Draupadi was kicked! | Virata Parva - Section 16 | Mahabharata In Tamil
(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 3)
இப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : கீசகன் திரௌபதியிடம் காதல் மொழி பேசுவது; திரௌபதி கீசகனை நிந்திப்பது; ஓட எத்தனித்த திரௌபதியை கீசகன் பற்றுவது; கீசகனை திரௌபதி முட்டித் தள்ளி விட்டுச் சபை நோக்கி ஓடுவது; திரௌபதியைத் தொடர்ந்து வந்த கீசகன் அவளது தலைமுடியைப் பற்றிக் கீழே இழுத்துப் போட்டு எட்டி உதைப்பது; சூரியனால் பணிக்கப்பட்ட ராட்சசன் கீசகனைக் கீழே தள்ளுவது; கீசகன் மயங்கி விழுவது; இதைக் கண்ட பீமன் கோபம் கொள்வது; யுதிஷ்டிரன் பீமனை வெளியே அனுப்புவது; விராடனிடமும், யுதிஷ்டிரனிடமும் திரௌபதி நீதி கேட்பது; யுதிஷ்டிரன் திரௌபதியை சுதேஷ்ணையிடம் அனுப்புவது; சுதேஷ்ணை திரௌபதியைத் தேற்றுவது …
கீசகன் {திரௌபதியிடம்}, “ஓ! அழகிய சுருள் முனை கொண்ட தலைமுடி கொண்டவளே, உனக்கு நல்வரவு. கழிந்த இரவு எனக்கு ஒரு மங்கள நாளை கொண்டு வந்திருக்கிறது. ஏனெனில், நான் இன்று உன்னை எனது வீட்டின் தலைவியாகப் பெற்றிருக்கிறேன். எனக்கு ஏற்புடையதைச் செய்வாயாக. பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட தங்க ஆரங்கள், சங்குகள், தங்கத்தாலான காது வளையங்கள், அழகான மாணிக்கங்கள் மற்றும் கற்கள், பட்டாடைகள் மற்றும் மான் தோல்கள் உனக்குத் தரப்படட்டும். நான் உனக்காகச் சிறந்த மெத்தையையும் தயாரித்து வைத்திருக்கிறேன். வா, அதில் அமர்ந்து, மலரில் இருந்து பெறப்பட்ட தேனில் தயாரிக்கப்பட்ட மதுவை என்னுடன் சேர்ந்து பருகு” என்றான் {கீசகன்}.
இந்த வார்த்தைகளைக் கேட்ட திரௌபதி {கீசகனிடம்}, “மதுவைக் கொண்டு செல்வதற்காக இளவரசி {சுதேஷ்ணை} என்னை உன்னிடம் அனுப்பினாள். விரைந்து மதுவைக் கொண்டு வா, அவள் {சுதேஷ்ணை} மிகவும் தாகமாக இருப்பதாக என்னிடம் சொன்னாள்” என்றாள். அதற்குக் கீசகன் {திரௌபதியிடம்}, “ஓ! மென்மையான பெண்ணே, இளவரசி {சுதேஷ்ணை} வேண்டியதை மற்றவர்கள் கொண்டு செல்வார்கள்” என்று சொன்னான். இப்படிச் சொன்ன அந்தச் சூதனின் மகன் {கீசகன்}, திரௌபதியின் வலக்கரத்தைப் பற்றினான். திரௌபதி {கீசகனிடம்}, “புலன்களில் மயக்கத்தால் நான் ஒரு போதும், என் கணவர்களுக்கு மனதளவில் கூடத் துரோகமிழைத்ததில்லை. ஓ! பாதகனே {கீசகா}, அந்த உண்மையால் {சத்தியத்தால்}, நீ இழுக்கப்பட்டு, சக்தியற்றுத் தரையில் கிடப்பதை நான் காண்பேன்” என்றாள் {திரௌபதி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அகன்ற கண்கள் கொண்ட அந்தப் பெண் {திரௌபதி} தன்னை நிந்திப்பதைக் கண்ட கீசகன், அவள் {திரௌபதி} ஓடிப்போக எத்தனிக்கையில் தீடீரென அவளது மேலாடையின் நுனியைப் பற்றி அவளைப் {திரௌபதியைப்} பிடித்தான். பலவந்தமாகக் கீசகனால் பிடிக்கப்பட்ட அந்த அழகிய இளவரசி {திரௌபதி}, அதைத் தாங்க மாட்டாமல், கோபத்தால் தனது உடல் நடுங்க, விரைவாக மூச்சுவிட்டு, அவனைத் தரையில் முட்டித் தள்ளினாள். அப்படித் தரையில் முட்டித் தள்ளப்பட்ட அந்த இழிந்த பாவி வேர் அறுக்கப்பட்ட மரம் விழுவது போல விழுந்தான். கீசகன் தன்னைப் பற்றிய போது, அவனைத் தரையில் தள்ளிய அவள் {திரௌபதி}, பாதுகாப்பு பெறுவதற்காக, மன்னன் யுதிஷ்டிரன் இருந்த சபைக்கு நடுங்கிக் கொண்டே விரைந்தாள். தனது வேகமனைத்தையும் திரட்டி ஓடிக்கொண்டிருந்த அவளைத் (தொடர்ந்து வந்த) கீசகன், அவளது தலைமுடியைப் பற்றி, தரையில் தள்ளி, மன்னன் பார்த்துக் கொண்டிருந்த போதே அவளை {திரௌபதியை} எட்டி உதைத்தான்.
அதன் பிறகு, திரௌபதியைப் பாதுகாப்பதற்காகச் சூரியனால் நியமிக்கப்பட்டிருந்த ராட்சசன், ஓ! பாரதா {ஜனமேஜயா}, காற்று போன்ற வலிமையுடன் அவனைத் {கீசகனைத்} தள்ளினான். ராட்சசனின் சக்திக்கு ஆட்பட்ட கீசகன், திகைத்துப் போய், வேரறுந்த மரம் போல உணர்வற்றுத் தரையில் விழுந்தான். கீசகன் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} காட்டிய சீற்றத்தைக் அங்கே அமர்ந்திருந்த யுதிஷ்டிரனும், பீமசேனனும் வெஞ்சினக் கண்களோடு கண்டனர். துன்மார்க்கனான கீசகனின் அழிவுக்கு வழிகோல விரும்பிய ஒப்பற்ற பீமன், கோபத்தில் தனது பற்களைக் கடித்தான். அவனது நெற்றி வியர்வையால் மூடியது, அதன் மேல் பயங்கரச் சுருக்கங்கள் தோன்றின. அவனது {பீமனின்} கண்களில் இருந்து புகை வெளிப்பட்டது; அவனது கண்ணிமைகள் அப்படியே நிலைத்து நின்றன. எதிரி வீரர்களைக் கொல்லும் அந்த வீரன் {பீமன்}, தன் நெற்றியைத் தனது கைகளால் அழுத்தினான். ஆத்திரத்தால் உந்தப்பட்ட அவன் {பீமன்}, {கீசகனைக் கொல்ல} வேகமாகக் கிளம்ப எத்தனித்தான். மன்னன் யுதிஷ்டிரன், தான் குறிப்பறிந்ததில் பயம் கொண்டு, அவனது {பீமனின்} கட்டைவிரலைப் பிடித்து அழுத்தி, பொறுத்துக் கொள்ளுமாறு பீமனைப் பணித்தான். மதங்கொண்ட யானை ஒரு பெரிய மரத்தைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்த பீமன், தனது அண்ணனால் {யுதிஷ்டிரனால்} இப்படித் தடுக்கப்பட்டான். பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, “ஓ சமையற்காரா, எரிபொருளுக்காக நீ சென்று மரங்களைத் தேடு. உனக்கு விறகுகள் தேவை என்றால், வெளியே சென்று மரங்களை வெட்டுவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.
அழுது கொண்டிருந்த அழகிய இடை கொண்ட திரௌபதி, சபையின் நுழைவாயிலை அணுகி, வாக்குறுதியால் கடமைக்குக் கட்டப்பட்டு, மாறுவேடத்தைக் கலைக்க விரும்பாது, துக்கத்துடன் இருக்கும் தன் தலைவர்களை, நெருப்பு போல எரியும் தனது கண்களால் கண்டு, மத்ஸ்யர்களின் மன்னனிடம் {விராடனிடம்} இந்த வார்த்தைகளைப் பேசினாள், “ஐயோ, யாருடைய எதிரிகள், தங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நான்கு நாடுகள் குறுக்கிட்டாலும் அமைதியாகத் தூங்க முடியாதோ, அத்தகையவர்களின் பெருமைமிக்க அன்புக்குரிய மனைவியை இன்று இந்தச் சூதனின் மகன் {கீசகன்} எட்டி உதைத்துவிட்டான். ஐயோ, அந்தணர்களுக்குத் தங்களை அர்ப்பணித்து, யார் எப்போது கேட்டாலும் பரிசு கொடுத்து, யாரிடமும் எந்தப் பொருளையும் பரிசாகக் கேட்காதவர்களின் பெருமைமிக்க அன்புக்குரிய மனைவியை இன்று இந்தச் சூதனின் மகன் {கீசகன்} எட்டி உதைத்துவிட்டான். ஐயோ, வில்லின் நாணொலிகளையும், பேரிகைகளின் ஒலிகளையும் இடைவிடாமல் தொடர்ந்து கேட்பவர்களின் பெருமைமிக்க அன்புக்குரிய மனைவியை இன்று இந்தச் சூதனின் மகன் {கீசகன்} எட்டி உதைத்துவிட்டான்.
ஐயோ, பெரும் சக்தியைக் கொண்டவர்களும், கொடையளிப்பதில் தாராளவாதிகளும், கண்ணியத்தில் பெருமை கொள்பவர்களும் ஆன அவர்களின் {என் கணவர்களின்} பெருமைமிக்க அன்புக்குரிய மனைவியை இன்று இந்தச் சூதனின் மகன் {கீசகன்} எட்டி உதைத்துவிட்டான். ஐயோ, கடமைகளில் கட்டப்பட்டுப் பணிபுரியவில்லையென்றால், யாரால் இந்த முழு உலகத்தையும் அழிக்க முடியுமோ, அத்தகையவர்களின் பெருமைமிக்க அன்புக்குரிய மனைவியை இன்று இந்தச் சூதனின் மகன் {கீசகன்} எட்டி உதைத்துவிட்டான்.
அந்தோ, மாறுவேடத்தில் வாழ்ந்துவந்தாலும், பாதுகாப்புக் கோரப்படும்போதெல்லாம், அதை வழங்கும் அந்த வலிமைமிக்க வீரர்கள் இன்று எங்கே போனார்கள்? பலமும் அளவிடமுடியாத சக்தியும் கொண்ட அந்த வீரர்கள், அன்புக்குரிய தங்கள் கற்புள்ள மனைவி ஒரு சூத மகனால் {கீசகனால்} அவமதிக்கப்படும்போதும், அண்ணகர்களைப் {அரவாணிகளைப்} போல ஏன் இன்று அமைதியாக இருக்கிறார்கள்? ஓ, தங்கள் மனைவி ஓர் இழிந்த பாவியால் அவமதிக்கப்படும்போது, அதை அமைதியாகத் தாங்கிக் கொள்ளும் அவர்களது பராக்கிரமம், சக்தி, சினம் ஆகிய அனைத்தும் எங்கே போயின?
ஓர் இழிந்த பாவி {கீசகன்}, அப்பாவியான எனக்கு அநீதியிழைக்கும்போது, அறம் குறைந்த விராடன், நிதானத்துக்கு இடம் கொடுக்கையில் (பலம் குறைந்த பெண்ணான) நான் என்ன செய்ய முடியும்? ஓ! மன்னா {விராடரே}, கீசகனிடம் நீர் மன்னர் போல நடந்து கொள்ளவில்லை. திருடனைப் போன்ற நடத்தை கொண்ட உம்மால் சபையில் ஒளிரமுடியவில்லை. ஓ! மத்ஸ்யரே {விராடரே}, உமது முன்னிலையிலேயே நான் இப்படி அவமதிக்கப்படுவது, பெரிதும் முறையற்றதாகும். ஓ! இங்கே இருக்கும் சபை உறுப்பினர்கள் அனைவரும் கீசகனின் இந்தப் பலவந்தத்தைக் கண்டார்கள். கீசகன் கடமையையும், அறநெறியையும் அறியாதிருக்கிறான். மத்ஸ்யனும் {விராடனும்} அவனுக்குச் சமமாக இருக்கிறான். இத்தகு மன்னனுக்குச் சேவை செய்யும் சபை உறுப்பினர்களும் அறம் குறைந்தவர்களே” என்றாள் {திரௌபதி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதையும், இதே போன்ற சொற்களையும் பேசிய அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, கண்ணீர் நிறைந்த கண்களுடன், மத்ஸ்யர்களின் மன்னனை {விராடனைக்} கடிந்து கொண்டாள். அவள் {திரௌபதி} சொன்னதைக் கேட்ட விராடன், “எங்கள் பார்வைக்கு அப்பாற்பட்ட உங்கள் பிரச்சனை என்னவென்று எனக்குத் தெரியாது. உண்மையான காரணத்தை அறியாது, நான் எவ்வாறு பாகுபாடு காட்ட முடியும்?” என்றான். பிறகு அனைத்தையும் அறிந்த சபை உறுப்பினர்கள், “நன்றாகச் சொன்னாய்!”, “நன்றாகச் சொன்னாய்” என்று கிருஷ்ணையைப் {திரௌபதியைப்} பாராட்டி, கீசகனை நிந்தித்தனர். அந்தச் சபை உறுப்பினர்கள், “அகன்ற கண்களும், அனைத்து உறுப்புகளிலும் அழகையும் கொண்ட இந்தப் பெண்ணை மனைவியாகக் கொண்டவன், அதிக மதிப்புக் கொண்ட ஒருத்தியையேப் பெற்றிருக்கிறான், எனவே அவன் வருத்தப்பட எந்தச் சந்தர்ப்பமும் இருக்காது. மேம்பட்ட அழகும், களங்கமற்ற முறையான உறுப்புகளும் கொண்ட இந்தக் காரிகை மனிதர்கள் மத்தியில் அரிதானவளாவாள். உண்மையில் இவள் எங்களுக்குத் தேவியைப் {பெண் தெய்வத்தைப்} போலத் தெரிகிறாள்” என்றனர் {அந்த சபை உறுப்பினர்கள்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “(இத்தகு சந்தர்ப்பத்தில்) அந்தச் சபை உறுப்பினர்கள் கிருஷ்ணையை {திரௌபதியைக்} கண்டு, பாராட்டிக் கொண்டிருந்தபோது, கவலையில் யுதிஷ்டிரனின் நெற்றி வேர்வையால் மூடப்பட்டது. தனது அன்புக்குரிய மனைவியான அந்த இளவரசியிடம் {திரௌபதியிடம்} அந்தக் குரு குலக் காளை {யுதிஷ்டிரன்}, “ஓ! சைரந்திரி, நீ இங்கே இருக்காதே; சுதேஷ்ணையின் அறைக்குச் செல். வீரர்களின் மனைவிகள், தங்கள் கணவர்களுக்காக, துக்கத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டும், தங்கள் தலைவர்களுக்கு ஊழியஞ்செய்யக் கடுமையாக உழைத்து, இறுதியாகத் தங்கள் கணவர்கள் செல்லும் பகுதிக்கே அவர்களும் போக வேண்டும். சூரியனைப் போன்ற பிரகாசமிக்க உனது கந்தர்வக் கணவர்கள், இவ்வளவுக்குப் பிறகும், உனது உதவிக்கு விரைந்து வராததால், இத்தருணத்தில் தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்த கருதவில்லை என நான் நினைக்கிறேன். ஓ! சைரந்திரி, மத்ஸ்யரின் சபையில் நடைபெறும் பகடை விளையாட்டுக்கு இடைஞ்சல் செய்தது மட்டுமல்லாமல், பொருட்களின் காலப்பொருத்தத்தையும் நீ அறியாதிருக்கிறாய். அதன் காரணமாகவே, நீ நடிகையைப் போல அழுகிறாய். ஓ! சைரந்திரி, செல். கந்தர்வர்கள் உனக்கு ஏற்புடையதைச் செய்வார்கள். உனது துன்பத்தை நிச்சயம் கண்டு, உனக்கு அநீதியிழைத்தவனின் உயிரை எடுப்பார்கள்” என்றான் {யுதிஷ்டிரன்}. இந்தச் சொற்களைக் கேட்ட சைரந்திரி {திரௌபதி}, “நான் யாருக்கு திருமணத்தால் இணைந்த மனைவியாக இருக்கிறேனோ, அவர்கள் மிகக் கருணை கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். அவர்களில் மூத்தவர் பகடைக்கு அடிமையானதினாலேயே, அவர்கள் அனைவரும் ஒடுக்குதலுக்கு ஆளாகின்றனர்” என்றாள் {சைரந்திரியான திரௌபதி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன அந்த அழகிய இடுப்புக் கொண்ட கிருஷ்ணை {திரௌபதி}, கலைந்த கேசத்துடன், கண்கள் சிவக்க சுதேஷ்ணையின் அறையை நோக்கி ஓடினாள். நீண்ட நேரம் அழுததன் விளைவாக, அவளது {திரௌபதியின்} முகம் மேகங்களில் இருந்து ஆகாயத்தில் வெளிப்பட்ட சந்திர வட்டிலைப் போல இருந்தது. அவளது நிலையைக் கண்ட சுதேஷ்ணை {திரௌபதியிடம்}, “ஓ! அழகிய பெண்ணே {மாலினி}, உன்னை யார் அவமதித்தது? ஓ! அழகிய காரிகையே, நீ ஏன் அழுகிறாய்? மென்மையானவளே, யார் உனக்குத் தீங்கிழைத்தது? யாரால் உனக்கு இந்தத் துயரம் ஏற்பட்டது?” எனக் கேட்டாள்.
இப்படிக் கேட்கப்பட்ட திரௌபதி {சுதேஷ்ணையிடம்}, “நான் உனக்காக மதுவைக் கொண்டு வரச் சென்றேன். தனிமையான காட்டுக்கு மத்தியில் இருப்பதைப் போல, சபையில், மன்னரின் {விராடரின்} முன்னிலையிலேயே கீசகன், என்னை அடித்தான்” என்றாள். இதைக் கேட்ட சுதேஷ்ணை {திரௌபதியிடம்}, “ஓ! அழகிய சுருள் முனை கொண்ட தலைமுடி கொண்டவளே, காமத்தால் வெறிக் கொண்ட கீசகன், அவனால் அடைய முடியாத உன்னை அவமதித்ததால், நீ விரும்பினால் அவனைக் கொல்லச் செய்கிறேன்” என்றாள். அதற்குத் திரௌபதி {சுதேஷ்ணையிடம்}, “அவன் {கீசகன்} யாருக்கு அநீதியிழைத்தானோ, அந்தப் பிறர் {கந்தர்வர்கள்} அவனைக் {கீசகனைக்} கொல்வார்கள். இன்றே அவன் {கீசகன்} யமனின் வசிப்பிடம் செல்வான் என்பது உறுதி என நான் நினைக்கிறேன்” என்றாள் {திரௌபதி}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.