The description of yugas! | Vana Parva - Section 185a | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
நான்கு யுகங்களின் காலம், தன்மைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொல்லல்
பிறகு அறம் சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன் மிகுந்த பணிவுடன் சிறப்புமிக்க மார்க்கண்டேயரிடம், "ஓ! பெரும் முனிவரே {மார்க்கண்டேயரே}, நீர் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்து செல்வதைக் கண்டிருக்கிறீர். இவ்வுலக்கத்தில் உம்மளவுக்கு யாரும் நீண்ட நாள் வாழ்ந்ததில்லை! ஓ! பரமாத்மாவின் ஞானத்தை அடைந்தவர்களுள் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, மிக உயர்ந்த இடத்தில் வாழ்ந்து வரும் பெரும் மனம் படைத்த பிரம்மனைத் தவிர நீர் வாழ்ந்த வருடங்களை விஞ்ச வேறு யாரும் இல்லை. ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, பெரும் அண்டப் பிரளயத்திற்குப் பிறகு இவ்வுலகம் வானமற்று, தேவர்களற்று, தானவர்களற்று இருந்த போது நீர் பிரம்மனை வழிபட்டவர். ஊழிப் பெருவெள்ளம் முடிவுக்கு வந்து, பெருந்தகப்பன் {பிரம்மன்} விழித்தபோது, ஓ! மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, பிரம்மன் திசைப்புள்ளிகளைக் காற்றால் நிறைத்து, நீர் நிலைகளைச் சரியான இடத்தில் அமர்த்தி, நால்வகை உயிரினங்களையும் மறுபடி படைத்த போது, நீர் மட்டுமே அதைக் கண்டீர். ஓ! பெரும் அந்தணரே {மார்க்கண்டேயரே}, அவர் {பிரம்மனின்} முன்னிலையில் நீர், அனைத்து உயிர்களுக்கும் பெருந்தகப்பனை {நாராயணனை} ஆன்ம ஒன்றுதலுடன் தியானித்து, அவனால் {நாராயணனால்} விழுங்கப்பட்டீர்! ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, நீர் உமது கண்களால் பல முறை, படைப்பின் ஆரம்பச் செயல்களைக் கண்டிருக்கிறீர். கடும் ஆன்ம தவங்களில் மூழ்கிய நீர் பிரஜாபதிகளையே விஞ்சி நிற்கிறீர்!
அடுத்த உலகத்தில் நீரே நாராயணனுக்கு மிக நெருக்கமானவர் என்று மதிக்கப்படுகிறீர். பழங்காலத்தில் நீர் பல முறை அண்டத்தின் தலைமை படைப்பாளரை {நாராயணனை}, ஆன்ம கவனம், துறவு ஆகிய கண்களைக் கொண்டும், தாமரை போன்ற, சுத்தமான உமது இதயத்தை முற்காலத்தில் திறந்தும் கண்டிருக்கிறீர். அண்ட ஞானத்தின் உருவமான {அண்ட ஞானமான} பலஉருவம் கொண்ட விஷ்ணுவை உமது இதயத்தில் மட்டுமே காண முடியும்! இதன் காரணமாகவே ஓ! கற்ற முனிவரே {மார்க்கண்டேயரே}, நீர் கடவுளின் அருளைப் பெற்றவராதலால், அனைத்தையும் அழிக்கும் மரணத்துக்கோ, உடலைக்கெடுக்கும் மூப்புக்கோ உம்மீது எந்த அதிகாரமும் செலுத்த இயலவில்லை. சூரியனோ, சந்திரனோ, நெருப்போ, பூமியோ, காற்றோ, வானமோ இல்லாமல் அழிக்கப்பட்ட முழு உலகமும் பெருங்கடலைப் போலக் காட்சியளிக்கும்போது, தேவர்களும் அசுரர்களும், பெரும் உரகர்களும் முற்றிலும் அழிந்து போகும்போது, அனைத்து உயிர்களின் தலைவனான பெரும் மனம்படைத்த பிரம்மன் தாமரை மலரைத் தனது ஆசனமாகக் கொண்டு அதில் துயிலும்போது, நீர் மட்டுமே அவரை {பிரம்மனை} வழிபட மிஞ்சியிருந்தீர்! ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, நீர் இவை அனைத்தையும் முன்பே உமது கண்களால் கண்டிருக்கிறீர். நீர் மட்டுமே பல பொருட்களைப் புலன்களால் கண்டிருக்கிறீர். அனைத்து உலகங்களிலும் நீர் அறியாதது ஒன்றுமில்லை! எனவே, பொருட்களின் காரணங்கள் குறித்து நீர் மேற்கொள்ளும் எந்த உரையையும் கேட்பதற்காக நான் நெடுங்காலமாகக் காத்திருக்கிறேன்!" என்றான் {யுதிஷ்டிரன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "பிறப்பற்றவனும், மூல முதல்வனும், நித்தியமானவனும், அழிவற்றவனும், கற்பனைக்கெட்டாதவனும், குணங்களை உடனே ஏற்பவனும், அதை உடனே விட்டு குணங்களற்றவனாகவும் ஆகிறவனைத் {பரமாத்மாவைத்} தொழுது அனைத்தையும் நான் நிச்சயம் விவரிப்பேன். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்தியிருக்கும் இந்த ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} பெரும் அசைவாளனாகவும், அனைத்தையும் படைப்பவனாகவும், அனைத்தையும் வடிவமைப்பவனாகவும், அனைத்துக்கும் தலைவனாகவும் இருக்கிறான்! இவன் பெரிதானவன் என்றும், புரிந்துகொள்ளப்பட முடியாதவன் என்றும், அற்புதமானவன் என்றும், தூய்மையானவன் என்றும் அழைக்கப்படுகிறான். இவன் தொடக்கமும் {ஆதியும்} முடிவும் {அந்தமும்} அற்றவன்; உலகம் முழுவதும் நிறைந்திருப்பவன்; மாற்றமில்லாதவன்; மேலும் அழிவில்லாதவனாக இருக்கிறான். இவனே அனைத்தையும் படைப்பவன், ஆனால் இவன் பிறப்பற்றவன்; இவன் {கிருஷ்ணன்} சக்தி அனைத்துக்கும் காரணகர்த்தனாகவும் இருக்கிறான். அனைத்துத் தேவர்களைக் காட்டிலும் உயர்ந்த ஞானம் கொண்டவன் இவன். ஓ மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அண்டம் அழிந்தபிறகு, அற்புதமான படைப்புகளான இவை அனைத்தும் {மீண்டும்} உயிர் பெறுகின்றன.
கிருத யுகம் {தேவ வருடங்களில்} நாலாயிரம் வருடங்களைக் கொண்டது என்று சொல்லப்படுகிறது. அதன் வைகறைப் பொழுதும் {சந்தியும்} அந்திப் பொழுதும் {சந்தியாம்சமும்} ஒவ்வொன்றும் நானூறு வருடங்கள் அடங்கியது. திரேதா யுகம் மூவாயிரம் வருடங்கள் கொண்டது. அதன் வைகறைப் பொழுதும் {சந்தியும்} அந்திப் பொழுதும் {சந்தியாம்சமும்} ஒவ்வொன்றும் முன்னூறு வருடங்கள் அடங்கியது. அதற்கு அடுத்து வரும் யுகம் துவாபர யுகம் என்று அழைக்கப்படுகிறது. அது இரண்டாயிரம் வருடங்களைக் கொண்டது. அதன் வைகறைப் பொழுதும் {சந்தியும்} அந்திப் பொழுதும் {சந்தியாம்சமும்} ஒவ்வொன்றும் இருநூறு வருடங்கள் அடங்கியது. கலி என்று அழைக்கப்படும் அடுத்த யுகம் ஆயிரம் {தேவ} வருடங்கள் கொண்டது. அதன் வைகறைப் பொழுதும் {சந்தியும்} அந்திப் பொழுதும் {சந்தியாம்சமும்} ஒவ்வொன்றும் நூறு வருடங்கள் அடங்கியது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஒவ்வொரு யுகத்துக்கும் வைகறையும், அந்திப்பொழுதும் சமமான காலத்தைக் கொண்டவை என்பதை அறிந்து கொள். கலியுகம் முடிந்ததும், மீண்டும் கிருத யுகம் வரும்.
இப்படி வரும் யுகங்களின் சுழற்சி ஒன்று பனிரெண்டாயிரம் {தேவ} வருடங்கள் கொண்டதாகும். இப்படி முழுமையான ஆயிரம் சுழற்சிகள் கொண்டதே பிரம்மனின் ஒரு பகல் ஆகும். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இந்த அண்ட மனைத்தும் திரும்பப் பெறப்பட்டுப் படைப்பாளனின் இல்லத்திற்குள் {பிரம்மனின் இல்லத்துக்குள்} மறைத்து வைக்கப்படுவதே, கற்றவர்களால் பிரளயம் என்று அழைக்கப்படுகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, ஆயிரம் வருடங்களின் கடைசிக் காலத்தின் போது, அதாவது அந்தச் சுழற்சி முடிவடையும் தருவாயில் மனிதர்கள் பொதுவாகப் பொய்மைக்கு அடிமையாக இருப்பார்கள்.