The enquiry of Krodhavasas! | Vana Parva - Section 152 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
சௌகாந்திக மலர் இருக்கும் தடாகத்தில் இறங்க நினைத்த பீமனை, அத்தடாகத்தைக் காவல் காத்த ராட்சசர்கள் தடுத்து அவன் வந்த நோக்கத்தைக் கேட்பது
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த இடத்தை அடைந்த பிறகு, பீமசேனன், கைலாச மலையின் உச்சியில் ராட்சசர்களால் பாதுகாக்கப்பட்ட அழகிய கானகத்தால் சூழப்பட்ட அந்த அழகிய தாமரைத் தடாகத்தைக் கண்டான். அத்தடாகம், குபேரனின் வசிப்பிடத்தில் இருந்து தொடர்ச்சியாக அருவிபோல விழுந்து கொண்டிருந்தது. நீண்ட நிழல் பரப்பும் பல வகை மரங்களாலும், கொடிகளாலும், சூழப்பட்ட அத்தடாகம் பச்சைக் குவளைகளால் மூடப்பட்டுக் காண்பதற்கு அழகாக இருந்தது.
அத்தெய்வீகத் தடாகம் பொற்தாமரைகளால் நிறைந்து, பல வகைப் பறவைகளால் மொய்க்கப்பட்டிருந்தது. அதன் கரைகள் சேறற்று அழகாக இருந்தன. உயர்ந்த பாறை பரப்பில் தேங்கியிருந்த அந்த அபரிமிதமான அற்புத நீர் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அது உலகத்தின் அற்புதமாகவும், காண்பதற்கு ஆரோக்கியமான அழகிய காட்சியாகவும் இருந்தது. அத்தடாகத்தின் நீரை, குந்தியின் மகன் {பீமன்} அமுதத்துக்கு நிகரான சுவையும், குளுமையும், தெளிவும், புத்தணர்ச்சியும் கொண்டதாகப் பீமன் உணர்ந்தான். அந்தப் பாண்டவன் {பீமன்} அந்நீரை மட்டுமீறித் தாராளமாகக் குடித்தான்.
அந்தத் தெய்வீகமான நீர்க்கொள்ளிடம் தெய்வீகமான சௌகாந்திக தாமரைகளால் மூடப்பட்டிருந்தது. மேலும் அற்புதமான நறுமணமிக்க, வைடூரியத் தண்டுகள் கொண்ட பல வண்ணங்களில் மினுங்கும் தங்கத் தாமரைகளையும் கண்டான். அன்னங்களாலும், நீர்க்காக்கைகளாலும் அசைக்கப்பட்ட அத்தாமரைகள் மாவு போன்ற புதுமையான பூந்தாதுகளைப் பரப்பிக் கொண்டிருந்தன. யக்ஷர்களின் மன்னனான உயர் ஆன்ம குபேரனின் விளையாட்டிடமாக அத்தடாகம் இருந்தது. கந்தர்வர்கள், அப்சரசுகள் மற்றும் தேவர்களால் அது பெரிதும் மதிக்கப்பட்டிருந்தது. தெய்வீக முனிவர்களும், யக்ஷர்களும், கிம்புருஷர்களும், ராட்சசர்களும், கின்னரர்களும் அத்தடாகத்துக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தனர். அத்தடாகம் குபேரனால் நன்கு பாதுகாக்கப்பட்டிருந்தது.
அந்த ஆற்றையும், தெய்வீகமான அந்தத் தடாகத்தையும் கண்ட குந்தியின் பலம் நிறைந்த மகனான பீமசேனன் மிகவும் மகிழ்ந்தான். சீருடைகளுடனும், பலதரப்பட்ட ஆயுதங்களுடனும் இருந்த குரோதவாசர்கள் என்ற பெயர் கொண்ட நூற்றக்கணக்கான, ஆயிரக்கணக்கான ராட்சசர்கள், தங்கள் மன்னனின் {குபேரனின்} ஆணைக்கிணங்கி அத்தடாகத்தைச் பாதுகாத்து வந்தனர். மான்தோலுடுத்தி புஜங்களில் தங்க ஆரங்கள் பூட்டிய எதிரிகளை ஒடுக்குபவனும், குந்தியின் மகனுமான பயங்கர பராக்கிரமம் கொண்ட பீமன் ஆயுதங்களுடனும் வாளுடனும் அச்சமற்று தாமரைகளைச் சேகரிப்பதற்காக முன்னேறிக் கொண்டிருந்தபோது, அதைக் கண்டவர்கள் (ராட்சசர்கள்) உடனே தங்களுக்குள், "மான் தோலுடுத்தி, ஆயுதங்களுடன் இங்கே வந்திருக்கும் இந்த மனிதர்களில் முதன்மையானவனுடைய பயணத்தைக் குறித்து விசாரியுங்கள்" என்று சத்தம் போட்டனர். பிறகு அவர்கள் அனைவரும் கூடி பிரகாசமிக்கவனும், வலுத்த கரங்கள் கொண்டவனுமான விருகோதரனை {பீமனை} அணுகி, "யார் நீ? நீ எங்களது கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். துறவியின் கோலத்தில் இருந்தும் ஆயுதங்கள் தாங்கியிருக்கிறாய். ஓ! பெரும் புத்திகூர்மை கொண்டவனே, நீ (இங்கே) வந்த நோக்கத்தை விவரித்துச் சொல்" என்று கேட்டனர்.