Dussasana fled! | Virata Parva - Section 61 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 36)
பதிவின் சுருக்கம் : பீஷ்மரை நோக்கி அர்ஜுனன் முன்னேறுவது; துச்சாசனன் தடுப்பது; துச்சாசனனை ஒரு நொடியில் களத்தைவிட்டு ஓடச் செய்த அர்ஜுனன்; திருதராஷ்டிரனின் மற்ற மகன்களை அர்ஜுனன் வீழ்த்துவது ...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விகர்த்தனன் மகனை {கர்ணனை} வீழ்த்திய பிறகு, அர்ஜுனன், விராடனின் மகனிடம் {உத்தரனிடம்}, “தங்கப் பனைமரம் தெரியும் பிரிவை நோக்கி என்னை அழைத்துச் செல்வாயாக. அங்கே எங்கள் பாட்டனான சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, என்னுடன் மோதுவதற்கு விரும்பி தேவனைப் போலக் காத்திருக்கிறார்” என்றான் {அர்ஜுனன்}.
உடனே, கணைகளால் கடுமையாகத் துளைக்கப்பட்டிருந்த உத்தரன், தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் நெருக்கமாக இருந்த அந்த வலிமைமிக்கப் படையைக் கண்டு, “ஓ! வீரரே {அர்ஜுனரே}, என்னால் இனிமேலும் உமது அற்புத குதிரைகளை வழிநடத்த இயலாது. எனது ஆவியில் உற்சாகம் குறைகிறது. என் மனது மிகவும் குழம்பிப் போயுள்ளது. உம்மாலும் குருக்களாலும் பயன்படுத்தப்பட்ட தெய்வீக ஆயுதங்களுடைய சக்தியின் விளைவாக அனைத்துப் புறங்களும் எனது கண்களுக்கு முன்பாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. முடைநாற்றம் கொண்ட கொழுப்பு, இரத்தம் மற்றும் சதை ஆகியவற்றால் நான் எனது உணர்வுகளை இழந்துவிட்டேன். இவை அனைத்தையும் கண்ட எனது மனது பயங்கரத்தால், இருந்த இடத்திலேயே இரண்டாகப் பிளக்கிறது {மனம் உடைந்து போகிறது}. இதற்கு முன்னர் நான் போரில் குதிரைகளின் இத்தகு திரட்சியைக் கண்டதில்லை. ஓ! வீரரே {அர்ஜுனரே}, வீரர்களால் ஏற்படும் கையுறைகள் உராயும் ஒலி {சிறகடிப்பு}, சங்கொலி, சிம்ம கர்ஜனைகள், யானைகளின் பிளிறல்கள், இடியைப் பிரதிபலிக்கும் காண்டீவத்தின் நாணொலி ஆகியவற்றைக் கேட்டும் நினைத்துப் பார்த்தும் வாயடைத்துப் போகிறேன்.
ஓ! வீரரே {அர்ஜுனரே}, மோதலின் போது நெருப்பு வட்டத்தைப் பிரதிபலிக்கும் காண்டீவத்தை இடைவிடாமல் நீர் வட்டமாக வளைத்ததைக் கண்டதால், எனது கண்கள் தோற்று {செயலிழந்து}, இதயம் பிளக்கிறது. கோபத்தில் இருக்கும் பினகைதாங்கியைப் {சிவனைப்} போலப் போர்க்களத்தில் உமது கடும் வடிவத்தையும், உம்மால் அடிக்கப்படும் பயங்கரக் கணைகளையும் கண்டு நான் அச்சத்தால் நிறைந்திருக்கிறேன். நீர் உமது அற்புதமான கணைகளை எப்போது எடுக்கிறீர், வில்லின் நாணில் எப்போது பொருத்துகிறீர், அவற்றை எப்போது விடுகிறீர் என்பதைக் காண்பதில் நான் தோற்றேன். இவையாவையும் நீர் எனது கண்களுக்கு முன்பே செய்திருந்தாலும், உணர்வுகளை நான் இழந்திருந்ததால் என்னால் அவற்றைக் காண முடியவில்லை. எனது உற்சாகம் குன்றுகிறது, உலகமே எனது முன்னிலையில் நீந்திக் கொண்டிருப்பதைப் போல எனக்குத் தெரிகிறது. சாட்டையையும், கடிவாளங்களையும் பிடிக்க என்னிடம் பலம் இல்லை” என்றான் {உத்தரன்}.
இச்சொற்களைக் கேட்ட அர்ஜுனன் {உத்தரனிடம்}, “அஞ்சாதே. ஓ! மனிதர்களில் காளையே {உத்தரா}, நீயும் இப்போர்க்களத்தில் அற்புதச் சாதனைகளைச் செய்தாய். மத்ஸ்யர்களின் ஒப்பற்ற வழியில் பிறந்து, இளவரசனாக இருக்கும் நீ அருளப்பட்டிருப்பாயாக. எதிரிகளைத் தண்டிப்பதில் நீ உற்சாகமிழக்கலாகாது. எனவே, ஓ! இளவரசே {உத்தரா}, நான் மீண்டும் போரில் ஈடுபடும்போது, எனது தேரில் இருந்துகொண்டு, உனது மனோபலத்தைப் பெருக்கிக் கொண்டு, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {உத்தரா}, எனது குதிரைகளின் கடிவாளங்களைப் பிடிப்பாயாக” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “விராடனின் மகனிடம் {உத்தரனிடம்} இதைச்சொன்ன, அந்த மனிதர்களில் சிறந்தவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், வலிய கரங்கள் கொண்டவனுமான அர்ஜுனன், விராடன் மகனிடம் {உத்தரனிடம்} மீண்டும், “பீஷ்மரின் படைப்பிரிவின் முன்னணிக்குத் தாமதமில்லாமல் என்னை அழைத்துச் செல்வாயாக. இந்தப் போரில் நான் அவரது {பீஷ்மரின்} வில்லின் நாணை அறுப்பேன். வானில் இருக்கும் மேகங்களுக்கு மத்தியில் இருந்து வெளிப்படும் மின்னல் கீற்றுகளைப் போலச் சுடர்மிகும் அழகுடன் கூடிய தெய்வீக ஆயுதங்களை நான் அடிப்பதை இன்று நீ காண்பாய். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் காண்டீவத்தின் பின்புறத்தை இன்று கௌரவர்கள் காண்பார்கள். கூடியிருக்கும் எதிரிகள் பிறகு “இவன் எந்தக் கையில் அடிக்கிறான். வலதிலா இடதிலா” என்று தங்களுக்குள் சச்சரவு செய்வார்கள்.
நான் இன்று பயங்கரமான (மரண) ஆற்றை மறு உலகத்தை நோக்கிப் பாயச் செய்வேன். அது {அந்த ஆறு} இரத்தத்தை நீராகவும், தேர்களை எதிர்சுழிப்புகளாகவும், யானைகளை முதலைகளாகவும் கொண்டிருக்கும். எனது நேரான கணைகளால், கரங்களையும், பாதங்களையும், தலைகளையும், முதுகுகளையும், தோள்களையும் கிளைகளாகக் கொண்டிருக்கும் மரங்கள் அடர்ந்த குரு காட்டை {கௌரவக் காட்டை} நான் இன்று முற்றாக ஒழிப்பேன். கையில் வில்லுடன் தனியாக நான் கௌரவப் படையை வீழ்த்துவதால், எரியும் காட்டில் இருந்து எனக்கு நூறு வழிகள் திறக்கும். என்னால் தாக்கப்படும் குரு படை (களத்தைவிட்டு ஓட இயலாமல்) திரும்பத் திரும்பச் சக்கரத்தைப் போலச் சுழன்று வருவதை நீ இன்று காண்பாய். கணைகளிலும் ஆயுதங்களிலும் எனக்கு உள்ள அற்புதப் பயிற்சியை நான் இன்று உனக்குக் காட்டுவேன்.
{போர்க்களத்} தரை, சமமானதாகவோ, சமமற்றதாகவோ இருப்பினும், நீ எனது தேரில் உறுதியாக நிற்பாயாக. இறகு படைத்த எனது கணைகளால் சொர்க்கத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் மேரு மலையைக் கூட என்னால் துளைக்கமுடியும். பழங்காலத்தில், இந்திரனின் கட்டளையின்பேரில், பௌலோமர்களையும் காலகஞ்சர்களையும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் போர்க்களத்தில் கொன்றேன். நான் எனது பிடியின் உறுதியை இந்திரனிடம் பெற்றேன். எனது கரங்களின் இலகுத்தன்மையைப் பிரம்மனிடம் பெற்றேன். எதிரிக்கூட்டத்தின் மத்தியில் போரிடும் வகையில் தற்காப்பு மற்றும் கடுந்தாக்குதல்களில் உள்ள பல்வேறு முறைகளைப் பிரஜாபதியிடம் இருந்து கற்றிருக்கிறேன். பெருங்கடலுக்கு அப்பாலுள்ள ஹிரண்யபுரத்தில் {தங்கத்தாலான மிதக்கும் நகரம் - பௌலோமர்களுடைய தலைநகரம்} வசித்த கடும் வில்லாளிகளான அறுபதினாயிரம் தேர்வீரர்களை முன்பு வீழ்த்தினேன். பஞ்சுப் பொதியைச் சிதறடிக்கும் புயலென நான் குருக்களின் {கௌரவர்களின்} பெரும்படையை வீழ்த்தப்போவதை இப்போது பார்.
பதாகைகளை மரங்களாகவும், காலாட்படையைச் செடிகொடிகளாகவும், தேர்வீரர்களை இரைதேடும் விலங்குகளாகவும் கொண்டிருக்கும் இந்தக் குரு என்ற காட்டை {கௌரவக்காட்டை}, தீ போன்ற எனது கணைகளால் நான் இன்று எரிப்பேன். வஜ்ரதாங்கி {இந்திரன்} தானவர்களை {அசுரர்களை} வீழ்த்துவது போல, தங்கள் சிறந்த சக்தியைப் பயன்படுத்திப் போரிட்டுவரும் குரு படையின் வலிமைமிக்க வீரர்களை, நான் தனியாகவே, எனது நேரான கணைகளால், அவர்களுடைய தேர்க்கூண்டுகளில் இருந்து விழ வைப்பேன். ருத்ரனிடம் {சிவனிடம்} இருந்து ரௌத்திரத்தையும், வருணனிடம் இருந்து வருணத்தையும் {வருணபாசத்தையும்}, அக்னியிடம் இருந்து ஆக்னேயத்தையும், காற்றின் தேவனிடம் {வாயுவிடம்} இருந்து வாயவ்யத்தையும், சக்ரனிடம் {இந்திரனிடம்} இருந்து வஜ்ரத்தையும் இன்னும் பிற ஆயுதங்களையும் நான் பெற்றிருக்கிறேன். சிங்கம் போன்ற பல வீரர்களால் காக்கப்பட்டாலும் அந்தக் கடும் தார்த்தராஷ்டிர காட்டை நான் நிச்சயம் அழிப்பேன். எனவே, ஓ! விராடனின் மகனே {உத்தரா}, உனது அச்சங்கள் விலகட்டும்” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} உறுதிகூறப்பட்ட விராடனின் மகன் {உத்தரன்}, பீஷ்மரால் பாதுகாக்கப்பட்டிருந்த கடுந்தேர்களின் வரிசைக்குள் ஊடுருவினான். எனினும் கடுஞ்செயல்கள் புரியும் கங்கையின் மகன் {பீஷ்மர்}, போர்க்களத்தின் வீரர்களை வீழ்த்த விருப்பம் கொண்டு முன்னேறி வரும் வலிய கரங்கள் கொண்ட வீரனை {அர்ஜுனனை} மகிழ்ச்சியுடன் எதிர்த்து நின்றார். எதிர்த்து நின்ற பீஷ்மரின் கொடிக்கம்பத்தை, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தனது கணையைக் கொண்டு ஜிஷ்ணு {அர்ஜுனன்} வேரோடு வெட்டி வீழ்த்தினான். இதனால், அழகிய மலர்மாலைகளாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த துச்சாசனன், விகர்ணன், துஸ்ஸஹன், விவிங்சதி ஆகிய நான்கு வீரர்களும் அந்தக் கடும் வில்லாளியை நோக்கி விரைந்து வந்தனர். கடும் வில்லாளியான பீபத்சுவை {அர்ஜுனனை} நோக்கி விரைந்து வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு, வீரனான துச்சாசனன், ஒரு பிறை வடிவக் கணையால் விராடன் மகனையும் {உத்தரனையும்}, மற்றொரு கணையால் அர்ஜுனனின் மார்பையும் துளைத்தான்.
துச்சாசனனை எதிர்த்த ஜிஷ்ணு {அர்ஜுனன்}, கழுகின் இறகுகளைப் படைத்த தனது கூரிய கணைகளால், தனது எதிரியின் {துச்சாசனனின்} தங்க முலாம் பூசப்பட்ட வில்லை வெட்டி, ஐந்து கணைகளால் அவனது மார்பைத் துளைத்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் துன்புற்ற துச்சாசனன், போரை விட்டு விலகி {புறமுதுகிட்டு} ஓடினான். பிறகு திருதராஷ்டிரன் மகனான விகர்ணன், எதிரி வீரர்களைக் கொல்லும் அர்ஜுனனை கழுகின் இறகுகள் கொண்ட நேரான கூரிய கணைகளால் துளைத்தான். ஆனால் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தனது நேரான கணைகள் மூலம் ஒரு நொடிக்குள் அவனது {விகர்ணனின்} நெற்றியில் அடித்தான். அர்ஜுனனால் துளைக்கப்பட்ட அவன் தனது தேரில் இருந்து விழுந்தான். இதைக் கண்ட துஸ்ஸஹன், விவிங்சதியை ஆதரித்தபடி, தனது சகோதரனை மீட்கும் விருப்பத்தால் உந்தப்பட்டு மேகம் போன்ற கூரிய கணைகளால் அர்ஜுனனை மறைத்தான்.
எனினும், இதற்குக் கிஞ்சிற்றும் கவலைப்படாத தனஞ்சயன் {அர்ஜுனன்}, அதே நொடியிலேயே இரு கணைகளால் அவர்கள் இருவரையும் துளைத்து, அவர்கள் இருவரது குதிரைகளையும் கொன்றான். இதனால், குதிரைகளை இழந்து, தங்கள் உடல்கள் சிதைக்கப்பட்ட அந்த இரு திருதராஷ்டிரன் மகன்களையும், மற்ற தேர்களில் அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பிற வீரர்கள் தூக்கிச் சென்றனர். வீழ்த்தப்பட முடியாதவனும், கிரீடம் தரித்தவனும், குந்தியின் பலமிக்க மகனுமான பீபத்சு {அர்ஜுனன்}, தனது கணைகளைக் கொண்டு, குறிதவறாமல் அனைத்துப்புறங்களிலும் அடித்துக் கொண்டிருந்தான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.