The dispute between Atri and Gautama! | Vana Parva - Section 184 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
மன்னன் வைனியனின் குதிரைவேள்வியில் அத்ரி முனிவருக்கும் கௌதம முனிவருக்கும் இடையில் நடந்த சர்ச்சையைச் சொல்லி மன்னனின் பெருமையை மார்க்கண்டேயர் உரைப்பது...
மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்} தொடர்ந்தார், "அந்தணர்களின் மகிமையை மீண்டும் நீங்கள் கேட்பீராக! ஒரு காலத்தில் வைனியன் {Vainya} என்ற ஒரு அரச முனி குதிரை வேள்வி செய்து கொண்டிருந்த போது, அத்ரி அவனிடம் பிச்சை கேட்பதற்குச் செல்ல விரும்பினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதன் தொடர்ச்சியாக, அற நீதி காப்பதற்காக அத்ரி செல்வத்தின் மீதான தமது ஆசையைத் துறந்தார். பெருத்த சிந்தனைக்குப் பிறகு, அந்தப் பெரும் வலிமை படைத்தவர் {அத்ரி}, கானகத்தில் வாழ விரும்பி, தனது மனைவி மற்றும் மகன்களை ஒருங்கே அழைத்து அவர்களிடம், "நாம் அனைவரும் உயர்ந்த அமைதியையும், நமது விருப்பங்களின் முழுமையையும் அடைவோமாக. எனவே, பெரும் தகுதி கொண்ட வனவாழ்க்கையை ஏற்பவர்களாக விரைந்து கானகம் செல்வோம்" என்றார். அறநோக்கங்கள் கொண்டு வாதாடிய அவரது {அத்ரியின்} மனைவி அவரிடம், "ஒப்பற்ற இளவரசனான வைனியனிடம் சென்று அவனிடம் பெரும் செல்வங்களை இரந்து கேளுங்கள்! வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசமுனி, இப்படி உம்மால் கேட்கப்பட்டதும் செல்வங்களை அளிப்பான். ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவரே, அங்கே சென்று, பெரும் செல்வத்தைப் பெற்றால், நீர் உமது மகன்களுக்கும், வேலைக்காரர்களுக்கும் பிரித்துக் கொடுக்கலாம். அப்படிச் செய்த பிறகு நீர் எங்கு விரும்புகிறீரோ அங்குச் செல்லலாம். இதுவே அறம் அறிந்த மனிதர்களால் இணையில்லாத உயர்ந்த அறமாக மதிக்கப்படுகிறது" என்றாள். அதற்கு அத்ரி {மனைவியிடம்}, "ஓ! அறம் சார்ந்தவளே, உயர் ஆன்ம கௌதமர் மூலம், அந்த வைனியன் ஒரு பக்தி கொண்ட இளவரசன் என்றும், உண்மையின் விளைவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன் என்றும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அங்கே என் மீது பொறாமை படும் அந்தணர்கள் இருக்கிறார்கள். இதையும் கௌதமர் எனக்குச் சொல்லியிருக்கிறார். ஆகவே நான் அங்குச் செல்ல முயலவில்லை. அங்கே, நான் நல்லது குறித்தும் பக்தியை அடையக்கூடிய வழிமுறைகள் குறித்தும், ஒருவரின் விருப்பங்கள் நிறைவேறுவது குறித்தும் ஆலோசனை வழங்க வேண்டியிருந்தால், எந்த நன்மையும் செய்யாத எந்தப் பயனும் இல்லாத வார்த்தைகளைச் சொல்லி அதை அவர்கள் மறுப்பார்கள். ஆயினும் எனது தீர்மானங்களை நான் ஏற்கிறேன் ஆகையால் நான் அங்குச் செல்வேன். பசுக்களையும் ஏராளமான செல்வங்களையும் வைனியன் எனக்கு அளிப்பான்" என்றார் {அத்ரி}.
மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்} தொடர்ந்தார், "இப்படிச் சொன்ன அந்தப் பெரும் தவத்தகுதி படைத்தவர் {முனிவர் அத்ரி}, வைனியானின் வேள்விக்கு விரைந்து, வேள்விப் பீடத்தை அடைந்து, மன்னனுக்குத் தனது மரியாதையைத் தெரிவித்து, அவனை நல்ல பொருள் பொதிந்த வார்த்தைகளால் புகழ்ந்தபடி, "நீ அருளப்பட்டிருப்பாயாக! ஓ! மன்னா, இப்பூமியை ஆள்பவர்களில் நீயே முதன்மையானவன். முனிவர்கள் உன்னைப் புகழ்கிறார்கள். மேலும், தர்ம காரியங்கள் அறிந்தவர்கள் உன் போல யாருமில்லை" என்றார் {அத்ரி}. அவரிடம் {அத்ரியிடம்}, பெரும் தவத்தகுதி படைத்த கௌதம முனிவர் ஆத்திரத்துடன், "அத்ரி, மீண்டும் இந்த முட்டாள் தனத்தைச் செய்யாதீர். உமது அறிவு நல்ல நிலையில் இல்லை. நமது இந்த உலகில், படைக்கப்பட்ட அனைத்திற்கும் தலைவனான மகேந்திரனே ஆள்பவர்களில் முதன்மையானவன் ஆவான்" என்றார். பிறகு, ஓ! பெரும் இளவரசனே {யுதிஷ்டிரா}, அத்ரி கௌதமரிடம், "அனைத்து உயிர்களின் தலைவனான இந்திரன், நமது விதிகளை ஆள்வதைப் போலவே, இந்த மன்னனும் ஆள்கிறான். நீர் தவறாகக் கருதுகிறீர். ஆன்ம உணர்வு குறைவால், அறிவிழந்திருப்பவர் நீரே" என்றார். அதற்குக் கௌதமர், "நான் தவறாகக் கருதவில்லை என்பதை நான் அறிவேன். இவ்விஷயத்தில் நீரே தவறான கருத்தில் இருக்கிறீர். மன்னன் முகம் கண்டு பேசுவதற்காக, நீர் இந்த மக்கள் மன்றத்தில் அவனை முகத்துதி செய்கிறீர். நீர் உயர்ந்த அறத்தை அறியவில்லை, அது வேண்டும் என்றும் நீர் உணரவில்லை. நீர் அறியாமையில் இருக்கும் குழந்தையைப் போல இருக்கிறீர். நீர் எப்படித்தான் வயதில் முதிர்ந்தீரோ?" என்று கேட்டார் {கௌதமர்}.
மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்} தொடர்ந்தார், "வைனியனின் வேள்வியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முனிவர்களுக்கு மத்தியில் அந்த இருவரும் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர். அம்முனிவர்கள், "என்ன காரியம் அவர்களை உரத்தக்குரலில் பேச வைக்கிறது?" என்று கேட்டனர். பிறகு மிகுந்த பக்திமானான அனைத்து அறவிதிகளையும் கற்ற காசியபர் அந்தச் சர்ச்சையாளர்களை அணுகி என்ன காரியம் என்று விசாரித்தார். பிறகு, அந்தப் பெரும் முனிவர்களின் கூட்டத்திடம் கௌதமர், "ஓ! பெரும் அந்தணர்களே, எங்களுக்குள் நடக்கும் சர்ச்சை என்னவென்று கேளுங்கள். வைனியன்தான் நமது விதிகளின் ஆட்சியாளன் என்று அத்ரி சொல்கிறார்; இது குறித்து நமக்குப் பெருத்த சந்தேகம் இருக்கிறது" என்றர் {கௌதமர்}.
மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்} தொடர்ந்தார், "இதைக்கேட்ட உயர்ந்த மனம் கொண்ட முனிவர்கள் உடனே தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அறமனைத்தும் அறிந்த சனத்குமாரரிடம் சென்றனர். பெரும் தவத்தகுதி படைத்த அவர் {சனத்குமாரர்} அவர்களிடம் குறிப்புகளைக் கேட்டு, அறப் பொருள் நிறைந்த வார்த்தைகளால் பேசினார். சனத்குமாரர், "வனத்தை எரிக்க நெருப்புக்குக் காற்று துணைபுரிவது போல, ஒரு அந்தணனின் சக்தி க்ஷத்திரியனிடம் கலக்கிறது. அல்லது அந்தணர்களுடன் சேர்ந்த க்ஷத்திரியன் அவனது அனைத்து எதிரிகளையும் அழிக்கிறான். ஆட்சியாளன் சட்டமளிப்பதிலும், தனது குடிமக்களைப் பாதுகாப்பதிலும் புகழ்பெற்றவன். அவன் (படைக்கப்பட்டவைக்குப் பாதுகாப்பளனாய் இருப்பதால்) இந்திரனைப் போன்றவன், (ஆலோசகனாய் இருப்பதால்) சுக்ரனைப் போன்றவன் {ஆலோசகர்}, பிருஹஸ்பதியைப் போன்றவன். (ஆகவே அவன்), மனிதர்களின் விதிகளை ஆள்பவனாகவும் இருக்கிறான் (அழைக்கப்படுகிறான்). 'படைக்கப்பட்டவற்றைப் பாதுகாப்பவன்', "அரசன்', "சக்கரவர்த்தி', 'க்ஷத்திரியன்' (அல்லது பூமியின் காவலன்), 'பூமியின் தலைவன்', 'மனிதர்களின் தலைவன்' என்றெல்லாம் ஒரு தனி மனிதன் வழிபடப்படுகிறான் என்றால், யார்தான் அவனை வழிபடுவது சரி என்று நினைக்கமாட்டார்கள்? ஒரு மன்னனே (சமூகம் மற்றும் சட்டங்களுக்கு) தலைமைக் காரணம். 'போர்களில் அறம் சார்ந்தவன்' (ஆகையால் அமைதியை நிலைநாட்டுபவன்), 'காவல்காரன்', 'நிறைவானவன்', 'தலைவன்', 'முக்திக்கு வழிகாட்டி', 'எளிதாக வெல்பவன்', 'விஷ்ணுவைப் போன்றவன்', 'பயனுள்ள கோபம் கொண்டவன்', 'போர்க்களங்களை வெல்பவன்', 'உண்மையான தர்மத்தைப் (அன்புடன் பாதுகாத்துப்) பேணுபவன் அவனே. பாவத்திற்கு அஞ்சும் முனிவர்கள் க்ஷத்திரியர்களுக்கு (உலகியல்) வலிமையைக் கொடுக்கின்றனர். சொர்க்கத்தில் இருக்கும் தேவர்களில் சூரியன் தனது பிரகாசத்தால் இருளை விலக்குகிறான், அதே போல ஒரு மன்னனும் இவ்வுலகில் இருந்து பாவத்தை வேரோடு அழிக்கிறான். ஆகவே, புனித சாத்திரங்களின்படி பார்த்தால், அரசனின் பெருமைகள் தெரியும், மன்னனுக்கு ஆதரவாகப் பேசிய பக்கத்துக்குச் சாதகமாகப் பேசுவதற்கே நாம் கட்டுப்பட்டுள்ளோம்" என்றார் {சனத்குமாரர்}.
மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்} தொடர்ந்தார், "பிறகு அந்த ஒப்பற்ற இளவரசன் {வைனியன்}, வெற்றி பெற்ற பக்கத்தின் மீது மிகவும் திருப்தியடைந்து, தன்னைப் புகழ்ந்த அத்ரியிடம் மகிழ்ச்சியாக, "ஓ! மறுபிறப்பாள முனிவரே, நீர் என்னை இங்கே இருப்பவர்களில் பெருமையாகவும், அற்புதமான மனிதனாகவும் சொன்னீர். என்னைத் தேவர்களோடு ஒப்பிட்டீர். எனவே, நான் உமக்கும் பல்வேறு வகைப்பட்ட அபரிமிதமான செல்வங்களை அளிக்கிறேன். நீர் எங்கும் இருப்பவர் என்பது எனது எண்ணம். ஓ! நன்கு உடுத்தியவரே, நன்கு புகழப்படுபவரே, நான் உமக்குப் பத்து கோடி {Hundred Million 10,00,00,000} தங்க நாணயங்களையும், பத்துப் பாரம் {ten bharas} பொன்னையும் கொடுப்பேன்" என்றான் {வைனியன்}. பிறகு உயர்ந்த தவ அறமும், பெரும் ஆன்ம வலிமையும் கொண்ட அத்ரி, இப்படி (மன்னனால்) வரவேற்கப்பட்டு, அவன் கொடுத்த கொடைகளை உரிமை மீறாமல் பெற்றுக் கொண்டு, வீடு திரும்பினார். பிறகு அவரது செல்வங்களைத் தனது மகன்களுக்குக் கொடுத்து, தனது சுயத்தை அடக்கி, தவம் செய்யும் நோக்கோடு மகிழ்ச்சியாகக் கானகம் சென்றார்.