Yudhishthira asked for his kingdom! | Udyoga Parva - Section 26 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 26)
பதிவின் சுருக்கம் : போரை வெறுத்து அமைதியையே தான் விரும்புவதாகச் சஞ்சயனிடம் யுதிஷ்டிரன் சொன்னது; ஆசையை மனிதர்கள் விடுவதில்லை; ஆசையை அனுபவிப்பதனால் அது தணிவதில்லை என்று சொல்வது; திருதராஷ்டிரன் விதைத்ததையே அறுப்பதாகச் சொல்வது; விதுரரைத் துரியோதனனும் திருதராஷ்டிரனும் தள்ளி வைத்ததைக் கண்டிப்பது; தனது மகனின் தீய செயல்களைத் திருதராஷ்டிரர் அனுமதிப்பதாகக் குற்றம் சாட்டுவது; அர்ஜுனனும் கர்ணனும் சமமல்ல என்று சொல்வது; இந்திரப்பிரஸ்தத்தைக் கொடுத்துவிட்டால் தான் அமைதியடைவதாக யுதிஷ்டிரன் சஞ்சயனிடம் சொல்வது...
யுதிஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “போரைச்சுட்டிக் காட்டும் விதமான என்னுடைய எந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ! சஞ்சயரே, போரை நினைத்து ஐயுற்று நீர் அஞ்சுகிறீர். ஓ! அய்யா, போரைக்காட்டிலும் அமைதியே விரும்பத்தக்கது. ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, மாற்று இருக்கும்போது போரிட எவன் விரும்புவான்? ஓ! சஞ்சயரே, எதுவும் செய்யாமலே, ஒருவன் தன் இதய விருப்பம் அனைத்தையும் அடையலாம் என்றால், அவன், எதையும் செய்ய விரும்பமாட்டான். {போரிட்டாலும்கூட} சின்னப் பிரச்சனையைத் தான் அவன் சந்திக்க நேரிடும் என்றாலும் அவன் போரில் ஈடுபட விரும்பமாட்டான் என்பதை நான் அறிந்திருக்கிறேன். எப்போதானாலும், ஒரு மனிதன் ஏன் போருக்குச் செல்ல வேண்டும்? போரைத் தேர்ந்தெடுக்கும்படி தேவர்களால் சபிக்கப்பட்டவன் எவன்?
பிருதையின் {குந்தியின்} மகன்கள் தங்கள் சொந்த மகிழ்ச்சியை விரும்புகிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்களின் நடத்தை எப்போதும் நீதியாலும், உலக நன்மைக்கு உகந்ததாலும் குறிக்கப்படுகிறது. அவர்கள் நீதியினால் விளையும் மகிழ்ச்சியை மட்டுமே விரும்புகிறார்கள். தனது புலன்களின் வழிகாட்டுதலை விருப்பத்துடன் தொடர்ந்து சென்று, துன்பத்தைத் தவிர்த்து மகிழ்ச்சியை அடைய விரும்புபவன், துன்பத்தின் சாரம் கொண்ட நடவடிக்கையைத் தவிர வேறு எதையும் மேற்கொள்வதில்லை. இன்பத்துக்குப் பின்னால் பேராவல் கொண்டு ஓடுபவன், தன் உடலுக்குப் பாதிப்பை உண்டாக்குகிறான்; இத்தகு பேராவலில் இருந்து விடுபட்டவன், துன்பம் என்பது என்ன என்பதை அறிவதில்லை. தூண்டப்பட்ட நெருப்பில் அதிக எரிபொருளை {விறகை} இடும்போது, மிகுந்த சக்தியுடன் அது மீண்டும் சுடர்விட்டு எரிகிறது. அதே போல, ஆசை, அதன் பொருளை அடைந்தாலும், தூண்டப்படாத நெருப்பில் தெளிந்த நெய்யைவிடுவது போல, அது {நெருப்பு போன்ற ஆசை} தணிவதில்லை, சக்தியே பெறுகிறது.
நாங்கள் கொண்டிருப்பவற்றோடு, மன்னர் திருதராஷ்டிரரிடம் உள்ள அபரிமிதமான மகிழ்ச்சியையும் நிதியையும் ஒப்பீடு செய்து பாரும். பேறற்றவன் வெற்றியடைவதில்லை. பேறற்றவன் இசையின் குரலை {இசை போன்ற குரலை} அனுபவிப்பதில்லை. பேறற்றவன் மலர்மாலைகளையும் நறுமணப் பொருட்களையும் அனுபவிப்பதில்லை. அதே போல பேறற்றவன், மணமிக்கக் குளிர்ந்த தைலங்களையும் அனுபவிப்பதில்லை. கடைசியாக, பேறற்றவன், நல்ல உடைகளை உடுத்துவதில்லை. இஃது இப்படி இல்லை என்றால், நாங்கள் குருக்களிடம் இருந்து விரட்டப்பட்டிருக்க மாட்டோம். இவை அனைத்தும் உண்மையே எனினும், இதுவரை யாரும் இதய வேதனைகளை அகற்றவில்லை.
மன்னர் {திருதராஷ்டிரர்}, தானே பிரச்சனையில் இருந்து கொண்டு, மற்றவர்களின் வலிமையில் பாதுகாப்பு தேடுகிறார். இது நல்லதில்லை. எனினும், பிறர் மீது அவர் {திருதராஷ்டிரர்} எந்த நடத்தையைக் கைக்கொள்கிறாரோ, அதையே அவர் மற்றவர்களிடமும் பெறட்டும்.
வசந்த காலத்தின் நடுப்பகல் வேளையில், புதர் நிறைந்த அடர்ந்த காட்டில் நெருப்பை வீசுபவன், காற்றின் துணையால் அந்நெருப்புச் சுடர்விட்டெரியும்போது, அத்தனைக்காகவும் வருத்தப்பட்டுத் தப்பிக்கவே விரும்புவான் என்பது நிச்சயம்.
ஓ! சஞ்சயரே, மன்னர் திருதராஷ்டிரர் இந்தச் செழிப்பனைத்தையும் கொண்டிருந்தும், ஏன் புலம்புகிறார்? ஏனென்றால், அவர் கோணலான வழிகளுக்கு அடிமையாகி, தீய ஆன்மா கொண்ட தனது தீய மகனின் அறிவுரைகளை முதலில் பின்பற்றி, தன் அறியாமையால் {மடத்தனத்தால்} அதை உறுதி செய்தார். தன் நலன்விரும்பிகளில் சிறந்தவரான விதுரரின் வார்த்தைகளைக் கேட்டு, ஏதோ அவர் தனக்கு எதிரி போல நினைத்துக் கொண்டு துரியோதனன் அவரை {விதுரரை} அலட்சியம் செய்தான்.
தனது மகன்களை மட்டுமே திருப்தி செய்ய விரும்பிய மன்னர் திருதராஷ்டிரர், தெரிந்தே அநீதியான பாதையில் நுழைபவராக இருந்தார். உண்மையில், தன் மகன் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, அவர் {திருதராஷ்டிரர்}, குருக்கள் அனைவரைவிடவும் ஞானவானும், தன் நலவிரும்பிகளில் சிறந்தவரும், பெரும் கல்வி உடையவரும், புத்திசாலித்தனமாகப் பேசுபவரும், நீதியின்படி செயல்படுபவருமான விதுரருக்குச் செவி சாய்க்கவில்லை.
பிறரிடம் மதிப்பை நாடுபவனும், பொறாமை கொண்டவனும், வெஞ்சினம் கொண்டவனும், அறம் பொருளை அடைவதற்கான விதிகளை மீறுபவனும், முறைமீறும் நாக்குடையவனும் {முறைமீறிப் பேசுபவனும்}, எப்போதும் தன் கோபத்தின் ஆணைகளையே செய்பவனும், புலன்நுகர் இன்பங்களில் மூழ்கிய ஆன்மா கொண்டவனும், பலரிடம் பகைமை கொண்டவனும், எந்த விதிக்கும் கீழ்ப்படியாதவனும், இணங்காத இதயம் கொண்ட தீய வாழ்வு வாழ்பவனும், தீய புரிதல் கொண்டவனுமான தனது மகனை மனநிறைவு கொள்ளச் செய்யவே மன்னர் திருதராஷ்டிரர் விரும்புகிறார். இது போன்ற ஒரு மகனுக்காக, மன்னர் திருதராஷ்டிரர் அறிந்தே அறத்தையும், இன்பத்தையும் கைவிட்டார்.
ஓ! சஞ்சயரே, நான் பகடையாடிக் கொண்டிருக்கையில், விதுரரின் ஞானம் நிறைந்த அற்புதமான வார்த்தைகள் திருதராஷ்டிரரின் பாராட்டைப் பெறாத போதே, குருக்களின் அழிவு அருகில் இருக்கிறது என நான் நினைத்தேன். ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, பிறகு, விதுரரின் வார்த்தைகளை அவமதித்தபோதே, குருக்களைப் பிரச்சனை வந்தடைந்துவிட்டது. அவரது {விதுரரின்} ஞானத்தின் தலைமையின் கீழ் அவர்கள் இருந்த வரை, அவர்களது நாடு மலர்ச்சியடைந்த நிலையில் இருந்தது.
ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, பேராசை கொண்ட துரியோதனுக்கு இப்போது யார் ஆலோசகர்கள் என்பதை என்னிடம் கேளும். துச்சாசனன், சுபலனின் மகன் {சகுனி}, சூதரின் மகனான கர்ணனுமே அவர்கள்! ஓ கவல்கணரின் மகனே {சஞ்சயரே}, அவனுடைய இந்த அறியாமையைப் பாரும்!
திருதராஷ்டிரர் பிறரிடம் இருந்து அவர்களது அரியணையை எடுத்துக் கொண்டபிறகு, விதுரர் பிற இடங்களுக்குத் துரத்தப்பட்ட பிறகு, குருக்களிடமும், சிருஞ்சயர்களிடமும் எந்தச் செழுமையையும் எப்படிக் காண முடியும்? எனவே, நான் நினைத்தாலும் என்னால் அவற்றைக் காண முடியவில்லை. தன் மகன்களுடன் கூடிய திருதராஷ்டிரர் இப்போது முழு உலகத்தின் பரந்த ஆட்சி உரிமையையும் பகையில்லாமல் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எனவே, முழுமையான அமைதி அடைய முடியாததாகும்.
ஏற்கனவே அவர் பெற்றிருப்பவற்றைத் தானே வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் கருதுகிறார். போருக்காக அர்ஜுனன் தனது ஆயுதத்தை எடுக்கும்போது, அதைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியும் எனக் கர்ணன் நம்புகிறான். இதற்கு முன்பு பல பெரிய போர்கள் நடைபெற்றன. அப்போதெல்லாம், ஏன் கர்ணனால் அவர்களுக்கு {கௌரவர்களுக்கு} எந்தப் பலனும் கிட்டவில்லை. கர்ணன், துரோணர், பாட்டனான பீஷ்மர் மற்றும் பிற குருக்களும், அர்ஜுனனுடன் ஒப்பிடத்தக்க வகையில் வில்லைத் தாங்குபவன் வேறு எவனும் இல்லை என்பதை அறிவார்கள். எதிரிகளை அடக்குபவனான அர்ஜுனன் உயிரோடு இருக்கும்போதே, துரியோதனன் ஆட்சியுரிமையை எப்படி அடைந்தான் என்பதை, பூமியில் கூடியிருக்கும் அனைத்து ஆட்சியாளர்களும் அறிவார்கள்.
போர்க்களத்திற்கு அவன் {துரியோதனன்} சென்ற போது, நாலு முழ வில்லைத்தவிர வேறு ஒன்றும் இல்லாத அர்ஜுனன், எப்படித் தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டான் என்பதை அறிந்தும், பாண்டு மகன்களின் உடைமைகளை அவனால் {துரியோதனனால்} கொள்ளையடிக்க இயலும் என்று அந்தத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} தனக்குப் பொருத்தமாகவே {மடத்தனமாக} நம்புகிறான். நீட்டி இழுக்கப்பட்ட காண்டீவத்தின் நாணொலியைக் கேட்காததாலேயே திருதராஷ்டிரன் மகன்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். பீமனின் கோபத்தைக் காணாத வரையில், தனது நோக்கம் ஏற்கனவே ஈடேறிவிட்டதாகவே துரியோதனன் நம்புவான். ஓ! அய்யா {சஞ்சயரே}, பீமன், அர்ஜுனன், வீரனான நகுலன், அமைதியான சகாதேவன் ஆகியோர் உயிருடன் இருக்கும் வரை இந்திரனும் கூட எங்கள் உடைமைகளைக் கொள்ளையிட அஞ்சுவான்.
ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, தன் மகனுடன் கூடிய முதிர்ந்த மன்னர் {திருதராஷ்டிரர்}, ஓ! சஞ்சயரே, போர்க்களத்தில் பாண்டு மகன்களின் கோப நெருப்பில் எரியப் போகும் தன் மகன்கள் அழியமாட்டார்கள் என்றே கருதுகிறார். ஓ! சஞ்சயரே, நாங்கள் எத்தகு துன்பத்தை அனுபவித்தோம் என்பதையும் நீர் அறிவீர்! நான் உம் மீது கொண்டிருக்கும் மதிப்பால், அவர்கள் அனைவரையும் மன்னிப்பேன். எங்களுக்கும் குருவின் மகன்களுக்கும் இடையில் நடந்தது அத்தனையும் நீர் அறிவீர். திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} நாங்கள் இதுவரை எப்படி நடந்திருக்கிறோம் என்பதையும் நீர் அறிவீர். பொருட்களின் நிலை இப்போது போலவே தொடரட்டும், நீர் அறிவுறுத்துவது போலவே நான் அமைதியை நாடுவேன். இந்திரப்பிரஸ்தம் எனது நாடாகட்டும், பாரதக் குலத்தின் தலைவனான துரியோதனன் எனக்கு இதைக் கொடுக்கட்டும்!" என்றான் {யுதிஷ்டிரன்}.