High families?| Udyoga Parva - Section 36b | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 36) {விதுர நீதி - 9}
பதிவின் சுருக்கம் : உயர்ந்த குடும்பங்கள், நட்பு, துயரம் ஆகியவற்றின் இலக்கணங்களை விதுரன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது; எவை உயர்ந்த குடும்பங்கள்? எவை தாழ்ந்த குடும்பங்கள்? உயர்ந்த குடும்பங்கள் எப்படி வீழ்ச்சியடைகின்றன; வீழ்ச்சியடையாமல் இருக்க எதைப் பேண வேண்டும்? எது நட்பு? நட்பை எப்போது அறிய முடியும்? சோகம் மனிதனை எந்நிலைக்கு ஆளாக்குகிறது? அறிவு எப்படிப் புலன்கள் வழியாக அழிவடைகிறது? போன்றவற்றை விதுரன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது …
{உயர்ந்த குடும்பங்கள் [அ] உயர்குலங்கள்}
திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான், “அறம், பொருள் ஆகிய இரண்டிலும் இருந்து வழுவாமல், அந்த இரண்டையும் மதிப்போரும், பெரும் கல்வியறிவு உடையோரும், தேவர்களும் கூட உயர்ந்த குடும்பங்களைத் தாங்கள் விரும்புவதாகவே வெளிப்படுத்துகின்றனர். ஓ! விதுரா, உயர்ந்தவை {மகாகுலங்கள்} என எக்குடும்பங்கள் அழைக்கப்படுகின்றன? என்பதை நான் உன்னிடம் கேட்கிறேன்” என்றான்.
அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “தவம், தன்னடக்கம் {புலனடக்கம்}, வேத அறிவு, {பொறுமை} [1], வேள்விகள், தூயத் திருமணங்கள், அன்ன தானங்கள் ஆகிய ஏழும் அந்தக் {உயர்} குடும்பங்களில் இருக்கும்; அங்கே {அந்த உயர் குடும்பங்களில்} அவை முறையாகப் பயிலப்பட்டு, உயர்வாக மதிக்கப்படுகின்றன. எவை சரியான பாதையில் இருந்து வழுவாமல் இருக்கின்றனவோ, எவற்றில் இருந்த உயிர்நீத்த மூதாதையர் (தங்கள் வழித்தோன்றல்கள் தவறுகள் இழைப்பதைக் கண்டு) வலிக்கு உள்ளாவதில்லையோ, எவை அனைத்து அறங்களையும் உற்சாகமாகப் பயில்கின்றனவோ, எவற்றில் பிறந்தோர் தாங்கள் பிறந்த குலத்தின் தூய புகழை மேம்படுத்த விரும்பி, எந்த வகையான பொய்மையையும் தவிர்க்கின்றனரோ அவையே உயர்ந்த குடும்பங்களாகும் {மகா குலங்களாகும்}.
[1] இது கங்குலியின் பதிப்பில் இல்லை. ஆனால் ஏழு என்று கங்குலி குறிப்பிடுகிறார். எனவே, வேறு பதிப்பில் இருந்து இது எடுத்துக் கையாளப்பட்டிருக்கிறது.
{உயர்ந்த நிலையில் இருந்து வீழ்ந்து இழிவடையும் குடும்பங்கள்}
வேள்விகள் செய்யாமை, தூய்மையற்ற திருமணங்கள், வேதங்களைப் புறக்கணித்தல், அந்தணர்களை அவமதித்தல் ஆகியவற்றைச் செய்யும் குடும்பங்கள் தங்கள் உயர்ந்த இடத்தில் இருந்து கீழே விழுந்து இழிந்தவை ஆகின்றன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, குடும்பங்களின் உறுப்பினர்கள், அந்தணர்களைப் பற்றி அவதூறு பேசி, அவர்களை அவமதிப்பதாலோ, அவர்களிடம் {அந்தணர்களிடம்} உள்ளவற்றை மோசடி செய்து பறிப்பதாலோ அக்குடும்பங்கள் வீழ்ந்து இழிந்தவையாகின்றன. {குடும்ப} உறுப்பினர்களும், செல்வமும், பசுக்களும் கொண்டிருந்தாலும், நன்னடத்தை இல்லாவிட்டால் அவை குடும்பங்களாகக் கருதத்தக்கவையல்ல. அதே வேளையில், செல்வமற்றிருந்தாலும், தனித்துவக் குணங்களும், நன்னடத்தையும் கொண்ட குடும்பங்களே, குடும்பங்கள் என்று கருதப்பட்டுப் பெரும் புகழை வெல்கின்றன. எனவே, நல்ல குணங்களையும், நல்ல நடத்தையையும் கவனத்துடன் பேண வேண்டும். செல்வத்தைப் பொறுத்தவரை, அது வரும் அல்லது போகும். {செல்வம் இன்று வரும், நாளை போகும். அதனால் நன்னடத்தையையே எப்போதும் பேண வேண்டும்}.
செல்வமில்லாதவன் உண்மையில் குறைந்தவனல்ல. ஆனால், குணமோ, நடத்தையோ இல்லாதவன் உண்மையில் குறைந்தவனே {ஒன்றும் இல்லாதவனே}. பசுக்களும், கால்நடைகளும், உழவு உற்பத்தியும் நிறைந்து இருந்தாலும், நல்ல குணங்களும் நடத்தையும் இல்லாதிருந்தால், உண்மையில் அக்குடும்பங்கள் மதிப்புக்கும், புகழுக்கும் தகுந்தவை அல்ல.
சண்டைகளுக்கு வித்திடுபவனாகவோ, மன்னனுக்கு அமைச்சனாகவோ, பிறர் செல்வத்தைத் திருடுபவனாகவோ, குடும்பப் பகையைத் தூண்டுபவனாகவோ, ஏமாற்றுக்காரனாகவோ, பொய் நடத்தை கொண்டவனாகவோ, முனிவர்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர் ஆகியோரை உபசரிப்பதற்கு முன்பு உண்பவனாகவோ நமது குலத்தில் எவனும் இல்லாதிருக்கட்டும். அந்தணர்களைக் கொல்பவனோ, அவர்களிடம் வெறுப்பை ஊக்குவிப்பவனாகவோ, உழவைத் தடுப்பவனாகவோ, அதற்குத் தீங்கு விளைவிப்பவனாகவோ இருக்கும் ஒருவன் நமது குலத்தில் கலவாதிருக்கட்டும்.
(இருக்கைக்கு) வைக்கோலும் {புல்லும்}, (அமர்வதற்குத்) தரையும், (பாதம் மற்றும் முகம் கழுவ) நீரும், நான்காவதாக இனிய சொற்களும் நல்லோர் வீடுகளில் இல்லாதிருக்காது. நீதிமிக்கச் செயல்களைப் பயில்வதில் அர்ப்பணிப்போடு இருக்கும் அறம்சார்ந்த மனிதர்கள், மரியாதையுடன் கொடுத்து (விருந்தினர்களை) உபசரிக்க விரும்பி, {பாய், தரை, நீர், இனிய சொல் ஆகியவற்றை} எப்போதும் தயாராக வைத்திருப்பார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்தன மரம் மெலிதாக இருந்தாலும், (மிகத் தடிமனான) பிற மரங்கள் தாங்க முடியாத பாரத்தைத் தாங்குவது போல, உயர் குடும்பங்களில் உள்ளோர், சாதாராண மனிதர்களால் இயலாத காரியமான, பெரும் சுமையைச் சுமக்க இயன்றவர்களாக எப்போதும் இருக்கிறார்கள்.
{நட்பு}
எவனுடைய கோபம் பயத்தைக் கொடுக்கிறதோ, எவன் மீது கொண்ட பயத்தால் அவனுக்காக ஒருவன் காத்திருக்கிறானோ அவன் நண்பனல்ல. ஆனால், எவனிடம் ஒரு தந்தையிடம் கிடைக்கும் ஆறுதலை ஒருவன் பெறுகிறானோ, அவனே அவனுக்கு உண்மையான நண்பனாவான். பிற நட்புகள் சாதாரணத் தொடர்புகளே. பிறப்பால் இரத்தத் தொடர்பு இல்லாமல் இருந்தாலும், உண்மையான ஆதரவளிப்பவனாகவும், பாதுகாப்பாளனாகவும் இருப்பவனே ஒருவனுக்கு உண்மையான நண்பனாக இருக்க முடியும். நிலையற்ற இதயம் கொண்டவனோ, பெரியோருக்காகக் காத்திருக்காதவனோ, மனநிலையில் உறுதியற்றவனோ நண்பர்களைப் பெறவே முடியாது.
நீர்வற்றிய குளங்களைக் கைவிடும் அன்னங்களைப் போல, (நோக்கங்களை அடைய விரும்பும்) நிலையற்ற இதயம் கொண்டவனையோ, மனதைக் கட்டுக்குள் வைக்காதவனையோ, புலன்களுக்கு அடிமையானவனையோ, வெற்றிக் கைவிடுகிறது. மனதளவில் பலமற்றவர்களே திடீரெனக் கோபத்தையோ, போதுமான காரணமே இல்லாமல் மனநிறைவையோ அடைகிறார்கள்; அவர்கள் நிலையற்ற மேகங்களைப் போன்றவர்களாவர்.
நண்பர்களால் உபசரிக்கப்பட்டும், {அவர்களால்} ஆதாயமடைந்தும்கூட, {அவர்களிடம்} நன்றிமறந்து இருப்பவர்களின் பிணங்களை, இரை தேடித் திரியும் பறவைகள் கூடத் தவிர்க்கின்றன. நீர் ஏழையாக இருந்தாலும், செல்வந்தனாக இருந்தாலும் உமது நண்பர்களை மதிப்பீராக. ஏதாவதொரு சேவை {உதவி} கேட்கப்படும் வரை, நண்பர்களின் நேர்மையையும், நேர்மையற்ற தன்மையையும் அறிய முடியாது.
{துயரம்}
சோகம் அழகைக் கொல்கிறது {அழிக்கிறது}; சோகம் பலத்தைக் கொல்கிறது; சோகம் புரிதலைக் கொல்கிறது; மேலும் சோகம் நோயைக் கொடுக்கிறது. துயரம் என்பது, ஒருவனின் நோக்கத்தை அடைய உதவாமல், {அவனது} உடலை வற்ற செய்து, எதிரிகளை மகிழ்ச்சியடையச் செய்கிறது. எனவே, துயரத்திற்கு உம்மைக் கொடுக்காதீர் {துயரத்துக்கு ஆட்படாதீர்}.
மனிதர்கள் இறந்து மீண்டும் பிறப்பது அடிக்கடி நிகழ்கிறது; அவர்கள் அடிக்கடி வளர்ந்து உதிர்கின்றனர். அடிக்கடி அவர்கள் பிறர் உதவியைக் கேட்கிறார்கள், அவர்களது உதவியும் பிறரால் கேட்கப்படுகிறது; அடிக்கடி அவர்கள் புலம்புகிறார்கள், அவர்களிடமும் {பலர்} புலம்புகிறார்கள். மகிழ்ச்சி மற்றும் துயரம், நிறை மற்றும் குறை, ஆதாயம் மற்றும் இழப்பு {இலாபம் மற்றும் நஷ்டம்}, வாழ்வு மற்றும் மரணம், ஆகியவை முறையான வரிசையில் அனைவராலும் அனுபவிக்கப்படுகின்றன. எனவே, தற்கட்டுப்பாடு கொண்ட ஒருவன் இன்பத்தில் மகிழ்ச்சியடையவும், துன்பத்தில் துயரடையவும் கூடாது.
ஆறுபுலன்களும் {மனத்துடன் கூடிய ஐம்பொறிகளும்} எப்போதும் அமைதியற்றே இருக்கின்றன. பானையின் ஓட்டைகளின் வழியாக ஒழுகும் நீரைப் போல, அவற்றில் {ஆறு புலன்களில்} முக்கியமான ஒன்றின் வழியாக, தான் கொண்ட பலத்துக்குத் தக்க வகையில் அறிவு அழிவடைகிறது”, என்றான் {விதுரன்}.