The desire of the king and Bhishma! | Udyoga Parva - Section 25 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 25)
பதிவின் சுருக்கம் : மன்னர் சொல்லி அனுப்பிய அனைத்தையும் தங்களிடம் சொல்லும்படி யுதிஷ்டிரன் சஞ்சயனிடம் கோருவது; அனைவரையும் சஞ்சயன் வாழ்த்தியது; திருதராஷ்டிரன் அமைதியை விரும்புவதாகச் சஞ்சயன் சொன்னது; உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பாண்டவர்கள் தகாததைச் செய்யக் கூடாது என்று எச்சரிப்பது; வெற்றி தோல்வியால் எந்தப் பயனும் இல்லை என்பதைச் சொன்னது; இரத்த உறவினர்களைக் கொன்று கிடைக்கும் வாழ்வு மரணத்திற்கு ஒப்பானது என்பதைச் சொன்னது; பாண்டவர்கள் முன்பு பணிந்து சஞ்சயன் அமைதியை வேண்டியது; இதுவே திருதராஷ்டிரன் மற்றும் பீஷ்மரின் விருப்பம் என்று சொன்னது...
யுதிஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சூதர் கவல்கணரின் மகனே {சஞ்சயரே}, பாண்டவர்கள், சிருஞ்சயர்கள், கிருஷ்ணன், யுயுதனன் {சாத்யகி}, விராடர் ஆகியோர் இங்கே ஒன்றாகச் சேர்ந்து இருக்கிறோம். திருதராஷ்டிரர் உம்மை என்ன சொல்ல வழிநடத்தினாரோ, அவை அனைத்தையும் எங்களுக்குச் சொல்லும்” என்றான்.
சஞ்சயன் {யுதிஷ்டிரனிடம்}, “யுதிஷ்டிரன், விருகோதரன் {பீமன்}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, சூரனின் வழித்தோன்றலான வாசுதேவன் {கிருஷ்ணன்}, சாத்யகி, பாஞ்சாலர்களின் முதிர்ந்த மன்னன் {துருபதன்}, பிருஷதனின் மகன் {பேரன்} திருஷ்டத்யும்னன் ஆகியோருக்கு என் வாழ்த்துகள். குருக்களின் நலன் விரும்பி, நான் சொல்லும் வார்த்தைகளை அனைவரும் கேட்பீராக. அமைதிக்கான வாய்ப்பை ஆவலுடன் வரவேற்கும் மன்னர் திருதராஷ்டிரர், இங்கே வரும் எனது இந்தப் பயணத்திற்காக, என் தேரைத் தயார் செய்யத் துரிதப்படுத்தினார்.
தன் தம்பிகள், மகன்கள் மற்றும் உறவினர்களுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரனுக்கு, இஃது ஏற்புடையதாகட்டும். பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} அமைதியை விரும்பட்டும். பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, உறுதி, மென்மை மற்றும் கபடற்ற தன்மையோடு கூடிய அனைத்து அறங்களையுந் தங்களிடம் கொண்டுள்ளனர். உயர்ந்த குடும்பத்தில் பிறந்த அவர்கள், மனிதாபிமானம், தாராளம், அவமானத்தைத் தரும் எந்தச் செயலையும் செய்ய ஆர்வமில்லாமை ஆகிய தன்மைகளைக் கொண்டவர்களாவர். எதைச் செய்வது சரி என்பதை அவர்கள் அறிவார்கள். நீங்கள் உயர்ந்த மனம் கொண்டோராகவும், பின்தொடரும் பயங்கரத் துருப்புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பதால் தாழ்ந்த செயல்கள் உங்களுக்குப் பொருந்தாது.
நீங்கள் ஒரு பாவச் செயலைச் செய்தால், அது வெள்ளைத் துணியில் பட்ட மைத்துளி போல, உங்கள் நற்பெயரில் பட்ட கறையாக இருக்கும். ஒரு செயலைச் செய்தால், அது, பாவம் மற்றும் நரகத்திற்கு வழிவகுக்கும் என்றும், உலகளாவிய படுகொலையை விளைவிக்கும் என்றும், அது (மனிதர்களுக்கு) அழிவைக் கொண்டு வரும் என்றும், {அதில் கிடைக்கும்} வெற்றியோ தோல்வியோ, விளைவுகள் ஒரே மதிப்பைத்தான் தரும் என்றும் அறிந்த எவன் அச்செயலைச் செய்யும் குற்றவாளியாவான்? தங்கள் உறவினர்களின் காரியத்திற்குச் சேவையாற்றியவர்கள் {பாண்டவர்கள்} அருளப்பட்டவர்களே. பழிச்செயல்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய உயிரை குருக்களின் நன்மையை உத்தரவாதப்படுத்துவதற்காக விடுபவர்களே, {குருக்குலத்தின்} உண்மையான மகன்களும், நண்பர்களும், உறவினர்களும் ஆவர்.
பிருதையின் மகன்களே {பாண்டவர்களே}, உங்கள் எதிரிகள் அனைவரையும் வீழ்த்தி, கொன்று, குருக்களை {கௌரவர்களை} நீங்கள் தண்டித்தால், அதற்கடுத்து வரும் உங்களது வாழ்க்கை மரணத்திற்கு ஒப்பானதாக இருக்கும். உண்மையில், இரத்த சம்பந்தமுடையவர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, எதற்காக வாழ வேண்டும்?
ஒருவன், அனைத்து தேவர்களும் தன் பக்கம் நிற்கும் இந்திரனேயானாலும், அவனால், கேசவன் {கிருஷ்ணன்}, சேகிதானன், சாத்யகி ஆகியோரின் துணையுடன், திருஷ்டத்யும்னன் கரங்களால் பாதுகாக்கப்படும் உங்களை எப்படி வீழ்த்த இயலும்? மேலும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, துரோணர், பீஷ்மர், அஸ்வத்தாமன், சல்லியன், கிருபர், கர்ணன், {பிற} க்ஷத்திரிய மன்னர்களின் படைகள் ஆகியோரால் காக்கப்படும் குருக்களைப் போர்க்களத்தில் யாரால் வீழ்த்த முடியும்?
எனவே, வெற்றியோ, தோல்வியோ எதிலும் நான் எந்த நன்மையையும் காணவில்லை. தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த இழிந்த மனிதர்களைப் போலப் பிருதையின் {குந்தியின்} மகன்களால் {பாண்டவர்களால்} அநீதியான ஒரு செயலை எவ்வாறு செய்ய முடியும்? எனவே, கிருஷ்ணன் மற்றும் பாஞ்சாலர்களின் முதிர்ந்த மன்னன் {துருபதன்} ஆகியோர் முன்பு நான் அடிபணிந்து நின்று அமைதிப்படுத்துகிறேன். குருக்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகிய இருவரும் நன்மையடையும் வகையில் என் கரங்களைக் குவித்து நான் உன்னிடம் அடைக்கலம் அடைகிறேன். கிருஷ்ணனோ, தனஞ்சயனோ {அர்ஜுனனோ} இந்த எனது வார்த்தைகளுக்கு ஏற்ப செயல்பட முடியாது என்பதற்கு வாய்ப்பில்லை. (அவ்வாறு செய்ய) வேண்டிக் கொள்ளப்பட்டால், அவர்கள் இருவரும் தங்கள் உயிரையே கொடுப்பார்கள். {It is not likely that either Krishna or Dhananjaya will not act up to these my words. Either of them would lay down his life, if besought (to do so)}. எனவே, என் பணியின் வெற்றிக்காகவே நான் இதைச் சொல்கிறேன். உங்களுக்குள் (குருக்களிடம்) அமைதி உறுதிப்பட வேண்டும் என்பதே மன்னர் {திருதராஷ்டிரர்} மற்றும் அவரது ஆலோசகரான பீஷ்மரின் விருப்பமாகும்” என்றான் {சஞ்சயன்}.