Agni Hotra! | Vana Parva - Section 185 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சரஸ்வதி {தார்க்ஷ்யரிடம்}, "சக்தியற்றவன், தனது கரங்களைச் சோதிக்காதவன், வேதங்களை அறியாதவன், வேதங்களின் பொருளை அறிந்தும் அதைக் கடைப்பிடிக்காதவன் ஆகியோர் நெருப்பில் காணிக்கையிடுவதைச் செய்யக்கூடாது. பிறர் மனதை அறிய விரும்பும் பரிசுத்தர்களான தேவர்கள் முயற்சியற்றவர்களிடம் இருந்து காணிக்கைகளைப் பெற மாட்டார்கள். வேதம் ஓதாதவனைத் தேவர்களுக்குக் காணிக்கையிடும் ரித்விக்காக நியமிக்கக்கூடாது. மேற்கண்டவற்றை நிறைவேற்றுபவனே வேள்வி செய்யத்தக்கவன். ஓ! தார்க்ஷ்யா! தன்னை ஓதாதவனை வேதம் குலமும் ஒழுக்கமும் அற்றவன் என்று சொல்கிறது. மேற்கண்டவற்றை நிறைவேற்றாதவன் நெருப்பில் காணிக்கையிட்டு வேள்வி செய்யக்கூடாது. முயற்சியுடன் உண்மையையே நோன்பாகக் கொண்டவர்களும், வேள்வியில் மிஞ்சுவதை உண்பவர்களும் நெருப்பில் காணிக்கையிட்டால், அவர்கள் புண்ணிய உலகங்களை அடைந்து நிகரற்ற பிரம்மனையும், பின்பு பிரம்மத்தையும் அடைகிறார்கள்" என்று சொன்னாள் {சரஸ்வதி}.
தார்க்ஷ்யர் {சரஸ்வதியிடம்}, "ஓ! மகிமையுள்ளவளே {சரஸ்வதியே}, பரமாத்மாவின் உருவமும், ஆத்ம ரூபமும், பல வித காரியங்களில் புத்திக்கூர்மையுடையவளும், ஞானத்தின் உருவமுமான உன்னை ஆத்ம தத்துவம், கர்ம தத்துவம் ஆகிய இரண்டையும் பிரகாசிக்கச் செய்பவளாக உணர்ந்து உன்னிடம் கேட்கிறேன். ஓ! அழகிய உருவமுள்ளவளே {சரஸ்வதி}, நீ யார்?" என்று கேட்டார், அதற்குச் சரஸ்வதி, "அந்தணர்களின் சந்தேகங்களைப் போக்கவே நான் நெருப்பில் {அக்னி ஹோத்ரத்திலிருந்து} இருந்து உதித்திருக்கிறேன். உள்ளத்தில் நிலைத்திருந்த நான் வெளியே வந்து, உன்னிடம் வந்து கேட்ட காரியங்களின் உண்மையான பொருளை உரைத்தேன்" என்றாள் {சரஸ்வதி}.
தார்க்ஷ்யர் {சரஸ்வதியிடம்}, "ஓ! சரஸ்வதி, உனக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை. நீ லட்சுமியைப் போல அபரிமிதமான பிரகாசம் கொண்டிருக்கிறாய். உன்னுடைய உருவம் தேவர்களைப் போல முடிவற்ற ஒளியுள்ளதாக இருக்கிறது. பிரகாசிக்கும் அறிவையும் நீ கொண்டிருக்கிறாய்" என்றார். அதற்குச் சரஸ்வதி, "ஓ! மனிதர்களில் பெருமையுடையவனே, கற்றறிந்தவனே! அந்தணனே! வேள்வி செய்பவர்கள் நல்ல சுரத்துடன் {ஸ்வரம்} உச்சரிக்கும் சிறந்த மந்திரங்களால், நான் நன்றாக வளர்ந்து, திருப்தி அடைந்து, அழகான உருவத்தை அடைகிறேன். ஓ! அறிஞனே, நெருப்பில் காணிக்கையிடும்போது மரத்திலோ, இரும்பிலோ, மண்ணிலோ செய்யப்பட்ட பாத்திரங்கள் உபயோகிக்கப்படுவதால் நான் தெய்வீக உருவமும், உள்ளுணர்வும் பெற்றவளாகிறேன்" என்றாள் {சரஸ்வதி}
தார்க்ஷ்யர் {சரஸ்வதியிடம்}, "ஓ! சரஸ்வதி, மிகப் புகழ்பெற்ற முனிவர்கள் எதைச் சிறந்த நன்மை என்று எண்ணி முயற்சிக்கிறார்கள், அறிஞர்கள் எந்த சிறந்த நிலையை அடைகிறார்களோ, துயரமற்ற நிகரில்லாத அந்த மோட்சத்தை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார். யோகிகளும் முனிவர்களும் எதை மிக நன்மையானது என்று அறிகிறார்களோ, அந்தப் புராதானமான நிலையை நான் அறியவில்லையே" என்று கேட்டார். அதற்குச் சரஸ்வதி, "ஓ! தார்ஷ்யா, வேதத்தை அறிந்தவர்களும், தவத்தை நோக்கமாகக் கொண்டவர்களும், துயரமற்றவர்களும், உலகியல் வாழ்வில் இருந்து விடுபட்டவர்களுமான நன்மக்கள், வேதத்தைத் தியானித்து, தானம் செய்து, விரதங்களாலும், புண்ணியங்களாலும், யோகங்களாலும் உள்ளவற்றில் சிறந்ததைக் காட்டிலும் உயர்ந்த புகழ்பெற்ற நிலையை அடைகிறார்கள். அதன் மத்தியில் நறுமணமிக்க, ஆயிரம் கிளைகளைக் கொண்ட பிரய நீர் நொச்சமரம் பிரகாசிக்கிறது. அதன் அடியில் இருந்து தேன் போன்ற சுவை கொண்ட நீர்ப்பெருக்குள்ள மிகப் புண்ணியமான ஆறுகள் பெருகுகின்றன. அதன் ஒவ்வொரு கிளையில் இருந்தும் இறைச்சியும், கீரைகளும், பாயசம் போன்ற சேறும், பெரும் நதிகளின் மணல் பாங்கான தசைகளில் ஓடுகின்றன. முனிவனே! அக்னியைத் தலைவனாகக் கொண்டவர்களும், இந்திரனோடு கூடியவர்களும், மருத்துக்கள், கணங்களோடு கூடியவர்களான தேவர்கள் எந்த இடத்தில் சிறந்த வேள்விகளைச் செய்தார்கள் அந்த இடம் நிகரற்றது" என்றாள் {சரஸ்வதி}" என்றார் {மார்க்கண்டேயர்}