Deer dream of Yudhishthira! | Vana Parva - Section 256 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரன் கனவில் வந்த மான்கள், பாண்டவர்கள் துவைத வனத்தை விட்டுப் போகும்படியும், தாங்கள் பல்கிப் பெருக வழி கொடுக்கும்படியும் இரந்து கேட்டது; தன் கனவைத் தனது தம்பிகளுக்கு வெளிப்படுத்திய யுதிஷ்டிரன், அனைவரையும் அழைத்துக் கொண்டு காம்யகம் சென்றது...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} கேட்டான், "துரியோதனனை விடுவித்த பிறகு, பாண்டுவின் பலமிக்க மகன்கள் அந்தக் காட்டில் என்ன செய்தனர்? இதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்"
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஒரு சமயம், யுதிஷ்டிரன், இரவில் துவைத வனத்தில் படுத்துக் கொண்டிருந்தபோது, ஏதோ சில மான்கள், கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அவனது கனவில் தோன்றின. கூப்பிய கரங்களுடன் உடல் நடுங்க நின்று கொண்டிருந்தவற்றிடம் {மான்களிடம்} அந்த ஏகாதிபதிகளில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்}, “நீங்கள் சொல்ல விரும்பியதை என்னிடம் சொலுங்கள். நீங்கள் யார்? நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்டான். {பாண்டவர்களால்} கொல்லப்பட்டவையில் மீந்திருந்த அந்தமான்கள், குந்தியின் மகனான சிறப்புமிக்கப் பாண்டவனால் {யுதிஷ்டிரனால்}, இப்படி அணுகி அழைக்கப்பட்டபோது, அவை அவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, {உங்களால்} கொல்லப்பட்டவைகளில் இன்னும் உயிரோடு இருப்பவர்கள் நாங்கள். நாங்கள் {உங்களால்" மொத்தமாகக் கொல்லப்படலாம். எனவே, உங்கள் வசிப்பிடத்தை மாற்றுங்கள். ஓ! பலமிக்க மன்னா {யுதிஷ்டிரா}, உனது தம்பிகள் அனைவரும் ஆயுதங்கள் அறிந்த வீரர்கள். இந்தக் காட்டில் வசிப்பவற்றின் எண்ணிக்கையை அவர்கள் குறைத்துவிட்டனர். ஓ! பலமிக்க மனம் கொண்டவனே {யுதிஷ்டிரா}, எஞ்சியவர்களான நாங்களே இப்போது {எங்கள் குலத்தின்} வித்தாக இருக்கிறோம். ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, உன் கருணையால் எங்களைப் பல்கிப் பெருக விடு" என்றன.
அழிக்கப்பட்டவை போக வித்துப் போல மீந்திருந்த அந்த மான்கள் அச்சத்துடன் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட நீதிமானான யுதிஷ்டிரன் பெரும் துயரால் தாக்கப்பட்டான். அனைத்து உயிர்களின் நன்மையைக் கருத்தில் கொண்ட அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, அவற்றிடம் {அந்த மான்களிடம்}, “அப்படியே ஆகட்டும். நீங்கள் சொன்னது போலவே செயல்படுகிறேன்" என்றான். இப்படிப்பட்ட காட்சியால் விழித்தெழுந்த அந்த அற்புதமான மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த மான்களின் மீது இரக்கம் கொண்டு, அங்குக் கூடியிருந்த தனது தம்பிகளிடம், “கொல்லப்பட்டவை போக மீந்திருக்கும் அந்த மான்கள், இரவில் என்னை அணுகி அழைத்து, "நாங்கள் எங்கள் குலங்களின் நினைவுக் குறிப்புகளைப் போலவே எஞ்சியிருக்கிறோம். நீ அருளப்பட்டிரு. எங்களிடம் இரக்கங்கொள்" என்றன. அவை உண்மையையே பேசியுள்ளன. நாம் இந்தக் கானகவாசிகளிடம் {வனவிலங்குகளிடம்} பரிதாபம் கொள்ள வேண்டும். ஒரு வருடம் மற்றும் எட்டு மாதங்களாக நாம் அவற்றை உணவாகக் கொண்டிருக்கிறோம்.
எனவே, பாலைவனத்தின் தொடக்கத்தில், திருணபிந்து எனும் தடாகத்திற்கு அருகில், வனவிலங்குகள் நிறைந்த, கானகங்களில் சிறந்த, அழகிய காம்யக வனத்திற்கே நாம் மீண்டும் செல்வோம். அங்கே நமது மீத நாட்களை இனிமையாகக் கடத்துவோம்" என்றான். பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அறநெறிகள் அறிந்த பாண்டவர்கள், தங்களுடன் இருந்த அந்தணர்கள் மற்றும் தங்களோடு வாழ்ந்தவர்களோடு, இந்திரசேனன் மற்றும் பிற பணியாட்களுடன் விரைவராக (அந்த இடத்திற்கு) சென்றனர். சோளம் மற்றும் தெளிந்த நீர் நிறைந்த, (பயணிகள்) நடக்கும் பாதை வழியாக முன்னேறி, கடைசியாகக் காம்யக வனத்தில் ஆன்மத் தகுதி உடையவர்கள் நிறைந்த புனிதமான ஆசிரமத்தைக் கண்டார்கள். தெய்வீக உலகங்களுக்குள் நுழையும் பக்திமான்கள் போல, பாரதக் குலத்தின் முதன்மையான அந்தக் கௌரவர்கள் {பாண்டவர்கள்}, அந்த அந்தணர்களில் காளைகளால் சூழப்பட்டு, அந்தக் கானகத்தில் {காம்யகத்திற்குள்} நுழைந்தார்கள்.
இந்த இடத்தோடு மிருகஸ்வப்நோத்பவ பர்வமும் முற்றுபெற்று, அடுத்த பகுதியில் இருந்து விரீஹித்ரௌணிக பர்வம் ஆரம்பிக்கிறது. ஆனால் கங்குலி இங்கும் கோஷ யாத்திரா பர்வத்தைத் தொடர்ந்து செல்கிறார்.260பகுதியில் தான் கோஷயாத்திரா பர்வத்தை முடிக்கிறார். அதன் பிறகு 261ம் பகுதியில் திரௌபதி ஹரணப் பர்வம் தொடங்குகிறது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.