Hanuman vanished! | Vana Parva - Section 150 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தனது உருவத்தைச் சுருக்கிக் கொண்டு, பீமனுக்கு வரமருளிய ஹனுமான் அங்கேயே மறைந்து போதல்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பின்னர் தன்னிச்சைப்படி பெருக்கிக் கொண்ட தனது பெருத்த உடலைச் சுருக்கிக் கொண்ட அக்குரங்கானவன் {ஹனுமான்}, தனது கரங்களைக் கொண்டு மீண்டும் பீமசேனனை அணைத்துக் கொண்டான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அண்ணனால் {ஹனுமானால்} தழுவப்பட்ட பீமனின் களைப்பு நீங்கி, அவனது அனைத்து (உடல் சக்தியும்) பலமும் மீண்டது. பெரும் வலிமையை மீண்டும் அடைந்த பிறகு, தனது உடல் சக்திக்கு இணையாக யாரும் இல்லை என அவன் {பீமன்} நினைத்தான்.
அக்குரங்கானவன் {ஹனுமான்} கண்களில் நீர் நிரம்பியபடி பீமனிடம் பாசத்தால் அடைபட்ட குரலுடன், "ஓ! வீரா {பீமா}, உனது வசிப்பிடம் திரும்பு. உனது பேச்சுகளில் தற்செயலாக என்னை நினைவு கொள். ஓ! குருக்களில் சிறந்தவனே, நான் இங்கு வசிப்பதாக யாரிடமும் சொல்லாதே. ஓ! பெரும் பலசாலியே, தேவர்கள் மற்றும் கந்தர்வர்களின் மிக அற்புதமான மனைவியர் இந்த இடத்திற்கு வந்து போவார்கள். அவர்கள் வரும் சமயமும் நெருங்கிவிட்டது. (உன்னைக் கண்டதால்) எனது கண்கள் அருள் பெற்றது. ஓ! பீமா, மானிட உடலின் ஸ்பரிசத்தை {தொடு உணர்வை} உன்னால் அடைந்ததால், ரகுவின் மகன் {ராமன்} எனது மனமெங்கும் நிறைந்தான். உலகத்தின் இதயங்களை மகிழ்வித்து, ராமன் என்ற பெயரில் அவதரித்த அவன் விஷ்ணுவே. சீதையின் தாமரை முகத்திற்கும், ராவணன் என்ற இருளுக்கும் சூரியன் அவன் {ராமன்}.
எனவே, குந்தியின் வீர மகனே {பீமா}, உனது இந்தச் சந்திப்புக் கனியற்றதாக இருக்கக்கூடாது. ஓ! பாரதா {பீமா}, உடன்பிறந்த உணர்வுடன் நீ என்னிடம் ஒரு வரம் கேள். உனக்கு விருப்பமிருக்குமானால், நான் வாரணாவதம் {இங்கே ஹஸ்தினாபுரம் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்} சென்று திருதராஷ்டிரனின் தீய மகன்களை அழித்திடுவேன். அதுவும் உடனடியாக. அல்லது அந்த நகரத்தையே வெறும் பாறைகளாகச் சுக்கு நூறாக்குவேன். அல்லது துரியோதனனைக் கட்டி வந்து உன் முன் கிடத்துவேன். ஓ பெரும் பலம் கொண்டவனே, அதையும் இன்றே செய்வேன்" என்றான் {ஹனுமான்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இவ்வார்த்தைகளைக் கேட்ட உயர் ஆன்ம பீமன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் ஹனுமானிடம், "ஓ! வானரங்களில் முதன்மையானவரே, இவையனைத்தையும் நீர் செய்துவிட்டதாகவே நான் கொள்கிறேன். உமக்கு நன்மை உண்டாகட்டும். ஓ! வலுத்த கரம் கொண்டவரே! நீர் என்னிடம் திருப்தியுடன் இருக்கிறீர் என்றால் நான் உம்மிடம் ஒன்று கேட்பேன். ஓ! பலம்வாய்ந்தவரே, உம்மைப் பாதுகாவலராகக் கொண்ட பாண்டவர்கள் பெரும் உதவியைப் பெற்றவர்களாவார்கள். உமது பராக்கிரமத்தால் நாங்கள் எங்கள் அனைத்து பகைவர்களையும் வீழ்த்துவோம்" என்றான்.
இப்படிச் சொல்லப்பட்ட ஹனுமான் பீமனிடம், "சகோதர உணர்ச்சியாலும் பாசத்தாலும், ஏராளமான அம்புகளும் ஈட்டிகளும் கொண்டு வரும் உனது எதிரிகள் மத்தியில் நான் பாய்ந்து உனக்கு நன்மையைச் செய்வேன். ஓ பலம்வாய்ந்தவனே, ஓ! வீரனே, நீ சிம்ம கர்ஜனை செய்யும்போது, நான் எனது கர்ஜனையையும் சேர்த்து அந்த ஒலிக்கு கூடுதல் பலத்தை அளிப்பேன். அர்ஜுனனின் தேரில் உள்ள கொடிக்கம்பத்தில் இருந்து, நான் கடும் கர்ஜனைகள் செய்து உனது எதிர்களின் ஆற்றலைக் குறைப்பேன். அதன் மூலம் நீ அவர்களை எளிதாகக் கொல்லலாம்" என்றான். இதைப் பாண்டுவின் மகனிடம் {பீமனிடம்} சொல்லிவிட்டு, {செல்ல வேண்டிய} வழியையும் சுட்டிக் காட்டினான் {ஹனுமான்}. பிறகு ஹனுமான் அந்த இடத்திலேயே மறைந்தான்.