Bhima wept seeing his wife! | Virata Parva - Section 20 | Mahabharata In Tamil
(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 7)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம்: திரௌபதி பீமனிடம் தனது துயர் நிறைந்த நிலையை எடுத்துரைப்பது; அரசியான தான் அடிமை நிலையை அடைந்து கீழானவர்களுக்குச் சேவகம் செய்யும் நிலை வந்ததை எடுத்துரைப்பது; தனது மனைவியின் தழும்பேறிய கரங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு பீமன் அழுவது…
திரௌபதி {பீமனிடம்} சொன்னாள், “ஐயோ, அந்த வெறிகொண்ட சூதாடியின் {யுதிஷ்டிரரின்} நிமித்தமாக, சைரந்திரி என்ற ஒரு வேடத்தில் அரண்மனையில் வாழ்ந்து கொண்டு, இப்போது, சுதேஷ்ணையின் கட்டளைக்குக் கீழ் {அடிமையாக} இருக்கிறேனே. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {பீமரே}, ஓர் இளவரசியான நான் இப்போது அடைந்திருக்கும் சோகம் நிறைந்த கசப்பான நிலையைப் பாரும். குறித்த இந்தக் காலம் முடிவதை எதிர்பார்த்து நான் வாழ்ந்து வருகிறேன் [1]. எனவே, அதீத துயரம் என்னுடையதே {எனக்கே}.
[1] “காலத்தைத் தன்னுடன் நிலையான ஒன்றாக இருக்க வைக்க இயன்றவளானாலும், தனது நாட்களை இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்க முடியாமல், துயரத்தின் விளைவால், காலம் விரைவாகக் கடக்க வேண்டும் என்று விரும்பும் கட்டாய நிலையில் தான் இருப்பதாகத் திரௌபதி இங்குச் சொல்ல வருகிறாள்” என்று கங்குலி சொல்கிறார்.
மனிதர்களைப் பொறுத்தவரை நோக்கம் நிறைவேறுவது, வெற்றி, தோல்வி ஆகியன தோன்றி மறைவனவாகும் {நிலையற்றனவாகும்}. இந்த நம்பிக்கையின் காரணமாகவே, எனது கணவர்களின் செழுமை திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் நான் வாழ்ந்து வருகிறேன். செழுமையும், வறுமையும் சக்கரத்தைப் போலச் சுழல்கின்றன. இந்த நம்பிக்கையின் காரணமாகவே, எனது கணவர்களின் செழுமை திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் நான் வாழ்ந்து வருகிறேன். வெற்றியைக் கொண்டு வரும் அதே காரணமே தோல்வியையும் கொண்டு வரலாம். நான் இந்த நம்பிக்கையில்தான் வாழ்கிறேன். {அப்படியிருக்கும்போது}, ஓ! பீமசேனரே, நீர் ஏன் இறந்தவளாக என்னைக் கருதக்கூடாது? தானமளித்த மனிதர்கள் பிச்சையெடுத்ததையும், கொல்பவர்கள் கொல்லப்படுவதையும், பிறரை வீழ்த்துபவர்கள், எதிரிகளால் வீழ்ந்து போவதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். விதிக்கு எதுவும் கடினமானது அல்ல. எவராலும் விதியை வெல்ல முடியாது. இதன் காரணமாகவே நான் சாதகமான நற்பேறு திரும்புவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். காய்ந்த குளம் மீண்டும் நிறையும்; எனவே, சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்துச் செழுமை திரும்பும் என நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.
நன்றாக இருக்கும் ஒருவனின் தொழில் கலங்கிப் போவதைக் {அழிந்து போவதைக்} கண்டு வருவதால், எப்போதும் ஒரு விவேகி நற்பேறை மீண்டும் கொண்டுவர போராடக்கூடாது. {நன்றாக முயற்சி செய்தாலும், தெய்வத்தால் தொழில் அழிக்கப்பட்டால், விவேகமுள்ளவன் தெய்வத்தின் அருளைப் பெற எப்போதும் முயற்சிக்க வேண்டும்}. நான் துயரத்தில் இருக்கிறேன். நான் பேசும் வார்த்தைகளின் நோக்கத்தை நீர் கேட்டாலும், கேட்காவிட்டாலும், நான் அனைத்தையும் உமக்குச் சொல்வேன். இத்தகு துயரத்தில் விழுந்த பிறகும், பாண்டு மகன்களின் ராணியான துருபதனின் மகளைத் தவிர {திரௌபதியான என்னைத் தவிர} வேறு யார் வாழ விரும்புவார்கள்? ஓ! எதிரிகளை நசுக்குபவரே {பீமரே}, எனவே, எனக்கு நேரிட்ட பெருந்துன்பம், உண்மையில், மொத்த குரு குலத்தையும், பாஞ்சாலர்களையும், பாண்டுவின் மகன்களையும் தான் சிறுமைப்படுத்தியுள்ளது.
மகிழ்ச்சிக்கான காரணங்களான - எண்ணிலடங்கா சகோதரர்களும், மாமனாரும், மகன்களும் சூழ்ந்தபடி இருந்தும், என்னைத்தவிர வேறு எந்தப் பெண் இத்தகு துயரத்தால் பீடிக்கப்படுவாள்? என் பிள்ளைப்பருவத்தில் நான் தத்ரிக்கு {பிரம்மனுக்கு} விருப்பமில்லாத பெருங்குற்றத்தை நிச்சயமாகச் செய்திருக்க வேண்டும். அதனால்தான், ஓ! பாரதக் குலத்தின் காளையே {பீமரே}, அவனுடைய {பிரம்மனுடைய} வெறுப்பால் நான் இத்தகு விளைவுகளைச் சந்திக்கிறேன். ஓ! பாண்டுவின் மகனே {பீமரே}, பெரும் துயரத்தில் கழிக்கப்பட்ட கானக வாழ்வு கூடக் கொடுக்காத மாற்றமான எனது தோல்நிறமிழப்பை நீர் குறித்துக் கொள்ளும்.
ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே, பீமரே}, முன்பு எனது மகிழ்ச்சி எப்படிப்பட்டது என்பதை நீர் அறிவீர். அப்படிப்பட்ட நான் கூட அடிமைத்தனத்தில் இப்போது மூழ்கிவிட்டேன். மிகுந்த மன உளைச்சல் அடைந்திருப்பதால், என்னால் ஓய்வைப் பெற {மன அமைதி காண} முடியவில்லை. வலிய கரங்கள் கொண்டவரும், பயங்கர வில்லாளியுமான பிருதையின் மகன் தனஞ்சயர் {குந்தியின் மகன் அர்ஜுனர்}, அணைந்த நெருப்பைப் போல இப்போது வாழ நேர்வதால், இவை அனைத்தும் விதியால் ஏற்பட்டதே என எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. உண்மையில், ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே, பீமரே}, (இவ்வுலகின்) உயிரினங்களின் விதியை மனிதர்கள் புரிந்து கொள்வது இயலாததாகும். எனவே, உங்களுடைய இந்த வீழ்ச்சி முன்யோசனையால் தவிர்க்கப்பட முடியாதது என்றே நான் நினைக்கிறேன்.
ஐயோ, இந்திரர்களை நிகர்த்த உங்கள் அனைவரின் வசதிகளைக் கவனித்து வந்த கற்புடைய, மேன்மையானவளே கூட {திரௌபதியான நானே கூட}, தன்னைவிட {என்னைவிட} தகுதியில் குறைந்தவர்களின் வசதிகளைக் கவனிக்கும் நிலையை அடைய நேரிட்டதே. ஓ! பாண்டவரே {பீமரே} எனது நிலைமையைப் பாரும். இதற்கு நான் தகுதியானவள் இல்லை {இது எனக்குத் தகுந்ததன்று}. நீங்கள் உயிரோடு இருந்தாலும், காலம் கொண்டு வந்த தலைகீழ் மாற்றத்தை இதோ பாரும். கடல் நுனிவரையுள்ள மொத்த பூமியையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தவள், சுதேஷ்ணையின் கட்டுப்பாட்டில், அவளுக்கு அஞ்சி இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறாள். முன்னும் பின்னும் தொடர்ந்து வரும் பணியாட்களைக் கொண்டிருந்தவள், ஐயோ, இப்போது சுதேஷ்ணைக்கு முன்னும் பின்னும் நடந்து கொண்டிருக்கிறாள்.
ஓ! கௌந்தேயரே {பீமரே}, இது தாங்க முடியாத எனது மற்றொரு துயரமாகும். ஓ! அதைக் கேளும். உமக்கு நன்மை விளையட்டும். குந்திக்கு அல்லாது, தனது பயன்பாட்டுக்குக் கூட வாசனைத் தைலங்களைச் அரைக்காதவள், இப்போது, (பிறருக்காக) சந்தனத்தை அரைத்துக் கொண்டிருக்கிறாள். எனது இந்தக் கரங்களைப் பாரும். அவை இதற்கு முன்னர் இப்படி இருந்ததில்லை.” என்று சொல்லியவள் {திரௌபதி} ஆணிகளால் தன் கரங்களில் ஏற்பட்ட தழும்புகளைக் காட்டியபடி தொடர்ந்தாள். “மத்ஸ்யன் பிறரால் அரைக்கப்படும் சந்தனத்தை விரும்புவதில்லை என்பதால், குந்திக்கோ, உமக்கோ, உமது சகோதரர்களுக்கோ பயப்படாதவள், வாசனைத் தைலங்களின் தயாரிப்பைக் குறித்து அந்த மன்னர் மன்னன் {விராடன்} என்ன சொல்வானோ என்று நினைத்துக் கொண்டே, விராடனின் முன்பு அடிமையாகப் பயத்துடன் இப்போது நின்று கொண்டிருக்கிறாள்” என்றாள் {திரௌபதி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனது துயரங்களைப் பீமசேனனிடம் இப்படி உரைத்த கிருஷ்ணை {திரௌபதி}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, தனது பார்வையைப் பீமன் மீது செலுத்தியவண்ணம் அமைதியாக அழத்தொடங்கினாள். பிறகு கண்ணீரால் தடைபட்ட குரலுடன், மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டபடி, அவனது {பீமனது} இதயத்தைப் பலமாகக் கிண்டும்படி பீமனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னாள். “ஓ! பீமரே, முற்காலத்தில் தேவர்களுக்கு நான் ஏதாவது குற்றமிழைத்திருக்க வேண்டும் என்பதையே பேறற்ற எனது நிலை குறிக்கின்றது. ஓ! பாண்டவரே {பீமரே}, நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனே, நான் எப்போது சாவது?” என்று கேட்டாள் {திரௌபதி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு எதிரி வீரர்களைக் கொல்பவனான விருகோதரன் {பீமன்}, ஆணித்தழும்புகளைக் கொண்ட தனது மனைவியின் {திரௌபதியின்} மென்மையான கரங்களால் தனது முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கினான். பிறகு, குந்தியின் வலிமைமிக்க மகன் {பீமன்}, திரௌபதியின் கரங்களைத் தனது கரங்களில் பற்றிக் கொண்டு பெரும் கண்ணீர் வடித்தான். பிறகு, பெருந்துயரத்திற்கு ஆட்பட்ட அவன் {பீமன்} {பின்வரும்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.