Manu and the fish! | Vana Parva - Section 185 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
மீன் உருவத்தில் இருந்த பிரம்மனை வைவஸ்வத மனு வளர்த்தது, உலகை அழித்த பெருவெள்ளம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு மார்க்கண்டேயர் சொல்லல்...
பிறகு பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், அந்தணர் மார்க்கண்டேயரிடம், "இப்போது நீர் வைவஸ்வத மனுவின் வரலாற்றை உரைப்பீரா?" என்று கேட்டான்.
அதற்கு மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, {ஒரு காலத்தில்} வலிமைமிக்கப் பெருமுனிவர் {மன்னன்} ஒருவர் மனு என்ற பெயரில் இருந்தார். அவர் விவஸ்வானின் {சூரியனின்} மகனும், பிரம்மனின் புகழுக்கு ஒப்பானவரும் ஆவார். அவனது தந்தையையும், பாட்டனையும் பலத்திலும், வலிமையிலும், நற்பேறிலும், ஏன் தவச்சடங்குகளிலும் கூட அவர் {மனு} விஞ்சி நின்றார். உயர்த்திய கரங்களுடன் ஒற்றைக் காலில் நின்றபடி அந்த மனிதர்களின் தலைவன் {மனு} இலந்தைக் காடான விசாலையில் {பதரி} கடும் தவமிருந்தார். கீழ்நோக்கிய தலையுடனும் {தலைகீழாக நின்று கொண்டு}, நிலைத்த கண்களுடனும் அவர் கடுமையான உறுதியான தவத்தைப் பத்தாயிரம் வருடங்கள் செய்தார். ஒரு நாள், ஈர உடையுடனும், தலையில் சடாமுடியுடனும் தவம்பயின்று கொண்டிருந்த அவரிடம் {மனுவிடம்}, சீரிணீ நதியின் கரையை அடைந்த ஒரு மீன், "வணக்கத்திற்குரிய ஐயா, நான் ஆதரவற்ற ஒரு சிறு மீன். நான் பெரும் மீன்களைக் கண்டு அஞ்சுகிறேன்; ஆகையால், ஓ பெரும் பக்திமானே {மனுவே}, என்னைக் காப்பதே உமக்குத் தகும் என்பதை நினையும்; குறிப்பாகப் பலம்பொருந்திய மீன்கள் பலவீனமானவற்றை உண்பது ஒரு நிலையான வழிமுறையாக நிறுவப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பயங்கரக்கடலில் {நதியில்} நான் மூழ்கிப் போகமால் என்னைக் காப்பதே உமக்குத் தகும்! நான் நிச்சயம் உமது நற்செயலுக்கான ஈடு {மறு உதவி (அ) பிரதியுபகாரம்} செய்வேன்" என்றது.
அந்த மீனிடம் இருந்து இவ்வார்த்தைகளைக் கேட்ட வைவஸ்வத மனு இரக்கத்தால் ஆட்கொள்ளப்பட்டு, அம்மீனை நீரில் இருந்து தனது கரங்களால் எடுத்தார். நிலவின் கதிர்களைப் போல ஒளிரும் உடல் கொண்ட அம்மீன், நீரில் இருந்து எடுக்கப்பட்டு, ஒரு நீர் நிறைந்த மட்பாண்டத்தில் போடப்பட்டது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி வளர்க்கப்பட்ட அம்மீன், உருவத்தால் வளர்ந்தது. மனுவும் அதைக் குழந்தையைப் போலக் கவனத்துடன் வளர்த்தார். பிறகு நீண்ட காலம் கழித்து, அந்த மீன், அது இருந்த பாத்திரம் கொள்ளாத அளவுக்கு வளர்ந்தது. அதன் பிறகு (ஒரு நாள்) மனுவைக் கண்ட அம்மீன் அவரிடம், "வணக்கத்திற்குரிய ஐயா, எனக்கு வேறு ஒரு சிறந்த வசிப்பிடத்தை நியமிப்பீராக" என்று கேட்டது. பிறகு எதிரிகளின் நகரங்களை வெல்லும் புகழத்தக்க மனு, அதைப் பாத்திரத்தில் இருந்து எடுத்து ஒரு பெரிய குளத்திற்குக் கொண்டு சென்று அங்கே விட்டார். பிறகு அம்மீன் பல வருடங்கள் அங்கேயே வளர்ந்து வந்தது. அந்தத் தடாகம் இரண்டு யோஜனை நீளமும், ஒரு யோஜன அகலமும் கொண்டதாக இருந்தாலும் கூட, ஓ! தாமரை இதழ் போன்ற கண்களைக் கொண்ட குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அங்கேயும் அந்த மீனுக்கு விளையாடித்திரிய இடமில்லாமல் போனது.
பிறகு மீண்டும் மனுவைக் கண்ட அது {மீன்} {மீண்டும்}அவரிடம், , "ஓ!பக்திமிக்கப் புகழத்தக்க தந்தையே {மனுவே}, என்னைக் கடலுக்குப் பிடித்தமான மனைவியான கங்கைக்கு {கங்கை நதிக்கு} எடுத்துச் செல்லும். நான் அங்கு நீண்ட காலம் வாழ்வேன்; அல்லது நீர் விரும்பியவாறு செய்யும். ஓ! பாவமற்றவரே, நான் இந்த அளவு வளர்வதற்கு உமது உதவியே காரணம், நான் உமது கட்டளையை மகிழ்ச்சியாக நிறைவேற்றுவேன்" என்றது. இப்படிச் சொல்லப்பட்ட நேர்மையும் அடக்கமும் கொண்ட வழிபாட்டுக்குரிய மனு, அந்த மீனைக் கங்கை நதிக்கு எடுத்துச் சென்று தனது கைகளாலேயே அதை அந்நதியில் விட்டார். அங்கேயும், ஓ! எதிரிகளை வெல்பவனே {யுதிஷ்டிரா}, அம்மீன் சிறிது காலத்தில் வளர்ந்து மீண்டும் மனுவைக் கண்டு, "ஓ! தலைவா, நான் எனது பெருத்த உடலால் கங்கையில் நகர்வதற்கு இயலாமல் இருக்கிறேன்; எனவே, வழிபடத்தகுந்த ஐயா {மனுவே}, தயவு செய்து விரைவாக என்னைக் கடலுக்கு எடுத்துச் செல்லும்" என்றது. ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு மனு அதை {மீனை} கங்கையில் இருந்து எடுத்து, கடலுக்குச் சுமந்து சென்று, அங்கே அதை {கடலிடம்} ஒப்படைத்தார். அது பெருத்த உருவம் கொண்டதாக இருந்தாலும், மனு அதை எளிதாக எடுத்துச் சென்றார். அதன் ஸ்பரிசமும், மணமும் அவருக்கு இனிமையாக இருந்தது.
{மீன்} மனுவால் கடலுக்குள் வீசப்பட்டபோது, அது புன்னகையுடன், "ஓ! வழிபடத்தகுந்தவரே, நீர் என்னைச் சிறப்புக் கவனத்துடன் பாதுகாத்தீர்; தக்க காலம் வரும்போது நீர் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறேன் கேளும்! ஓ! நற்பேறு பெற்றவரே, வழிபடத்தகுந்த ஐயா {மனுவே}, அசைவன மற்றும் அசையாதன கொண்ட இவ்வுலகம் அழியும் காலம் நெருங்கிவிட்டது. இவ்வுலகத்தைக் களையெடுப்பதற்கான வேளையும் கனிந்துவிட்டது. எனவே, உமக்கு நன்மை எதுவோ அதை இப்போது விவரிக்கிறேன்! படைப்பில் அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைப் பயங்கரமான பேரழிவு அணுகுகிறது. நீண்ட கயிறுடன் கூடிய ஒரு பலமிக்க மகத்தான பேழையை {கப்பல் - build a strong massive ark) நீர் செய்யும். ஓ! பெருமுனியே {மனுவே}, ஏழு முனிவர்களுடன் {சப்த ரிஷிகளுடன்} நீர் அதில் ஏறி, பழங்காலத்தில் மறுபிறப்பாள அந்தணர்களால் பட்டியலிடப்பட்ட பலவிதமான விதைகளை உம்முடன் எடுத்துச் சென்று, அதைத் {விதைகளைத்} தனியாகவும் கவனத்துடனும் பாதுகாத்து வாரும். ஓ! முனிவர்களில் அன்பிற்குரியவரே {மனுவே}, அதைச் செய்துவிட்டு எனக்காகக் காத்திரும். நான் உம்மிடம் தந்தம் கொண்ட {கொம்பு கொண்ட} ஒரு விலங்காக {மீனாகத்தான் இருக்க வேண்டும்} வருவேன். அதைக் கொண்டு, ஓ! தவசியே {மனுவே}, என்னை அடையாளம் கண்டு கொள்ளும். இப்போது நான் உம்மிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். நீர் நான் சொன்னவாறு நடந்து கொள்ளும். என்னுடைய துணை இல்லாமல் உம்மால் அந்தப் பெரு வெள்ளத்தில் இருந்து தப்பிக்க இயலாது" என்றது {மீன்}.
பிறகு மனு அந்த மீனிடம், "ஓ! பெருமைமிக்க உயிரினமே, நீ சொல்வதில் நான் சந்தேகம் கொள்ளவில்லை. நீ சொன்னது போலவே நடப்பேன்" என்றார். இப்படி ஒருவர் மற்றவரிடம் விடைபெற்றுக் கொண்டு இருவரும் சென்று விட்டனர். ஓ பெரும் பலமிக்க மன்னா {யுதிஷ்டிரா}, எதிரிகளை வெல்பவனே, மீனால் வழிகாட்டப்பட்டது போலப் பலவிதமான விதைகளை எடுத்துக் கொண்டு, நல்ல ஓடத்திலே பெரிய அலைகளுடன் கூடிய கடலில் {சப்த ரிஷிகளுடன் கூடிய மனு} மிதந்தார். பிறகு, ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா} அந்த மீனை நினைத்தார். ஓ! எதிரிகளை வெல்பவனே, பாரதக் குலத்தின் முதன்மையான வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அந்த மீனும் அவரது மனதை அறிந்து, கொம்புகள் கொண்ட தலையுடன் அங்கே தோன்றியது. பிறகு, ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, கொம்பு கொண்ட மீன் ஒன்று பாறையின் உருவத்தில் கடலில் வருவதைக் கண்டதும், ஏற்கனவே அவர் உயர்த்திப் பிடித்திருந்த கயிற்றுச் சுருக்கை அதன் தலையில் மாட்டினார். அச்சுருக்கால் இறுக்கப்பட்ட அம்மீன், ஓ! மன்னா, எதிரிகளின் நகரங்களை வெல்பவனே {யுதிஷ்டிரா}, பெரும் சக்தியுடன் அப்பேழையை {ஓடத்தை} உப்பு நீரில் இழுத்துச் சென்றது. கூத்தாடும் அலைகளும், நிறைந்த நீரின் கர்ஜிப்பும் கொண்ட அக்கடலில் அவ்வோடம் {பேழை} இழுத்துச் செல்லப்பட்டது. ஓ! உனது எதிரிகளையும், பகை நகரங்களையும் வெல்பவனே {யுதிஷ்டிரா}, பெரும் கடலில் புயலால் தூக்கி வீசப்பட்ட அவ்வோடம் {பேழை}, ஒரு குடிகார விலைமகள் போல ஆடிச் சென்றது.
பூமிக்கும், நான்கு திசைப்புள்ளிகளுக்கும் வித்தியாசம் தெரிவில்லை.எங்குக் காணினும் நீராக இருந்தது. அந்நீர் வானத்தையும், தேவலோகத்தையும் நிறைத்தது. ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இப்படிப் பூமியை பெருவெள்ளத் சூழ்ந்த போது, மனுவைத் தவிர ஏழு முனிவர்களும் அம்மீனும் மட்டுமே காணப்பட்டனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப்பெருவெள்ளத்தில் அம்மீன் அவ்வோடத்தைப் {அப்பேழையைப்} பல வருடங்கள் விடாமுயற்சியுடன் இழுத்துச் சென்றது. பிறகு, ஓ! குருவின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, பாரதக் குலத்தின் ஆபரணமே, அது {மீன்} அவ்வோடத்தை {அப்பேழையை} இமயத்தின் உயர்ந்த சிகரத்திற்கு இழுத்துச் சென்றது. பிறகு, ஓ! பாரதா, அம்மீன் அந்த ஓடத்தை {பேழையை} இமயத்தின் அச்சிகரத்தில் கட்டச் சொன்னது. மீனின் வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் அம்மலையின் சிகரத்தில் அவ்வோடத்தைக் {அப்பேழையைக்} கட்டினார்கள். ஓ! குந்தியின் மகனே, பாரதகுலத்தின் ஆபரணமே {யுதிஷ்டிரா}, இமயத்தின் உயர்ந்த சிகரம் இன்றும் நௌபந்தனம் (துறைமுகம்) என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள். பிறகு அம்மீன் அம்முனிவர்களிடம், "நானே அனைத்து உயிரினங்களுக்கும் தலைமையான பிரம்மம் ஆவேன். என்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை. மீனின் உருவைக் கொண்டு, நான் உம்மை இந்தப் பேரிடரில் இருந்து காத்தேன். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும், அசைவன, அசையாதன ஆகிய படைப்பின் பிரிவுகளையும் (மீண்டும்) {வைவஸ்வத மனு} மனு படைப்பான். கடும் தவங்களைப் பயின்றும் எனது அருளாலும், அவன் அச்சக்தியை அடைவான். மாயை அவன் மீது எந்தச் சக்தியையும் செலுத்த முடியாது" என்றது {மீன்}.

இப்படிச் சொன்ன அம்மீன் உடனே மறைந்தது. வைவஸ்வத மனு உலகத்தைப் படைப்பதற்கு மனதில் விருப்பம் கொண்டார். படைப்புத் தொழில் செய்யும் இவ்வேலையின் போது மாயை அவரை ஆட்கொண்டது, ஆகையால் அவர் பெருந்தவம் பயின்றார். தவத்தகுதியுடைய அந்த மனு, ஓ! பாரதகுலத்தின் ஆபரணமே {யுதிஷ்டிரா}, மீண்டும் சரியான மற்றும் முறையான வரிசையில் உயிரினங்களைப் படைத்தார்.
நான் {மார்க்கண்டேயரான நான்} உனக்குச் {யுதிஷ்டிரனான உனக்குச்} சொன்ன மீனின் புராணமான இந்தக் கதையைக் கேட்பது அனைத்துப் பாவங்களையும் அழிக்கிறது. மனுவின் ஆதி வரலாறான இதைத் தினமும் கேட்பவன் மகிழ்ச்சியை அடைந்து, விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி சொர்க்கத்தை அடைகிறான்" என்றார் {மார்க்கண்டேயர்}.