The nature of Kali yuga! | Vana Parva - Section 185b | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
கலியுகத்தின் தன்மைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொல்லல்...
ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, அப்போது {கலியுகத்தின் போது} வேள்விகளையும், கொடைகளையும், நோன்புகளையும் முதன்மையானவர்கள் செய்யமால் அவர்களது பிரதிநிதிகள் செய்வார்கள். சூத்திரர்களுக்காக ஒதுக்கப்பட்ட செயல்களைப் பிராமணர்கள் செய்வார்கள், சூத்திரர்கள் செல்வம் சம்பாதிப்பார்கள். க்ஷத்திரியர்கள் அறச்செயல்கள் பயில்வார்கள். கலி யுகத்தில், பிராமணர்கள் வேள்விகள் செய்வதில் இருந்தும், வேதங்கள் பயில்வதிலிருந்தும் விலகி, தங்கள் கைத்தடிகளையும், மான்தோல்களையும் தூக்கி ஏறிந்து அனைத்தையும் உண்ணும் உணவு முறைக்கு மாறுவார்கள். ஓ! மகனே {யுதிஷ்டிரா}, பிராமணர்கள் வழிபாடுகள், தியானம் செய்வதிலிருந்து விலகுவதும், சூத்திரர்கள் அவர்களாகவே அதைக் கைக்கொள்வதும் நடக்கும். உலகம் நடக்கும் பாதையே முரணாகத் தெரியும், உண்மையில் இந்தக் குறிகள் அனைத்தும் பிரளயத்தின் முன்னறிவிப்பே ஆகும். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, எண்ணிலடங்கா மிலேச்ச மன்னர்கள் அப்போது {கலி காலத்தின் போது} பூமியை ஆள்வார்கள். அந்தப் பாவம் நிறைந்த ஏகாதிபதிகள், பொய்மைக்கு அடிமையாகி, தங்கள் குடிகளைப் பொய் தத்துவங்களின் பேரில் {அதைச் சொல்லி} ஆள்வார்கள். ஆந்தார்கள், சகர்கள், புலிந்தர்கள், யவனர்கள், காம்போஜர்கள், பாஹ்லிகர்கள், ஆபிரர்கள் ஆகியோர், ஓ! மனிதர்களுள் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, வீரம் படைத்தவர்களாகப் பூமியை ஆள்வார்கள்.
ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, உலகத்தின் இந்நிலை, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, கலிகாலத்தின் அந்தி காலமாகும்! தனி ஒரு பிராமணன் கூடத் தனது கடமைகளைச் செய்ய மாட்டான். க்ஷத்திரியர்களும், வைசியர்களும், ஓ! ஏகாதிபதி, தங்கள் வகைக்கு முரணான காரியங்களைப் பயில்வார்கள். மனிதர்களின் ஆயுள், பலம், சக்தி வீரம் ஆகிய அனைத்தும் குறையும்; குறைந்த பலமும், பலவீனமான உடலும் கொண்ட அவர்கள் உண்மையை அரிதாகப் பேசுபவர்களாக இருப்பார்கள். நாடுகளின் பெரும் பகுதிகள் முறிந்து போகும். பூமியின் பகுதிகளும், வடக்கும் தெற்கும். கிழக்கும் மேற்குமான திசைகள் அனைத்தும் ஊனுண்ணும் விலங்குகள் நிரம்பி இருக்கும். இந்தக் காலத்தில் பிரம்மத்தை உச்சரிப்பவர்களு கூட, அதை வீணாகவே செய்வார்கள். சூத்திரர்கள் பிராமணர்களை 'அடே' {Bho} என்று அழைப்பார்கள், அதே வேளையில் பிராமணர்கள் சூத்திரர்களை "மதிப்பிற்குரிய ஐயா" {ஆர்யா} என்று அழைப்பார்கள். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, யுகத்தின் மூடிவில் விலங்குகள் பன்மடங்கு பெருகும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மணம் மற்றும் நறுமணத் திரவியங்கள் நம் நுகர்தல் உணர்வுக்கு உடன்படாது, மேலும் ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, பொருட்களின் சுவையும், அந்தக் காலங்களில் {கலி யுகத்தில்} நமது சுவை உறுப்புகளுக்குத் தகுந்ததாக இராது.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, குறைந்த தரம் கொண்ட பல குழந்தைகளுக்குத் பெண்கள் தாயாக இருப்பார்கள். அவர்கள் {பெண்கள்}, நற்குணமும், நன்னடத்தையுமின்றி இருப்பார்கள். மேலும் அவர்கள் தங்கள் வாய்களை இனப்பெருக்க உறுப்பின் நோக்கங்களுக்காகப் {கலவி இன்பத்திற்காகப்} பயன்படுத்துவார்கள். மனிதர்கள் வசிக்கும் இடங்களில் பஞ்சம் தாக்கும். நெடுஞ்சாலைகள் தவறான புகழ் பெற்றிருக்கும் பெண்களால் தொற்றப்பட்டிருக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அது போன்ற காலத்தில் பெண்கள் பொதுவாகத் தங்கள் தலைவர்களுக்கும் {கணவர்களுக்கு} பகையாகவும், அடக்கமற்றவர்களாகவும் இருப்பார்கள்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அது போன்ற காலங்களில், பசுக்கள் குறைவான பாலையே தரும், மரங்களில் கூட்டம் கூட்டமாகக் காக்கைகள் இருக்கும், அவை மலர்களோ கனிகளோ உற்பத்தி செய்யாது. ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தணர்களைக் கொன்ற பாவத்தின் களங்கத்தோடு உள்ள மறுபிறப்பாள வர்க்கங்கள் {Regenerate classes} {பிராமண, க்ஷத்திரிய, வைசிய வர்க்கங்கள்}, பேச்சில் பொய்மைக்கு அடிமையான ஏகாதிபதிகளிடமிருந்து பரிசுகளைப் பெறுவார்கள். பேராசையும், அறியாமையும் நிரம்பிய அவர்கள், வெளிப்புறத்திற்கு அறக்குறிகள் தாங்கி, கைமாறு கருதாதவர்கள் போல வெளியே சுற்றித் திரிந்து, பூமியின் மக்களைத் துன்புறுத்துவார்கள். இல்லற வாழ்வு வாழும் மக்களோ, வரிகளின் சுமைக்கு அஞ்சி, ஏமாற்றுக்காரர்களாவார்கள். அதேவேளையில் பிராமணர்கள் துறவிகளின் ஆடையுடுத்தி, வெட்டாத ஒழுங்கற்ற நகங்களுடனும் தலை முடியுடனும், வணிகம் செய்து, அதன் மூலம் செல்வமீட்டுவார்கள். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இருபிறப்பாள வர்க்கங்களைச் சார்ந்தவர்கள் {பிராமண, க்ஷத்திரிய, வைசியர்கள்}, செல்வத்தின் மீது கொண்ட பேராசையால், அறம் சொல்லி பிச்சையெடுக்கும் {போலி} பிரம்மச்சாரி ஆவார்கள்.
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அக்காலங்களில் வாழ்வுமுறைகளில் முரண்பாடு கொண்டவர்களாகவும், போதையூட்டும் பானங்களுக்கு அடிமைகளாகவும், குருவின் படுக்கையைக் களங்கப்படுத்த இயன்றவர்களாகவும் மனிதர்கள் இருப்பார்கள். உடலையும், இரத்தத்தையும் விருத்தி செய்யும் உலகம் சார்ந்த விருப்பங்களையே அவர்கள் கொண்டிருப்பார்கள். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அதுபோன்ற ஒரு காலத்தில் துறவிகளின் ஆசிரமங்கள், எப்போதும் யாரையாவது சார்ந்திருந்து அனைத்தையும் பாராட்டும் பயமற்ற இழிந்தவர்களும், பாவிகளும் நிறைந்ததாக இருக்கும். பகனைத் தண்டிக்கும் சிறப்புமிக்கவன் {இந்திரன்}, உரிய காலத்தில் மழையைப் பொழியவே மாட்டான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தூவும் விதைகள் அனைத்தும் முளைக்காது. புனிதமற்ற செயல்களும், மனமும் கொண்ட மனிதர்கள் பொறாமை கொண்டு பிறருக்குக் கெடுதல் செய்து மகிழ்வார்கள். ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, பூமி முழுவதும் பாவமும், ஒழுக்கக்கேடும் நிறைந்ததாகும். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தக் காலங்களில் அறம் சார்ந்தவனாக இருப்பவன் நீண்ட காலம் வாழ மாட்டான். உண்மையில் உலகம், அனைத்து விதங்களிலும் அறத்தை இழக்கும்.
ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, சூழ்ச்சி நிறைந்த வியாபாரிகளும், வர்த்தகர்களும், பொய் எடை மற்றும் அளவுகள் கொண்டு பெரும் அளவிலான பொருட்களை விற்பார்கள். {வியாபாரத்தில்} அறம் சார்ந்து இருப்பவர்கள் செழிப்படைய மாட்டார்கள்; அதே வேளை, பாவிகள் அபரிமிதமாகச் செழிப்பார்கள். அறம் தனது பலத்தை இழப்பாள், அதே வேளையில் பாவம் பலமடையும். அறத்திற்குத் தன்னை அர்ப்பணிப்பவர்கள் ஏழைகளாகவும், குறைந்த வாழ்நாள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்; அதே வேளையில் பாவிகள் நீண்ட வாழ்நாள் கொண்டவர்களாகவும், செழிப்பை வெல்பவர்களாகவும் இருப்பார்கள். அதுபோன்ற காலங்களில், நகரங்களில் நடக்கும் பொதுவான கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் மக்கள் பாவிகளாகவே நடந்து கொள்வார்கள். மனிதர்கள் தங்கள் முடிவான சாதனைகளைச் செய்வதற்குப் பாவ வழிகளிலேயே முயற்சிப்பார்கள். மிகக் குறைவான நற்பேறையே அடைந்தாலும், மக்கள் செல்வத்தின் மீது கொண்டிருக்கும் கர்வத்தால் போதையுண்டு இருப்பார்கள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்தக் காலங்களில் பல மனிதர்கள், கமுக்கமாக {இரகசியமாக} நம்பிக்கையுடன் தங்களிடம் கொடுக்கப்பட்ட செல்வங்களைத் திருட முயற்சிப்பார்கள். பாவம் நிறைந்த காரியங்களைச் செய்யும் அவர்கள், வெட்கங்கெட்டுப் போய், தங்களிடம் ஏதும் கொடுக்கப்படவில்லை என்பார்கள்.
புனிதமான இடங்களிலும், நகரங்களில் பொதுக் கேளிக்கைகள் நடக்கும் இடங்களிலும் இரை தேடும் விலங்குகளும், பிற விலங்களும், நீர் வாழ்வனவும் கிடப்பதை கவனிக்கலாம். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஏழு அல்லது எட்டு வயது கொண்ட பெண் பிள்ளைகள் கருவுறுவார்கள், அதேவேளையில் பத்து அல்லது பனிரெண்டு வயது ஆண்பிள்ளைகள் வாரிசுகளைப் பெறுவார்கள். தங்களது பதினாறாவது வயதில் முதுமையடைந்து, அவர்களது வாழ்நாள் விரைவாக ஓடிவிடும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி மனிதர்கள் குறுகிய வாழ்நாள் கொண்டவர்களாகும் போது, இளைஞர்கள் முதியவர்களைப் போல நடந்து கொள்வார்கள்; அதே வேளையில் இளைஞர்களிடம் காணப்படும் அனைத்தும் முதிவர்களிடமும் காணப்படும். பெண்கள் நடத்தை கெட்டவர்களாகவும், தீய நடத்தை கொண்டவர்களாகவும் இருந்து, சிறந்த கணவர்களைக் கூட ஏமாற்றி, குற்றேவலர் {வேலையாள்}, அடிமைகள் மற்றும் விலங்குகளிடம்கூடத் தன்னை மறந்து இருப்பார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, வீரர்களின் மனைவியராக இருக்கும் பெண்கள் கூட, தங்கள் கணவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே, பிற ஆடவரின் துணையை நாடி தன்னை மறந்து இருப்பார்கள்.