Give atleast five villages! | Udyoga Parva - Section 31 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 31)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனை வணங்கி, அவனது நலத்தை விசாரிக்குமாறும், பாண்டவர்களிடம் அவன் பாரபட்சமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்குமாறும் சஞ்சயனை யுதிஷ்டிரன் கேட்டுக் கொண்டது; பீஷ்மரிடம் பேரர்களின் ஒற்றுமையைப் பேணத் தீர்மானிக்கச் சொன்னது; விதுரரிடம் அமைதிக்காக ஆலோசிக்கச் சொன்னது; துரியோதனனிடம், அவன் செய்த தீங்குகள் அனைத்தையும் தாங்கள் மன்னித்து விடுவதாகவும், தங்களுக்கு ஐந்து கிராமத்தையாவது கொடுக்குமாறும் சஞ்சயனை யுதிஷ்டிரன் சொல்லச்சொன்னது; அமைதிக்கும், போருக்கும், மென்மைக்கும், கடுமைக்கும் தான் தகுந்தவனாகவே இருப்பதாகவும் சொன்னது...
யுதிஷ்டிரன் {சஞ்சயரிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயரே, நீதிமிக்கவர்கள், நீதியற்றவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பலமற்றவர்கள், பலமிக்கவர்கள் ஆகியோர் அனைவரும் படைப்பாளனின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றனர். சிறுவருக்கு ஞானத்தையும், கற்றோருக்கு மூடத்தனத்தையும் தன்விருப்பப்படி அந்தப் பரம்பொருளான கடவுளே கொடுக்கிறான். எங்களது பலம் குறித்து உம்மிடம் திருதராஷ்டிரர் கேட்டால், இங்கிருப்போர் அனைவரிடமும் உற்சாகமாகக் கேட்டு, உண்மையை உறுதி செய்து கொண்டு, அவரிடம் அனைத்தையும் உண்மையாகச் சொல்லும்.
ஓ! கவல்கணர் மகனே {சஞ்சயரே}, குருக்களிடம் {கௌரவர்களிடம்} சென்று, வலிமைமிக்க திருதராஷ்டிரரின் பாதங்களைத் தொட்டு வணங்கி, எங்கள் பெயரால் அவரது நலத்தை விசாரிப்பீராக. குருக்கள் மத்தியில் அமர்ந்திருக்கும்போது, அவரிடம் {திருதராஷ்டிரரிடம்}, “ஓ! மன்னா, பாண்டுவின் மகன்கள், உமது ஆற்றலின் விளைவாக மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஓ! எதிரிகளை அடக்குபவரே, இளம் வயதுடைய அந்தப் பிள்ளைகள் {பாண்டவர்கள்} உமது கருணையினாலேயே ஒரு நாட்டை அடைந்தனர். முதலில் அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஒரு நாட்டை அளித்துவிட்டு, எப்போதும் நீர் அவர்களிடம் பாகுபாட்டுடன் நடந்து கொள்ளக்கூடாது. அதனால் {அப்படி நடந்தால்} அவர்களுக்கு {கௌரவர்களுக்கு} அழிவு ஏற்படும்!” என்று எங்கள் சார்பாகச் சொல்லும்.
ஓ! சஞ்சயரே, இந்த முழு நாடும் ஒருவருக்கே சொந்தமென்பது பொருந்தாது. மீண்டும் அவரிடம் {திருதராஷ்டிரரிடம்}, “ஓ! அய்யா, நாங்கள் ஒற்றுமையுடன் வாழ விரும்புகிறோம். எதிரிகளால் வீழ்த்தப்படும் நிலைக்கு நீங்கள் பாதிப்படைய வேண்டாம்” என்று எங்கள் சார்பாகச் சொல்லும்.
ஓ சஞ்சயரே, பாரதர்களின் பாட்டனும் {பிதாமகரும்}, சந்தனுவின் மகனுமான பீஷ்மரிடம் என் பெயரால் நீர் தலைவணங்க வேண்டும். எங்கள் பாட்டனை {பீஷ்மரை} வணங்கிய பிறகு, அவரிடம், “சந்தனுவின் குலம் அழிவின் விளிம்பில் இருந்த போது, நீரே அதைப் புதுப்பித்தீர். எனவே, ஓ! அய்யா, உமது பேரர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் நல்லுறவுடன் வாழ, உமது தீர்மானத்தின்படியே வழிவகை செய்யும்” என்பது சொல்லப்பட வேண்டும்.
பிறகு, குருக்களின் ஆலோசகரான விதுரரிடம், “ஓ! இனிமையானவரே, யுதிஷ்டிரனுக்கு நன்மை செய்யும் விருப்பத்துடன் அமைதியை ஆலோசியும்” என்று நீர் சொல்லும்.
பொறுமையற்ற இளவரசனான துரியோதனனிடம், அவன் குருக்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும்போது, “குருக்கள் கொல்லப்படுவதைக் காண மனம் இல்லாத காரணத்தால், அப்பாவியும், ஆதரவற்றவளுமான திரௌபதிக்கு சபையின் மத்தியில் நீ செய்த அவமதிப்புகளை, நாங்கள் அமைதியாகப் பொறுத்துக் கொள்வோம்” என்று மீண்டும் மீண்டும் மன்றாடுவீராக.
பழிதீர்க்கும் வலிமையைப் பாண்டுவின் மகன்கள் பெற்றிருந்தாலும், அதற்கு முன்பும் பின்பும் இரு சமயங்களிலும் செய்யப்பட்ட பிற தீங்குகளையும் அமைதியாகப் பொறுத்துக் கொள்கிறார்கள். இவை அனைத்தையும், உண்மையில், கௌரவர்கள் அறிவார்கள். ஓ! இனிமையானவனே {துரியோதனா}, மான் தோலுடுத்தச் செய்து எங்களை நாடு கடத்தவும் செய்தாய். குருக்கள் கொல்லப்படுவதை விரும்பாத நாங்கள் அதையும் பொறுத்துக் கொண்டிருக்கிறோம்.
குந்தியை அலட்சியம் செய்து, உனக்குக் கீழ்ப்படிந்தே கிருஷ்ணையைத் {திரௌபதியை} துச்சாசனன் இழுத்தான். அச்செயலையும் நாங்கள் மன்னிப்போம். ஆனால், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, நாட்டின் முறையான பங்கை நாங்கள் பெற வேண்டும். ஓ! மனிதர்களில் காளையே, பிறருக்குச் சொந்தமானவற்றில் இருந்து உனது பேராசை கொண்ட இதயத்தைத் திருப்பு. ஓ! மன்னா, அப்போதே மகிழ்ச்சி ஏற்பட்டு, நமக்கு மத்தியில் அமைதி நிலவும்.
நாங்கள் அமைதியையே விரும்புகிறோம்; {எனவே} பேரரசின் ஒரு மாகாணத்தையாவது எங்களுக்குக் கொடு. குசஸ்தலம் {அவிஸ்தலம்}, விருகஸ்தலம், மாகந்தி, வாரணாவதம் ஆகியவற்றையும், ஐந்தாவதாக நீ விரும்பும் ஏதாவதொன்றையும் கூடக் கொடு. இது கூட நமது சச்சரவை {வீண் சண்டையை} முடிவடையச் செய்யும். ஓ! சுயோதனா, உனது ஐந்து சகோதரர்களுக்கு ஐந்து கிராமங்களையாவது கொடு” என்று சொல்லி மீண்டும் மீண்டும் நீர் வேண்டிக் கொள்வீராக.
ஓ! சஞ்சயரே, ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, எங்களுக்கும், எங்களது சகோதரர்களுக்கும் இடையில் அமைதி ஏற்படட்டும்.
அவனிடம் {துரியோதனனிடம்}, “சகோதரர்கள் சகோதரர்களைத் தொடரட்டும், தந்தையர் மகன்களுடன் ஒற்றுமையாக இருக்கட்டும். மகிழ்ச்சியானச் சிரிப்பில் குருக்களுடன் {கௌரவர்களுடன்} பாஞ்சாலர்கள் கலக்கட்டும். குருக்களையும், பாஞ்சாலர்களையும் மொத்தமாகவும் பலமாகவும் காணவே நான் விரும்புகிறேன். ஓ! பாரத குலத்தின் காளையே, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நாம் அமைதியடைவோமாக” என்றும் சொல்லும்.
ஓ! சஞ்சயரே, போருக்கும் அமைதிக்கும் சமத்திறன் கொண்டவனாக நான் இருக்கிறேன். நான் செல்வத்தை அடையவும், அறத்தை ஈட்டவும் தயாராக இருக்கிறேன். மென்மைக்கும் கடுமைக்கும் பொருத்தமானவனாகவே நான் இருக்கிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.