Kripa’s car was broken! | Virata Parva - Section 57 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 32)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் கிருபருக்கும் இடையில் நடந்த மோதல்...
வைசம்பாயனர் {ஜனமேஜயன்} சொன்னார், “போர்க்களத்தில் வரிசையாக நிற்கும் குரு படையினரைக் கண்ட குரு குலக் கொழுந்தான பார்த்தன் {அர்ஜுனன்}, விராடன் மகனிடம் {உத்தரனிடம்}, “தங்க பலிப்பீடத்தைத் தாங்கிக் காணப்படும் கொடியைக் கொண்ட தேரில், தெற்கு நோக்கி விரையும் சரத்வானின் மகன் கிருபரைத் தொடர்ந்து செல்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனஞ்சயனின் {அர்ஜுனனின்} சொற்களைக் கேட்ட விராடன் மகன் {உத்தரன்}, ஒரு நொடியும் தாமதியாமல், தங்கக் கவசம் பூண்ட வெள்ளி நிறக் குதிரைகளை விரைந்து செலுத்தினான். மேலும், சந்திரனின் நிறத்தைப் பிரதிபலிக்கும் அந்த நெருப்பு போன்ற குதிரைகளை, ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு வகையான வேகமான எட்டுகளை எடுத்துவைக்கும்படி செய்தான். குதிரை சாத்திரம் அறிந்த உத்தரன், குரு படையை அணுகியதும், காற்றின் வேகம் கொண்ட அந்தக் குதிரைகளைத் திருப்பினான். வாகனங்களைச் {தேர்களைச்} செலுத்துவதில் திறமை கொண்ட அந்த மத்ஸ்ய இளவரசன் {உத்தரன்}, சில நேரங்களில் அங்கே சுழன்று கொண்டும், சில நேரங்களில் சிக்கலான வட்டப்பாதையில் சென்றும், சில நேரங்களில் இடது புறம் திரும்பியும் சென்று குருக்களை அலங்கமலங்க விழிக்க வைக்கத் தொடங்கினான். அப்படிச் சுற்றிலும் சுழன்ற அந்தத் துணிச்சல் மிக்க விராடன் மகன் {உத்தரன்}, கடைசியாகக் கிருபரின் தேரை அணுகி, அவரை எதிர்கொள்ளும் விதமாக நின்றான்.
பிறகு, தனது பெயரை அறிவித்துக் கொண்ட அர்ஜுனன், தேவதத்தம் என்று அழைக்கப்பட்ட சங்குகளில் சிறந்த சங்கை எடுத்து வலுவுடன் ஊதி, உரத்த சங்கொலியை ஒலித்தான். வலிமைமிக்க ஜிஷ்ணுவால் {அர்ஜுனனால்}, போர்க்களத்தில் ஒலிக்கப்பட்ட சங்கொலி, மலையைப் பிளப்பது போலக் கேட்கப்பட்டது. அர்ஜுனனால் ஊதப்படும்போது அந்தச் சங்கு நூறு துண்டுகளாக உடைந்து போகாததைக் கண்ட குருக்கள் {கௌரவர்கள்}, தங்கள் வீரர்கள் அனைவருடன் சேர்ந்து அதை உயர்வாக மெச்சத் தொடங்கினர். சொர்க்கத்தை அடைந்த அவ்வொலி, திரும்பி வரும்போது, மலையின் மார்பில் மகவத்தால் {இந்திரனால்} வீசப்படும் வஜ்ரத்தின் ஒலி {இடியோசை} போலக் கேட்கப்பட்டது.
அதன்பின்பு, வீரரும், துணிச்சல்மிக்கவரும், வலிமைமிக்கத் தேர்வீரரும், பலமும் பராக்கிரமும் நிறைந்தவருமான சரத்வானின் மகன் கிருபர், அவ்வொலியைத் தாங்கொணாது, அர்ஜுனன் மீது கோபம் கொண்டு, {அவனுடன்} போரிட விரும்பி, கடலில் பெறப்பட்ட தனது சங்கை எடுத்துப் பலமாக ஊதினார். அவ்வொலியால் மூன்று உலகங்களையும் நிரப்பிய அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவர் {கிருபர்}, தனது பெரிய வில்லை எடுத்து, அந்த வில்லின் நாணைப் பலமாகச் சுண்டி நாணொலி எழுப்பினார். இரு சூரியன்களுக்கு ஒப்பான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், ஒருவரை எதிர்த்து மற்றவர் நின்றபோது, இலையுதிர்கால மேகங்களின் பெருந்திரளைப் போல அவர்கள் பிரகாசித்தனர்.
பிறகு, எதிரி வீரர்களைக் கொல்பவரான சரத்வானின் மகன் {கிருபர்}, உயிர் நிலைகளில் நுழையவல்லவையும். வேகமானவையுமான கூரிய பத்து கணைகளால், விரைவாகப் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தார். அந்தப் பிருதையின் மகனும் {குந்தியின் மகன் அர்ஜுனனும்}, தனது பங்குக்கு, உலகத்தால் கொண்டாடப்படும் ஆயுதங்களில் முதன்மையான காண்டீவத்தை இழுத்து, உடலின் முக்கியமான பகுதிகளைத் துளைக்கவல்ல எண்ணிலடங்கா இரும்புக் கணைகளை அடித்தான். அதன்பேரில், கிருபர், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகள் {தன்னிடம்} வருமுன்பே கூரிய கணைகளைக் கொண்டு, அவற்றை நூறாகவும் {100}, ஆயிரமாகவும் {1000} வெட்டிப் போட்டார். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனும் {அர்ஜுனனும்}, கோபத்தில் பல்வேறு தந்திரங்களை வெளிப்படுத்தி, கணைகளின் மழையால் அனைத்துப் புறங்களையும் மூடினான். முழு வானத்தையும் தனது கணைகளால் மறைத்த அளவிடமுடியா ஆன்மா கொண்ட அந்த வலிமைமிக்க வீரனான பிருதையின் மகன் {அர்ஜுனன்}, நூறு கணைகளால் கிருபரைச் சூழந்தான். தீச்சுடர்களைப் போன்ற அந்தக் கூரிய கணைகளால் துன்புற்ற கிருபருக்குக் கோபம் பெருகியதால், அளவிடமுடியாத பராக்கிரமம் கொண்ட உயர் ஆன்ம பார்த்தனை {அர்ஜுனனை}, பத்தாயிரம் கணைகளால் விரைவாகப் பீடிக்கச் செய்து, அந்தப் போர்க்களத்தையே அவர் {கிருபர்} கர்ஜிக்கச் செய்தார்.
பிறகு வீரனான அர்ஜுனன், தனது எதிரியின் {கிருபரின்} நான்கு குதிரைகளை, காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்டவையும், கூரானவையும், நேரானவையும், தங்க இறகுகள் கொண்டவையுமான நான்கு மரணக்கணைகளால் துளைத்தான். தீச்சுடர் போன்ற அந்தக் கூரிய கணைகளால் துளைக்கப்பட்ட அந்தக் குதிரைகள் திடீரெனப் பின்வாங்கின. அதன் விளைவாகக் கிருபர் தனது இடத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டார். கௌதமர் {கிருபர்} தனது இடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதைக் கண்ட குருகுலத் தோன்றலான அந்த எதிரி வீரர்களைக் கொல்பவன் {அர்ஜுனன்}, எதிராளியின் {கிருபரின்} கண்ணியத்தை மதித்த காரணத்தால், அவர் மீது கணைகள் தொடுப்பதை நிறுத்தினான்.
பிறகு, மீண்டும் தனது இடத்தை அடைந்த கௌதமர் {கிருபர்}, கங்கப் பறவையின் இறகுகளைக் கொண்ட பத்து கணைகளால் சவ்யசச்சினை {அர்ஜுனனை} விரைவாகத் துளைத்தார். பிறகு பார்த்தன், கூரிய முனை கொண்ட ஒரு பிறை வடிவ கணையைக் கொண்டு, கிருபரின் வில்லையும், கையுறைகளையும் வெட்டியெறிந்தான். உயிரையும் துளைக்கவல்ல கணைகளால் கிருபரின் கவசத்தையும் வெட்டியெறிந்த பார்த்தன் {அர்ஜுனன்}, அவரது உடலுக்குக் காயத்தை ஏற்படுத்தவில்லை. கவசத்தை இழந்த அவரது {கிருபரின்} உடல், பருவகாலத்தில் சதுப்பு நிலத்தைவிட்டகன்ற பாம்பை ஒத்திருந்தது. தனது வில் பார்த்தனால் வெட்டப்பட்டவுடன், மற்றொன்றை எடுத்த கௌதமர் {கிருபர்}, அதில் மூன்று நாண்கயிறுகளைச் சேர்த்துக் கட்டினார்.
சொல்வதற்கே அதிசயமாக இருந்தாலும், அந்த அவரது வில்லும், குந்தி மகனின் {அர்ஜுனனின்} நேரான கணைகளால் வெட்டப்பட்டது. எதிரி வீரர்களைக் கொல்பவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சரத்வானின் மகனால் {கிருபரால்} ஒன்றன் பின் ஒன்றாக {மேலும்} பிற விற்கள் எடுக்கப்பட்ட போதெல்லாம், அவற்றையும் இவ்வழியிலேயே வெட்டியெறிந்தான். தனது அனைத்து விற்களும் வெட்டியெறியப்பட்ட பிறகு, அந்த வலிமைமிக்க வீரர் {கிருபர்}, தனது தேரில் இருந்து வஜ்ரம் போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த ஓர் எறிவேலை வீசினார். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த எறிவேல், எரிகல்லைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு காற்றில் வந்த போது, அர்ஜுனன் அதைப் பத்துக் கணைகள் கொண்டு வெட்டியெறிந்தான்.
புத்திசாலியான அர்ஜுனனால் தனது எறிவேல் இப்படி வெட்டப்பட்டதைக் கண்ட கிருபர், மற்றுமொரு வில்லை விரைந்து எடுத்து, எண்ணற்ற பிறைவடிவ கணைகளைத் தொடர்ச்சியாக அடித்தார். எனினும், பார்த்தன், கூரிய முனை கொண்ட தனது பத்து {10} கணைகளால் அவற்றை வெட்டியெறிந்தான். பிறகு அந்தப் போர்க்களத்தில் மிகவும் கோபம் கொண்ட அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, கல்லில் கூராக்கப்பட்டவையும் தீச்சுடர்களுக்கு ஒப்பானவையுமான பதிமூன்று {13} கணைகளை அடித்தான். அவற்றில் ஒன்றைக் கொண்டு, எதிரி {கிருபருடைய} தேரின் நுகத்தடியை வெட்டினான். {அவற்றில்} நான்கைக் கொண்டு நான்கு குதிரைகளைத் துளைத்தான். ஆறாவதைக் கொண்டு தனது எதிரியுடைய {கிருபருடைய} தேரோட்டியின் தலையை அவனுடைய உடலில் இருந்து துண்டித்தான். {அவற்றில்} மூன்றைக் கொண்டு, அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், அந்த மோதலில் கிருபருடைய தேரின் மூங்கில் திரிதண்டத்தையும், {அவற்றில்} இரண்டைக் கொண்டு {தேரின்} சக்கரங்களையும் தாக்கினான். பனிரெண்டாவது கணையைக் கொண்டு கிருபரின் கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தினான்.
இந்திரனைப் போல ஏளனமாகச் சிரித்த பல்குனன் {அர்ஜுனன்}, பதிமூன்றாவதைக் கொண்டு கிருபரின் மார்பைத் துளைத்தான். பிறகு, தனது வில் வெட்டப்பட்டு, தேர் உடைக்கப்பட்டு, குதிரைகளும், தேரோட்டியும் கொல்லப்பட்டதையும் கண்ட கிருபர் கீழே குதித்து, ஒரு கதாயுதத்தை எடுத்து விரைவாக அர்ஜுனன் மீது வீசினார். ஆனால், கிருபரால் வீசப்பட்ட அந்தக் கனமிக்கப் பளபளப்பான கதாயுதம், அர்ஜுனனின் கணைகளால் தாக்குண்டு, மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.
பிறகு, சரத்வான் மகனை {கிருபரைக்} மீட்க விரும்பிய வீரர்கள் (கிருபர் இருந்த படைப்பிரிவின் வீரர்கள்) அனைத்துப் புறங்களில் இருந்தும் பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} மோதி, அவனைத் தங்கள் கணைகளால் மூடினர். குதிரைகளை இடதுபுறம் திருப்பிய விராடன் மகன் {உத்தரன்}, யமகம் என்றழைக்கப்பட்ட சுற்றிவளைக்கும் பரிணாமத்தைச் செய்யத் தொடங்கி, அதன் காரணமாக அவ்வீரர்களின் எதிர்ப்பைத் தடுத்தான். பிறகு அந்த மனிதர்களில் ஒப்பற்ற காளைகள், தேரை இழந்த கிருபரைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, குந்தியின் மகனான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அருகில் இருந்து {தூரமாக} அவரை {வேறுபக்கம்} வழிநடத்திச் சென்றனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.