The vow of Karna! | Vana Parva - Section 255 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
துரியோதனன் செய்த வேள்வி, யுதிஷ்டிரன் செய்த வேள்வியின் பதினாறில் ஒரு பங்குக்குக் கூட ஈடாகாது என்று சிலர் சொல்வது; நண்பர்கள் துரியோதனன் செய்த வேள்வியை மெச்சுவது; நான் எப்போது ராஜசூய வேள்வியைச் செய்வேன் என்று துரியோதனன் கேட்பது; கர்ணன் ஏற்கும் நோன்பு; கர்ணன் ஏற்ற சபதத்தைக் கேள்விப்பட்ட யுதிஷ்டிரன் துயருறுவது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, துரியோதனன் (நகரத்திற்குள்) நுழைந்து கொண்டிருந்த போது, தோற்காத வலிமை கொண்ட அந்த இளவரசனைப் புகழ்ச்சியாளர்கள் {சூதர்கள்} துதிபாடினர். அந்த வலிமைமிக்க வில்லாளியான மன்னர்களில் முதன்மையானவனை {துரியோதனனை} பிறரும் புகழ்ந்தனர். அவன் மீது நெல் பொரிகளையும் {fried paddy}, சந்தனக் குழம்பையும் வாரி இறைத்த குடிமக்கள், “ஓ! மன்னா {துரியோதனா}, நீ அடைந்த நற்பேறாலேயே உனது வேள்வி தடையில்லாமல் நிறைவேறியது" என்றார்கள். அங்கிருந்தவர்களில் இரக்கமற்ற பேச்சுக் கொண்ட சிலர் அந்தப் பூமியின் தலைவனிடம் {துரியோதனனிடம்}, “நிச்சயமாக, இவ்வேள்வி யுதிஷ்டிரனுடைய வேள்வியுடன் ஒப்பிட முடியாததாகும்; இது அதில் {யுதிஷ்டிரன் நடத்திய வேள்வியில்} பதினாறில் ஒரு பங்கிற்குக்கூட ஈடாகாது" என்றனர். பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காத பொறுப்பற்ற சிலர் அம்மன்னனிடம் இப்படியே பேசினர்.
இருப்பினும் அவனது {துரியோதனனின்} நண்பர்கள், “உனது இந்த வேள்வி மற்ற அனைத்தையும் விஞ்சி நிற்கிறது. இதுபோன்ற வேள்வியைச் செய்து புனிதமடைந்த யயாதி, நகுஷன், மாந்தாதா, பாரதன் ஆகியோர் சொர்க்கம் சென்றனர்" என்றனர். இத்தகு ஏற்புடைய வார்த்தைகளைத் தனது நண்பர்களிடம் கேட்ட அந்த ஏகாதிபதி {துரியோதனன்}, ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, மிகவும் மனநிறைவு கொண்டு, நகரத்திற்குள் நுழைந்து இறுதியாகத் தனது சொந்த வசிப்பிடத்திற்குச் சென்றான். பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, தன் தந்தை {திருதராஷ்டிரன்}, தாய் {காந்தாரி}, பீஷ்மர், துரோணர், கிருபர், ஞானியான விதுரன் ஆகியோரைத் தலைமையாகக் கொண்ட பிறரின் பாதங்களை வழிபட்டான். பிறகு தன் தம்பிகளால் வழிபடப்பட்டான். அந்தத் தம்பிகளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவன் {துரியோதனன்}, தம்பிகள் சூழ தனது அற்புத இருக்கையில் அமர்ந்தான்.
அப்போது, சூதனின் மகன் {கர்ணன்} எழுந்து, “ஓ! பாரதகுலத்தில் முதன்மையானவனே {துரியோதனா}, உனது இந்தப் பெரும் வேள்வி, நீ பெற்ற நற்பேறாலேயே நல்ல முறையில் நிறைவடைந்தது. எனினும், பிருதையின் {குந்தியின்} மகன்களைப் {பாண்டவர்களைப்} போர்க்களத்தில் கொன்ற பிறகு, நீ ராஜசூய வேள்வியைச் செய்யும்போது, ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனா}, நான் உனக்கும் மீண்டும் பெருமையை ஏற்படுத்துவேன்" என்றான். பிறகு திருதராஷ்டிரன் மகனான அந்தப் பலமிக்க மன்னன் {துரியோதனன்}, “நீ சொல்வது உண்மையே. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கர்ணா}, தீய மனம் கொண்ட பாண்டவர்கள் கொல்லப்பட்டு, பிரம்மாண்டமான ராஜசூயம் என்னால் செய்யப்படும்போது, ஓ! வீரா {கர்ணா}, நீ மீண்டும் என்னைப் பெருமைப் படுத்துவாய்" என்று மறுமொழி கூறினான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, இப்படிச் சொன்ன அந்தக் கௌரவன் {துரியோதனன்} கர்ணனை ஆரத்தழுவி, ஓ! பலமிக்க மன்னா {ஜனமேஜயா}, வேள்விகளில் முதன்மையான ராஜசூயத்தைக் குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தான்.
அந்த மன்னர்களில் சிறந்தவன் {துரியோதனன்}, தன்னைச் சூழ்ந்திருந்த குருக்களிடம், “கௌரவர்களே, பாண்டவர்களைக் கொன்று, பெரும்பொருட்களால் செய்ய வேண்டிய ராஜசூயம் என்ற முதன்மையான வேள்வியை நான் எப்போது செய்வேன்?” என்று கேட்டான். அப்போது, கர்ணன் அவனிடம் {துரியோதனனிடம்}, “ஓ மன்னர்களில் களிறே {யானையே} {ராஜகுஞ்சரா} {துரியோதனா}, நான் சொல்வதைக் கேள். அர்ஜுனனை நான் கொல்லாதவரை, நான் யாரையும் எனது பாதத்தைக் கழுவ விட மாட்டேன்; இறைச்சியை உண்ணாதிருப்பேன்; நான் அசுர நோன்பை நோற்பேன் [1], எவர் என்னிடம் எதைக் (எந்தப் பொருளைக்) கோரினாலும், “அது என்னிடம் இல்லை" என்று எப்போதும் சொல்ல மாட்டேன்.” என்றான் கர்ணன். போர்க்களத்தில் பல்குனனைக் {அர்ஜுனனைக்} கொல்வேன் என்று கர்ணன் சபதமேற்ற போது, பெரும் பலம் வாய்ந்த ரதசாரதிகளும், பெரும் வில்லாளிகளுமான திருதராஷ்டிரனின் மகன்கள் உற்சாகத்தால் பெருத்த ஆரவாரம் செய்தனர். அந்தத் திருதராஷ்டிரனின் மகன்கள் பாண்டவர்கள் ஏற்கனவே வெல்லப்பட்டதாகவே நினைத்தனர். பிறகு, மன்னர்களின் தலைவனான அருள் நிறைந்த துரியோதனன், மனிதர்களில் காளையரான அவர்களை விட்டுவிட்டு, சித்திரரதத் தோட்டத்திற்குள் நுழையும் தலைவன் குபேரனைப் போலத் தனது அறைக்குள் நுழைந்தான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தப் பெரும் பலம் வாய்ந்த வில்லாளிகள் அனைவரும் தங்கள் தங்கள் இடங்களுக்குச் சென்றனர்.
[1] (பர்துவான் பண்டிட்டுகளின் {வங்காள மொழியில் பாரதத்தை மொழிபெயர்த்தவர்கள் என நினைக்கிறேன்} கூற்றுப்படி) இந்த அசுரர்கள் நோன்பு என்பது மது குடிக்க மாட்டேன் என்று நோன்பேற்பதாகும் {இங்கே கும்பகோணம் தமிழ் பதிப்பும் மதுவுண்ண மாட்டேன் என்றே சொல்கிறது}. ஆனால் இங்கே ஆரியர்களின் சுத்தமான நடத்தைகளைக் கைவிட்டு, "எனது விருப்பம் நிறைவேறும் வரை அசுரர்களின் நடத்தையைக் கைக்கொள்வேன்" என்று கர்ணன் நோன்பேற்பதாகக் கொள்வதே பகுத்தறிவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கங்குலி சொல்கிறார். வழக்கம் போல இந்த விளக்கத்துக்கு மத்தியில் { } என்ற அடைப்புக் குறிகளுக்குள் இருக்கும் கருத்துகள் என்னுடையவை.
அதேவேளையில், தூதர்கள் பேசிய வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெரும்பலம் வாய்ந்த வில்லாளிகளான பாண்டவர்கள் பரபரப்படைந்து, கவலையடைந்தனர். (அந்நேரத்தில் இருந்து) அவர்கள் சிறு மகிழ்ச்சியையும் அனுபவிக்கவில்லை. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, மேலும், விஜயனை {அர்ஜுனனைக்} கொல்ல சூதமகன் {கர்ணன்} ஏற்ற சபதத்தைப் புலனாய்வின் மூலம் பெற்ற {பாண்டவர்களின்} ஒற்றர்கள், அச்செய்தியை அவர்களுக்குக் {பாண்டவர்களுக்குக்} கொண்டு வந்தனர். ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, இதைக் கேட்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, கவலையின் எல்லையை அடைந்தான். துளைக்க முடியாத கவசம் கொண்ட கர்ணனை அற்புத பராக்கிரமம் கொண்டவன் என்று கருதி, தங்கள் துன்பங்களையெல்லாம் நினைவு கூர்ந்த அவன் {யுதிஷ்டிரன்}, அமைதியை அறியவில்லை. கவலை நிறைந்த அந்த உயர்ந்த ஆன்மா கொண்டவன் {யுதிஷ்டிரன்}, மூர்க்கமான விலங்குகள் நிறைந்த அந்தத் துவைதவனத்தைக் கைவிட மனதில் தீர்மானம் கொண்டான்.
அதேவேளையில், திருதராஷ்டிரனின் அரச மகன் {துரியோதனன்}, தனது வீரமிக்கத் தம்பிகளுடனும், பீஷ்மர், துரோணர் மற்றும் கிருபருடனும் சேர்ந்து பூமியை ஆளத் தொடங்கினான். படையெடுப்பு செய்த புகழ் என்ற மகுடம் தரித்த சூதமகனின் {கர்ணனின்} உதவியுடன் துரியோதனன், எப்போதும் பூமியின் ஆட்சியாளர்களின் நன்மையிலேயே எப்போதும் குறியோடு இருந்தான். அபரிமிதமான தானங்களுடன் வேள்விகளைச் செய்து அந்தணர்களில் முதன்மையானவர்களை வழிபட்டான். எதிரிகளை வீழ்த்துபவனான அந்த வீரன் {துரியோதனன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, தானத்தையும் இன்பம் அனுபவிப்பதையும் பலனாகக் கொண்டவையே செல்வங்கள் என்பதை உறுதியாக மனதில் தீர்மானித்துத் தனது தம்பிகளுக்கு நன்மைகளைச் செய்தான்.
இந்த இடத்தோடு கோஷயாத்திரா பர்வம் முற்றுபெற்று மிருகஸ்வப்நோத்பவ பர்வம் ஆரம்பிக்கிறது. ஆனால் கங்குலி இங்கு முடிக்காமல் கோஷயாத்திரா பர்வத்தைத் தொடர்ந்து செல்கிறார்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.