The Prowess of Arjuna! | Virata Parva - Section 62 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 37)
பதிவின் சுருக்கம் : போர்க்களத்தில் அர்ஜுனனின் கோரத்தாண்டவம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! பாரதக் குலத்தவனே {ஜனமேஜயா}, குருக்களில் பெரும் தேர்வீரர்கள் அனைவரும் ஒன்றுகூடி, தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி அனைத்துப் புறங்களில் இருந்தும் அர்ஜுனனைத் தாக்கினர். ஆனால் அளவிலா ஆன்மா கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, அந்த வலிய தேர்வீரர்களை, மலைகளை மூடும் பனி போலத் தனது கணை மேகங்களால் மூடினான். பெரும் யானைகளின் பிளிறல்களும், சங்கொலிகளும் ஒன்றாகக் கலந்து அங்கே பெரும் ஒலியை உண்டாக்கின. யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களையும், இரும்புக்கவசங்களையும் பார்த்தன் {அர்ஜுனன்} அடித்த அம்புகள் துளைத்து வெளியேறி ஆயிரக்கணக்கில் கீழே விழுந்தன. மிகுந்த வேகத்துடன் கணைகளை அடித்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்தப் போட்டியில், கூதிர்காலத்தின் {இலையுதிர் காலத்தின்} நண்பகல் வேளையில் சுட்டெரிக்கும் சூரியனை நினைவுபடுத்தினான்.
அச்சத்தால் பீடிக்கப்பட்ட தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்தும், குதிரை வீரர்கள் தங்கள் குதிரைகளில் இருந்தும் கீழே குதித்து, காலாட்படையினருடன் சேர்ந்து அனைத்துப் புறங்களிலும் {புறமுதுகிட்டு} ஓடினர். தாமிரம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பலமிக்க வீரர்களின் கவசங்களை அர்ஜுனனின் கணைகள் பிளந்த போது ஏற்பட்ட சடசடப்பொலி பெருவொலியாக இருந்தது. பாம்புகள் போலச் சீறிக்கொண்டு விரைந்து சென்ற பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் சிதைக்கப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகள் மேலிருந்த போர்வீரர்கள் அனைவரும் விரைவில் அந்தக் களத்தில் பிணங்களாக விழுந்தனர்.
கையில் வில்லுடன் போர்க்களத்தில் தனஞ்சயன் {அர்ஜுனன்} நாட்டியம் ஆடுவதைப் போலத் தெரிந்தது. இடி போன்ற காண்டீவத்தின் நாணொலியால் பீதியடைந்தவர்களில், அந்தப் போர்க்களத்தை விட்டு ஓடியவர்கள் பலராக இருந்தனர். தலைப்பாகைகள், காது குண்டலங்கள், தங்க ஆரங்களுடன் கூடிய வெட்டப்பட்ட தலைகள் அந்தப் போர்க்களத்தில் நிறைந்திருந்தன. ஆபரணங்களுடன் அலங்கரிக்கப்பட்ட கைகளில் விற்களை ஏந்திய மனித உடல்கள், கணைகளால் சிதைக்கப்பட்டு எங்கும் சிதறிக் கிடந்ததால் பூமி அழகாகத் தெரிந்தது. ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, கூரிய கணைகளால் வெட்டப்பட்ட தலைகள் தொடர்ச்சியாகப் பூமியில் விழுவதைக் காண, வானத்தில் இருந்து கல் மழை பொழிவது போல இருந்தது.
அஞ்சத்தக்க பராக்கிரமம் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} தனது கடுமையை வெளிக்காட்டியபடி போர்க்களத்தில் உலவி, திருதராஷ்டிரன் மகன்கள் மீது கோபத்தால் பயங்கர நெருப்பை ஊற்றிக் கொண்டிருந்தான். அர்ஜுனனின் கடும் பராக்கிரமத்தைக் கண்ட எரிக்கப்பட்ட அந்த எதிரிப்படையின் குரு வீரர்கள் துரியோதனன் முன்னிலையிலேயே உற்சாகமிழந்து போரிடுவதை நிறுத்தினர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தப் படையைப் பயங்கரத்தால் பீடிக்கச் செய்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கதிகலங்கச் செய்த அந்த வெற்றியாளர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்} களத்தில் இப்படியே உலவி கொண்டிருந்தான்.
இறந்தவர்களின் கலைந்த கேசத்தை மிதக்கும் தக்கையாகவும், விற்களையும் அம்புகளையும் படகுகளாகவும், இறைச்சியையும் விலங்குச் சாறுகளையும் சேறாகவும் கொண்ட யுகமுடிவின் மரண ஆறு போல, பாண்டுவின் மகன் அந்தப் போர்க்களத்தில், அலையடிக்கும் கடுமையான ரத்த ஆற்றை உற்பத்தி செய்தான். கவசங்களும், தலைப்பாகைகளும் அதன் பரப்பில் அடர்த்தியாக மிதந்து சென்றன. யானைகள் முதலைகளாகவும், தேர்கள் அதன் கட்டுமரங்களாகவும், கொழுப்பு, இரத்தம் ஆகியன அதன் ஊற்றாகவும் இருந்தன. பார்வையாளர்களின் இதயங்களில் பயங்கரம் பீடிக்கச்செய்ய அது {அந்த இரத்த ஆறு} கணக்கிடப் பட்டிருந்தது.
காணக் கொடூரமாகவும், சீற்றமிகு விலங்குகளின் கதறல்களை எதிரொலிக்கும் அச்சத்தின் எல்லையாகவும் இருந்த கூரிய கணைகள் அதன் {அந்த இரத்த ஆற்றின்} முதலைகளாக இருந்தன. ராட்சசர்களும் மற்ற மனித ஊனுண்ணிகளும் {நரமாமிசம் உண்பவர்களும்} அதன் ஓர் எல்லையில் இருந்து மற்ற எல்லைவரை நடமாடினர். முத்துச் சரங்கள் அதன் {அந்த இரத்த ஆற்றின்} அதிர்வலைகளாக இருந்தன. பிற அற்புத ஆபரணங்கள் அதன் குமிழிகளாக இருந்தன. மொய்க்கும் கணைகள் அதன் கடும் சுழிக்காற்றாகவும், குதிரைகள் அதன் ஆமைகளாகவும் இருந்தன. அந்த வலிமைமிக்கத் தேர் வீரன் {அர்ஜுனன்} அதன் {அந்த இரத்த ஆற்றில் இருக்கும்} பெரிய தீவாக இருந்தான். அது சங்கொலிகளையும், பேரிகையொலிகளையும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பார்த்தன் {அர்ஜுனன்} உண்டாக்கிய அந்த இரத்த ஆறு கடக்கமுடியாததாக இருந்தது. அர்ஜுனன் தனது கணைகளை எடுப்பதையும், வில்லின் நாணில் அவற்றைப் பொருத்துவதையும் அக்காண்டீவத்தில் இருந்து நீட்டி இழுத்து அவற்றை விடுவதையும் பார்வையாளர்களால் காண முடியாத அளவுக்கு அவனது {அர்ஜுனனது} கரங்கள் இலகுவாக {வேகமாக} இருந்தன.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.