Aswatthama’s quiver exhausted! | Virata Parva - Section 59 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 34)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த மோதல்; அவர்களுக்குள் நடந்த மோதலில் இடைமறித்த கர்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! வலிமைமிக்க மன்னா {ஜனமேஜயா}, போர்க்களத்தில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அர்ஜுனனுடன் மோதினான். கணைகளை மழையெனப் பொழிந்து, மோதலுக்கு விரைந்து வந்த அவனைக் {அஸ்வத்தாமனைக்} கண்ட பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, கணைகளின் மேகத்தால் அவனை {அஸ்வத்தாமனை} வரவேற்றான். தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலைப் போன்று, அந்த மோதல், பயங்கரமாக இருந்தது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் விருத்திரனையும் வாசவனையும் {இந்திரனையும்} போலக் கணைகளை அடித்துக் கொண்டனர். கணைகளைக் கொண்டு ஆகாய விரிவின் அனைத்துப் பக்கங்களையும் மறைத்து, சூரியனை முழுமையாக மறைத்து, காற்றே நின்று போகும்படி போரிட்டனர்.
ஓ! எதிரி நகரங்களை வெல்பவனே {ஜனமேஜயா}, அப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டபோது, நெருப்பிலிடப்பட்ட மூங்கில்களில் எழுவது போல உரத்த ஒலிகள் அங்கே எழுந்தன. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அர்ஜுனனால் கடுமையாகத் தாக்கப்பட்ட அஸ்வத்தாமனின் குதிரைகள் குழப்பத்தில் ஆழ்ந்து, எந்தத் திக்கில் செல்ல வேண்டும் என்பதில் நிலை குலைந்து நின்றன. அப்படிப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்} களத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, துரோணரின் பலமிக்க மகன் {அஸ்வத்தாமன்}, ஒரு சந்தர்ப்பத்தைக் கண்டுபிடித்து, குதிரை லாடத்தின் உருவிலான ஒரு கணையால், காண்டீவத்தின் நாணை அறுத்தான். அந்த இயல்புக்குமிக்கச் சாதனையைக் கண்ட தேவர்கள் அவனை {அஸ்வத்தாமனை} உயர்வாகப் புகழ்ந்தனர்.
“நன்று செய்தாய்! நன்று செய்தாய்!” என்று ஆச்சரியப்பட்ட துரோணர், பீஷ்மர், கர்ணன், வலிமைமிக்க வீரரான கிருபர் ஆகிய அனைவரும் அவனது அந்தச் சாதனையைப் பெரிதும் பாராட்டினர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தனது அற்புதமான வில்லை வளைத்து, கங்கப்பறவையின் இறகுகளைக் கொண்ட கணைகளால், வீரர்களில் காளையான பார்த்தனின் {அர்ஜுனனின்} மார்பில் அடித்தான். அதன் பேரில், உரக்கச் சிரித்த, வலிமையான கரங்களைக் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, காண்டீவத்தில் புதிய வலிமையான நாணைப் பொருத்தினான். பிறகு, பிறைச்சந்திரனை ஒத்திருந்த தனது நெற்றியில் இருந்த வியர்வையால், தனது வில்லின் நாணை ஈரப்படுத்திய பிருதையின் மகன் {அர்ஜுனன்}, யானைகள் மந்தையின் சீற்றமிகு தலைவன் மற்றொரு யானையை நோக்கி விரைவதைப் போலத் தனது எதிரியை {அஸ்வத்தாமனை} நோக்கி விரைந்தான். அந்த ஒப்பற்ற இரு வீரர்களுக்கிடையில் நடந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. அதைக் கண்டவர்களுக்கு அது மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
இரு வலிமைமிக்க யானைகள் போல, அந்த இரு வீரர்களும் போரிட்டபோது, குருக்கள் {கௌரவர்கள்}, அதை ஆச்சரியத்துடன் கண்டனர். மனிதர்களில் வீரமிக்கக் காளைகளான அவர்கள், பாம்பு மற்றும் சுடர் மிகும் நெருப்பைப் போன்ற வடிவங்களிலான கணைகளைக் கொண்டு, தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பாண்டவனுக்கு {அர்ஜுனனுக்குச்} சொந்தமான அம்பறாத்தூணிகள் இரண்டும் வற்றாதவையாக இருந்ததால், அவ்வீரன் {அர்ஜுனன்} அசையாத மலையென அந்தப் போர்க்களத்தில் நின்றான். அந்த மோதலில் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருந்ததின் விளைவாக அஸ்வத்தாமனின் கணைகள் விரைவாகத் தீர்ந்தன. இதனாலேயே அர்ஜுனன், தனது எதிரியை {அஸ்வத்தாமனை} வெற்றிக் கொண்டான்.
பிறகு, தனது பெரிய வில்லை எடுத்து கர்ணன் நாணொலி எழுப்பினான். அப்போது, அங்கே, “ஓ” என்றும், “ஐயோ” என்றும் ஆச்சரிய ஒலிகள் எழுந்தன. வில்லின் நாண் சுண்டப்பட்ட இடத்தை நோக்கித் தன் கண்களைச் செலுத்திய பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, தன் முன்னே ராதையின் மகனைக் {கர்ணனைக்} கண்டான். அந்தக் காட்சியால் அவனது கோபம் பெரிதும் தூண்டப்பட்டது. சினமும், கர்ணனைக் கொல்லும் விருப்பமும் தூண்டப்பட்ட அந்தக் குரு குலத்தின் காளை {அர்ஜுனன்}, நிலைத்த பார்வையுடனும், உருளும் கண்களுடனும், அவனை {கர்ணனை} வெறித்துப் பார்த்தான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பார்த்தன் {அர்ஜுனன்}, அஸ்வத்தாமனிடம் இருந்து திரும்புவதைக் கண்ட குரு {கௌரவ} வீரர்கள், அவன் {அர்ஜுனன்} மீது ஆயிரக்கணக்கான கணைகளை அடித்தனர். அந்த எதிரிகளைக் கொல்பவனான வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} விட்டுவிட்டு, திடீரெனக் கர்ணனை நோக்கி விரைந்தான். கோபத்தால் கண்கள் சிவக்க, கர்ணனை நோக்கி விரைந்த அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அவனுடன் தன்னந்தனியாக {ஒற்றைக்கு ஒற்றையாகப்} போரிட விரும்பி, இந்த வார்த்தைகளைச் சென்னான்.”
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.