Bhimasena, Why dost thou lie down as one dead? | Virata Parva - Section 17 | Mahabharata In Tamil
(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 4)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம்: சுதேஷ்ணையிடம் இருந்து விடைபெற்ற திரௌபதி, தனது இருப்பிடம் செல்வது; துன்பத்தில் இருந்த அவள் இரவில் எழுந்து, பீமன் இருந்த மடைப்பள்ளிக்குச் சென்றது; அங்கே தூங்கிக் கொண்டிருந்த பீமனை எழுப்பியது; திரௌபதி தன்னை எழுப்பிய காரணத்தைப் பீமன் கேட்பது …
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சூதனின் மகனால் {கீசகனால்} இப்படி அவமதிக்கப்பட்ட சிறப்புமிக்க இளவரசியான அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, விராடனுடைய தளபதியின் {கீசகனின்} அழிவை ஆவலோடு விரும்பி, தனது இருப்பிடத்திற்குச் சென்றாள். பிறகு, கரிய நிறமும், கொடியிடையும் கொண்ட அந்தத் துருபதன் மகள் {திரௌபதி}, தன்னை {முறைப்படி} சுத்தம் செய்து கொண்டாள். தனது உடலையும், ஆடைகளையும் நீரால் கழுவிய கிருஷ்ணை {திரௌபதி}, தனது வருத்தத்தை அகற்றும் வழிவகைகளை அழுது கொண்டே சிந்திக்கத் தொடங்கினாள். அவள் தனக்குள்ளேயே, "நான் என்ன செய்ய வேண்டும்? நான் எங்கே செல்வது? எனது நோக்கத்தை எப்படி நினைவேற்றுவது?" என்று நினைத்தாள். அப்படி அவள் {திரௌபதி} சிந்தித்துக் கொண்டிருந்த போதே, பீமனை நினைவு கூர்ந்த அவள், "எனது இதயத்தில் இருக்கும் நோக்கத்தை இன்று நிறைவேற்றக்கூடியவர், பீமரைத் தவிர வேறு எவரும் இல்லை" என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
பெரும் துயரத்தால் பாதிக்கப்பட்டவளும், வலிமைமிக்கப் பாதுகாவலர்களை {பாண்டவர்களைக்} கொண்டவளும், அகன்ற கண்களையுடையவளுமான புத்திசாலி கிருஷ்ணை {திரௌபதி}, இரவில் எழுந்து, தனது படுக்கையைவிட்டு அகன்று, தனது தலைவனைக் காண விரும்பி, பீமசேனன் இருக்கும் இடம் நோக்கி வேகமாகச் சென்றாள். அறிவுக்கூர்மை கொண்ட அந்தத் துருபதனின் மகள் {திரௌபதி}, "இன்று இதை (குற்றச்செயலை) இழைத்த பிறகும், எனது எதிரியான விராடப்படையின் இழிந்த தளபதி {கீசகன்} வாழ்கிறானே! எப்படி உம்மால் தூங்க முடிகிறது?" என்று சொல்லிக்கொண்டே தனது கணவன் இருக்கும் இடத்திற்குள் நுழைந்தாள்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சிம்மத்தைப் போலக் கடினமாக மூச்சுவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்த பீமன் இருந்த கூடம் {Chamber}, துருபதன் மகளின் {திரௌபதியின்} அழகால் நிறைந்து, உயர் ஆன்ம பீமனால் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. இனிய புன்னகை கொண்ட கிருஷ்ணை {திரௌபதி}, பீமசேனனை மடைப்பள்ளியில் {சமையலறையில் - in cooking apartment} கண்டு, காட்டில் வளர்ந்த மூன்று வயதுள்ள ஒரு பசு, தனது முதல் பருவகாலத்தில், வலிமைமிக்கக் காளையை அணுகுவது போலவோ, நீர்நிலைக்கு அருகே வாழும் பெண் கொக்கு இணைசேரும் காலத்தில் தனது துணையை அணுகுவது போலவோ அவனை {பீமனை} அணுகினாள்.
கோமதி நதிக்கரையில் பெரிதாக வளர்ந்திருக்கிற ஓர் ஆச்சா மரத்தை ஒரு கொடி அணைத்துக் கொள்வதைப் போல, பாஞ்சால இளவரசி {திரௌபதி} பாண்டுவின் இரண்டாவது மகனை {பீமனை} அணைத்துக் கொண்டாள். தனது கரங்களால் அவனை {பீமனை} அணைத்துக் கொண்ட களங்கமற்ற குணங்கள் கொண்ட கிருஷ்ணை {திரௌபதி}, பாதைகளற்ற வனத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் சிம்மத்தை எழுப்பும் பெண் சிங்கத்தைப் போல அவனை {பீமனை} எழுப்பினாள். வலிமைமிக்கத் தனது பெரும் இணையை அணைத்துக் கொள்ளும் பெண் யானையைப் போல, பீமசேனனை அணைத்துக் கொண்ட களங்கமற்ற பாஞ்சாலி, தந்தி வாத்தியத்தின் காந்தாரவொலி போன்ற இனிய குரலில் அவனிடம் {பீமனிடம்} பேசினாள். அவள் {திரௌபதி}, “எழும், எழும்! ஓ! பீமசேனரே, மரித்தவர் போல ஏன் கிடக்கிறீர்? இறக்காதவன், தனது மனைவியை அவமதித்த இழிந்த பாவி வாழ நிச்சயம் பொறுக்கமாட்டான்” என்றாள் {திரௌபதி}.
அந்த இளவரசியால் {திரௌபதியால்} எழுப்பப்பட்ட பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட பீமன், எழுந்திருந்து, அந்த ஆடம்பர படுக்கையில் விரிக்கப்பட்டிருந்து மெத்தையில் அமர்ந்தான். பிறகு அந்தக் குரு குலத்தவன் {பீமன்}, தனது அன்புக்குரிய மனைவியான அந்த இளவரசியிடம் {திரௌபதியிடம்}, “என்ன நோக்கத்திற்காக, நீ இவ்வளவு அவசரமாக இங்கே வந்தாய்? உனது நிறம் போய்விட்டதே {மங்கிவிட்டதே}. மெலிந்து வெளிறிப்போயல்லவா காணப்பப்படுகிறாய்! அனைத்தையும் விவரமாகச் சொல். மகிழ்ச்சிகரமானதோ, வலிநிறைந்ததோ, ஏற்புடையதோ, ஏற்பில்லாததோ, அஃது எதுவாக இருப்பினும் அனைத்தையும் என்னிடம் சொல். நான் உண்மையை அறிய வேண்டும். அனைத்தையும் கேட்ட பிறகு, நான் தீர்வை ஏற்படுத்துவேன். ஓ! கிருஷ்ணையே {திரௌபதியே}, நானே உன்னை அபாயத்தில் இருந்து மீண்டும் மீண்டும் காக்கிறேன். எனவே, அனைத்து வகையிலும் உனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் நானே. உனது விருப்பம் என்னவென்பதையும், நீ கருத்தில் கொண்டிருக்கும் நோக்கம் என்னவென்பதையும் என்னிடம் விரைவாகச் சொல்லி, பிறர் விழிக்கும் முன்னே உனது படுக்கைக்குத் திரும்பிச் செல்வாயாக” என்றான் {பீமன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.