The grief of Yudhishthira! | Virata Parva - Section 3 | Mahabharata In Tamil
(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 3)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
நகுலன் குதிரைகளின் காப்பாளனாகவும்; சகாதேவன் பசுக்களின் காப்பாளனாகவும் விராட நாட்டில் இருக்கப் போவதாகச் சொல்வது; திரௌபதி என்ன செய்ய முடியும் என்று யுதிஷ்டிரன் வருந்துவது; விராட மன்னனின் மனைவிக்குப் பணிப்பெண்ணாக இருக்கப் போவதாகத் திரௌபதி சொல்வது...
யுதிஷ்டிரன் {நகுலனிடம்}, “மென்மையும், அழகான உருவமும் கொண்டு, அனைத்து ஆடம்பரங்களுக்கும் தகுதியுடைய நீ, ஓ! வீர நகுலா, அந்த மன்னனின் {விராடனின்} நாட்டில் வாழும்போது என்ன அலுவலைச் செய்வாய்? அது பற்றி அனைத்தையும் எனக்குச் சொல்!” என்று கேட்டான்.
நகுலன் {யுதிஷ்டிரனிடம்}, “கிரந்திகன் [Granthika; granthiko] {தாமக்ரந்தி} என்ற பெயரின் கீழ், மன்னன் விராடனின் குதிரைகளுக்குப் பொறுப்பாளனாவேன் {keeper of horses -குதிரை காப்பாளன்}. (இப்பணியில்) {குதிரைகளைக் காப்பதில்} முழு ஞானமும், குதிரைகளின் நேர்த்திகளை {தன்மைகளை} அறிவதில் திறனும் உடையவனாக இருக்கிறேன். அதுதவிர, அப்பணி எனக்கு ஏற்புடையதாகும் {பிடித்தமானதாகும்}. குதிரைகளைப் பழக்குவதிலும், அவற்றுக்குச் சிகிச்சையளிப்பதிலும் நான் பெரும் திறன் கொண்டிருக்கிறேன். ஓ! குருக்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மைப் போலவே, குதிரைகள் எனக்கும் பிடித்தமானவையே. என் கைகளில் குதிரைக்குட்டிகளும் {colts}, பெண்குதிரைகளும் {mares} கூட அமைதியடையும்; இவை ஓர் ஓட்டுனரைத் தாங்கும் போதோ, தேரை இழுக்கும்போதோ தீமையை {குற்றத்தை} அடையாது [1]. விராட நகரத்தில் என்னைக் குறித்துக் கேட்பவர்களிடம் நான், ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, “முன்பு நான் யுதிஷ்டிரரால் குதிரைகளுக்குப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டிருந்தேன்" என்று சொல்வேன். இப்படி மாறுவேடம் கொண்டு, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த விராட நகரத்தில் எனது நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்துவேன். இப்படி நான் அந்த ஏகாதிபதியை {விராட மன்னனை} மகிழ்விக்கும்போது யாராலும் என்னைக் கண்டுபிடிக்க இயலாது! [2]” என்றான் {நகுலன்}.
[1] "ஆதுஷ்டா {Adushta} என்று ஆரம்பித்து ரதேஸ்து ச {ratheshu cha} என்று முடியும் சுலோகம் வங்காள உரைகளைத் தவிர வேறு எதிலும் காணப்படவில்லை.” என்கிறார் கங்குலி.[2] “படிக்கும்போது இங்கே {பல உரைகளில்} வித்தியாசங்கள் காணப்படுங்கின்றன. எனினும், அதே பொருளிலேயே உள்ளன" என்கிறார் கங்குலி. {அதாவது வெவ்வேறு பதிப்புகளில் வெவ்வேறு சொற்கள் கையாளப்பட்டிருக்கின்றன என்கிறார் போலும்}.
யுதிஷ்டிரன் {சகாதேவனிடம்}, “ஓ! சகாதேவா, மன்னனின் {விராட மன்னனின்} முன்பு நீ எப்படி உன்னைத் தாங்கிக் கொள்வாய்? ஓ! குழந்தாய் {சகாதேவா}, மாறுவேடத்தில் வாழும் பொருட்டு நீ என்ன செய்வாய்?” என்று கேட்டான்.
சகாதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “நான் விராட மன்னனின் மாடுகளைக் காப்பவனாவேன். பசுக்களில் பால் கறப்பதும், அவற்றின் உக்கிரத்தைத் தணித்து, அவற்றைப் பழக்குவதிலும் நான் திறன் பெற்றிருக்கிறேன். தந்திரீபாலன் [Tantripal; tantipāla] {தந்த்ரீபாலன்} என்ற பெயரின் கீழ், நான் எனது கடமைகளை நயமாகச் செய்வேன். உமது இதயத்தின் நோய் அகலட்டும். முன்பு நான் அடிக்கடி உம்முடைய பசுக்களைப் பார்த்துக் கொள்ள அமர்த்தப்பட்டிருந்தேன். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, எனக்கு அந்த வேலையில் குறிப்பிட்ட ஞானம் உண்டு. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பசுக்களின் இயல்புகளையும், அவை கொண்டிருக்கும் மங்களக் குறிகளையும், அவை குறித்த பிற காரியங்களையும் நான் நன்கு அறிவேன். எத்தகைய காளைகளின் சிறுநீர் வாசமே கூட, மலடையும் {மலட்டுப்பசுவையும்} கன்றீன வைக்குமோ, அத்தகையவற்றை {அப்படிப்பட்ட காளைகளை}, அதன் மங்களக்குறிகளைக் கொண்டு, என்னால் இனம் பிரிக்க முடியும். இப்படியே நான் வாழ்வேன், இவ்வகை வேலையில் நான் எப்போதும் மகிழ்ச்சியடைவேன். உண்மையில், என்னை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. மேலும் நான் அந்த ஏகாதிபதியை மனம் நிறையச் செய்வேன்" என்றான் {சகாதேவன்}.
யுதிஷ்டிரன், “நம் உயிரினும் மேலான நமது அன்புக்குரிய மனைவி இவள். நம்மால் ஒரு தாயைப் போலப் பேணிக் காக்கப்படவோ அல்லது மூத்த சகோதரியைப் போலப் போற்றப்படவோ நிச்சயமாக இவள் தகுதியுடையவள். பெண்களுக்குரிய எவ்வகை வேலையையும் அறிந்திராதவளும், துருபதன் மகளுமான இந்தக் கிருஷ்ணை {திரௌபதி} என்ன அலுவலைச் செய்வாள்? மென்மையும், இளமையும் கொண்ட இவள், பெரும் புகழ் கொண்ட இளவரசியாயிற்றே. தனது தலைவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, மேம்பட்ட அறம் கொண்ட இவள் எப்படி வாழப்போகிறாள்? *இவள் {திரௌபதி} பிறந்ததில் இருந்து, மலர்மாலைகளையும், நறுமணப் பொருட்களையும், ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த உடுப்புகளையும் மட்டுமே அனுபவித்திருக்கிறாள்" என்றான் {யுதிஷ்டிரன்}.
அதற்குத் திரௌபதி, “பிறருக்குப் பணிவிடை செய்யப்புகுபவர்களான, சைரந்திரிகள் [3] என்று அழைக்கப்படும் ஒரு மனித {பெண்} வர்க்கம் இருக்கிறது. எனினும், (மரியாதைக்குரிய) மற்ற பெண்கள் அப்படிச் செய்வதில்லை. இந்த வர்க்கத்தில் சிலர் உள்ளனர். சிகை அலங்காரம் செய்வதில் திறமையான ஒரு சைரந்திரியாக [Sairindhri ; sairandhrī] {ஸைரந்த்ரி} என்னை நான் வெளிக்காட்டுவேன். ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, மன்னனால் {விராட மன்னனால்} கேட்கப்படும்போது, “யுதிஷ்டிரரின் இல்லத்தில் திரௌபதியின் பணிப்பெண்ணாக நான் பணிபுரிந்தேன்" என்று சொல்வேன். இப்படியே மாறுவேடத்தில் நான் எனது நாட்களைக் கழிப்பேன். மன்னனின் {விராட மன்னனின்} மனைவியான புகழ்பெற்ற சுதேஷ்ணைக்கு நான் பணிவிடை செய்வேன். என்னை அடைவதால், நிச்சயம் அவள் {சுதேஷ்னை} (முறையாக) என்னைக் காப்பாள். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இது போல வருந்தாதீர்!” என்று மறுமொழி கூறினாள் {திரௌபதி}.
[3] சைரந்திரி என்றால், "மற்றொருவரின் வீட்டில் முழு உரிமையுடன் {சுயேட்சையாக} வேலை செய்யும் பெண் கைவினைஞர்" என்று வில்சன் என்பவர் சொல்லியிருப்பதாகக் கங்குலி சொல்கிறார்.சைரந்திரிகள் பிறர் வீட்டில் வசித்துக் கொண்டு முழு உரிமையுடனும் கற்புடனும் அரச குல பெண்களுக்குத் தலை பின்னுதல், வினோதமான ஓவியங்கள் வரைதல் போன்ற வேலைகளைச் செய்பவர்கள் ஆவர்.
யுதிஷ்டிரன் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, நீ நன்றாகப் பேசுகிறாய். ஆனால், ஓ! அழகான பெண்ணே, நீ ஒரு மதிப்பு மிக்கக் குடும்பத்தில் பிறந்தவள். எப்போதும் அறநோன்புகள் நோற்று கற்புடன் உள்ள நீ பாவம் என்பது என்ன என்பதை அறிய மாட்டாய். எனவே, உன்னை வெறித்துப் பார்க்கும் பாவிகளின் தீய இதயம் மகிழ்வுறாத வழியில் நீ நடந்து கொள்ள வேண்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}.
*************************************************************************
*இவள் {திரௌபதி} பிறந்ததில் இருந்து,
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 169 - See more at: http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section169.html#
*************************************************************************
*இவள் {திரௌபதி} பிறந்ததில் இருந்து,
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 169 - See more at: http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section169.html#
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.