Vyasa visited Kamyaka! | Vana Parva - Section 257 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
காம்யக வனத்தில் பாண்டவர்களைச் சந்தித்த வியாசர்; தானம், தவம் ஆகியவற்றில் எது அதிகப் பலனைக் கொடுக்கும் என்ற விளக்கம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, காட்டில் வசிக்கும் அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள், அவல நிலையிலேயே பதினோரு {11} வருடங்களைக் கழித்தனர். மகிழ்ச்சியை அனுபவிக்கத் தகுந்த அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள, தங்களுக்கு ஏற்பட்ட சூழ்நிலையால் அடைகாக்கும் நிலையை அடைந்து, பழங்களிலும், கிழங்குகளிலும் வாழ்ந்து, தங்கள் நாட்களைத் துன்பகரமாகவே கழித்தனர். அந்த அரசமுனியான பலமிக்கக் கரங்கள் கொண்ட யுதிஷ்டிரன், தன் தம்பிகளுக்கு நேர்ந்த இந்த எல்லை கடந்து துன்பம், தனது தவறாலேயே ஏற்பட்டது என்று நினைத்தான். தன் சூதாட்டச் செயலால் விளைந்த அந்தத் துன்பங்களை நினைத்துப் பார்த்த அவனால் {யுதிஷ்டிரனால்} நிம்மதியாக உறங்க முடியவில்லை. தன் இதயம் ஈட்டியால் துளைக்கப்பட்டதைப் போல உணர்ந்தான். சூத மகனின் {கர்ணனின்} கடுமையான வார்த்தைகளை நினைத்துப் பார்த்த அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, தன் கோப விஷத்தை ஒடுக்கி, பெருமூச்சு விட்டபடி, தனது நேரத்தை எளிமையான தோற்றத்தில் கழித்தான். அர்ஜுனன், இரட்டையர் இருவர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, சிறப்புமிக்கத் திரௌபதி, மனிதர்களில் பெரும் பலம் படைத்த பராக்கிரமம் மிக்கப் பீமன் ஆகியோர், தங்கள் பார்வையை யுதிஷ்டிரன் மேல் செலுத்தும்போதெல்லாம் {அவன் நிலையைக் கண்டு} மிகவும் கசப்பான வலியை உணர்ந்தனர். (வனவாசக் கெடுவில்) மிகக் குறைந்த காலமே எஞ்சியிருப்பதை நினைத்துப்பார்த்து, கோபமும் நம்பிக்கையும் கொண்ட அந்த மனிதர்களில் காளையர், பல்வேறு முயற்சிகளையும் பயிற்சிகளையும் நாடி, தங்கள் உடல்களைப் பல்வேறு உருவங்களில் சமைத்தனர்.
சிறிது காலம் கழித்து வலிமைமிக்கத் துறவியும், சத்தியவதியின் மகனுமான வியாசர் பாண்டவர்களைக் காண அங்கே வந்தார். தங்களை நோக்கி அவர் வருவதைக் கண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன் முன்சென்று, அந்த உயர் ஆன்மா கொண்டவரை முறைப்படி வரவேற்றான். வியாசரை வணங்கி, அவரை மனம் நிறைய வைத்த புலன்களை அடக்கிய பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்த முனிவர் அமர்ந்த பிறகு, அவர் சொல்வதைக் கேட்கும் வண்ணம், அவருக்கு முன்பு அமர்ந்தான். தனது பேரர்கள் மெலிந்து போய், காட்டில் கிடைப்பதை வைத்து உண்டு வாழ்வதைக் கண்ட அந்த வலிமைமிக்கத் தவசி {வியாசர்}, இரக்கத்தால் உந்தப்பட்டு, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், “ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட யுதிஷ்டிரா, ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் சிறந்தவனே, கடும் தவம் புரியாதவர்கள் இவ்வுலகில் பெரும் மகிழ்ச்சியை அடைய முடியாது. மனிதர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறியே அனுபவிக்கிறார்கள்; இது நிச்சயம். ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, எந்த மனிதனும் தடையற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பதில்லை. உயர்ந்த ஞானத்தைக் கொண்ட ஒரு ஞானி, வாழ்வு என்பது பள்ளம் மேடுகள் நிறைந்ததே என்பதை அறிந்து, இன்பத்தாலோ, துன்பத்தாலோ நிறைந்திருப்பதில்லை.
பயிரைத் {விதைகளைத்} தூவுபவன் {பயிரிடும் உழவன்}, காலத்தை உணர்ந்து, பயிரின் பலன்களை அனுபவிப்பதைப் போல, மகிழ்ச்சி வரும்போது ஒருவன் மகிழ்ந்திருக்க வேண்டும்; துன்பம் வரும்போது, அவன் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும். தவத்திற்கு மேன்மையானது எதுவுமில்லை; தவத்தினால் ஒருவன் வலிமையான கனியை அடைகிறான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தவத்தால் அடைய முடியாதது எதுவும் இல்லை என்பதை அறிந்து கொள். உண்மை, நேர்மை, கோபத்தில் இருந்து விடுதலை, நீதி, சுய அடக்கம், காரியங்களில் கட்டுப்பாடு, அசுத்தம் விலக்கல், சூதற்ற தன்மை, புனிதம், புலன்கள் ஒடுக்கம் ஆகியவை, ஓ! வலிமைமிக்க ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, நற்செயல்கள் செய்யும் ஒரு மனிதனை சுத்தப்படுத்துகின்றன. தீமை மற்றும் மிருகத்தனமான வழிகளுக்கு அடிமையாக இருக்கும் மூடர்கள், இவ்வாழ்வுக்குப் பிறகு, மிருகத்தனமான பிறப்புகளை அடைந்து {மிருகங்களாகப் பிறந்து}, எப்போதும் மகிழ்ச்சியை அனுபவிப்பதில்லை. இவ்வுலகில் செய்யப்படும் செயல்களின் கனிகளையெல்லாம், {அம்மனிதன்} அடுத்த உலகில் அறுக்கிறான். எனவே, ஒருவன் தவத்தாலும், நோன்புகள் நோற்பதாலும் தனது உடலை கட்டுப்படுத்த வேண்டும்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சூதற்ற மகிழ்ச்சியான மனதுடன், {தானம்} பெறுபவர்களிடம் சென்று, அவருக்கு மரியாதை செலுத்தி, தனது சக்திக்குத் தக்க ஒருவன் தானம் அளிக்க வேண்டும். உண்மை பேசும் மனிதன், தொல்லைகளற்ற வாழ்வைப் பெறுகிறான். கோபம் களைந்த ஒருவன் நேர்மையை அடைகிறான். துர்குணம் களைந்த ஒருவன் உச்சபட்ச மனநிறைவை அடைகிறான். தனது புலன்களையும், உள்மனதையும் வென்ற ஒருவன், இன்னல்களை அறியமாட்டான். புலன்களை வென்ற ஒரு மனிதன் மற்றவர்களுடைய செழிப்பின் உயர்வைக் கண்டு பாதிப்படையமாட்டான். அனைவருக்கும் அவர்களுக்கு உரியதைக் கொடுத்து, வரங்களை அளிப்பவன், மகிழ்ச்சியை அடைந்து, அவனது இன்பத்திற்கான அனைத்துப் பொருட்களையும் அடைகிறான். பொறாமை களைந்த மனிதன் பூரண நிம்மதியை அடைகிறான். மரியாதைக்குரியவர்களை மரியாதையுடன் நடத்துபவன், சிறப்புமிக்கக் குலத்தில் பிறப்பை அடைகிறான். தன் புலன்களை வெல்பவன், தீப்பேறுகளைச் {துரதிர்ஷ்டங்களைச்} சந்திப்பதில்லை. நன்மையைத் தொடரும் மனதுடையவன் {நன்மை செய்ய விரும்புபவன்}, இயற்கைக்குத் தான் செய்ய வேண்டிய கடனை செலுத்துவதன் காரணமாக, நேர்மையான மனதுடையவனாக மீண்டும் பிறக்கிறான்" என்றார்.
யுதிஷ்டிரன் {வியாசரிடம்} கேட்டான், "ஓ! அறம்சார்ந்தவர்களில் சிறந்தவரே, ஓ! வலிமைமிக்கத் தவசியே {வியாசரே}, தானமளிப்பதிலும், தவம் மேற்கொள்வதிலும், அடுத்த உலகத்திற்குத் தேவையான கூடுதல் செயல்திறனை {அல்லது பலாபலனை = efficacy} எது கொடுக்கும்? பயில்வதற்கு {செய்வதற்கு} எது கடினமானது?" என்று கேட்டான்.
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, தானத்தைவிட இவ்வுலகில் பயில்வதற்குக் கடினமானது ஏதுமில்லை. செல்வத்தில் {அதைச் சம்பாதிப்பதில்} மனிதர்கள் அதிகத் தாகம் கொள்கின்றனர். செல்வமும் சிரமத்துடனே அடையப்படுகிறது. ஓ! பெருந்தன்மை கொண்டவனே, வீர மனிதர்கள், செல்வத்தை அடைவதற்காக, தங்கள் இன்னுயிரையும் கைவிட்டு {இன்னுயிர் மீதுள்ள பற்றைக் கைவிட்டு} கடலின் ஆழங்களுக்குள்ளும், கானகத்திற்குள்ளும் நுழைகின்றனர். செல்வத்திற்காக, சிலர் உழவு {விவசாயம்} செய்கின்றனர், சிலர் பசுக்களை வளர்க்கின்றனர், சிலர் சேவகம் செய்கின்றனர். எனவே, இத்தகு சிரமங்களுக்கு ஆட்பட்டு அடையும் செல்வத்தைத் துறப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. தானத்தைவிடப் பயில்வதற்குக் கடினமானது எதுவும் இல்லையென்பதால், வரங்களை அளிப்பது கூட, அனைத்திற்கும் மேன்மையானது என்பது எனது கருத்து.
குறிப்பாக ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். முறையாக அடைந்த செல்வத்தை, சரியான நேரத்தில், சரியான இடத்தில் பக்தியுள்ள மனிதர்களுக்குக் {தானம்} கொடுக்க வேண்டும். ஆனால், முறையற்று அடைந்த செல்வத்தைக் கொண்டு தானம் செய்பவன், மறுபிறவியின் தீமையில் இருந்து தப்ப முடியாது. ஓ! யுதிஷ்டிரா, குறித்த நேரத்தில், தகுந்த ஆளுக்கு {தானம் பெறுபவருக்கு}, சுத்தமான மனதுடன் சிறு தானத்தைச் செய்தால் கூட, {அந்த தானமளிக்கும் மனிதன்}, மறு உலகத்தில் வற்றாத பலன்களை அடைவான் என்பது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஒரு பழங்கதை இருக்கிறது. முத்கலர், ஒரு துரோணம் [1] சோளத்தைத் தானம் செய்ததால் நல்ல பலனை அடைந்தார்.
[1] மிகச் சிறிய அளவு {அளவுகோல்} என்கிறார் கங்குலி. சமஸ்க்ருதத்தில் ‘த்ரோணீ’ என்றால் வாளி போன்ற ஒரு பாத்திரம், அது போன்றதொரு பாத்திரத்தில் பிறந்ததாலேயே துரோணருக்கும் அவ்வாறு பெயர் வந்தது. துரோணம் என்பது ஒரு பாத்திர அளவாக இருக்கக்கூடும்.
இந்த இடத்தில் இருந்து விரீஹித்ரௌணிக பர்வம் ஆரம்பிக்க வேண்டும்.
ஆனால் கங்குலியின் மொழிபெயர்ப்பில் கோஷ யாத்திரா பர்வமே தொடர்கிறது. 260பகுதியில் தான் கோஷயாத்திரா பர்வம் முடிகிறது. அதன்
பிறகு 261ம் பகுதியில் திரௌபதி ஹரணப் பர்வம் தொடங்குகிறது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.