உண்பேன்" என்றான் {நகுஷன்}2*.
*****************************************************************************

1.சூத்திரர்கள் நடத்தும் சடங்குகள் அனைத்தின் மூலமும் வேதத்தில் இருக்கின்றன என்று கங்குலி கூறுகிறார்.  வேதமறியும் உரிமையை சூத்திரர்களும் பெற்றிருந்தனர் என்று இங்கு நிறுவப்படுவதாக நான் நினைக்கிறேன்.

2.நகுஷன் :  யயாதியின் தந்தை.
 மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
தக்ஷன், புருரவஸ், நகுஷன் மற்றும் யயாதி வரலாறு | ஆதிபர்வம் - பகுதி 7

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

Friday, May 30, 2014

பாம்பை அடைந்த யுதிஷ்டிரன்! - வனபர்வம் பகுதி 178

Yudhishthira reached the snake! | Vana Parva - Section 178 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பீமனைப் பிடித்த பாம்பு தனது வரலாற்றைச் சொன்னது; தீச்சகுனங்களைக் கண்டு வருந்திய யுதிஷ்டிரன், பீமன் சென்ற பாதையைத் தொடர்ந்து சென்று அவன் பாம்பினால் பிடிக்கப்பட்டுக் கிடக்கும் இடத்தை அடைவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "வலிமைமிக்கப் பீமசேனன், இப்படிப் பலமிக்கப் பாம்புக்கு அடங்கியதும், அந்தப் பாம்பின் பலத்தையும், அற்புதமான பராக்கிரமத்தையும் நினைத்து அதனிடம், "ஓ! பாம்பே, நீ யார் என்பதை எனக்குச் சொல்வதில் மகிழ்ச்சி கொள். ஓ! ஊர்வனவற்றில் முதன்மையானவனே என்னைக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்? நான் பாண்டுவின் மகனான பீமசேனன். நீதிமானான யுதிஷ்டிரனுக்கு அடுத்துப் பிறந்தவன். பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்ட என்னை நீ எப்படி வீழ்த்தினாய்? என்னுடன் மோதிய எண்ணிலடங்கா சிங்கங்களும், புலிகளும், எருமைகளும், யானைகளும் என்னால் கொல்லப்பட்டிருக்கின்றன. ஓ! பாம்புகளில் சிறந்தவனே, பலமிக்க ராட்சசர்களும், பிசாசங்களும், நாகர்கள் எனது கரத்தின் சக்தி முன்னால் நிற்க முடியாதே. என்னதான் நான் முயன்றாலும், நீ என்னை விஞ்சுகிறாயே! நீ ஏதாவது மந்திரவித்தை கொண்டிருக்கிறாயா? அல்லது ஏதாவது வரம் பெற்றிருக்கிறாயா? ஓ! பாம்பே, உன்னால் பலம் நிறைந்த மனிதர்கள் கலங்கடிக்கப்படுகிறார்களே! எனவே, மனிதர்களின் பலம் நிலையற்றது என்பதில் நான் இப்போது நம்பிக்கை கொள்கிறேன்" என்றான் {பீமன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர்ந்த செயல்கள் புரிந்த வீரனான பீமன் இப்படிச் சொன்னதும், அந்தப் பாம்பு அவனைப் பிடித்து, அவனது உடலை முழுவதும் சுற்றிக் கொண்டது. இப்படி அவனை {பீமனை} அடக்கிய அந்தப் பலமிக்க நோக்கம் கொண்ட அது, அவனது {பீமனின்} பருத்த கரங்களை மட்டும் விடுவித்தது. பிறகு அந்தப் பாம்பானவன், "நற்பேறினாலேயே, தேவர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று, பசியோடிருக்கும் எனக்கு, உன்னை உணவாக நிர்ணயித்திருக்கிறார்கள். உயிர் என்பது அனைத்து உயிருக்கும் விருப்பமானதாயிற்றே. நான் இந்தப் பாம்புருவை எப்படி அடைந்தேன் என்பதை உனக்குச் சொல்ல வேண்டும். ஓ! பக்திமான்களில் சிறந்தவனே, நான் {ஒரு} பெரும் முனிவரின் கோபத்தால் இந்த இழிந்த நிலைக்கு விழுந்தேன். இப்போது அந்தச் சாபத்திலிருந்து வெளியேறும்பொருட்டு நான் உனக்கு அது குறித்து அனைத்தையும் விவரிக்கிறேன்.

அரச முனியான நகுஷனைக் {நஹுஷனை} குறித்து நீ கேள்விப்பட்டிருப்பாய் என்பதில் {எனக்குச்} சந்தேகமில்லை. அவன் *{நகுஷன்} ஆயுவின் மகனும், உனது மூதாதையர்களின் குலத்தைத் தழைக்க வைத்தவனுமாவான். நானே அவன் {அந்த நகுஷன் நானே}. அந்தணர்களை அவமதித்த எனக்கு, அகத்தியரின் சாபம் ஏறப்பட்டு, நான் இந்த நிலைக்கு வந்தேன். நீ எனக்கு மகன் வழி {agnate} உறவினனாவாய். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறாய். நீ என்னால் கொல்லப்படத்தக்கவன் அல்ல. எனினும் நான் இன்று உன்னை விழுங்குவேன்! விதியின் குறுக்கீட்டைப் பார்! ஒரு நாளின் ஆறாவது பாகத்தில் எருமையோ யானையோ, எதுவாக இருந்தாலும் எனது அருகில் {பிடிக்குள்} வந்தால், ஓ! மனிதர்களில் சிறந்தவனே, {அதனால் என்னிடமிருந்து} தப்பிக்க முடியாது. ஓ! குருக்களில் சிறந்தவனே, தாழ்ந்த வகையைச் சேர்ந்த விலங்கால் நீ பிடிக்கப்படவில்லை. நானும் எனது பலத்தால் மட்டும் உன்னைப் பிடிக்கவில்லை. {பலவானையும் பிடிப்பது} அது எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வரமாகும்.


நான் சக்ரனின் {இந்திரனின்} அரண்மனைக்கு முன் இருந்த அரியாசனத்தில் இருந்து வேகமாக விழுந்து கொண்டிருந்தேன். அப்போது நான் அந்த வழிபடத்தகுந்த முனிவரிடம் (அகஸ்தியரிடம்) "இந்தச் சாபத்தில் இருந்து என்னை விடுவியும்" என்று கேட்டேன். இதனால், இரக்கத்தில் நிறைந்த அந்தச் சக்தி மிக்கவர் {அகஸ்தியர்} என்னிடம், "ஓ! மன்னா {நகுஷா}, சில காலம் கழித்து நீ விடுவிக்கப்படுவாய்" என்றார். பிறகு நான் பூமியில் (பாம்பாக) விழுந்தேன்; ஆனால் எனது (முந்தைய வாழ்வின்) ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. அது மிகவும் பழங்காலத்துச் சம்பவமாக இருந்தாலும், சொல்லப்பட்டது யாவையும் நான் இன்னும் ஞாபகப் படுத்துவேன். அந்த முனிவர் {அகஸ்தியர்} என்னிடம், "ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள உறவை குறித்து அறிந்த ஒருவன், உன்னுடைய கேள்விகளுக்குப் பதிலளித்து உன்னை விடுவிப்பான்" என்றார். "மேலும், ஓ! மன்னா {நகுஷா}, உன்னிலும் பலமிக்கவர்களை நீ பிடித்தால், அவர்கள் உடனே தங்கள் பலத்தை இழப்பார்கள்" என்று என்னிடம் இரக்கம் கொண்டவர்கள் {அந்தணர்கள்} சொன்னார்கள். பிறகு அந்த அந்தணர்கள் மறைந்தார்கள். ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே, இப்படியே நான் பாம்பானேன். நான் அதிகமான பாவச் செயல்களைச் செய்து, சுத்தமற்ற {இந்த} நரகத்தில் வாழ்ந்து, காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் {நகுஷன்}.

வலுத்தகரம் கொண்ட பீமசேனன் அந்தப் பாம்பிடம் {நகுஷனிடம்}, "ஓ! பலமிக்கப் பாம்பே, நான் கோபமடையவில்லை. என்னையும் நான் பழி சொல்லவில்லை. மகிழ்ச்சியையும் துயரத்தையும் குறித்து எண்ணினால், மனிதர்கள், அதைச் {மகிழ்ச்சியோ அல்லது துக்கமோ} சில பொழுது தங்கள் சக்தியால் கொண்டும் வருகிறார்கள், விலக்கவும் செய்கிறார்கள். சில பொழுது அது அவர்களால் முடிவதில்லை. எனவே, இதனால் ஒருவன் மற்றவன் மனதின் அமைதியைக் குலைக்கக்கூடாது. தன்முயற்சியால் எவன்தான் விதியை வெல்லமுடியும்? விதியே தலைமையானது என நான் கருதுகிறேன். தன்முயற்சியால் {சுயமுயற்சியால்} பயனேதும் இல்லை. விதியின் அடியால் அடிக்கப்பட்டு, எனது கரங்களில் பராக்கிரமம் இழந்து, உணரக்கூடிய காரணமேதுமில்லாமல் இன்று நான் விழுந்திருக்கும்  நிலையைப் பார். ஆனால் நான் இன்று கொல்லப்படப் போவதால் அதிகம் வருந்தவில்லை.

எனது சகோதரர்கள் நாடிழந்து கானகத்தில் இருக்கிறார்களே என்றே வருந்துகிறேன். யக்ஷர்களும், ராட்சசர்கள் நிறைந்த இந்த அடைய முடியாத இமயத்தில் என்னைத் தேடித் தடுமாறுவார்கள். நான் கொல்லப்பட்டது கேட்டு, (எனது சகோதரர்கள்) அனைத்து முயற்சிகளையும் கைவிடுவார்கள். மீண்டும் நாட்டை அடைய விரும்பி, எனது கடும் மொழிகளால் சத்தியத்தில் உறுதி கொண்ட அவர்களை இதுவரை நான் கட்டுப்படுத்தி வந்தேன். அல்லது, {அப்படி நான் நடந்து கொள்ளவில்லை என்றால்} தேவர்களாலும், ராட்சசர்களாலும், கந்தர்வர்களாலும் வெல்லப்பட முடியாதவனும் அனைத்துக் கலைகளையும் அறிந்தவனுமான புத்திகூர்மையுள்ள அர்ஜுனன் {நாட்டை இழந்த} துயரத்தால் பாதிக்கப்படமாட்டான். அந்த வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனும், மிகுந்த பலசாலியுமானவன் {அர்ஜுனன்} தனியொருவனாகவே தேவர்களையும் அவர்கள் இடத்தில் இருந்து விரைவாக இழுத்துவிட வல்லவன். அப்படியிருக்க, அனைத்து மனிதர்களாலும் வெறுக்கப்பட்டு, அகங்காரமும், அறியாமையும் நிறைந்து ஏமாற்றுகரமான சூதாட்டம் விளையாடும் திருதராஷ்டிரன் மகனைக் {துரியோதனனைக்} குறித்து நான் என்ன சொல்ல?

மகன்களிடம் பாசமாக, பகைவர்களைக் காட்டிலும் அதிகமான மேன்மையை எங்களுக்கு எப்போதும் விரும்பும், எனது அப்பாவித் தாயை {குந்தியை} நினைத்து நான் வருந்துகிறேன். ஓ! பாம்பே, தலைவனற்ற அவள் {குந்தி} என் மீது கொண்டிருந்த நம்பிக்கை அனைத்தும் எனது அழிவினால் கனியற்றதாகும் {பலனற்றதாகும்}. எனது கரங்களின் சக்தியால் எப்போதும் பாதுகாக்கப்பட்டு, ஆண்மையைக் கொடையாகக் கொண்ட இரட்டையர்களான நகுலனும் சகாதேவனும் அவர்களது அண்ணனின் (என்னுடைய {பீமனுடைய}) அழிவால் மிகவும் உற்சாகம் குறைந்து, தங்கள் பராக்கிரமம் இழந்து, துயரால் பீடிக்கப்படுவார்கள். இதையே நான் நினைக்கிறேன் {நினைத்து வருந்துகிறேன்}" என்றான். இப்படி விருகோதரன் {பீமன்} மிகவும் புலம்பினான். பாம்பின் உடலால் சுற்றப்பட்ட அவனால் எந்த முயற்சியும் மேற்கொள்ள முடியவில்லை.

மறுபுறம், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், பயங்கரமான தீச்சகுனங்களை {கண்டும்) எண்ணிப் பார்த்து மிகவும் அஞ்சினான். வானத்தின் புள்ளிகள் பற்றி எரிவதாலும், ஆசிரமத்திற்கு வலப்புறத்தில் நின்று பயங்கர நரிகள் அமங்களகரமாக ஊளையிட்டதாலும் அவன் {யுதிஷ்டிரன்} பீதியடைந்தான். ஒரு சிறகும், ஒரு கண்ணும், ஒரு காலுமுள்ள பிரகாசமில்லாத விச்சுளிப் பறவைகள் {vartikas - வார்த்திகப் பறவைகள்}, சூரியனுக்கு எதிரில் ரத்தத்தைக் கக்கி கோரமாகக் காட்சியளித்தன. காற்று வறண்டதாகவும், பல கற்களைச் சுமந்து வருவதாகவும் வேகமாக வீசியது. வலப்புறத்தில் இருந்த அனைத்து விலங்குகளும், பறவைகளும் கத்தின. அண்டங்காக்கைகள் {கருங்காக்கைகள்} பின்புறமிருந்து "போ! போ!" என்று கத்தின. அதே நேரத்தில் (யுதிஷ்டிரனின்) வலக்கரமும், மார்பும், இடது காலும் (தானாகவே) துடிக்க ஆரம்பித்தன. மேலும், தீமையைக் குறிக்கும்படி அவனது இடது கண் ஒழுங்கற்ற முறையில் சுருங்கி விரிந்தது {துடித்தது}.

அதன் பேரில், ஓ! பாரதா {ஜனமேஜயா}, புத்திகூர்மையுள்ள நீதிமானான யுதிஷ்டிரன் ஏதோ (தவிர்க்க முடியாத) பேரிடர் சமீபிக்கிறது என்பதை உணர்ந்து, திரௌபதியிடம், "பீமன் எங்கே?" என்று கேட்டான். அதற்குப் பாஞ்சாலி {திரௌபதி}, விருகோதரன் {பீமன்} சென்று நெடுநேரம் ஆனதாகச் சொன்னாள். இதைக் கேட்ட அந்தப் பலம்வாய்ந்த கரம் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} "நீ திரௌபதிக்குப் பாதுகாப்பாக இருப்பாயாக" என்று சொல்லி விட்டு தௌமியரோடு கிளம்பினான். கிளம்பும்போது நகுலனிடமும் சகாதேவனிடமும் அந்தணர்களைப் பாதுகாக்குமாறும் சொன்னான். ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய குந்தியின் மகனான அந்தத் தலைவன் {யுதிஷ்டிரன்}, பீமனின் காலடித் தடங்களைத் தொடர்ந்து சென்று, அந்தப் பெரும் காட்டில் பீமசேனனைத் தேடினான். கிழக்கு திசையை அடைந்து யானைக்கூட்டங்களின் தலைமை யானைகளையும் (அவை கொல்லப்பட்டிருப்பதையும்), பீமனால் (பீமனின் காலடித்தடங்களால்) பூமி குறிக்கப்பட்டிருப்பதையும் கண்டான். ஆயிரக்கணக்கான மான்களும், நூற்றுக்கணக்கான சிங்கங்களும் அந்தக் கானகத்தில் {வீழ்ந்து} கிடப்பதைக் கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது பாதையை உறுதி செய்தபடி சென்றான். வாயு வேகமாக மான்களைத் துரத்திச் சென்ற அந்த வீரனின் {பீமனின்} தொடையசைவில் ஏற்பட்ட காற்றால் விழுந்த மரங்கள் சிதறிக் கிடப்பதையும் கண்டான். {பீமனின்} பாதச்சுவடுகளால் வழிகாட்டப்பட்டு மேலும் முன்னேறி, வறண்ட, காற்று மிகுந்த, நீரில்லா உவர் நிலத்தை அடைந்து இலையில்லாத காய்கறிகள் {மரங்கள்} அடர்ந்து, முள் மரங்கள் நெருக்கமாக இருக்கும் அந்த இடத்தில் மொட்டை மரங்களும், சிறிய மரங்களும் நிறைந்திருந்தன. கற்களும், குச்சிகளும், புதர்களும் சிதறிக் கிடந்தன. அடைவதற்கு அரிதான மேடுபள்ளங்கள் நிறைந்த ஆபத்தான அந்த மலையின் குகையில், தனது தம்பி {பீமன்}, பாம்புகளில் முதன்மையானவனால் {பெரும்பாம்பால்} பிடிக்கப்பட்டு அசைவற்றிருப்பதைக் கண்டான் {யுதிஷ்டிரன்}.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

Thursday, May 29, 2014

பாம்பிடம் அகப்பட்ட பீமன்! - வனபர்வம் பகுதி 177

Bhima caught by a snake! | Vana Parva - Section 177 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பீமன் வனத்தில் வேட்டையாடித் திரிகையில் ஒரு பாம்பிடம் அகப்பட்டது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவரே {வைசம்பாயனரே}, பெரும் பராக்கிரமும், பத்தாயிரம் {10,000} யானைகளின் பலமும் கொண்ட பீமன் அந்தப் பாம்பினால் (அதைக் கண்டு) எப்படிப் பீதியடைந்தான்? அந்த எதிரிகளைக் கொல்பவன், (குபேரனின்) தாமரைத் தடாகத்தில் யக்ஷர்களையும், ராட்சசர்களையும் கொன்றவன், வளங்களை அளிக்கும் புலஸ்தியரின் மகனை {குபேரனை} கர்வத்தோடு ஒற்றைக்கு ஒற்றைச் சண்டைக்கு அழைத்தவன், அப்படிப்பட்ட அவன் {பீமன்} பயத்தால் கலங்கி திகைத்துப் போனான் என்கிறீரே! நான் இதை (உம்மிடமிருந்து) கேட்க விரும்புகிறேன்; எனது ஆவல் பெரிதாக இருக்கிறது" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {ஜனமேஜயனே}, மன்னன் விருஷபர்வனின் ஆசிரமத்தை அடைந்த அந்தப் பயங்கரப் போர்வீரர்கள் பலதரப்பட்ட அற்புதமான வனங்களில் வாழ்ந்து வந்த போது, கையில் வில்லுடனும், கத்தியுடனும் இன்பமாக உலவி வந்த விருகோதரன் {பீமன்}, தேவர்களும் கந்தர்வர்களும் வந்து செல்லும் ஒரு அழகிய கானகத்தைக் கண்டான். அதன் பிறகு அவன் {பீமன்}, தேவ முனிவர்களும், சித்தர்களும் வந்து போவதும், அப்சரசு கூட்டங்கள் வாழும் இடமுமான இமய மலையின் (சில) அழகான இடங்களைக் கண்டான். அங்கே சகோரங்களும், சக்கரவாகங்களும், ஜீவஜீவங்களும், குயில்களும், பிருங்கராஜங்களும் ஆங்காங்கே (தங்கள் கானத்தை) ஒலித்தன. அங்கே அடர்ந்த நிழல் கொண்ட மரங்கள், எப்போதும் பூத்துக் குலுங்கும் மலர்களுடனும் கனிகளுடனும் மெதுவான பனியின் ஸ்பரிசத்துடன், கண்ணுக்கும் மனதிற்கும் இனிமையை அளித்தன.

அவன் {பீமன்} அங்கே பளிங்கு போல இருந்த மலையருவிகளையும், வெண்பனி நிறம் கொண்ட பத்தாயிரம் வாத்துகளையும், அன்னங்களையும், மேகங்களைச் சிறைபிடிக்கும் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகளையும், இடையிடையே மஞ்கள் நிற சந்தன மரங்கள், துங்கா, காளீயக மரங்கள் அடர்ந்த காடுகளையும் கண்டான். அந்தப் பெரும்பலமிக்கவன் {பீமன்} மேடு பள்ளமில்லாத, தண்ணீரில்லாத பாலை மலைவெளிகளில் நஞ்சற்ற சுத்தமான அம்புகளால் வேட்டை விளையாட்டினை விளையாடித் திரிந்தான். அந்தக் கானகத்தில், நூறு {100} யானைகளின் பலத்தைக் கொண்ட, புகழும் பலமும் மிக்கப் பீமசேனன் (பல) பெரிய காட்டுப் பன்றிகளைத் தனது (கரத்தின்) சக்தியால் கொன்றான். கடும் பராக்கிரமும், பெரும் பலமும், சிங்கம் மற்றும் புலியைப் போன்ற சக்தியும், நூறு மனிதர்களைத் தடுக்கும் ஆற்றலும், நீண்ட கரங்களும், நூறு யானைகளின் பலமும் கொண்ட அவன் {பீமன்}, பல மான்களையும், காட்டுப் பன்றிகளையும், எருமைகளையும் கொன்றான். அந்தக் கானகத்தில் ஆங்காங்கே மரங்களை வேருடன் பிடுங்கி வேகத்துடன் அவற்றை ஒடித்தான். அச்சத்தம் அக்கானகம் முழுதும், பூமி முழுதும் எதிரொலித்தது. மலைகளின் சிகரங்களை நொறுக்கியவாறும் தனது கர்ஜனையாலும், கைத்தட்டலாலும், போர்க்குரலாலும், புஜங்களைத் தட்டியும் பூமியை எதிரொலிக்கச் செய்த சிதைவற்றவனும், சதாகர்வியும், பயமற்றவனுமான பீமசேனன், மீண்டும் மீண்டும் அக்கானகத்தில் குதித்தபடி சென்றான்.

பீமசேனனின் கர்ஜனையைக் கேட்ட பலமிக்கச் சிங்கங்களும், பெரும் பலம் மிக்க யானைகளும் அச்சத்துடன் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வந்தன. அதே கானகத்தில் அச்சமற்று உலவி, ஓர் கானக வாசியைப் போல {வேடுவனைப் போல}, மனிதர்களில் மிகுந்த வீரமிக்கவன் வேட்டை விளையாட்டினை விளையாடிக் கொண்டு அந்தக் கானகத்தில் நடந்தான். வலிமையும், பராக்கிரமும் கொண்ட அவன் {பீமன்}, விசித்திரமான சத்தங்களை {strange whoopos} எழுப்பி, அனைத்து உயிர்களுக்கும் திகிலூட்டியபடி, அந்தப் பரந்தக் காட்டில் ஊடுருவினான். திகிலடைந்த பாம்புகள் குகைகளுக்குள் {தங்களை} மறைத்துக் கொண்டன. ஆனால் தாமதமில்லாமல் அவைகளை முந்தியும், மெதுவாக அவற்றைப் பின்தொடர்ந்து சென்றான்.

பின்னர், தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போன்ற வலிமைமிக்கப் பீமசேனன், மலைக்குகைகள் ஒன்றில் வாழும், அந்த (முழு) குகையையும் தனது பருத்த உடலால் மூடிக்கொண்ட, தனக்கு மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கிய {அதைக் கண்ட அச்சத்தினால்} ஒரு பாம்பைக் கண்டான். மலையைப் போன்ற பெரும் உடலும், அசுரத்தனமான பலமும், உடல் முழுதும் புள்ளிகளும் கொண்டு மஞ்சளைப் போன்ற {மஞ்சள்} நிறத்தில் இருந்து. அதன் வாய், நான்கு பற்களுடன் குகையின் உருவத்தில் தாமிர நிறத்தில் இருந்தது. சுடர்விடும் கண்களுடன் அது தொடர்ந்து தனது கடைவாயை நக்கிக் கொண்டிருந்தது. அசையும் உயிர்கள் அனைத்தையும் பீதியடைய வைக்கும் அது {அந்தப் பாம்பு}, அழிப்பவனான யமனின் உருவம் போலத் தெரிந்தது. அது விடும் மூச்சிரைப்பு ஒலியால் {ஹிஸ் என்ற ஒலி - hissing noise} அதட்டுவதைப் போல அது கிடந்தது.

பீமன் தனக்கு மிக அருகில் வந்ததைக் கண்ட ஆட்டை விழுங்கும் கோபம் கொண்ட அந்தப் பாம்பு, பெரும் கோபத்துடனும் வன்முறையுடனும் தனது பிடிக்குள் பீமசேனனைப் பற்றியது. பிறகு, அந்தப் பாம்பு பெற்றிருந்த வரத்தால், அதன் பிடிக்குள் இருந்த பீமசேனன், உடனே தனது சுய நினைவை இழந்தான். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பீமசேனன் கரங்களின் பலம் பத்தாயிரம் யானைகளின் பலத்திற்குச் சமமானது. ஆனால், பெரும் பராக்கிரமம் கொண்ட அந்தப் பீமன் அந்தப் பாம்பினால் வீழ்த்தப்பட்டு, மெதுவாக நடுங்கி அசைவதற்கு சக்தியற்று எதுவும் முயலாமல் இருந்தான். பலம் கொண்ட கரங்களும், சிம்மம் போன்ற தோள்களும் கொண்ட அவன் {பீமன்}, பத்தாயிரம் {10000} யானைகளின் பலத்தைப் பெற்றிருந்தாலும், அந்தப் பாம்பினால் பிடிக்கப்பட்டு, அது பெற்றிருந்த வரத்தின் காரணமாக வீழ்த்தப்பட்டு, தனது அனைத்து பலத்தையும் இழந்தான். அவன் தப்பிப்பதற்காகக் கடுமையாகப் போராடினான். ஆனால், எவ்விதத்தினாலும் {அந்தப் பாம்பைத்} திருப்பி அடிப்பதற்கு சக்தியுள்ளவன் ஆவதில் அவன் வெற்றிபெறவில்லை."
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

துவைதவனம் திரும்பிய பாண்டவர்கள்! - வனபர்வம் பகுதி 176

Pandavas returned to Dwaitabana! | Vana Parva - Section 176 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)கந்தமாதனத்தில் இருந்து இறங்கிய பாண்டவர்கள் கைலாசத்தைக் காண்பது; பதரியில் தங்குவது; விருஷபர்வாவையும் சுபாகுவையும் மீண்டும் காண்பது; மீண்டும் சரஸ்வதி நதிக்கரையில் இருந்த துவைதவனம்  அடைந்து மகிழ்ந்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நீர்வீழ்ச்சிகள் நிறைந்த அழகான மலையில் இருக்கும் தங்கள் மகிழ்ச்சிகரமான இல்லத்தையும், பறவைகளையும், எட்டு திசைகளின் யானைகளையும் {திக் கஜங்களையும்}, குபேரனின் சேவர்களையும் {கின்னரர்களையும்} விட்டு அகன்ற அந்தப் பாரதக் குலத்தின் மனிதர்களில் முதன்மையானவர்களை மகிழ்ச்சி கைவிட்டது.
குபேரனுக்குப் பிடித்த மலையான மேகங்களைப் போலத் தெரியும் கைலாசத்தைக் கண்டதும், அந்தப் பாரதக் குலத்தின் தலைமையான வீரர்களின் மகிழ்ச்சி அதிகரித்தது. கத்திகளும் விற்களும் தாங்கிய வீர மனிதர்களில் முதன்மையான அவர்கள், உயரங்களையும், மலைக்கணவாய்களையும், சிங்கங்களின் குகைகளையும், மலைக்குகைகளையும், சில பள்ளத்தாக்குகளையும், எண்ணிலடங்கா நீர்வீழ்ச்சிகளையும் கண்டும், மேலும் எண்ணிலடங்கா மான், பறவைகள் மற்றும் யானைகளுடன் கூடிய பெரும் கானகங்களையும் கண்டு திருப்தியுடன் முன்னேறினர். அழகான வனநிலங்களையும், ஆறுகளையும், தடாகங்களையும், குகைகளையும், மலைப்பொந்துகளையும் அடைந்தனர். இவை அனைத்தும் அந்தப் பெரும் மனிதர்களுக்கு இரவுக்கும் பகலுக்குமான வசிப்பிடங்களாக இருந்தன. அடைய முடியாத இடங்களை அடைந்து வசித்து, புத்திக்கெட்டாத ஆடம்பரம் நிறைந்த கைலாசத்தைக் கடந்த அவர்கள் விருஷபர்வாவின் மிக அழகான அற்புதமான ஆசிரமத்தை அடைந்தனர். மன்னன் விருஷபர்வாவைச் சந்தித்து, அவனால் வரவேற்கப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்} மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, மலைகளில் நேர்ந்த தங்கள் பயணத்தை விரிவாகவும் துல்லியமாகவும் அவனுக்கு {விருஷபர்வாவுக்கு} எடுத்துரைத்தனர்.
பிறகு,


தேவர்களும், பெரும் முனிவர்களும் வந்து போகும் அந்தப் புனிதமான வசிப்பிடத்தில் ஒரு இரவை இனிமையாகக் கடத்திய அந்தப் பெரும் போர்வீரர்கள் விசாலை என்று அழைக்கப்பட்ட இலந்தை மரத்தை வந்தடைந்தனர். பிறகு அந்தத் தயாள மனம் கொண்ட மனிதர்கள் நாராயணனின் இடத்தை அடைந்து, தேவர்களும் சித்தர்களும் வந்து போகும் குபேரனுக்கு விருப்பமான தடாகத்தைக் கண்டு துன்பமற்று வாழ்ந்தனர். அந்தத் தடாகத்தைக் கண்ட மனிதர்களில் முதன்மையான அந்தப் பாண்டு மகன்கள் நந்தனா என்ற நந்தவனத்தில் வசிப்பிடம் கிடைத்த பிரம்ம முனிவர்களைப் போல அனைத்துத் துன்பங்களையும் துறந்து அந்த இடத்தையும் கடந்து சென்றனர்.

அனைத்து வீரர்களும் பதரியில் {Badari} மகிழ்ச்சியாக ஒரு மாதம் வாழ்ந்த பிறகு, கிராதர்களின் மன்னனான சுபாகுவின் நாட்டை நோக்கி, தாங்கள் ஏற்கனவே வந்த வழியிலேயே முன்னேறினர். கடினமான இமாலயப் பகுதிகளைக் கடந்து, சீனம், துஷாரம், தரதம், அனைத்து தட்பவெப்ப நிலைகளையும் கொண்டதும், ரத்தினங்களைக் குவியலாகக் கொண்டதுமான குளிந்தம் ஆகிய நாடுகளைக் கடந்த அந்தப் போர்க்குணமிக்க மனிதர்கள் சுபாகுவின் தலைநகரத்தை அடைந்தனர். மன்னர்களின் மகன்களும், பேரப்பிள்ளைகளுமானவர்கள் தனது நாட்டை அடைந்ததைக் கேள்விப்பட்ட சுபாகு, மகிழ்ச்சியுடன் (அவர்களைச் சந்திக்க) முன்னேறினான். குருக்களில் சிறந்தவனும் {யுதிஷ்டிரனும்} அவனை வரவேற்றான். மன்னன் சுபாகுவைச் சந்தித்து, விசோகனைத் தலைமையாகக் கொண்ட தங்கள் அனைத்து தேரோட்டிகளுடனும் இணைந்து, இந்திரசேனன் முதற்கொண்ட சேவகர்களையும், கண்காணிப்பாளர்களையும், சமையலறைப் பணியாட்களையும் கண்டு அவருகளுடன் இணைந்து ஒரு நாள் இரவை அமைதியாகக் கழித்தனர்.

பிறகு அனைத்துத் தேர்களையும், தேரோட்டிகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டு, கடோத்கசனுக்கும் அவனைப் பின்தொடர்பவர்களுக்கும் விடை கொடுத்து அனுப்பி, யமுனைக்கு அருகே இருந்த மலைகளின் ஏகாதிபதியிடம் சென்றனர். நீரவீழ்ச்சிகளும், சாம்பல் மற்றும் காவி நிறச் சரிவுகளும், பனிமூடிய சிகரங்களும் கொண்ட அந்த மலைக்கு மத்தியில், சித்திரரத வனத்துக்கு ஒப்பான, காட்டுப் பன்றிகளும், பலதரப்பட்ட மான்களும் பறவைகளும் கொண்ட விசாகயூபம் என்ற கானகத்தைக் கண்ட போர்க்குணமிக்க அந்த மனிதர்கள் அதைத் தங்கள் இல்லமாக்கினார்கள்.

வேட்டையில் மயங்கி, அதையே தங்கள் தலைமைத் தொழிலாகக் கொண்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள் அந்தக் கானகத்தில் ஒரு வருடம் அமைதியாக வசித்தனர். அங்கே இருந்த ஒரு பெரிய மலைக்குகையில், சஞ்சலமும் துயரமும் பீடித்த இதயத்துடன் இருந்த விருகோதரன் {பீமன்}, பசியால் வெறுப்புற்றிருந்த, மரணத்தைப் போன்று கடுமையாக இருந்த ஒரு பெரும் பலமிக்கப் பாம்பைக் கடக்க நேர்ந்தது. இப்பிரச்சனையில், பக்திமிக்க மனிதர்களில் சிறந்த யுதிஷ்டிரன் தலையிட்டு விருகோதரனை {பீமனைக்} காத்தான். பீமனின் முழு உடலையும் தனது பிடிக்குள் விரைவாகப் பற்றியிழுத்த பாம்பிடம் இருந்து, எல்லையற்ற பலம் கொண்ட அவன் {யுதிஷ்டிரன்} மீட்டான். கானக பயணத்தின் பனிரெண்டாவது {12} வருடம் ஆரம்பித்ததும், அந்தக் குரு குலத்தின் பிரகாசமிக்கக் கொழுந்துகள் {பாண்டவர்கள்}, தவத்தில் ஈடுபட்டு, வில்வித்தையைத் தலைமையாகப் பயின்று சித்திரரதம் போல இருந்த அந்தக் கானகத்தைவிட்டு, சரஸ்வதியின் {நதியின்} அருகே வசிக்க எண்ணம் கொண்டு மகிழ்ச்சிகரமாகப் பாலைவனத்தின் எல்லைகளுக்கு அருகே வந்து, அந்த நதியின் கரைக்கருகே இருந்த துவைதவனத்தின் தடாகத்தை அடைந்தனர்.

ஐம்பொறிகளை அடக்கி, தர்ப்பையையும், தீர்த்த கமண்டலத்தையும் உடைய, அறச்சடங்கை ஒடுக்கும் பயிற்சிகளால் ஆழ்ந்த தியானம் செய்து, அங்கு வசிக்கும் தவம் பயிலும் தவசிகள், துவைதவனத்துக்குள் பாண்டவர்கள் நுழைவதைக் கண்டு, அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களை நோக்கி வந்தனர். புனிதமான அரசு, ருத்திராட்சம், ரௌஹீதகம், வஞ்சி, இலந்தை, கருங்காலி, வாகை, பிலவம், புங்கை, பீலுவிருக்ஷம், வன்னி, மூங்கில் ஆகிய மரங்கள் அந்தச் சரஸ்வதி நதியின் கரையில் வளர்ந்திருந்தன. யக்ஷர்கள், கந்தர்வர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோருக்குப் பிடித்தமானதும் தேவர்களின் இல்லம் போன்றதுமான சரஸ்வதியின் {நதியின்} (அருகில்) முழு மனநிறைவுடன் உலவி வந்த அந்த மன்னர்களின் மகன்கள் {பாண்டவர்கள்} அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

Wednesday, May 28, 2014

விடைபெற்றார் லோமசர்! - வனபர்வம் பகுதி 175

Lomasa bade adieu! | Vana Parva - Section 175 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கந்தமாதனத்தில் இருந்து இறங்க யுதிஷ்டிரனுக்கு பீமன் அறிவுறுத்தல்; பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்ட லோமசர் தேவலோகம் சென்றது...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "அவ்வீரர்களில் பிரதானமானவன் {அர்ஜுனன்}, ஆயுதங்களை அடைந்த பின் விரித்திரனைக் கொன்றவனின் {இந்திரனின்} வசிப்பிடத்தில் இருந்து திரும்பிய பிறகு, போர்க்குணமுள்ள அந்தத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} துணையுடன் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} என்ன செய்தார்கள்?" என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இந்திரனுக்கு நிகரானவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனனின் துணை கொண்டு, அந்த அழகான அற்புதமான வனத்தில் (உள்ள) கருவூலத்தலைவனின் {குபேரனின்} நந்தவனத்தில் அவர்கள் இன்பமாக விளையாடிக் கொண்டிருந்தனர். மனிதர்களின் தலைவனான கிரீடி {அர்ஜுனன்}, ஆயுதங்களையே நோக்கமாகக் கொண்டு, கையில் வில்லுடன், மரங்கள் நிறைந்த ஒப்பற்ற இன்பமான நிலங்களை ஆராய்ந்தபடி உலாவினான். மன்னன் வைஸ்ரவணனின் {குபேரனின்} அருளால் ஒரு வசிப்பிடத்தை அடைந்த இறையாண்மையின் மகன்கள் {பாண்டவர்கள்}, மனிதர்களின் ஐஸ்வரியத்தில் எந்த அக்கறையும் கொள்ளவில்லை. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவர்களது (வாழ்வின்) அந்தப் பகுதி அமைதியாகக் கடந்தது. பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துணையாகக் கொண்ட அவர்கள், நான்கு வருடங்களை ஒரு இரவைப் போலக் கழித்தனர். பாண்டவர்கள் (இந்த நான்கு வருடங்களையும்), முன்பே கழித்த ஆறு வருடங்களையும் சேர்த்து பத்து வருடங்களைச் சீராகக் கழித்தனர்.

பிறகு, வாயுத்தேவனின் உணர்ச்சி வேகமுள்ள மகனும் {பீமனும்}, ஜிஷ்ணுவும் {அர்ஜுனனும்}, வீரர்களான இரட்டையர்களும் {நகுலன், சகாதேவனும்} தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல அமர்ந்திருந்த மன்னனின் {யுதிஷ்டிரனின்} முன்னால் அமர்ந்து, அவனிடம் நன்மையான இனிய வார்த்தைகளைப் பேசினர். "உமது வாக்குறுதியை வாய்க்கச் செய்வதற்கும், உமது நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவுமே, ஓ! குருக்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, கானகத்தைக் கைவிட்டு, சுயோதனனையும் {துரியோதனனையும்} அவனைத் தொடர்பவர்களையும் கொல்லச் செல்லாமல் இருக்கிறோம். மகிழ்ச்சியுடன் இருக்கும் தகுதியை நாம் பெற்றிருந்தாலும், மகிழ்ச்சியை இழந்து வாழ்கிறோம். (கானகத்தில்) நாம்  (இந்நிலையில்) வாழும் பதினோறாவது {11} ஆண்டாகும் இது. இனி தீய மனமும் குணமும் கொண்டவர்களை ஏமாற்றி, தலைமறைவு காலத்தை {அஞ்ஞாதவாசத்தை) எளிதாக வாழ்வோம். உமது ஆணையின் பேரிலேயே, ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அச்சத்தில் இருந்து விடுபட்டு, மரியாதையைத் துறந்து நாம் காடுகளில் உலவி வருகிறோம். நமது குடியிருப்பு அருகில் இருப்பதைக் கண்டு (நம் எதிரிகள்), நாம் தொலைதூர நாடுகளுக்குச் சென்றிருப்போம் என்பதை நம்ப மாட்டார்கள். அங்கு அறியப்படாதவாறு வாழ்ந்த பிறகு, அந்தப் பொல்லாத மனிதர்களான சுயோதனன் {துரியோதனன்} மற்றும் அவனைத் தொடர்பவர்களைப் பழிதீர்த்து, அந்த மனிதர்களில் தாழ்ந்தவனை {துரியோதனனை} எளிதாக வேரறுத்து, அவனைக் கொன்று நமது நாட்டை மீட்டெடுப்போம். ஆகையால், ஓ! தர்மராஜா {யுதிஷ்டிரரே}, நீர் பூமிக்கு இறங்குவீராக. ஓ! மன்னா, சொர்க்கபுரி போல இருக்கும் இந்தப் பகுதியில் நாம் வசிப்போமேயானால், நாம் நமது கவலைகளை மறந்துவிடுவோம். அப்படி நேர்கையில், ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, நறுமணமிக்க மலரைப் போல அசையும் மற்றும் அசையாத உலகங்களில் உமது புகழ் அழிந்து போகும். குரு தலைவர்களிடம் இருந்து நாட்டை அடைந்தால், நீர் அதை (பெரும் புகழை) அடைந்து, பல்வேறு வேள்விகளைச் செய்வீர். இதை {இப்போது வாழும் இந்நிலையை} நீர் குபேரனிடம் இருந்து பெறுகிறீர். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதை நீர் அடையலாம். இப்போது, ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, தவறிழைத்த எதிரிகளைத் தண்டிப்பது மற்றும் அழிப்பதை நோக்கி உமது மனதைச் செலுத்தும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இடியைத் தாங்குபவனே {இந்திரனே} உமது பராக்கிரமத்திற்கு முன்னால் நிற்க இயலாது. ஓ! தர்மராஜா {யுதிஷ்டிரரே} சுபர்ணத்தைத் தனது குறியாகக் கொண்டவனும் (கிருஷ்ணனும்), சினியின் பேரனும் (சாத்யகியும்), உமது நன்மையை விரும்புகிறார்கள். தேவர்களுடனேயே கூட மோதல் ஏற்பட்டு, அதில் அவர்கள் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் வலியை அடைய மாட்டார்கள். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே} அர்ஜுனன் ஒப்பற்ற பலத்துடன் இருக்கிறான். நானும் அவ்வாறே இருக்கிறேன். ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே} யாதவர்களுடன் கூடிய கிருஷ்ணன் உமது நன்மையில் விருப்பம் கொண்டிருக்கிறான். நானும், போரில் சாதிக்கும் வீரர்களான இரட்டையர்களும் {நகுலன், சகாதேவன் ஆகியோரும்} அவ்வாறே இருக்கிறோம். நீர் செல்வம், செழிப்பு, மேன்மை ஆகியவற்றைப் பெறுவதற்காக நாங்கள் எதிரிகளுடன் மோதி அவர்களை அழிப்போம்" என்றான் {பீமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அறம், பொருள் ஆகியவற்றை அறிந்து, அளவில்லா பராக்கிரமத்துடன் இருக்கும், தர்மனின் பெருமைமிக்க அற்புதமான மகன் {யுதிஷ்டிரன்} அவர்களின் நோக்கத்தை அறிந்து, வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்தை வலம் வந்தான். மாளிகைகளிடமும், நதிகளிடமும், தடாகங்களிடமும், அனைத்து ராட்சசர்களிடமும் விடைபெற்ற நீதிமானான யுதிஷ்டிரன், தாங்கள் (ஏற்கனவே) வந்த வழியை நோக்கினான். பிறகு மலையைப் பார்த்தபடி அந்த உயர் ஆன்ம, சுத்த மனம் படைத்தவன் அந்த மலைகளில் சிறந்த மலையிடம், "ஓ! மலைகளில் முதன்மையானவனே, எதிரிகளைக் கொன்று, எனது நாட்டை மீட்டு, எனது காரியங்கள் அனைத்தும் முடிந்ததும், நான் எனது நண்பர்களுடன் தவம்பயின்று கட்டுப்பட்ட ஆன்மாவுடன் மீண்டும் உன்னைக் காண்பேன்" என்றான். இதை அவன் தீர்மானமாகவும் கொண்டான். தனது தம்பிகளுடனும், அந்தணர்களுடனும், அந்தக் குருக்களின் தலைவன் {யுதிஷ்டிரன்} அதே சாலை வழியே முன்னேறினான். கடோத்கசனும்  அவனைத் தொடர்பவர்களும் அவர்களை மலைமுகடுகளில் சுமந்து சென்றனர். அவர்கள் பயணிக்கத் தொடங்கியதும், ஒரு தந்தை மகனுக்கு அறிவுரை கூறுவது போலக் கூறிய பெரும் முனிவரான லோமசர், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், சொர்க்கவாசிகளின் புனிதமான இருப்பிடத்திற்குச் சென்றார். பிறகு மனிதர்களில் முதன்மையான ஆர்ஷ்டிஷேணராலும் அறிவுறுத்தப்பட்ட பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, அழகான தீர்த்தங்களையும், ஆசிரமங்களையும், பல பெரிய தடாகங்களையும் கண்ட படி தனியாகச் சென்றார்கள்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

Tuesday, May 27, 2014

அர்ஜுனனைத் தடுத்த நாரதர்! - வனபர்வம் பகுதி 174

Narada prevents Arjuna! | Vana Parva - Section 174 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தான் பெற்ற தெய்வீக ஆயுதங்களை அர்ஜுனன் யுதிஷ்டிரனுக்குக் காட்டியது; ஆயுதங்களின் சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உலகம் நடுங்கியது; இந்திரனால் அனுப்பப்பட்ட நாரதர் அர்ஜுனனைத் தடுத்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இரவு கடந்ததும் நீதிமானான யுதிஷ்டிரன் எழுந்து, தனது தம்பிகளுடன் சேர்ந்து தேவையான கடமைகளைச் செய்தான். பிறகு தனது தாயின் {குந்தியின்} மகிழ்வுக்குக் காரணமான அர்ஜுனனிடம் அவன் {யுதிஷ்டிரன்}, "ஓ! கௌந்தேயா {அர்ஜுனா}, தானவர்களை எவற்றைக் கொண்டு வீழ்த்தினாயோ அவ்வாயுதங்களைக் (எனக்கு) காட்டு" என்றான்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதன்பேரில், ஓ பாரதா {ஜனமேஜயா}, பாண்டுவின் மகனான அதீத தூய்மை பயிலும் பெரும் பலமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேவர்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதங்களைக் காட்டினான். மலைகளைத் துருவமாகவும் {pole} தரையை அச்சாகவும் {axle}, அடர்த்தியான மூங்கில் மரங்களை {துருவத்தையும் அச்சையும் இணைக்கும்} முப்பட்டையான மரமாகவும் {socket pole} கொண்ட பூமியில் தனது தேரில் அமர்ந்திருப்பது போல, பிரகாசமிக்க தெய்வீக கவசத்துடனும் காந்தியுடனும் அமர்ந்திருந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்துத் துவங்கும் பொருட்டுத் தனது காண்டீவத்தையும், தனக்குத் தேவர்களால் கொடுக்கப்பட்ட சங்கையும் எடுத்தான்.


அந்தத் தெய்வீக ஆயுதங்கள் பொருத்தப்பட்டபோது, (அர்ஜுனனின்) பாதங்களால் ஒடுக்கப்பட்ட பூமி, (தன் மேலிருந்த) மரங்களுடன் சேர்ந்து நடுங்கத் தொடங்கினாள்; நதிகளும், கடலும் கலங்கித் தத்தளித்தன. (மலைப்) பாறைகள் வெடித்தன; காற்றும் அமைதியடைந்தது (வீசவில்லை). சூரியன் பிரகாசிக்கவில்லை; நெருப்புச் சுடர்விடவில்லை; இறுபிறப்பாளர்களின் வேதங்கள் பிரகாசிக்கவில்லை {அந்தணர்களுக்கு வேதங்கள் நினைவுக்கு வரவில்லை}. மேலும், ஓ! ஜனமேஜயா, இதனால் துன்பப்பட்ட பூமிக்கு அடியில் வசிக்கும் உயிரினங்கள், நடுக்கத்துடனும் உருக்குலைந்த முகத்துடனும் மேலெழும்பி கரங்கள் கூப்பிபடி பாண்டவர்களைச் சூழ்ந்து கொண்டன. அந்த ஆயுதங்களின் வெப்பத்தால் எரிக்கப்பட்ட அவை, தனஞ்சயனைத் (தங்கள் உயிருக்காகத்} தஞ்சம் அடைந்தன.

பிறகு பிரம்ம முனிவர்களும், சித்தர்களும், பெருமுனிவர்களும், அசையும் உயிரினங்கள் அனைத்தும் (காட்சிக்கு) வந்தன. தேவ முனிவர்களில் முதன்மையானவர்களும், தேவர்களும், யக்ஷர்களும், ராட்சசர்களும், கந்தர்வர்களும், இறகு படைத்த குழுக்களும் {பறவைகளும்}, (பிற) விண்ணதிகாரிகளும் {பறவைகளும்} (காட்சியில்) வந்தன. பெருந்தகப்பனும் {பிரம்மாவும்}, அனைத்து லோகபாலர்களும், தெய்வீகமான மகாதேவனும் தங்களைத் தொடர்பவர்களுடன் அங்கே வந்தனர். பிறகு ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, புவிசாரா பலவண்ண மலர்களைச் சுமந்து வந்த வாயு (காற்று தேவன்), அந்தப் பாண்டவனைச் {அர்ஜுனனைச்} சுற்றி அவற்றைத் தூவிச் {சென்றான்} விழுந்தான். தேவர்களால் அனுப்பப்பட்ட கந்தர்வர்கள் பல்வேறு பாடல்களைப் பாடினர். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அப்சரக்கூட்டங்களும் (அங்கே) ஆடின.

அப்படிப்பட்ட வேளையில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, தேவர்களால் அனுப்பப்பட்ட நாரதர் அங்கே வந்து, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இனிய வார்த்தைகளால், "அர்ஜுனா, ஓ! அர்ஜுனா, தெய்வீக ஆயுதங்களைத் தொடுக்காதே. (தகுந்த) ஒரு இலக்கும் இல்லாமல் இவற்றைப் பிரயோகம் செய்யக்கூடாது. இலக்கு என்று ஒன்று (தற்போது) இருந்தாலும், ஆபத்தில்லா சூழ்நிலையில் இவற்றைப் பிரயோகம் செய்யக்கூடாது. ஓ! குருக்களின் மகனே {அர்ஜுனா}, (தகுந்த நிகழ்வில்லாமல்) பிரயோகிப்படும் இந்த ஆயுதங்கள் பெரும் தீமையைச் செய்யும். மேலும், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உனக்கு உரைக்கப்பட்டது போல இந்தப் பலமிக்க ஆயுதங்களை உரியமுறையில் வைத்திருந்தால், சந்தேகமில்லாமல் உனது பலமும் மகிழ்ச்சியும் பெருக அது வழிவகுக்கும். இவற்றை உரிய முறையில் வைக்கவில்லையென்றால், ஓ! பாண்டவா {அர்ஜுனா}, இவை மூவுலகங்களையும் அழிக்கவல்ல கருவிகளாக மாறும். எனவே, நீ இதுபோல மீண்டும் செயல்படாதே. ஓ! அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, பார்த்தன் {அர்ஜுனன்} போர்க்களத்தில் உனது எதிரிகளை அடிக்கும்போது, நீயும் இந்த ஆயுதங்களைக் காண்பாய்" என்றார் {நாரதர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இப்படிப் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} தடுத்த தேவர்களும் பிறரும் அங்கிருந்து தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினர். ஓ! கௌரவா {ஜனமேஜயா}, அவர்கள் அனைவரும் சென்ற பிறகு, அதே வனத்தில் திரௌபதியுடன் கூடிய பாண்டவர்கள் மகிழ்ச்சியாக வசிக்க ஆரம்பித்தனர்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

இந்திர கவசம்! - வனபர்வம் பகுதி 173

The mail of Indra! | Vana Parva - Section 173 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

இந்திரனிடம் பெற்ற மாலை, சங்கு, கவசம், கிரீடம் ஆகியவற்றைக் குறித்து அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம் சொன்னது; யுதிஷ்டிரன் அந்தத் தெய்வீக ஆயுதங்களைப் பார்க்க விரும்பியது; அர்ஜுனன் நாளை காட்டுவதாகச் சொன்னது...

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "உடலைப் பிளக்கும் கணைகளால் காயப்பட்டிருந்த என்னை, தன்னைப் போலவே நினைத்த தேவர்களின் ஆட்சியாளன் {இந்திரன்}, என்னிடம் மிகவும் உறுதியுடன், "ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைத்து தெய்வீக ஆயுதங்களும் உன்னிடம் இருக்கின்றன. பூமியில் இருக்கும் எந்த மனிதனும் உன்னைப் பலத்தில் விஞ்ச முடியாது. ஓ! மகனே {அர்ஜுனனே}, நீ களத்தில் இருக்கும்போது, பல க்ஷத்திரியர்களுடன் கூடிய பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், சகுனி ஆகிய அனைவரும் சேர்ந்தும் கூட உன்னில் பதினாறில் {1/16} ஒரு பங்குக்குக் கூட ஆக மாட்டார்கள்" என்றான் {இந்திரன்}.

பிறகு, இந்தப் பொன்மாலையையும், பெரும் ஒலியெழுப்பும் தேவதத்தம் என்ற இந்தச் சங்கையும், துளைக்க முடியாதபடி உடலைப் பாதுகாக்கும் தனது தெய்வீக கவசத்தையும் அந்தத் தலைவனான மகவான் {இந்திரன்} எனக்குக் கொடுத்தான். இந்திரன் தானே (எனது தலையில்) இந்தக் கிரீடத்தைப் பொருத்தினான். அழகான, அரிதான புவிசாரா ஆடை ஆபரணங்களையும் எனக்குச் சக்ரன் {இந்திரன்} கொடுத்தான். இம்முறையில், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தேவர்களுடன் சேர்ந்த சக்ரன் {இந்திரன்} என்னிடம், "ஓ! அர்ஜுனா, நீ செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; உனது சகோதரர்கள் உன்னை நினைக்கிறார்கள்" என்றான். ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, சூதாட்டத்தின் காரணமாக எழும் கோபத்தை நினைத்தவாறே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நான் அந்த ஐந்து வருடங்களையும் இந்திரனின் வசிப்பிடத்தில் இப்படியே கழித்தேன். பிறகு அங்கிருந்து வந்து, சகோதரர்கள் சூழ இருந்த உம்மைக் கந்தமாதனத்தின் தாழ்ந்த பகுதிகளில் இருக்கும் சிகரத்தில் கண்டேன்" {என்றான் அர்ஜுனன்}.

யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, "ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நற்பேறின் நிமித்தமாகவே நீ ஆயுதங்களை அடைந்தாய்; நற்பேறின் நிமித்தமாகவே தேவர்களின் தலைவன் {இந்திரன்} உன்னை வணங்கினான். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {அர்ஜுனா}, நற்பேறின் நிமித்தமாகவே தேவியுடன் கூடிய ஸ்தாணு {உமையுடன் கூடிய சிவன்}, ஓ! பாவமற்றவனே உனக்குத் தங்களை வெளிப்படுத்தி, போரில் உன்னால் திருப்தியடைந்தான்; ஓ! பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நற்பேறின் நிமித்தமாகவே நீ லோகபாலர்களைச் சந்தித்தாய்; ஓ! பார்த்தா, நற்பேறின் நிமித்தமாகவே நாம் வளமையடைந்தோம்; நற்பேறின் நிமித்தமாகவே நீ திரும்பி வந்தாய். நகரங்களை மாலையாக அணிந்த முழு உலகமும் வெல்லப்பட்டதாகவும், திருதராஷ்டிரன் மகன்கள் ஏற்கனவே அடக்கப்பட்டதாகவும் நான் இன்று கருதுகிறேன். இப்போது, ஓ! பாரதா {அர்ஜுனா}, பலமிக்க நிவாதகவசர்களை நீ எதன் உதவியால் கொன்றாயோ அந்தத் தெய்வீக ஆயுதங்களைக் காண ஆவலாக இருக்கிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.

அதற்கு அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, "கடும் நிவாதகவசர்களை எதை வைத்துக் கொன்றேனோ அந்தத் தெய்வீக ஆயுதங்களை நாளை காலையில் நீர் காணலாம்" என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இப்படித் தனது வருகையைக் குறித்து (உண்மையைத்) தெரிவித்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களுடன் ஒன்றாக அன்று இரவைக் கடத்தினான்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

Saturday, May 24, 2014

ஹிரண்யபுரம்! - வனபர்வம் பகுதி 172

Hiranyapura! | Vana Parva - Section 172 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

அர்ஜுனன் இந்திரலோகம் திரும்புகையில் ஹிரண்யபுரத்தைப் பார்த்தல்; அந்நகரத்தில் வசித்து வந்த பௌலோமர்களையும் காலகேயர்களையும் கொன்ற பிறகு இந்திரலோகம் திரும்புதல்...

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "அப்படித் திரும்புகையில், சுதந்திரமாக நினைத்தவண்ணம் நகரும் தன்மை கொண்டதும், பூமிக்குச் சம்பந்தமில்லாததும், நெருப்பைப் போன்றும், சூரியனைப் போன்றும் பிரகாசிப்பதுமான பலம்வாய்ந்த ஒரு நகரத்தை {அந்தரத்தில் மிதக்கும் நகரம்} நான் கண்டேன். அந்நகரத்தில் ரத்தினங்கள் நிறைந்த பல்வேறு மரங்களும், இனிய குரல் படைத்த இறகுகள் கொண்டவைகளும் {பறவைகளும்} நிறைந்திருந்தன. நான்கு வாயில்களும், பல வாயில் வழிகளும், கோபுரங்களும் இருந்த தாக்குதலுக்கு அசைந்து கொடுக்காத அந்த நகரத்தில் பௌலோமர்களும் காலகஞ்சர்களும் {காலகேயர்களும்} வசித்தனர். அது அனைத்து விதமான ரத்தினங்கள் நிறைந்து, புவிசாரா அற்புத தோற்றத்தைக் கொண்டிருந்தது. கனிகளும், மலர்களும் தாங்கியிருந்த மரங்கள் அனைத்து விதமான ரத்தினங்களுடன் அந்நகரில் நிறைந்திருந்தன. அங்கே பூமிக்கு சம்பந்தமில்லாத மிக அழகான பறவைகள் இருந்தன. மாலைகள் அணிந்து, கைகளில் சூலங்கள், இருமுனை கொண்ட வாட்கள், கதாயுதங்கள், தடிகள், விற்கள் ஆகியவற்றைச் சுமந்தபடி அசுரர்கள் கும்பலாக மகிழ்ச்சியுடன் அங்கே இருந்தனர்.


ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தைத்தியர்களின் அந்த அற்புதமான நகரத்தைக் கண்ட நான், மாதலியிடம் {இந்திரனின் தேரோட்டியிடம்}, "அற்புதமாகக் காட்சியளிக்கிறதே அது என்ன?" என்று கேட்டேன். அதற்கு மாதலி, "ஒரு காலத்தில் ஒரு தைத்தியனின் மகளான பௌலோமாவும், அசுர வகையில் வந்த பலமிக்கப் பெண்ணான காலகாவும் ஆயிரம் தேவ வருடங்களுக்குக் கடும் தவமிருந்தனர். அவர்களது தவத்தின் முடிவில், சுயம்பு {பிரம்மன்} அவர்களுக்கு வரங்களை அளித்தான். ஓ! மன்னர்களின் மன்னா {அர்ஜுனா}, என்றும் அவர்களது வாரிசுகளைத் தீயூழ் {துரதிர்ஷ்டம்} அடையாதிருக்கவும், தேவர்களாலோ, ராட்சசர்களாலோ, பன்னகர்களாலோ தங்கள் வாரிசுகளை அழிக்க முடியாதபடி இருக்கவும், அனைத்து வகை ரத்தினங்களும் நிறைந்த மிகப்பிரகாசமானதும், மிக அழகானதும், தேவர்களாலோ, பெரும் முனிவர்களாலோ, யக்ஷர்களாலோ, கந்தர்வர்களாலோ, பன்னகர்களாலோ, அசுரர்களாலோ, ராட்சசர்களாலோ வெல்ல முடியாததுமான வான்நகரம் ஒன்றையும் {பௌலோமாவும் காலகாவும்} வரமாகப் பெற்றனர். ஓ! பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனனே}, நகர்ந்து கொண்டே இருக்கும், தேவர்களற்ற அந்தப்புவிசாரா வான்நகரம் காலகேயர்களுக்காகப் பிரம்மனே உருவாக்கியதாகும்.

விரும்பப்படும் அனைத்து பொருட்களும் நிறைந்த இந்நகரத்தில் துன்பமோ நோயோ அறியப்பட்டதில்லை. ஓ! வீரா {அர்ஜுனா}, ஹிரண்யபுரம் எனக் கொண்டாடப்படும் இந்தப் பலமிக்க நகரத்தில் பௌலோமர்களும் காலகஞ்சர்களும் {காலகேயர்களும்} வசிக்கிறார்கள். இந்நகர் அந்த அசுரர்களாலேயே காக்கப்படுகிறது. ஓ! மன்னா {அர்ஜுனா}, எந்தத் தேவனாலும் கொல்லப்பட முடியாமல் இருப்பதால், ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, அவர்கள் தங்கள் அனைத்து விருப்பங்களும் ஈடேறி, துயரைக் காணாமல் இன்பமாக இங்கு வசிக்கிறார்கள். மனிதனின் கைகளில் தான் இவர்களுக்கு அழிவு என்பதைப் பிரம்மன் முன்பே தீர்மானித்துவிட்டான். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ வஜ்ராயுதத்தை ஏவி இந்தப் பலமிக்க ஒடுக்கப்பட முடியாத காலகஞ்சர்களை அழிப்பாயாக" என்றான் {மாதலி}.

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, தேவர்களாலோ அசுரர்களாலோ அவர்களுக்கு அழிவில்லை என்பதைக் கேள்விப்பட்ட நான் மகிழ்ச்சியாக மாதலியிடம், "அந்நகரத்தை நோக்கி விரைவாகச் செல். தேவர்கள் தலைவனை {இந்திரனை} வெறுக்கும் அவர்களை நான் என் ஆயுதங்களைக் கொண்டு தாக்குவேன். தேவ வெறுப்புக் கொண்ட தீயவர்களில் என்னால் கொல்லப்பட முடியாதவர்கள் யாருமில்லை என்பது நிச்சயம்" என்றேன். அதன் பேரில் மாதலி, குதிரைகள் பூட்டிய அந்தத் தெய்வீகத் தேரில் என்னை ஹிரண்யபுரத்தின் அருகே அழைத்துச் சென்றான். என்னைக் கண்ட அந்தத் திதியின் மகன்கள் {அசுரர்கள்} பல்வேறு ஆடை ஆபரணங்களையும் அணிந்து, கவசம் பூண்டு என்னை நோக்கி விரைவாகப் பறந்து வந்தனர். பெரும் பராக்கிரமம் கொண்ட அந்தத் தானவர்களில் முதன்மையானவர்கள், என் மீது கோபம் கொண்டு கணைகளாலும், பல்லங்களாலும், கதாயுதங்களாலும், இருமுனை வாள்களாலும், தோமாரங்களாலும் என்னைத் தாக்கினர்.

அதன்பேரில், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, என் வலிமையின் துணை கொண்டு சரமாரியாக வந்த அந்த ஆயுதங்களை எனது கணை மழையால் தடுத்து எனது தேரில் அங்குமிங்கும் நின்று அவர்களைக் குழப்பி அதிசயிக்க வைத்தேன். இப்படிக் கலங்கிப் போன தானவர்கள் ஒருவரை ஒருவர் கீழே தள்ளத் தொடங்கினர். குழம்பிப் போன அவர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதினர். நான் எனது சுடர்விட்டெரியும் கணைகளால் அவர்களது தலைகளை நூற்றுக்கணக்கில் அறுத்துப் போட்டேன். என்னால் கடுமையாகத் தாக்கப்பட்ட அந்தத் திதியின் வாரிசுகள், (தங்கள்) நகரக்குள் {ஹிரண்யபுரத்திற்குள்} தஞ்சம் புகுந்து, தானவர்களுக்குத் தர்மமான மாயையைப் பயன்படுத்தி அதனுடன் {நகரத்துடன்} சேர்ந்து ஆகாயத்தில் பறந்தனர். அதன்பேரில், ஓ! குருக்களின் மகனே {யுதிஷ்டிரரே}, அந்தத் தைத்தியர்களின் வழிகளை அடைத்துக் கொண்டு, பலமிக்கக் கணைகளை அடித்து அவர்களது வழியைத் தடுத்தேன். பிறகு வரத்தின் அருளால் அந்தத் தைத்தியர்கள் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் எங்கும் விருப்பப்படி செல்லவல்ல அந்தப் புவிசாரா வான் நகரத்தில் தங்களைத் நிலைபடுத்திக் கொண்டனர். ஒரு சமயம் (அந்நகரம்) பூமியை அடைந்தது, ஒரு சமயம் மேலெழுந்தது; ஒரு சமயம் குறுக்காகச் சென்றது, ஒரு சமயம் நீருக்குள் மூழ்கியது.

ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, இதனால் நான், அமராவதியை ஒத்திருக்கும், விருப்பப்படி செல்லும் அந்தப் பெரும்பலம் வாய்ந்த நகரத்தைக் கடுமையாகத் தாக்கினேன். ஓ! பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, திதியின் மகன்கள் {அசுரர்கள்} இருந்த அந்நகரத்தை {ஹிரண்யபுரத்தைக்} குவியலான தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு தாக்கினேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நேராகச் செல்லும், நான் அடித்த இரும்புக் கணைகளால் அடிக்கப்பட்ட அந்த அசுர நகரம் {ஹிரண்யபுரம்} உடைந்து பூமியில் விழுந்தது. இடியைப் போன்ற வேகம் கொண்ட எனது இரும்பு அம்புகளால் அடிக்கப்பட்டுக் காயமடைந்த அவர்கள், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, விதியால் உந்தப்பட்டு விரைந்தனர். பிறகு வானத்துக்கு உயர்ந்த மாதலி, சூரியப் பிரகாசம் கொண்ட அந்தத் தேருடன் முன் வந்து விழுவது போல வேகமாகப் பூமியில் இறங்கினான். பிறகு, ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, என்னுடன் போரிடும் ஆவலில் இருந்த கோபம் கொண்டவர்களின் {அசுரர்களின்} அறுபதாயிரம் {60,000} தேர்கள் என்னைச் சூழ்ந்து நின்றன. கழுகின் இறகுகள் கொண்ட கூரிய கணைகளைக் கொண்டு நான் அவற்றை (தேர்களை) அழித்தேன்.

இதைக் கண்டு, "மனிதர்களால் நமது படையை அழிக்க முடியாது" என்று எண்ணிய அவர்கள் கடல் அலைகளைப் போல மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர். அதன் பேரில் நான் தொடர்ச்சியாக (நாணில்) தெய்வீக ஆயுதங்களையே பொருத்தினேன். அற்புதமாகப் போரிடும் அந்த ரதவீரர்களின் ஆயிரக்கணக்கான கணைகள் எனது தெய்வீக ஆயுதங்களை எதிர்த்தன. அக்களத்தில் நான் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்கள் (அசுரர்கள்), விதவிதமான சூழ்ச்சிகள் செய்து தங்கள் தேர்களில் உலாவுவதைக் கண்டேன். பல வண்ண கவசங்களுடனும், கொடிக்கம்பங்களுடனும், வித்தியாசமான ஆபரணங்களுடனும் அவர்கள் என் மனதை மகிழ்வித்தனர். அந்த மோதலில் அவர்களை கணை மழை கொண்டு என்னால் துன்புறுத்த முடியவில்லை. அவர்களாலும் என்னைத் துன்புறுத்த முடியவில்லை. போரில் வல்லவர்களான ஆயுதம் தாங்கிய அந்த எண்ணிலடங்காதவர்களால் தாக்கப்பட்ட நான், அந்தப் பெரும் மோதலில் வலியை உணர்ந்தேன். பயங்கரமான அச்சம் என்னைப் பீடித்தது.

அதன்பேரில் மோதுவதற்கு (எனது சக்திகளைச்) சேகரித்த நான், தேவாதி தேவனான ரௌத்திரனிடம் {சிவனிடம் வணங்கி}, "அனைத்து உயிர்களுக்கும் நன்மையுண்டாகட்டும்" என்று சொல்லி, ரௌத்திரம் {பாசுபதம்} என்ற பெயரால் கொண்டாடப்படும் அனைத்து எதிரிகளையும் அழிக்கும் அந்தப் பெரும் பலமிக்க ஆயுதத்தைப் பொருத்தினேன். பிறகு, மூன்று தலைகளும், ஒன்பது கண்களும், மூன்று முகங்களும், ஆறு கரங்களும் கொண்ட ஒரு ஆண்மகனை நான் கண்டேன். அவனது கேசம் எரியும் நெருப்பைப் போலவும், சூரியனைப் போலவும் பிரகாசித்தது. ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, நாக்குகளை நீட்டிக் கொண்டிருக்கும் பெரும் பலம் மிக்கப் பாம்புகளைத் தனது ஆடையாக அவன் கொண்டிருந்தான். ஓ! பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, பயத்திலிருந்து விடுபட்ட நான், அந்தப் பயங்கரமான நித்தியமான ரௌத்திரத்தை {பாசுபதத்தைப்} காண்டீவத்தில் பொருத்தி, அளவிலா சக்தி கொண்ட முக்கண் சர்வனை {சிவனை} வணங்கி, ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, அந்தத் தானவர்களில் முதன்மையானவர்களை அழிக்கும் நோக்கோடு (அவ்வாயுதத்தை) விடுத்தேன்.

ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, அது {பாசுபத ஆயுதம்} அவ்வாறு ஏவப்பட்டதும், அதிலிருந்து, ஆயிரக்கணக்கான மான் உருவங்களும், சிம்மங்களும், புலிகளும், கரடிகளும், எருமைகளும், பாம்புகளும், பசுக்களும், சரபங்களும், யானைகளும், எண்ணிலடங்கா குரங்குகளும், காளைகளும், பன்றிகளும், பூனைகளும், நாய்களும், பேய்பிசாசுகளும், புருண்டங்களும், கழுகுகளும், கருடர்களும், சாமரங்களும், சிறுத்தைகளும், மலைகளும், கடல்களும், தேவர்களும், முனிவர்களும், அனைத்து கந்தர்வர்களும், யக்ஷர்களுடன் கூடிய ஆவிகளும், தேவர்களை வெறுப்பவர்களும் (அசுரர்களும்), குஹ்யர்களும், நைரிதர்களும், யானை வாய் கொண்ட சுறாக்களும், ஆந்தைகளும், மீன்கள், குதிரைகள் போன்ற உருவம் கொண்ட உயிரினங்களும், வாள்கள் மற்றும் பலதரப்பட்ட ஆயுதங்கள் தாங்கிய உயிரினங்களும், கதைகள் மற்றும் தண்டங்கள் ஏந்திய ராட்சர்களும் தோன்றினர்.

அவ்வாயுதம் {பாசுபதம்} ஏவப்பட்டதும் இப்படிப்பட்ட பல்வேறு உருவங்கொண்டவர்களால் இந்த அண்டமே நிறைந்தது. மூன்று தலைகள் கொண்ட சிலவும், நான்கு தெற்றுப் பற்கள் கொண்ட சிலவும், நான்கு வாய்கள் கொண்ட சிலவும், நான்கு கரங்கள் கொண்ட சிலவும் எனத் தங்கள் மேனியில் சதைத் துண்டுகளுடனும், கொழுப்புடனும், எலும்புகளுடனும், ஊனீருடனும் இருந்த பூதங்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட தானவர்கள் அழிவைச் சந்தித்தனர். ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, ஒரு நொடியில் நான் அந்தத் தானவர்கள் அனைவரையும், கல்லின் சாறு கொண்டு நெருப்பையும் சூரியனையும் போலச் சுடர்விட்டெரிந்த எனது அம்புக்கூட்டத்தால் கொன்றேன். காண்டீவத்தால் வெட்டப்பட்டு உயிரிழந்து வானத்தில் இருந்து விழுந்த அவர்களைக் கண்டு, நான் மீண்டும் திரிபுரத்தை அழித்த தெய்வத்தை {சிவனை} வணங்கினேன். புவிசாரா ஆபரணங்கள் பூண்டிருந்த அவர்கள் ரௌத்திராயுதத்தால் {பாசுபதத்தால்} நசுக்கப்பட்டதைக் கண்ட தேவர்களின் தேரோட்டி {மாதலி} பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.

தேவர்களான அவர்களாலும் அடைய முடியாத தாங்க முடியாத காரியத்தைச் சாதித்ததைச் சாட்சியாகக் கண்ட சக்ரனின் {இந்திரனின்} தேரோட்டியான மாதலி, மிகவும் திருப்தி கொண்டு என்னை வணங்கி இரு கரம் கூப்பி, "போர்க்களத்தில் நீ சாதித்த இந்தக் காரியம், பிறந்த எந்தப் பிறவியாலும், தேவர்களாலும் சாதிக்க முடியாது. ஏன் தேவர்கள் தலைவனே {இந்திரனே} இக்காரியத்தைச் சாதிக்க முடியாது. தேவர்களால் அழிக்க முடியாத வானத்தில் மிதந்து கொண்டிருந்த நகரத்தையும், அசுரர்களையும், ஓ! {அர்ஜுனா{ வீரா, நீ உனது பராக்கிரமத்தாலும், தவச்சக்தியாலும் நசுக்கினாய்" என்றான். அந்த வான்நகரம் அழிந்த போதும், தானவர்கள் கொல்லப்பட்ட போதும், அவர்களது மனைவியர் குராரிப் பறவைகளைப் போலத் துன்பத்தால் கதறி அழுது, கூந்தல் கலைந்தபடி நகரத்தைவிட்டு வெளியே வந்தனர். தங்கள் மகன்களுக்காகவும், சகோதரர்களுக்காகவும், தந்தைகளுக்காவும் தரையில் விழுந்து ஒப்பாரி வைத்த அவர்கள் துன்பகரமான குரலுடன் அழுதார்கள். தங்கள் நாயகரை இழந்ததால், அவர்கள் தங்கள் மார்புகளை அடித்துக் கொண்டதால், அவர்களது மாலைகளும் ஆபரணங்களும் கழன்று விழுந்தன.

கந்தர்வர்கள் நகரத்திற்கு ஒப்பான தோற்றம் கொண்ட அந்தத் தானவர்கள் நகரம் ஒப்பாரியால் நிறைந்தது. துயரடைந்து, அருள் இழந்து யானைகள் அற்ற தடாகம் போல, மரங்களற்ற கானகம் போலத் தங்கள் தலைவர்கள் அற்ற அந்நகரம் அழகாக இல்லை. மேகங்களால் கட்டப்பட்ட நகரம் போல அது மறைந்து போனது. களத்தில் எனது காரியம் முடிந்ததும் மகிழ்ச்சி நிறைந்த ஆவி கொண்ட மாதலி என்னைத் தேவர்கள் தலைவனின் வசிப்பிடத்திற்கு அழைத்துச் சென்றான். அந்தப் பலமிக்க அசுரர்களைக் கொன்று, ஹிரண்யபுரத்தை அழித்து, நிவாத கவசர்களையும் கொன்ற நான் இந்திரனிடம் சென்றேன். ஓ! மிகுந்த பிரகாசம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, மாதலி நடந்ததை நடந்தவாறே தேவேந்திரனிடம் விவரமாகவும் முழுமையாகவும் எனது சாதனைகளை எடுத்துச் சொன்னான்.

ஹிரண்யபுரம் அழிக்கப்பட்டதையும், மாயைகள் சமன்படுத்தப்பட்டதையும், போர்க்களத்தில் நிவாதகவசர்களின் படுகொலையையும் கேள்விப்பட்ட புரந்தரன் {இந்திரன்} மருதர்களுடன் கூடி மிகவும் மகிழ்ந்து, "நன்று; நன்றி!" என்று சொல்லி மகிழ்ந்தான். தேவர்களுடன் கூடிய தேவர்களின் மன்னன் {இந்திரன்}, மீண்டும் மீண்டும் மகிழ்வூட்டி, "தேவர்களாலும் அசுரர்களாலும் செய்ய முடியாத சாதனையைச் செய்திருக்கிறாய். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பலமிக்க எனது எதிரிகளைக் கொன்று உனது குருவின் கூலியை {குருதட்சணையைக்} கொடுத்துவிட்டாய். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, இப்படியே போர்க்களத்தில் எப்போதும் அமைதியாக இருந்து, தவறில்லாமல் ஆயுதங்களை ஏவினால், தேவர்களும், தானவர்களும், ராட்சசர்களும், யக்ஷர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், பறவைகளும், பாம்புகளும் உன்னை எதிர்த்துக் களத்தில் நிற்க முடியாது. ஓ! கௌந்தேய {அர்ஜுனா}, உன்னுடைய கரங்களில் பலத்தால் வெல்லப்பட்ட பூமியை, குந்தியின் மகனான யுதிஷ்டிரன் ஆள்வான்" என்றான் {இந்திரன்}. 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top