A single tree cannot be a grove?| Udyoga Parva - Section 36c | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 36) {விதுர நீதி - 10}
பதிவின் சுருக்கம் : நெருப்பு போல இருக்கும் யுதிஷ்டிரன் தனது மகன்களை அழித்துவிடுவான் என்று தான் அஞ்சுவதாகத் திருதராஷ்டிரன் சொல்வது; அச்சத்தைத் தவிர்க்கும் வழிவகைகளை விதுரன் சொல்வது; உறவினர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதைச் சொல்வது; ஒற்றுமையின் வலிமை குறித்துச் சொல்வது; கொல்லத்தகாதவர்கள் யார்? உடல்நலத்தின் முக்கியத்துவம், சினத்தின் தன்மை ஆகியவற்றைச் சொல்லி வலிமை மற்றும் மென்மையுடன் கூடிய செழிப்பை அடைவதே உண்மையான கொள்கை எனச் சொல்வது; சூதாட்டத்தின் போது தான் எச்சரித்ததையும், திருதராஷ்டிரன் அதை ஏற்காததையும் சொல்லி, துரியோதனனை அவனது தீய வழிகளில் இருந்து திருப்பும்படி விதுரன் சொல்வது...
திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான் “நெருப்புச்சுடர் போன்ற மன்னன் யுதிஷ்டிரன் என்னால் ஏமாற்றப்பட்டான். அவன் நிச்சயம் எனது மகன்களைப் போர்க்களத்தில் அடியோடு அழிப்பான். எனவே, அனைத்தும் ஆபத்து நிறைந்ததாகவே எனக்குத் தெரிகிறது. என் மனம் முழுவதிலும் கவலையே இருக்கிறது. ஓ! பெரும் புத்திசாலித்தனம் கொண்டவனே {விதுரா}, என் கவலைகளை அகற்றும் வகையிலான சொற்களை எனக்குச் சொல்வாயாக” என்றான்.
அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, அறிவு மற்றும் தவத்தைத் தவிர, புலன்களை அடக்குவதைத் தவிர, பேராசையைக் கைவிடுவதைத் தவிர வேறு எதிலும் நான் நன்மையைக் காணவில்லை. தன்னறிவால் {ஆன்ம ஞானத்தால்}, அச்சம் அகலுகிறது; தவத்தால், பெரியதும் மதிப்புமிக்கதும் வெல்லப்படுகிறது; பெரியோருக்காகக் காத்திருப்பதால் {பெரியோருக்குப் பணிவிடை செய்வதால்}, கல்வி அடையப்படுகிறது, தன்னடக்கத்தால் {புலனடக்கத்தால்}, அமைதி பெறப்படுகிறது.
கொடையாலோ, வேதச் சடங்குகளைப் பயில்வதாலோ கிடைக்கும் தகுதியை அடையாமல், விடுதலையை {முக்தியை} விரும்புவோர், கோபம் மற்றும் வெறுப்பில் இருந்து விடுபட்டு வாழ்வைக் கடத்துவதில்லை. சிறந்த வழியில் கிடைக்கும் கல்வியாலும், அறம்சார்ந்த போராட்டத்தாலும், கடுமையாகச் செய்யப்பட்ட தவத்தாலும் கிடைக்கும் மகிழ்ச்சி, இறுதிக்காலம் வரை எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
{உறவினர்கள் 1}
தன் உறவினர்களுடன் அமைதியாக இல்லாதவர்கள், நன்கு தயாரிக்கப்பட்ட படுக்கைகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் உறக்கத்தைப் பெறுவதில்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்கள் {உறவினர்களுடன் அமைதியாக இல்லாதவர்கள்} பெண்களிடத்திலோ, புலவர்கள் {மாகதர்கள்} மற்றும் துதிபாடிகளின் {சூதர்களின்} துதி பாடல்களிலோ கூட மகிழ்ச்சியை அடைவதில்லை. அப்படிப்பட்ட மனிதர்கள் அறம் பயிலவே முடியாது. இவ்வுலகில் மகிழ்ச்சி அவர்களுடையதாக இருக்காது.
எந்தச் சிறப்பும் அவர்களுடையதாக இருக்க முடியாது. அமைதி அவர்களிடம் எந்த அழகையும் கொடுப்பதில்லை. தங்களுக்கு நன்மை தரும் ஆலோசனைகள் அவர்களுக்கு நிறைவைத் தருவதில்லை. அவர்களிடம் இல்லாததை அவர்கள் பெறுவதுமில்லை, தங்களிடம் உள்ளதையும் அவர்கள் தக்க வைத்துக் கொள்ளவும் இயலாது. ஓ! மன்னா, அத்தகு மனிதர்களுக்கு அழிவைத் தவிர வேறு எந்த முடிவும் கிடையாது.
{ஒற்றுமையின் வலிமை}
பசுக்களிடம் பாலும், அந்தணர்களிடம் தவமும், பெண்களிடம் நிலையாமையும் {உறுதியற்ற தன்மையும்} உண்டாவதைப் போல, உறவினர்களிடம் அச்சமும் உண்டாக வேண்டும். ஒன்றாகச் சேர்க்கப்பட்ட சம நீளம் கொண்ட, எண்ணற்ற மெல்லிய நூல்கள், தங்கள் எண்ணிக்கையின் பலத்தால், தங்கள் மேல் முன்னும் பின்னும் நிலையாக உருண்டு கொண்டிருக்கும் உருளையைத் தாங்க முடிகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நல்ல உறவினர்களின் காரியத்திலும் இதுவே வழக்கு. {அதாவது, நல்ல உறவினர்களுடன் ஒற்றுமையாக இருப்பதே, பெரும் பாரத்தைச் சுமக்கும் வலிமையைத் தரும்}.
ஓ! திருதராஷ்டிரரே, அந்தணர்கள், பெண்கள், உறவினர்கள், பசுக்கள் ஆகியோர் மீது கொடுங்கோன்மை செலுத்துபவர்கள், கனிந்த கனிகள் விழுவதைப் போல, தங்கள் நிலையில் இருந்து விரைவில் விழுகிறார்கள்.
தனியாக நிற்கும் ஒரு மரம், என்னதான் பெரியதாக, பலமாக, ஆழமான வேர்கள் உடையதாக இருந்தாலும், பலத்த காற்று வீசும்போது, அதன் அடிமரம் திசை திரும்பவும், நொறுங்கவும் செய்கிறது. எனினும், நெருக்கமாகவும், கச்சிதமாகவும் வளரும் மரங்கள், {பரஸ்பரம்} ஒன்றோடு ஒன்று சார்ந்து இருக்கும் தங்கள் தகுதியின் காரணமாக, மிகப் பெரிய கடுமையான காற்றையும் எதிர்த்து நிற்கின்றன.
எனவே, {யாரோடும் சேராமல்} தனியாக இருக்கும் ஒருவன், அனைத்து அறங்களுடனும் இருந்தாலும், காற்றால் வீழ்த்தப்படும் தனி மரம் போல, எதிரிகளால் வீழ்த்தப்படக் கூடியவனே என்று கருதப்படுகிறான். அதே போல, உறவினர்கள், ஒருவருக்கு ஒருவர் சார்ந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதன் விளைவாக, தடாகத்தில் இருக்கும் தாமரைத் தண்டுகளைப் போல இணைந்தே வளர்கின்றனர். {உறவினர்களுடன் ஒற்றுமையாக வாழ்பவன், அவர்களோடு சேர்ந்து தானும் வளர்கிறான்}.
{கொல்லத்தகாதவர்கள்}
அந்தணர்கள், பசுக்கள், உறவினர்கள், குழந்தைகள், பெண்கள், உணவிட்டோர், பாதுகாப்பு கோரி சரணடைந்தோர் ஆகியோர் {எப்போதும்} கொல்லப்படவே கூடாது.
{உடல் நலம்}
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, செல்வமில்லாமல், ஒருவனுக்கு மேனியில் நல்ல தரம் இருக்காது. எனினும் நீர் உடல்நலத்தோடு இருந்தால், நீர் உமது நன்மையை அடைய முடியும். உடல்நலமற்று நோயாளியாய் இருப்பவன் பிணமே.
{சினம்}
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபம், அதன் கசப்பு, காரம், உறைப்பு, சூடு ஆகியவற்றால் வலிநிறைந்த விளைவுகளையே கொடுக்கும். அது {கோபம்}, எந்த உடல் நோயாலும் உண்டாகாத ஒருவகைத் தலைவலியாகும். அறிவற்றவர்களால் அவற்றைச் செரிக்கவே முடியாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் {அறிவுள்ளவராகையால்} அதை விழுங்கி {கோபத்தைச் செரித்து = அடக்கி} அமைதி அடைவீராக. பிணியால் வதைக்கப்படுவோர் {துன்பப்படுவோர்} எந்த இன்பங்களையும் விரும்புவதில்லை, செல்வத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் அவர்கள் விரும்புவதில்லை}. எனினும், நோய்வாய்ப்பட்டவர், கவலையால் நிறைந்து, மகிழ்ச்சி என்ன என்பதையோ, செல்வத்தால் கிடைக்கும் இன்பங்கள் என்ன என்பதையோ அறியமாட்டார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகடையில் திரௌபதி வெல்லப்படுவதைக் கண்டு, “நேர்மையானவர்கள், விளையாட்டில் ஏமாற்றுத்தனத்தைத் தவிர்ப்பார்கள். எனவே, துரியோதனனை நிறுத்தும்” என்ற சொற்களை முன்பே நான் உம்மிடம் சொன்னேன். எனினும், எனது சொற்களின் படி நீர் செயல்படவில்லை. வலிமை என்பது, மென்மைக்கு எதிரானது அல்ல. {மென்மையானவர்களை எதிர்ப்பவர்கள் பலசாலிகளல்ல}. மறுபுறம், வலிமையுடன் கலந்த மென்மையே, எப்போதும் பின்பற்றப்பட வேண்டிய உண்மையான கொள்கையைக் கொண்டுள்ளது.
{செழுமை}
நேர்மையற்றதனத்தை {கொடுமையை} மட்டுமே சார்ந்திருக்கும் செழுமை, அழிக்கப்படும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது. எனினும், வலிமை, மென்மை ஆகிய இரண்டையும் சார்ந்த செழுமை, {ஒருவனின்} மகன்கள் மற்றும் பேரர்களிடம் திறத்துடன் இறங்கிச் செல்கிறது. எனவே, உமது மகன்கள் பாண்டவர்களைப் பேணிக் காக்கட்டும். பாண்டவர்களும் உமது மகன்களைப் பேணிக் காக்கட்டும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரே நண்பர்களையும், எதிரிகளையும் பெற்ற குருக்கள், பாண்டவர்கள் ஆகிய இருவரும், மகிழ்ச்சியுடனும் செழுமையுடனும் ஒன்றாக {ஒற்றுமையாக} வாழட்டும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இன்று, குருக்களின் மகன்களுக்கு நீரே புகலிடம்.
உண்மையில், குருவின் குலம், ஓ! அஜமீடரே {திருதராஷ்டிரரே}, உம்மையே சார்ந்து {நம்பி} இருக்கிறது. ஓ! அய்யா, உமது புகழுக்குக் களங்கம் ஏற்படாமல் பாதுகாத்து, கடுமையான வனவாச துன்பத்தை அனுபவித்த பாண்டுவின் பிள்ளைகளைப் பேணிக் காப்பீராக. உமது எதிரிகள் உம்மிடம் இருக்கும் ஓட்டைகளைக் கண்டுபிடிக்காதிருக்கட்டும். ஓ! மனிதர்களில் தேவரே {திருதராஷ்டிரரே}, அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் உண்மைக்குத் {சத்தியத்துக்குத்} தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனை அவனது தீய வழிகளில் இருந்து திருப்புவீராக” ,என்றான் {விதுரன்}.