Dhaumya's advice! | Virata Parva - Section 4 | Mahabharata In Tamil
(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 4)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
தங்களது தேர்கள், தேரோட்டிகள், சமையற்கலைஞர்கள், பெண் பணியாட்கள் ஆகியோர் எங்குச் செல்ல வேண்டும் என்று யுதிஷ்டிரன் சொன்னது; வேறு மன்னனுடைய ஆளுகையின் கீழ் வாழப்போகும் பாண்டவர்களுக்குத் தௌமியர் சொன்ன அறிவுரை...
யுதிஷ்டிரன் {தன் தம்பிகளிடம்}, “நீங்கள் ஒவ்வொருவரும் செய்யப் போகும் அலுவல்களை ஏற்கனவே நீங்கள் சொல்லிவிட்டீர்கள். எனது அறிவுக்கேற்றவாறு நான் என்ன அலுவலைச் செய்யப் போகிறேன் என்பதை நானும் சொல்லிவிட்டேன். தேரோட்டிகள், சமையற்கலைஞர்களுடன் கூடிய நமது புரோகிதர் {தௌமியர்} துருபதனின் வசிப்பிடம் {பாஞ்சாலம்} சென்று, அங்கு நமது அக்னிஹோத்ர நெருப்புகளைப் பராமரிக்கட்டும். இந்திரசேனனும் பிறரும், வெறும் தேர்களுடன் துவாராவதிக்கு {துவாரகைக்கு} விரைந்து செல்லட்டும். இதுவே எனது விருப்பம். திரௌபதியின் பெண் பணியாட்கள், நமது தேரோட்டிகள் மற்றும் சமையற்கலைஞர்களுடன் பாஞ்சாலம் செல்லட்டும். அவர்கள் அனைவரும், “எங்களைத் துவைதவனத் தடாகத்தில் விட்டுவிட்டு, பாண்டவர்கள் எங்குச் சென்றார்கள் என்பது தெரியாது" என்று சொல்லட்டும்" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி ஒருவருக்கொருவர் ஆலோசித்து, ஒருவருக்கொருவர் தாங்கள் என்ன அலுவலைச் {வேலையைச்} செய்யப் போகிறோம் என்று சொல்லிக்கொண்ட பாண்டவர்கள், தௌமியரின் அறிவுரையைக் கேட்டு நின்றனர். பின்வரும் வார்த்தைகளில் தனது அறிவுரையைச் சொன்னார் தௌமியர், “பாண்டுவின் மகன்களே, அந்தணர்கள், உங்கள் நண்பர்கள், தேர்கள், ஆயுதங்கள், (புனித) நெருப்புகள் ஆகியவை குறித்து நீங்கள் செய்திருக்கும் ஏற்பாடுகள் அருமை. ஆனால் ஓ! யுதிஷ்டிரா, குறிப்பாக நீயும் அர்ஜுனனும் திரௌபதியின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்வதே தகும். மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்களின் குணங்களைப் பற்றி நீ நன்கு அறிவாய். உனது ஞானம் எப்படிப்பட்டதாக இருப்பினும், நீ ஏற்கனவே அறிந்ததை, உன் மீது கொண்ட பாசத்தால், நண்பர்கள் திரும்பச் சொல்வது அனுமதிக்கப்படலாம். அறம், இன்பம் மற்றும் பொருளின் அழியாத {நித்திய} நலன்களுக்கு இதுவும் அடிபணிந்ததே {உதவிகரமானதே}. எனவே, நான் உன்னிடம் சிலவற்றைப் பேசுகிறேன். அவற்றைக் குறித்துக் கொள்.
ஒரு மன்னனுடன் வசிப்பதென்பது கடினமானது. இளவரசர்களே, அனைத்து தவறுகளையும் தவிர்த்து ஓர் அரசகுடும்பத்துடன் நீங்கள் எப்படி வசிக்கலாம் என்பதைச் சொல்கிறேன். கௌரவர்களே {பாண்டவர்களே}, உங்களை அறிந்தவர்களால் கண்டுபிடிக்கப்படாதபடி இந்த வருடத்தைக் கௌரவிக்கப்பட்டோ படாமலோ அம்மன்னனின் அரண்மனையில் நீங்கள் வாழ வேண்டியிருக்கிறது. பதினான்காவது {14} வருடத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இவ்வுலகில் அனைத்து உயிரினங்களையும் பேணி பாதுகாக்கும் தெய்வத்தின் வடிவில் இருக்கும் மன்னன், மந்திரங்கள் அனைத்தையும் [1] கொண்டு சுத்திகரிக்கப்பட்ட நெருப்பைப் போன்று மேன்மைமிக்கவன். வாயிலில் அனுமதி பெற்ற பின்னரே, ஒருவன் மன்னன் முன்னிலைக்குச் செல்ல வேண்டும். அரச ரகசியங்களுடன் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது. அதே போல மற்றொருவர் விரும்பும் ஆசனத்தின் மீது ஆசை கொள்ளக்கூடாது.
[1] "சில வங்காள உரைகளில் சர்வமந்திரமயம் {Sarvamantramaya} என்பதற்குப் பதில் சர்வாஸ்திரமயம்{Sarvastramaya} என்று இருக்கிறது. சர்வாஸ்திரமயம் {Sarvastramaya} தவறானது என்பது தெளிவு" என்கிறார் கங்குலி.
தன்னைத் தானே {மன்னனுக்குப்} பிடித்தமானவன் என்று கருதிக்கொண்டு, (மன்னனுடைய) தேர், மூடுவண்டி, ஆசனம், வாகனம், யானை ஆகியவற்றை ஆக்கிரமிக்காதவன் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிக்கத் தகுதி வாய்ந்தவனாவான். தீங்கிழைப்பவர்களின் மனங்களில், இது எச்சரிக்கையை எழுப்பும் என்று கணக்கிடப்பட்ட ஒரு தொழிலின் ஆசனத்தை ஆக்கிரமிக்காதிருப்பவன் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிக்கத் தகுதி வாய்ந்தவனாவான். கேட்கப்படாத போது யாரும் (மன்னனுக்கு) ஆலோசனை வழங்கக்கூடாது. வாயாடிகள் மற்றும் அவமரியாதை செய்யும் ஆலோசகர்கள் மீது மன்னர்கள் வெறுப்படைவார்கள். ஆதலால், குறித்த காலத்தில் மன்னனுக்கு மரியாதை செலுத்தும் ஒருவன் அமைதியாகவும் மரியாதையுடனும் மன்னனின் அருகில் அமர வேண்டும். {பொய் பேசுகிறவர்களிடத்தில் அரசர்கள் அன்பு வைக்கமாட்டார்கள். பொய் சொல்லுகிற மந்திரியை அரசர்கள் அவமதிப்பார்கள்}.
ஞானமுள்ள மனிதன், மன்னனின் மனைவியிடமோ, அந்தப்புரவாசிகளிடமோ, அரச கோபத்துக்கு ஆட்பட்டவர்களிடமோ நட்பு கொள்ளக்கூடாது. மன்னன் சம்பந்தப்பட்ட சிறு காரியத்தைச் செய்தாலும், அதை மன்னனைக் கேட்டே {கேட்ட பிறகே} செய்ய வேண்டும். ஓர் அரசாங்கத்தில் இப்படி நடந்து கொள்பவனுக்குத் தீங்கு நேராது. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {யுதிஷ்டிரா}, தங்கள் மகன்களோ, பேரர்களோ, சகோதரர்களோ கூடத் தங்கள் கண்ணியத்தைச் சிதைக்கும் வகையில் நடந்து கொண்டால், மனிதர்களை ஆள்பவர்கள் {மன்னர்கள்} அவர்களை மன்னிப்பதில்லை. எனவே, ஒருவன் உயர்ந்த அலுவலை {பதவியை} அடைந்தாலும் கூட, தன்னைக் கேட்டுக் கொள்ளாத வரையிலோ, தனக்குக் கட்டளை கிடைக்காத வரையிலோ, மன்னனின் கண்ணியத்தை {dignity} கருத்தில் கொண்டு, தன்னைப் பிறவிக் குருடனாகக் கருதிக் கொள்ள வேண்டும்.
அக்னியைப் போன்றோ பிற தேவனைப் போன்றோ ஒரு மன்னனை கவனத்துடன் சேவிக்கவேண்டும்; அரசாங்கத்தின் மீது பற்றற்ற {விசுவாசமற்ற} வகையில் செயல்படும் ஒருவன், அவனால் {மன்னனால்} நிச்சயமாக அழிக்கப்படுகிறான். கோபம், கர்வம், கவனக்குறைவு ஆகியவற்றைக் கைவிட்டு, ஏகாதிபதியால் {மன்னனால்} சுட்டப்பட்ட வழியில் தொடர்ந்து செல்வதே ஒருவனுக்குத் தகும். கவனமாக அனைத்து காரியங்களையும் ஆலோசித்த பின்னரே, இலாபகரமானவை, இனிமையானவை ஆகிய இரண்டு தலைப்புகளையும் {அந்த இரண்டு தன்மை கொண்ட செய்திகளை மட்டும்} ஒருவன் மன்னனின் முன்னிலையில் முன் வைக்க வேண்டும்; ஆனால் ஒரு பொருள் இனிமையற்றதாக இருப்பினும் இலாபகரமானதாக இருந்தால், அதற்கு {மன்னனிடம்} ஏற்புடைத்தன்மை இல்லையாயினும், அதை ஒருவன் சொல்ல வேண்டும். “நான் மன்னனால் விரும்பப்படவில்லை" என்று எப்போதும் நினைத்து, ஒருவன், தனது கவனக்குறைவை களைந்து, அவனுக்கு {மன்னனுக்கு} ஏற்புடைய, பயனுடையவற்றைக் கொண்டு வருவதில் நோக்கம் கொள்ள வேண்டும்.
தனது நிலையில் {இடத்தில்} இருந்து மாறாதிருப்பவனும், மன்னனின் எதிரிகளிடம் நட்பு கொள்ளாதவனும், மன்னனுக்குத் தீங்கிழைக்காதவனும் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிக்கும் தகுதி படைத்தவர்களாவர். {மன்னனின்} பின்புறம் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களுக்கு நியமிக்கப்பட்டிருப்பதாலும், அவனுக்கு முன் புறத்தில் அமர்வது தடை செய்யப்பட்டுள்ளதாலும், ஒரு கற்ற மனிதன், மன்னனுக்கு வலது புறத்திலோ இடது புறத்திலோ அமர வேண்டும். ஒரு மன்னன் (தனது ஊழியர்களைப் பொறுத்த மட்டில்) எதிலும் ஈடுபடாத போது, ஆவலால் உந்தப்பட்டு, பிறருக்கு முன்பாக யாரும் அவனது {மன்னனின்} முன்னிலைக்கு வலிந்து முன் செல்லாதிருக்கட்டும். ஏனெனில், பாதிக்கப்பட்ட ஏழையாக இருப்பினும், இத்தகு நடத்தை மன்னிக்கக்கூடாததாக இருக்கும் [2].
[2] “இது மிகக் கடினமான சுலோகமாக உள்ளது. நீலகண்டர் சஞ்சயேத் {Sanjayet} என்ற படிப்பதைக் கைக்கொள்கிறார். வங்கப் பதிப்புகள் சஞ்சபேத் {Sanjapet} என்று சொல்கின்றன. பின்னது {Sanjapet} சரியான வாசிப்பாக இருக்குமானால், அதன் பொருள், “ஒரு மன்னனின் முன்னிலையில் என்ன நடக்கிறது என்பதை யாரும் பேசாதிருக்கட்டும். ஏனெனில், ஏழைகள் கூட இதைப் பெரும் தவறாகக் கருதுகின்றனர்" என்று எடுத்துக் கொள்ளலாம். மன்னனைக் குறித்த எதையும் காணும் ஒருவன் அதைப் பகிரங்கப்படுத்தக்கூடாது என்ற உணர்வு தெளிவாக உள்ளது. சக்தியற்றவர்கள் கூட, தங்களைக் குறித்த இத்தகு பகிரங்கப்படுத்தலை, தங்களுக்கு நேர்ந்த அவமானமாகக் கருதுகின்றனர். எனவே, இது மன்னிக்க முடியாததாகும் என்றும் கொள்ளலாம்" என்கிறார் கங்குலி.
மன்னன் தனது பொய்யுரைகள் புகார் செய்யப்பட்டால் பகைமை கொள்கிறான்; எனவே, மன்னன் உரைக்கும் எந்தப் பொய்யையும் மற்றவர்களுக்கு எந்த மனிதனும் வெளிப்படுத்துவது தகாது. தன்னைத் தானே கற்றவன் என்று நினைத்துக் கொள்பவர்களையும் மன்னர்கள் அவமதிக்கிறார்கள். “நான் வீரன், நான் புத்திசாலி" என்று எந்த மனிதனும் பெருமையாக நினைக்கலாகாது. ஆனால் மன்னனின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளும் ஒருவன், மன்னனின் நற்கருணைகளையும், வாழ்வின் நல்ல காரியங்களையும் அனுபவிக்கிறான்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஏற்புடைய பொருட்களை அடைந்தாலும், அடைவதற்கு அரிதான செல்வத்தை அடைந்தாலும், ஒரு மனிதன் மன்னனுக்கு இனிமையானதையும், இலாபகரமானதையுமே எப்போதும் செய்ய வேண்டும். ஒருவனின் சினத்தால் தடையேற்படும் என்றும், அந்த ஒருவனின் உதவியால் பெரும் கனிகள் {பலன்கள்} கிடைக்கும் எனக் கருதப்படும்போது, ஞானிகளால் மதிக்கப்படும் எந்த மனிதன் அதில் குறும்புத்தனம் {mischief} செய்வான் {தவறிழைப்பான்}? மன்னனின் முன்னிலையில் எந்த மனிதனும் தனது உதடுகளையோ, கரங்களையோ, தொடைகளையோ அசைக்கக்கூடாது. மன்னனின் முன்னிலையில் ஒரு மனிதன் மெதுவாகவே பேசவோ, உமிழவோ {speak and spit} வேண்டும். நகைப்பிற்கிடமான பொருட்களின் முன்னிலையிலும், ஒரு மனிதன் பைத்தியக்காரனைப் போல உரத்த சிரிப்பை வெளிப்படுத்தக் கூடாது. முடிந்த வரை தன்னை அடக்கிக் கொண்டு, (காரணமற்ற) எந்த ஈர்ப்பையும் ஒருவன் ஈர்க்கக்கூடாது. தனது ஆர்வத்தைக் காட்ட ஒருவன் (அவனுக்கு {மன்னனுக்கு} முன்பாக) அடக்கமாகச் சிரிக்க வேண்டும். எப்போதும் மன்னனின் நலத்தை மனதில் கொண்டு, பாராட்டுக் கிடைக்கும்போது மகிழ்ச்சியும், அவமானம் நேரும்போது கீழ்மையும் அடையாமல் இருப்பவன் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிக்கத் தகுந்தவனாவான்.
மன்னனையும் அவனது மகனையும், {தனது} ஏற்புடைய {இனிமையான} பேச்சுகளால் எப்போதும் மகிழ்விக்கும், கற்ற அரசவை உறுப்பினனே அரசகுடும்பத்துக்குப் பிடித்தமானவனாக வசிப்பதில் வெற்றிப் பெறுகிறான். அற்ப காரணத்திற்காக அரச உதவியை இழந்த {மன்னனுக்கு {அ} அரச குடும்பத்துக்கு} பிடித்தமான அரசவை உறுப்பினன், மன்னனைக் குறித்துத் தீமையாய்ப் பேசாதிருந்தால், அவன் செழிப்பை மீண்டும் அடைவான். மன்னனுக்குப் பணிவிடை செய்பவனோ, அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழ்பவனோ, அறிவு நுட்பமுடையவனாக இருந்தால், மன்னன் இருக்கும்போதும், இல்லாத போதும் அவனைப் {மன்னனைப்} பாராட்டியே பேச வேண்டும். மன்னனின் மீது பலத்தைப் பிரயோகிப்பதன் {The courtier who attempts to obtain his end by employing force on the king} மூலம், ஓர் அரசவை உறுப்பினன் தனது முடிவை எட்டினால், அவனால் நீண்ட காலம் அவனது இடத்தில் இருக்க முடியாது. மேலும், அது மரண ஆபத்தையும் ஏற்படுத்தும். தன்னார்வத்தின் காரணமாக, யாரும், மன்னனின் எதிரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது [3]. அதே போலத் திறன்களிலும், திறமை தேவைப்படும் காரியங்களிலும், மன்னனுக்கு மேலாகத் தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளக்கூடாது.
[3] “வங்கப் பதிப்புகளில், இயந்திரத்தனமாக ராஜ்னா {Rajna} என்று உரைக்கப்படுகிறது. இதை, என்னிடமுள்ள ஒரு பண்டிதரின் கையெழுத்துப் பிரதியில் இலக்கணத்தின் ஆறாம் வேற்றுமை விதியின் படி கண்ட ராஜ்னாஸ் {Rajnas} என்பதை ஏற்றுப் படிக்கிறேன்" என்கிறார் கங்குலி.
எப்போதும் மகிழ்ச்சியுடனும், பலத்துடனும், வீரத்துடனும், உண்மையுடனும் {சத்தியத்துடனும்}, மென்மையுடனும், கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடனும், தனது தலைவனை {master – முதலாளி, எஜமான்} நிழல் போலப் பின்பற்றும் ஒருவன் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிக்கும் தகுதியுடையவன் ஆவான். மன்னனின் அரசாட்சிக்குள்ளோ, வெளியிலோ செய்யச் சொல்லி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பணியை அச்சமில்லாமல் மேற்கொள்பவன் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிப்பதற்குத் தகுதியுடையவன் ஆவான். தனது வீடல்லாமல் வெளியே வாழும் ஒருவன், தனது அன்புக்குரியவர்களை நினைவில் கொள்ளாமல், (எதிர்கால) மகிழ்ச்சியை எதிர்பார்த்து (தற்போதை) துன்பத்தை ஏற்பவன் மட்டுமே அரசகுடும்பத்துடன் வசிப்பதற்குத் தகுயுடையவன் ஆவான்.
ஒருவன் மன்னனைப் போல உடுத்தக்கூடாது; மன்னனின் முன்னிலையில் சிரிப்பில் ஈடுபடக் கூடாது; அரச ரகசியங்களை வெளியிடக்கூடாது. இப்படிச் செயல்பட்டால் ஒருவன் அரச ஆதரவை வெல்ல {பெற} முடியும். ஒரு பணியை நடைமுறைப்படுத்த சொல்லப்படும்போது, அதைச் செய்வதற்காக ஒருவன் கையூட்டைத் {இலஞ்சத்தைத்} தொட்டால் அவன் விலங்கிடப்படவோ, கொல்லப்படவோ நேரிடலாம். மன்னன் அளிக்க விரும்பும் ஆடைகள், ஆபரணங்கள், தேர்கள் மற்றும் இன்ன பிற பொருட்களே பயன்படுத்தப்பட வேண்டும். அதனால் அரச ஆதரவை ஒருவன் வெல்லலாம். குழந்தைகளே, பாண்டுவின் மகன்களே {பாண்டவர்களே}, உங்கள் மனதைக் கட்டுப்படுத்தி, இவ்வழியில் நடந்து, இந்த ஒரு வருடத்தைக் கழிப்பீர்களாக! பிறகு உங்கள் நாட்டை மீட்டு, நீங்கள் விரும்பியவாறு வாழலாம்" என்றார் {தௌமியர்}.
யுதிஷ்டிரன் {தௌமியரிடம்}, “உம்மால் நாங்கள் நன்கு கற்றுள்ளோம். நீர் அருளப்பட்டிரும். உம்மைத் தவிர, எங்கள் தாய் குந்தியோ, பெரும் ஞானம் கொண்ட விதுரரோ கூட எங்களுக்கு இப்படிச் சொல்ல முடியாது. இத்துயரில் இருந்து பாதுகாப்பாக வர எங்களை இயன்றவராக்குவதற்கும், எதிரிகளை நாங்கள் வெல்வதற்கும், இப்போது நாங்கள் புறப்படுவதற்கும் வேண்டிய அவசியமான அனைத்தையும் செய்வதே உமக்குத் தகும்" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி யுதிஷ்டிரன் சொன்னதும், அந்தணர்களில் சிறந்த தௌமியர், புறப்படும் வேளையில் விதிகளின் படி செய்யப்படும் சடங்கைச் செய்தார். அவர்களது நெருப்பை ஏற்றி, பாண்டவர்கள் செழிப்படையவும், வெல்லவும், மீண்டும் உலகனைத்தையும் வெல்லவும் மந்திரங்களின் மூலம் அவர் {தௌமியர்} காணிக்கை அளித்தார். பிறகு அந்த நெருப்புகளையும், துறவை செல்வமாகக் கொண்ட அந்தணர்களையும் வலம் வந்த அந்த ஆறுபேரும், *யக்ஞசேனியை {திரௌபதியை} முன்னிறுத்தி புறப்பட்டுச் சென்றனர். அந்த வீரர்கள் அப்படிப் புறப்பட்டுச் சென்ற போது, துறவிகளில் சிறந்த தௌமியர், அவர்களது புனித நெருப்புகளை எடுத்துக் கொண்டு பாஞ்சாலர்களிடத்திற்கு {பாஞ்சால நாட்டிற்கு} புறப்பட்டார். {தேரோட்டி} இந்திரசேனனும், முன்பே குறிப்பிடப்பட்ட பிறரும் யாதவர்களிடம் சென்றனர். பாண்டவர்களின் தேர்களையும், குதிரைகளையும் பார்த்துக் கொண்டு அவர்கள், மகிழ்ச்சியுடனும், தனியுரிமையுடனும் தங்கள் காலத்தைக் கடத்தினர்.
***************************************************************************
*யக்ஞசேனியை {திரௌபதியை}
திரௌபதி = துருபதன் மகள்
daughter of king Drupada = Draupadi
வேறு சில பெயர்கள்:
1. கிருஷ்ணை {கருப்பி / கருப்பானவள்}
2. பாஞ்சாலி {பாஞ்சால நாட்டின் இளவரசி}
3. யக்ஞசேனி {யக்ஞசேனன் {துருபதன்} மகள்}
***************************************************************************
*யக்ஞசேனியை {திரௌபதியை}
திரௌபதி = துருபதன் மகள்
துருபதா
|
D
|
R
|
U
|
P
|
A
|
D
|
A
|
திரௌபதி
|
D
|
RA
|
U
|
P
|
A
|
D
|
I
|
வேறு சில பெயர்கள்:
1. கிருஷ்ணை {கருப்பி / கருப்பானவள்}
2. பாஞ்சாலி {பாஞ்சால நாட்டின் இளவரசி}
3. யக்ஞசேனி {யக்ஞசேனன் {துருபதன்} மகள்}
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.