The discussion between Tarkshya and Saraswati! | Vana Parva - Section 185a | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
தார்க்ஷ்யர் மற்றும் சரஸ்வதிக்கு இடையில் நடந்த விவாதத்தைச் சொல்லி தானம், அக்னிஹோத்ரம் மற்றும் மோட்சம் குறித்து மார்க்கண்டேயர் உரைத்தல்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! பகை நகரத்தை வெல்பவனே, இது சம்பந்தமாகப் புத்தி கூர்மை கொண்ட தார்க்ஷ்யர் சரஸ்வதியைக் கேட்ட போது, அவளும் இதையேதான் சொல்லியிருக்கிறாள். நீ அவளது வார்த்தைகளைக் கேள். தார்க்ஷ்யர், "அற்புதமான மங்கையே {சரஸ்வதியே}, ஒரு மனிதன் கீழே இங்கே {இவ்வுலகில்} செய்வதற்கு எது சிறந்தது? அவன் அறத்தில் (அறப்பாதையில்) இருந்து வழுவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? ஓ! அழகான மங்கையே இவை அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. உனது உத்தரவின் பேரில் {நீ சொல்லும் காரணத்தால்} நான் அறத்தின் பாதையில் இருந்து விலகாமல் இருப்பேன். ஒருவன் நெருப்புக்கு எப்போது, எவ்வாறு காணிக்கையிட வேண்டும்? {எப்படி, எப்போது அக்னிஹோத்ரம் செய்ய வேண்டும்?}. மேலும், சமரசமில்லாத அறத்தோடு இருக்க அவன் {நெருப்பை} எப்போது வணங்க வேண்டும்? ஓ! அற்புதமான மங்கையே, ஆசைகள், ஏக்கம், விருப்பம் ஆகியவை இல்லாமல், நான் இந்த உலகத்தில் வாழ இவை அனைத்தையும் எனக்குச் சொல்" என்று கேட்டார்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "உற்சாகமுடைய அந்த முனிவரால் {தார்க்ஷ்யரால்} இப்படிக்கேட்கப்பட்டு, கற்க ஆவலோடும், உயர்ந்த புத்தி கூர்மையோடும் இருக்கும் அவரைக் {தார்க்ஷ்யரைக்} கண்ட சரஸ்வதி, இந்தப் பக்தி மிக்க மங்களரமான வார்த்தைகளை அந்த அந்தணர் தார்க்ஷ்யரிடம் சொன்னாள்.
சரஸ்வதி {தார்க்ஷ்யரிடம்}, "எவன் வேத கல்வியில் ஈடுபட்டு, புனித தன்மையோடும், மன அமைதியோடும் கடவுள் தன்மையை முறையான வழியில் உணர்கிறானோ, அவன் தெய்வீக உலகங்களுக்கு உயர்ந்து, தேவர்களோடு சேர்ந்து தலைமையான பேரின்பத்தை அடைகின்றான். மீன்களும், மலர்களும், தங்க குவளை மலர்களும் நிறைந்த பல பெரிய, அழகிய, தெளிவான, புனிதமான தடாகங்கள் அங்கு இருக்கின்றன. அவை கோவிலைப் போன்றன. அவற்றைக் காண்பதே துன்பத்தை விலக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நன்கு அலங்கரிக்கப்பட்டு, தங்க நிறத்துடன் இருக்கும் அறம்சார்ந்த அப்சரஸ்களால் வழிபடப்படும் பக்தியுள்ள மனிதர்கள், அத்தடாகங்களின் கரைகளில் மனநிறைவோடு வசிக்கின்றனர்.
எவன் பசுவை (அந்தணர்களுக்கு) தானமளிக்கிறானோ அவன் உயர்ந்த உலகங்களை அடைகிறான்; எருதுகளைக் கொடுப்பவன் சூரிய உலகங்களை அடைகிறான்; உடைகள் கொடுப்பவன் சந்திர உலகத்தை அடைகிறான்; தங்கம் கொடுப்பவன் தேவர்களின் நிலையை {இறவா நிலையை} அடைகிறான். ஓடிப்போகாததும், எளிதாகப் பால் கறப்பதுமான அழகிய பசுவுடன் கன்றையும் சேர்த்துக் கொடுப்பவன், அந்த விலங்கின் உடலில் எத்தனை முடிகள் இருந்தனவோ, அவ்வளவு வருடங்கள் தேவ லோகத்தில் வாழ்வான். கலப்பை இழுக்கவும், சுமை தாங்கவும் இயன்ற பலமிக்க, சக்திவாய்ந்த, அழகிய இளம் எருதை தானமளிப்பவன், பத்துப் பசுக்களைத் தானம் கொடுத்தவன் அடையும் உலகங்களை அடைகிறான். கறப்பதற்கு வெண்கலப் பாத்திரத்துடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கபிலப் பசுவை தானம் கொடுத்துப் பின்பு பணத்தையும் கொடுப்பவனுக்கு, {அவன் இறந்த பின்னர்} அந்தப் பசுத் தனது சிறப்பு வாய்ந்த குணத்தாலே விரும்பியதைக் கொடுப்பதாக மாறி அவனையே வந்து அடைகிறது. பசுக்களைத் தானம் கொடுப்பவன், அந்த விலங்கின் மேனியில் இருந்த முடியின் எண்ணிக்கையளவுக்கு, தனது செயல்களுக்கான எண்ணற்ற கனிகளை அறுக்கிறான். மேலும் அவன், தனது மகன்கள், பேரன்கள் மற்றும் மூதாதையர் ஆகியோர் கொண்ட ஏழு தலைமுறைகளை அடுத்த உலகத்தில் (நரகத்தில் இருந்து) காக்கிறான். பொன்னால் செய்த அழகிய கொம்புகளுடனும், கறப்பதற்கு வெண்கலப் பாத்திரத்துடன் எள்ளால் ஆன பசுவை {திலதேனுவை} அந்தணனுக்குப் பணத்துடன் தானமாகக் கொடுப்பவன் வசுக்களின் உலகங்களை எளிதில் அடைகிறான்.
தான் செய்த செயல்களின் மூலமே மனிதன், பெருங்கடலில் புயலால் தூக்கி வீசப்பட்ட கப்பலைப் போல, தீய ஆவிகள் ஆக்கிரமித்திருக்கும் இருள்நிறைந்த பாதாள உலங்களுக்கு (தனது ஆசைகளாலேயே} வீழ்கிறான்; ஆனால் அந்தணர்களுக்கு அவன் கொடுத்த பசுத் தானம் அவனை அடுத்த உலகில் காக்கிறது. தனது மகளைப் பிரம்ம விவாக முறைப்படி கொடுப்பவனும், அந்தணர்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுப்பவனும், பிற பரிசுகளைத் தானமாகக் கொடுப்பவனும் புரந்தரனின் உலகங்களை அடைகிறார்கள். ஓ! தார்க்ஷ்யா, நியாயமுள்ளவனாக, அறம்சார்ந்த மனிதனாக எவன் தொடர்ந்து ஏழு வருடங்கள் புனித நெருப்புக்குக் காணிக்கை அளிக்கிறானோ, அவன் மேலும் கீழுமான தனது ஏழு தலைமுறைகளைத் தனது செயல்கள் மூலம் தூய்மைப்படுத்துகிறான்" என்றாள் {சரஸ்வதி}.
தார்க்ஷ்யர் {சரஸ்வதியிடம்}, "ஓ அழகிய மங்கையே, வேதங்கள் சொல்லியபடி புனித நெருப்பைக் காக்கும் விதிகளைக் கேட்டு நிற்கும் எனக்கு அதை விளக்குவாயாக. இப்போது நான் உன்னிடமிருந்து புனித நெருப்பைப் பேணுவதற்கான காலத்தால் புகழப்படும் விதிகளைக் கற்கப் போகிறேன்" என்றார்.