“Slay thou Kichaka!” said Draupadi | Virata Parva - Section 21 | Mahabharata In Tamil
(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 8)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம்: பீமன் தனது சகோதரர்களை நிந்திக்க வேண்டாம் என்று திரௌபதியைக் கேட்டுக் கொண்டது; கீசகனால் எற்படும் துன்பங்களைத் திரௌபதி பீமனிடம் சொல்லி, அவனைக் கொல்லச் சொல்வது…
பீமன் {திரௌபதியிடம்} சொன்னான், “உனது இந்தக் கரங்கள் முன்பு சிவந்திருந்தன, இப்போதோ அவற்றில் ஆணித்தழும்புகள் பரவியிருக்கின்றன. எனது கரங்களின் வலிமைக்கு இகழ்ச்சி; பல்குனனின் {அர்ஜுனனின்} காண்டீவத்துக்கு இகழ்ச்சி. விராடனின் அவையில் நானொரு படுகொலையைச் செய்திருப்பேன், (ஆனால் அதைத் தடுக்கும் வண்ணம்) குந்தியின் மகன் {யுதிஷ்டிரர்} வலிமைமிக்க யானையைப் போல என்னைப் பார்த்தார். இல்லையெனில் அரசு அதிகாரம் கொடுத்திருக்கும் கர்வத்தால் போதையிலிருக்கும் கீசகனின் தலையைச் சந்தடியில்லாமல் நசுக்கியிருப்பேன்.
ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, கீசகனால் நீ உதைக்கப்பட்டதை நான் கண்ட அந்தச் சமயத்தில் மத்ஸ்யர்கள் அனைவரையும் மொத்தமாகப் படுகொலை செய்ய நினைத்தேன். எனினும் யுதிஷ்டிரர் தனது பார்வையால் என்னைத் தடுத்துவிட்டார். ஓ! அழகிய பெண்ணே {திரௌபதி}, அவரது {யுதிஷ்டிரனின்} நோக்கத்தைப் புரிந்து கொண்ட நான் அமைதியடைந்தேன். நாம் நாட்டை இழந்திருக்கிறோம், நான் இன்னும் குருக்களைக் கொல்லவில்லை. கர்ணன், சுயோதனன் {துரியோதனன்}, சுபலனின் மகன் சகுனி, தீய துச்சாசனன் ஆகியோரின் தலைகளை நான் இன்னும் எடுக்கவில்லை. ஓ! பெண்ணே {திரௌபதி}, இந்தச் செயல்களும், விடுபட்ட செயல்களும் எனது ஒவ்வொரு அங்கத்தையும் எரித்துக் கொண்டிருக்கின்றன. எனது இதயத்தில் பதிந்த எறிவேலாக இந்த எண்ணம் இருப்பதாக நான் கருதுகிறேன். ஓ! அழகிய இடைகள் கொண்டவளே {திரௌபதி}, அறத்தைத் துறக்காதே. ஓ! உன்னத இதயம் படைத்த பெண்ணே {திரௌபதி}, உனது கோபத்தை அடக்கு. இதுபோன்ற உனது கடிந்துரைகளை மன்னர் யுதிஷ்டிரர் கேட்டால், நிச்சயம் தனது உயிருக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துக் கொள்வார். நீ இப்படிப் பேசுவதை, தனஞ்சயனோ {அர்ஜுனனோ}, இரட்டையரோ {நகுல சகாதேவனோ} கேட்டால், அவர்களும் தங்கள் உயிரைத் துறப்பார்கள். ஓ! கொடியிடை கொண்ட பெண்ணே {திரௌபதி}, அவர்கள் தங்கள் உயிரை விட்டால், என்னால் எனது உயிரைத் தாங்கிக் கொள்ள இயலாது.
பழங்காலத்தில் சர்யாதியின் மகளான அழகிய சுகன்யை, தவத்திலும் தியானத்திலும் ஈடுபட்டு சியவனரைச் சுற்றி எறும்புகள் புற்றைக் கட்டிய போதும், மனதை முழுமையாகக் கட்டுப்படுத்தியிருந்த அந்தப் பிருகு குலத்தவரைக் காட்டில் தொடர்ந்து சென்றாள். அழகில் நாராயணியைப் போன்ற இருந்த இந்திரசேனை {நளாயனி} ஆயிரம் வயது கொண்ட தனது கணவரைத் தொடர்ந்து சென்றாள் என்பதைக் கேள்விப்பட்டிருப்பாய். விதேக இளவரசியும், ஜனகனின் மகளுமான சீதை தனது தலைவனை {ராமனைப்} பின்பற்றிச் சென்று அடர்ந்த காட்டில் வாழ்ந்தாள் என்பதை நீ கேள்விப்பட்டிருப்பாய். அந்த அழகிய இடைகொண்ட பெண்ணான ராமனின் அன்புக்குரிய மனைவி {சீதை} துயரங்களால் பீடிக்கப்பட்டு, ராட்சசர்களால் துன்புறுத்தப்பட்டு நீண்ட காலத்திற்குப் பிறகே ராமனை அடைந்தாள். ஓ! அச்சமுள்ளவளே {திரௌபதி}, இளமையும் அழகும் கொண்ட லோபாமுத்திரை மனிதர்களால் அடையத்தக்க அனைத்து இன்பநுகர் பொருட்களையும் துறந்து அகத்தியரைத் தொடர்ந்து சென்றாள். புத்திக்கூர்மையும், களங்கமற்ற குணமும் கொண்ட சாவித்ரி, தியுமத்சேனனின் மகனான வீரன் சத்யவானைத் தொடர்ந்து சென்று, யமனின் உலகத்திற்கே தனியாகச் சென்றாள். ஓ! அழகிய பெண்ணே {திரௌபதி}, இந்தக் கற்புடைய அழகிய பெண்களைப் போலவே நீயும் அனைத்து அறங்களிலும் மலர்ந்திருக்கிறாய் என்று நான் சொல்கிறேன். அளவிட்டால் பாதி மாதம் கூட இல்லாத இந்தக் குறுகிய காலத்தைக் கழித்துவிடு. பதிமூன்றாம் வருடம் முடிந்ததும், (மீண்டும்] நீ மன்னனின் பட்டத்தரசியாவாய்” என்றான் {பீமன்}.
இந்த வார்த்தைகளைக் கேட்ட திரௌபதி {பீமனிடம்}, “ஓ! பீமரே, என்னால் எனது துயரங்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துயரத்தின் காரணமாக மட்டுமே நான் இந்தக் கண்ணீரைச் சிந்தினேன். நான் யுதிஷ்டிரரை நிந்திக்கவில்லை. கடந்த காலத்திலேயே வசிப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஓ! வலிமை கொண்ட பீமரே, இந்த மணிநேரத்தின் வேலையை எதிர்கொள்ள விரைந்து வாரும். ஓ! பீமரே, மன்னன் {விராடன்} என்னிடம் மயங்கிவிடக்கூடாது என்று {நினைத்துக் கொண்டு}, எனது அழகில் பொறாமை கொண்டுள்ள கைகேயி {சுதேஷ்ணை} எடுக்கும் முயற்சிகள் எனக்கு எப்போதும் வலியைத் தருகின்றன. அவளது நிலையைப் புரிந்து கொண்ட தீய ஆன்மா கொண்ட முறைகேடனான கீசகன் விடாமல் என்னிடம் கோரிக்கை வைத்துக் கொண்டேயிருக்கிறான்.
இதனால் அவனிடம் கோபமடைந்த நான் எனது கோபத்தை அடக்கிக் கொண்டு, காமத்தால் புத்தியிழந்த அந்த இழிந்தவனிடம், “ஓ! கீசகா, உன்னைப் பாதுகாத்துக் கொள். நான் ஐந்து கந்தர்வர்களின் மனைவியும், அவர்களின் அன்புக்குரிய ராணியுமாவேன். அந்த வீரர்கள் கோபமடைந்தால், தீயவனான உன்னைக் கொன்று போடுவார்கள்” என்று பதிலளித்தேன். இப்படிச் சொல்லப்பட்ட தீய ஆன்மாகக் கொண்ட கீசகன், என்னிடம், “ஓ! இனிய புன்னகை கொண்ட சைரந்திரி {மாலினி}, கந்தர்வர்களிடம் எனக்கு எந்தப் பயமும் கிடையாது. போர்க்களத்தில் அவர்களுடன் மோதும் நான் ஒரு லட்சம் கந்தர்வர்களைக் கூடக் கொல்வேன். எனவே, ஓ! அச்சமுள்ளவளே, நீ ஒப்புதல் அளிப்பாயாக!” என்று மறுமொழி கூறினான் {கீசகன்].
இவை யாவற்றையும் கேட்ட நான் காமத்தால் பீடிக்கப்பட்ட அந்தச்சூதனிடம் {கீசகனிடம்} மீண்டும், “ஒப்பற்ற அந்தக் கந்தர்வர்களுக்கு நீ {திறனில்} தகுந்தவன் கிடையாது. மரியாதைக்குரிய நல்ல நிலையில் இருக்கும் நான், எப்போதும் அறத்தைக் கடைப்பிடிப்பவளாவேன். நான் யாருடைய மரணத்தையும் விரும்புவதில்லை. இதற்காகவே நான் உன்னைப் பொறுத்துக் கொள்கிறேன்” என்றேன். அதற்கு அந்தத் தீய ஆன்மா கொண்ட பாதகன் {கீசகன்} சத்தம்போட்டு வெடித்துச் சிரித்தான். இதற்கெல்லாம் முன்பே, தன் சகோதரனிடம் பாசம் கொண்ட கைகேயி {சுதேஷ்ணை} என்னிடம், “ஓ! சைரந்திரி, கீசகனிடத்தில் இருந்து மதுவைக் கொண்டு வா” என்று சொல்லி என்னை அவனிடத்திற்கு அனுப்பி வைத்தாள். என்னைக் கண்ட அந்தச் சூதனின் மகன் {கீசகன்}, முதலில் என்னிடம் இனிமையான சொற்களில் பேசினான். தோல்வியுற்றபிறகு, மிகவும் கோபமடைந்து, வன்முறையைக் கைக்கொண்டான்.
தீய கீசகனின் நோக்கத்தை அறிந்த நான், விரைந்து மன்னர் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக வந்தேன். என்னைத் தரையில் வீழ்த்திய அந்த இழிந்தவன், மன்னன்{விராடனின்} முன்னிலையிலும், கங்கரின் {யுதிஷ்டிரரின்} கண்களுக்கு முன்பும், தேரோட்டிகள், அரசனுக்குப் பிடித்தமானவர்கள், யானைப் பாகன்கள், குடிமக்கள், இன்னும் பிறர் முன்பும் என்னை எட்டி உதைத்தான். நான் மன்னனையும், கங்கரையும் நிந்தித்தேன். எனினும் மன்னன் {விராடன்}, கீசகனைத் தடுக்கவோ, தண்டிக்கவோ இல்லை. போரில் விராட மன்னனுக்கு முக்கியக் கூட்டாளியும், அறமற்றவனுமான அந்தத் தீய கீசகன், மன்னன் மற்றும் ராணி ஆகிய இருவருக்கும் அன்புக்குரியவனாக இருக்கிறான். ஓ! மேன்மையானவரே {பீமரே}, துணிச்சல், கர்வம், ஒழுக்கங்கெட்டத்தனம் {விபச்சாரம்}, அனைத்து இன்ப நுகர் பொருட்களிலும் மூழ்குதல் ஆகிய குணங்களைக் கொண்ட அவன் {கீசகன்}, (மன்னனிடம் இருந்து) பெரும் செல்வத்தை ஈட்டியும் கூட, பிறர் துயரத்தால் அழுதாலும் கூட அவர்களின் உடைமைகளைத் திருடிச் செல்கிறான்.
அவன் எப்போதும் அறத்தின் பாதையில் நடப்பதில்லை. எந்த ஓர் அறச்செயலையும் அவன் செய்தது கிடையாது. தீய ஆன்மாவும், தீய மனநிலையும், கர்வமும், வில்லத்தனமும், எப்போதும் காமனின் கணைகளால் பீடிக்கப்பட்டவனுமான அவனை {கீசகனை} மீண்டும் மீண்டும் தடுத்து விரட்டி விட்டாலும், மீண்டும் அவன் {கீசகன்} என்னைப் பார்த்தால், என்னிடம் சீற்றமடைவான். அப்போது நிச்சயம் நான் எனது உயிரை விட்டுவிடுவேன். அறத்தை அடைய முயன்றாலும் (எனது மரணத்தால்) உங்கள் உயர்தகுதி கொண்ட செயல்கள் அனைத்துப் பலனற்றுப் போகும். இப்போது உங்கள் வாக்குறுதிக்குப் பணிந்து நடக்கும் நீங்கள், உங்கள் மனைவியை இழக்க நேரிடும். ஒருவனது மனைவியைக் காப்பதால், ஒருவன் தனது வாரிசுகளைக் காக்கிறான். வாரிசுகள் காக்கப்படுவதால் ஒருவன் தன்னையே காத்துக் கொள்கிறான். ஒருவன் தன்னையே தன் மனைவியிடம் பெற்றுக் கொள்வதால்தான் மனைவி ஜெயா [1] என்று அழைக்கப்படுகிறாள். “எனது கருவறையில் அவர் எப்படிப் பிறவியை அடைவார்?” என்று நினைத்து ஒரு மனைவியும் தனது கணவனைக் காக்க வேண்டும்.
[1] இங்கு, “ஜெயதே அஸ்யாஸ் {Jayate asyas} என்றால் “எவளிடம் இருந்து பிறந்தானோ அவள்” என்ற பொருள் வரும்” என்கிறார் கங்குலி
பல்வேறு பிரிவினரின் கடமைகளை விரித்துச் சொல்லும் அந்தணர்கள், க்ஷத்திரியர்களுக்குக் கடமை எதிரிகளை அடக்குவது என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். ஐயோ, கீசகன் நீதிமானான யுதிஷ்டிரர் முன்னிலையிலும், பெரும் பலமிக்கப் பீமசேனரான உமது முன்னிலையிலும் என்னை உதைத்தானே. ஓ! பீமரே, பயங்கரமான ஜடாசுரனிடம் இருந்து நீரே என்னைக் காத்தீர். உமது சகோதரர்களுடன் சேர்ந்து நீரே ஜெயத்ரதனை வீழ்த்தினீர். இப்போது என்னை அவமதித்த இந்தப் பாவியைக் கொல்லும். மன்னனுக்கு {விராடனுக்கு} பிடித்தமானவனாகத் தன்னை ஊகித்துக் கொள்ளும் கீசகன், ஓ! பாரதரே {பீமரே}, எனது துயரத்தையே மேம்படுத்தியிருக்கிறான். எனவே, மண் குடத்தைத் தரையில் மோதி உடைப்பது போல இந்தக் காமாந்தகப் பாதகனை நொறுக்கும். ஓ! பாரதரே {பீமரே}, எனது துயரங்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் அவன் {கீசகன்} மேல் நாளைய சூரியக் கதிர் படுமேயானால், நான் நிச்சயம் (எந்தப் பானத்திலாவது) நஞ்சைக் கலந்து குடித்துவிடுவேன். என்னால் கீசகனை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஓ! பீமரே, அதற்குப் பதில் நான் உம் முன்னிலையில் இறந்து போவதே சிறந்தது” என்றாள் {திரௌபதி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன கிருஷ்ணை {திரௌபதி}, பீமனின் மார்பில் தனது முகத்தை மறைத்துக் கொண்டு அழத்தொடங்கினாள். பிறகு பீமன் அவளை அணைத்துக் கொண்டு, தனது சக்திக்குத் தக்க அவளுக்குச் சமாதானம் கூறினான். துருபதன் மகளான அந்தக் கொடியிடையாளுக்கு {திரௌபதிக்கு}, கடும் வார்த்தைகளின் மூலம் பெரும் ஆறுதல் அளித்த அவன் {பீமன்}, தனது கரங்களைக் கொண்டு, அவளது முகத்தில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்தான். கீசகனைக் குறித்து நினைத்துக் கொண்டே, கடைவாய் ஓரத்தை நக்கிய கோபம் கொண்ட பீமன் அந்தப் பெண்ணிடம் {திரௌபதியிடம்} பேசத் தொடங்கினான்.” {என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.