The emissary of the priest! | Udyoga Parva - Section 20 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 20)
பதிவின் சுருக்கம் : துருபதனின் புரோகிதர் தூதுவராக ஹஸ்தினாபுரம் சென்றது; வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு தான் வந்த நோக்கத்தைச் சொன்னது; பாண்டவர்கள் வஞ்சிக்கப்பட்டாலும் எப்படி அறம் காத்தனர் என்பதையும், பாண்டவர்களின் செல்வங்களை எப்படிக் கௌரவர்கள் வஞ்சித்தனர் என்பதையும் எடுத்துச் சொன்னது; படைகளின் எண்ணிக்கையைப் பார்த்துப் பாண்டவர்களைக் குறைத்து எடைபோட்டுவிட வேண்டாம் எனப் புரோகிதர் சொன்னது; பாண்டவர்களுக்கு உரியதைத் திருப்பித் தருமாறு புரோகிதர் கௌரவர்களைக் கேட்டுக் கொண்டது....
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, கௌரவர் தலைவனை {துரியோதனனை} அணுகிய துருபதனின் புரோகிதர், திருதராஷ்டின், பீஷ்மர் மற்றும் விதுரனால் மரியாதை செலுத்தப்பட்டார். முதலில் பாண்டவர்களின் நலம் குறித்த செய்தியை சொல்லிய அவர், பின்பு கௌரவர்களின் நலன் குறித்து விசாரித்தார். பிறகு, துரியோதனனின் படைத்தலைவர்கள் மத்தியில் இச்சொற்களில் பேசினார் {துருபதனின் புரோகிதர்}, “மன்னர்களின் நித்திய கடமைகள் குறித்து நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஆனால், {அவற்றை} நீங்கள் அறிந்திருந்தாலும், நான் சொல்லப்போவதற்கு அறிமுக உரையாக அதைச் சொல்கிறேன் {கேளுங்கள்}.
திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு ஆகிய இருவரும் ஒரே தந்தையின் மகன்களாக அறியப்படுகிறார்கள். தந்தை வழி செல்வத்தில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சமமான பங்கே என்பதில் ஐயமில்லை. திருதராஷ்டிரன் மகன்கள், தங்கள் தந்தை வழி செல்வத்தை அடைந்துவிட்டனர். {ஆனால்} பாண்டுவின் மகன்கள் தங்கள் தந்தை வழி பங்கை ஏன் அடையவே இல்லையே?
பாண்டு மகன்களுடைய {பாண்டவர்களுடைய} தந்தைவழி சொத்துகள் அனைத்தையும் திருதராஷ்டிரன் மகன்கள் {கௌரவர்கள்} முன்பே பறித்துக் கொண்டனர் என்பதனை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பின்னவர்கள் {கௌரவர்கள்}, தங்கள் கொலைகார சூழ்ச்சி வேலைகள் மூலம் பாண்டுவின் மகன்களைப் {பாண்டவர்களைத்} தங்கள் வழியில் இருந்து அகற்ற பல்வேறு வழிகளில் முயன்றனர்; ஆனால் விதிப்படி அவர்களின் வாழ்வு முற்றிலும் முடிவடையாததால், பாண்டுவின் மகன்களை {கௌரவர்களால்} யமனுலகு அனுப்ப முடியவில்லை.
பிறகு மீண்டும், அந்த உயர் ஆன்ம இளவரசர்கள் {பாண்டவர்கள்}, தங்கள் சொந்த பலத்தின் மூலம் ஒரு நாட்டைச் செதுக்கிக் கொண்ட போது, தீய மனம் கொண்ட திருதராஷ்டிரன் மகன்கள், சுபலன் மகனின் {சகுனியின்} துணை கொண்டு அவர்களின் சொத்துகளை ஏமாற்றுகரமாக {பகடையாட்டத்தின் மூலம்} அபகரித்தனர். வழக்கம் போலவே, இந்தத் திருதராஷ்டிரன், தனது அனுமதியை அச்செயலுக்கும் அளித்தான். அதன்பிறகு, அவர்கள் {பாண்டவர்கள்} பதிமூன்று ஆண்டுகள் பெரும் காட்டுக்குள் திரிய அனுப்பி வைக்கப்பட்டனர்.
வீரமிக்கவர்களாக இருப்பினும், சபா மண்டபத்தில் தங்கள் மனைவியுடன் அவர்கள் பல்வேறு வகையான அவமதிப்புகளுக்கும் உள்ளாகினர். காட்டில் அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்த துன்பங்கள் கடுமையாக இருந்தன. அந்த அறம்சார்ந்த இளவரசர்கள் {பாண்டவர்கள்}, விராட நகரத்தில் சொல்லொணாத் துயரத்தை அனுபவிக்க நேர்ந்தது. தாழ்ந்த மனிதர்களின் வடிவத்தில் அவர்கள் தங்கள் ஆன்மாக்களைச் செலுத்தியதை {சாதாரணத் தாழ்ந்த மனிதர்களாக அவர்கள் வாழ்ந்ததை}, தீய மனிதர்களால் மட்டுமே தாங்கிக் கொள்ள முடியும். குருகுலத்தில் சிறந்தவர்களே, பழங்காலத்தில் {கடந்த காலத்தில்} நடந்த இத்தீங்குகள் அனைத்தையும் புறந்தள்ளி, குருக்களுடனான அமைதி ஒப்பந்தத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் விரும்பவில்லை.
அவர்களது நடத்தையையும், துரியோதனனின் நடத்தையையும் நினைவில் கொண்டு, பின்னவனின் {துரியோதனனின்} நண்பர்கள், அவனை {துரியோதனனை} அமைதியை ஏற்கும்படி செய்ய வேண்டும்! குருக்களுடன் போரிடுவதில் பாண்டுவின் வீர மகன்கள் உற்சாகங்கொள்ளவில்லை. அவர்கள் {பாண்டவர்கள்}, உலகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலேயே, தங்கள் பங்கை மீண்டும் பெற விரும்புகிறார்கள். திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} போருக்கு ஆதரவாக {அவர்களைவிடப் படைபலம் அதிகம் இருக்கிறது என்ற} காரணத்தைத் தேடினால், அது சரியான கராணமாக இருக்க முடியாது. பாண்டுவின் மகன்கள் அதிகப் பலம் கொண்டவர்கள்.
யுதிஷ்டிரனுக்கு ஆதரவாக ஏழு அக்ஷௌஹிணி துருப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் குருக்களுடன் போரிட விரும்பி, அவனது {யுதிஷ்டிரனின்} சொல்லுக்காகக் காத்திருக்கின்றனர். மனிதர்களில் புலிகளான சாத்யகி, பீமசேனன், பெரும்பலமிக்க இரட்டைச் சகோதரர்கள் ஆகியோரும், இன்னும் பிறரும் ஆயிரம் அக்ஷௌஹிணிகளின் பலத்துக் சமமான சக்தியைப் பெற்றவர்களாவர்.
ஒருபுறத்தில் இந்தப் பதினோரு பிரிவுகள் {11 அக்ஷௌஹிணிகள்} அணிவகுத்திருப்பது உண்மையே, எனினும், மறுபுறத்தில் உள்ள பலவடிவத் திறன்களைக் கொண்ட வலிய கரங்களுடைய தனஞ்சயனால் {அர்ஜுனனால்} இவை சமமாக்கப்படுகிறது. இந்தத் துருப்புகள் அனைத்தையும் சேர்த்தாலும் கிரீடி {அர்ஜுனன்} பலத்தில் விஞ்சியவனாகவே இருப்பான். அதே போலப் பெரும்பிரகாசம் மிக்க வசுதேவரின் மகன் {கிருஷ்ணன்} பெரும் பலமிக்க அறிவாற்றலுடையவன் ஆவான். அர்ஜுனனின் வீரம், கிருஷ்ணனின் ஞானம் ஆகியவற்றையும், அந்த எதிர்ப்படையின் அளவையும் நோக்கில் கொண்டவன் எவன்தான் போரிட விரும்புவான்? எனவே, அறநெறிக்கு கட்டுப்பட்டு, எது கொடுக்கப்பட வேண்டுமோ அதைத் திருப்பிதருமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள்” என்றார் {துருபதனின் புரோகிதர்}.
***********************
மற்ற பதிப்புகளில் இந்தப் பகுதியில் இருந்து புதிய உபபர்வமான சஞ்சயயான பர்வம் ஆரம்பிக்கிறது. கங்குலியில் அப்படி ஆரம்பிக்கவில்லை. அதனால் கங்குலியில் வழியிலேயே செல்கிறோம்...
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.