Sanjaya's response! | Udyoga Parva - Section 24 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 24)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் விசாரித்தவற்றுக்குச் சஞ்சயன் பதிலளிப்பது; அந்தணர்களுக்கு யுதிஷ்டிரன் அளித்த தானத்தைத் துரியோதனன் திரும்பப் பெறவில்லை என்று சொன்னது; பாண்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகத் திருதராஷ்டிரன் வருந்துவதாகச் சொன்னது; கௌரவர்கள், பாண்டவர்கள், மற்றும் அங்கே கூடியிருந்த அனைத்து மன்னர்களும் அமைதியடையும் வகையில் நல்ல வழியைத் தேர்வு செய்யுமாறு சஞ்சயன் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...
சஞ்சயன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, நீ சொல்வது போலத்தான் இஃது உள்ளது! குருக்கள் மற்றும் அவர்களில் முதன்மையானோரின் நலத்தைக் குறித்தா கேட்கிறாய்? நீ விசாரிக்கும் குருக்களில் முதன்மையானோர், ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, அனைத்து வகைப் பிணிகளில் இருந்தும் விடுபட்டு, நல்ல மன நிலையில் இருக்கிறார்கள். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, குறிப்பிடத்தகுந்த நீதிமான்களும் முதிர்ந்தவர்களும் இருக்கும் அதே வேளையில், திருதராஷ்டிரர் மகனிடத்தில் {துரியோதனனிடத்தில்} பாவிகளும், தீயவர்களும் கூட இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்.
திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்}, தன் எதிரிகளுக்குக் கூடத் தானமளிப்பான்; எனவே, அந்தணர்களுக்குக் கொடுக்கப்பட்ட நன்கொடைகளைத் திரும்பப் பெற வாய்ப்பில்லை. உங்கள் மீது தீய எண்ணம் இல்லாதவர்களுக்கும், தீங்கு செய்ய வழி வகுப்பதும், கசாப்புக்காரர்களுக்குப் பொருந்துவதுமான விதியைப் பின்பற்றும் உங்களைப் போன்ற க்ஷத்திரியர்களுக்கு இது {கொடுத்ததைப் பறிப்பது} வழக்கமே; என்றாலும், இது நடைமுறைக்கு நல்லதல்ல. நீதிமான்களான உங்களிடம், தீய மனிதனைப் போலப் பகைமை பாராட்டுவதால், தன் மகன்களுடன் கூடிய திருதராஷ்டிரர், உறவினருக்குத் தீங்கு செய்த {குடும்பச் சச்சரவு - மித்ரதுரோகத்துக்கு Intestine dissensions} பாவம் செய்தவர் போலக் குற்ற உணர்ச்சியில் இருக்கிறார்.
அவர் {திருதராஷ்டிரர்} (உங்களுக்கு இழைக்கப்பட்ட) தீங்கை அங்கீகரிக்கவில்லை; அவர் அதற்காக மிகவும் வருந்துகிறார்; ஓ! யுதிஷ்டிரா, அந்தணர்களுடன் தொடர்பு கொண்டு, உறவினருக்குத் தீங்கு {துரோகம்} செய்யத் தூண்டுவது {provoking Intestine dissensions} பாவங்கள் அனைத்திலும் பெரியது என்பதை அறிந்ததால், அந்தக் கிழவர் {திருதராஷ்டிரர்} மிகவும் வருந்திக் கொண்டிருக்கிறார். ஓ! மனிதர்களின் மன்னா, களத்தில் {சபையில்} உனது ஆற்றலையும், போர்க்களத்தில் தலைமையை ஏற்கும் அர்ஜுனன் ஆற்றலையும் அவர்கள் நினைக்கவே செய்கிறார்கள். சங்கு மற்றும் துந்துபி ஒலி உயர்ந்த சுதியை அடையும்போதெல்லாம், கதாதாரியான பீமனை அவர்கள் நினைக்கவே செய்கிறார்கள். போர்க்கள மத்தியில் எல்லாத் திக்குகளிலும் தடையின்றிச் செல்பவர்களும், கணைகளைத் தடையில்லாமல் எதிரிகள் மீது பொழிபவர்களும், போரில் நடுக்கம் என்பதை அறியாதவர்களும், பெரும் பலமிக்கத் தேர்வீரர்களுமான மாத்ரியின் இரண்டு மகன்களையும் {நகுல சகாதேவர்களையும்} அவர்கள் நினைக்கவே செய்கிறார்கள்.
ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அனைத்து அறங்களையும் கொண்டவனான நீயே இதுபோன்ற தாங்க முடியாத துன்பத்தை அனுபவிக்க நேர்ந்ததென்றால், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எதிர்காலம், ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கு என்ன வைத்திருக்கிறது என்பதை அறியமுடியாது என்றே நான் நம்புகிறேன். ஓ! யுதிஷ்டிரா, இவையனைத்தையும், நீ உனது புத்திசாலித்தனத்தால் சரி செய்வாய் என்பதில் ஐயமில்லை. இந்திரனுக்கு நிகரான பாண்டுவின் மகன்களான நீங்கள் ஒவ்வொருவரும், இன்பத்திற்காக அறத்தை {காமத்துக்காகத் தர்மத்தை} எப்போதும் கைவிடமாட்டீர்கள். ஓ! யுதிஷ்டிரா, திருதராஷ்டிரர் மகன்களும், பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் மற்றும் இங்கே கூடியிருக்கும் மன்னர்கள் அனைவரும் அமைதியடையும் வகையில், நீயே உனது விவேகத்தினால் {நிலைமையைச்} சரி செய்வாயாக. ஓ! யுதிஷ்டிரா, உனது தந்தையான {பெரியதந்தையான} திருதராஷ்டிரர், தனது அமைச்சர்களுடனும், மகன்களுடனும் கூடி ஆலோசித்து என்னிடம் சொல்லி அனுப்பியதை மனதில் கொள்வாயாக. அவற்றைக் கவனமாகக் கேள்!" என்று சொன்னான் {சஞ்சயன்}