Social polity!| Udyoga Parva - Section 37a | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 37) {விதுர நீதி - 11}
பதிவின் சுருக்கம் : பதினேழு வகை மூடர்கள் யார் என்று விதுரன் சொன்னது; அந்தணனைக் கொன்ற பாவத்தைத்தரும் குற்றங்கள் குறித்தும், சொர்க்கம் யாரால் வெல்லப்படுகிறது என்றும்; பிறருக்கு இனிமையானதைப் பேசுவது எளிது, ஆனால் இனிமையற்றதாக இருந்தாலும் உண்மைய் சொல்வது கடினம் என்றும்; எது எதை எது எதற்காகத் தியாகம் செய்யலாம் என்றும்; செல்வத்தை ஏன் பாதுகாக்க வேண்டும் என்றும்; சூதாட்டம் எவ்வளவு தீங்கானது என்றும் விதுரன் திருதராஷ்டிரனிடம் சொல்வது...
விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரரே}, ஓ! மன்னா, வெறும் வெளியில் தனது கை முட்டியை அடிப்பவர்களைப் போன்ற {ஆகாயத்தைத் தனது முட்டியால் உடைக்க நினைப்பவர்களைப் போன்ற}, வானத்தில் இருக்கும் ஆவி நிரம்பிய இந்திரவில்லை {வானவில்லை} வளைக்க முயல்பவர்களைப் போன்ற, சூரியனின் அருவக் கதிர்களைப் பிடிக்க விரும்புபவர்களைப் போன்ற பதினேழு வகையான மனிதர்களைக் குறித்துச் சுயம்புவின் மகனான மனு சொல்லியிருக்கிறார்.
{பதினேழு வகையான மூடர்கள்}
- கட்டுப்படுத்தப்பட இயலாதவனைக் கட்டுப்படுத்த முயல்பவன்.
- சிறு லாபங்களால் மகிழ்ச்சியடைபவன்.
- எதிரிகளிடம் பணிவாகப் பணி செய்பவன்.
- பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி {அவர்களைக்} கட்டுப்படுத்த முயல்பவன். {பெண்களால் வரும் பொருளைக் கொண்டு பிழைப்பவன்}.
- கேட்கக்கூடாதவனிடம் தானம் கேட்பவன்.
- எதையும் செய்யாமலே, தன்னைப் புகழ்ந்து கொள்பவன் {தற்பெருமை பேசிக் கொள்பவன்}.
- உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.
- பலமற்றவனாக இருந்து கொண்டு, பலமானவனிடம் எப்போதும் பகை பாராட்டி வருபவன்.
- ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் பேசுபவன்.
- அடைய முடியாததை அடைய விரும்புபவன்.
- மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிடம் கேலி செய்பவன்.
- தனது மருமகளால் தனது அச்சங்கள் அனைத்தும் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.
- தனது வித்துகளை வேறு நிலத்தில் சிதற விடுபவன். {பிறர் மனைவியரை அடைபவன்}.
- தன் மனைவியைக் குறித்துத் தவறாகப் பேசுபவன்.
- பிறரிடம் இருந்து எதையும் பெற்றுக் கொண்டு, அது நினைவில்லையே என்று சொல்பவன்.
- புனித இடங்களில் தானமளித்துவிட்டு, வீட்டில் தன் வார்த்தைகளால் {அவற்றைச் சொல்லித்} தற்பெருமை பேசுபவன்.
- பொய்மையை உண்மை என்று நிறுவ முயல்பவன்
ஆகியோரே அந்தப் பதினேழு வகையான மூடர்கள் ஆவர்.
கரங்களில் சுருக்குக் கயிறுகளோடு {பாசங்களோடு} வரும் யமனின் தூதர்கள், அம்மனிதர்களை நரகத்திற்கு இழுத்துச் செல்கின்றனர்.
தன்னிடம் மற்றவன் நடந்து கொள்ளும் விதத்திலேயே, ஒருவன் அவனிடம் நடந்து கொள்ள வேண்டும். இதுவே சமூக அரசியல் முறைமைக்கு இசைவானதாக இருக்கும்.
முதுமை, அழகைக் கொல்கிறது {அழிக்கிறது}; பொறுமை, நம்பிக்கையையும்; மரணம், வாழ்வையும்; அறப்பயிற்சி, உலகம் சார்ந்த இன்பங்களையும்; காமம், தன்மானத்தையும் {அடக்கத்தையும்}; தீயோர் தோழமை, நன்னடத்தையையும்; கோபம், செழுமையையும்; செருக்கு அனைத்தையும் கொல்லும் {அழிக்கும்}” என்றான் {விதுரன்}.
திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “நூறு ஆண்டுகள் வாழ்நாள் {ஆயுள்} கொண்டவன் என்று மனிதன் வேதங்களில் பேசப்படுகிறான். {அப்படி இருக்கையில்}, என்ன காரணத்தினால், மனிதர்கள் அனைவரும் அந்தக் குறிப்பிட்ட வயதை அடைவதில்லை {நூறு வயது வரை வாழ்வதில்லை}” என்று கேட்டான்.
அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “அதிகமான செருக்கு, அதிகமான பேச்சு, அதிகமாக உண்ணுதல், கோபம், இன்பத்தில் விருப்பம், உட்பகை ஆகிய ஆறும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரினங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலத்தை {ஆயுளை} அறுக்கும் {ஆறு} கூரிய வாட்களாகும். இவையே மனிதர்களைக் கொல்கின்றன; மரணமல்ல. இதை அறிந்து அருளப்பட்டிருப்பீராக!
{பரிகாரம் தேவைப்படும் தொடர்புகள்}
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}. தன் மேல் நம்பிக்கை கொண்ட ஒருவனுடைய மனைவியின் உதவியை நாடுபவன் {தன்னை நம்பியவனின் மனைவியை அடைபவன்}; தனது ஆசானின் படுக்கையில் அத்துமீறி நடப்பவன் {குருவின் மனைவியை அடைபவன்}, சூத்திரப் பெண்ணின் கணவனாகவோ, மது குடிப்பவனாகவோ உள்ள பிராமணன்; அந்தணர்களை நிந்திப்பவன், அல்லது அவர்களுக்குத் {அந்தணர்களுக்குத்} தலைவனாக ஆகிறவன் {வேறு வர்ணத்தைச் சார்ந்தவன்}, அல்லது அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் {அந்தணர்களின் வாழ்வாதாரங்களாக இருக்கும்} நிலங்களை அபகரிப்பவன்; தன்னிடம் சரணடைந்தவர்களின் உயிரை எடுப்பவன் ஆகியோர் அனைவரும் அந்தணர்களைக் கொன்ற பாவத்தைச் செய்த குற்றவாளிகளாவர். இது போன்ற மனிதர்களுடன் தொடர்பு ஏற்பட்டால் பரிகாரம் தேவை என்று வேதங்கள் தீர்மானிக்கின்றன.
{சொர்க்கம் அடைவதில் வெல்பவர்கள்}
ஞானிகளின் கற்பித்தல்களை {போதனைகளை} ஏற்றுக் கொள்பவன்; அறநெறிகளின் விதிகளை அறிந்தவன்; பரந்த மனமுடையவன் {தானமளிக்கும் தயாளன்}; முதலில் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உணவை அர்ப்பணித்த பிறகு உண்பவன்; யார் மேலும் பொறாமை கொள்ளாதவன்; பிறருக்குத் தீங்கை ஏற்படுத்தும் எதையும் செய்ய இயலாதவன்; நன்றி, உண்மை, எளிமை, கல்வி ஆகியவற்றுடன் இருப்பவன் ஆகியோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எப்போதுமே இனிமையான வார்த்தைகளைப் பேசுவோர் பலர் உண்டு. எனினும், இனிமையற்ற, ஆனால் மருத்துவக் குணம் கொண்ட வார்த்தைகளைப் பேசுவோரும், கேட்போரும் கிடைப்பதரிது. தனது தலைவனால் ஏற்கத்தக்கது, தகாதது எனக் கருதாமல், அறத்தை மட்டுமே {அகக்} காட்சியில் கண்டு, சுவையற்றதாக {கசப்பாக} இருப்பினும், மருந்தாக இருப்பவற்றைச் சொல்பவன், உண்மையில் அந்த மன்னனுக்குப் பலத்தையே சேர்க்கிறான்.
{தியாகம்}
ஒரு குடும்பத்துக்காக, அதன் உறுப்பினர் ஒருவரைத் தியாகம் செய்யலாம்; ஒரு கிராமத்துக்காக, ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம்; ஒரு நாட்டுக்காக ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம்; ஒருவனது ஆன்மாவுக்காக, முழுப் பூமியையும் கூடத் தியாகம் செய்யலாம்.
{செல்வத்தைப் பாதுகாக்க}
தனக்கு {வருங்காலத்தில்} வரக்கூடிய துன்பங்களை நோக்கில் கொண்டு, ஒருவன் தனது செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்; தனது செல்வத்தைக் கொண்டு ஒருவன் தனது மனைவிகளைப் பாதுகாக்க வேண்டும். தனது செல்வம் மற்றும் மனைவிகளைக் கொண்டு ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
{சூதாட்டம்}
சூதாட்டம் சண்டைகளைத் தூண்டிவிடும் என்பது பழங்காலத்தில் இருந்தே காணப்படுகிறது. எனவே, ஞானமுள்ள ஒருவன், வேடிக்கைக்காகக் கூட அதில் {சூதாட்டத்தில்} ஈடுபடக்கூடாது. ஓ! பிரதீபனின் மகனே {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதாட்டத்தின் போது, ஓ! மன்னா, நான் உம்மிடம், “இது சரியல்ல” என்று சொன்னேன். ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரரே}, நோயாளி மருந்தை விரும்பாதது போல, எனது வார்த்தைகள் உமக்கு ஏற்புடையனவாக {இனிமையாக} இல்லை. ஓ! மன்னா, பலவண்ணத் தோகை கொண்ட மயில்களைப் போல இருக்கும் பாண்டுவின் மகன்களை நீர் வீழ்த்த விரும்புகிறீர். உமது மகன்கள் அனைவருமோ வெறும் காக்கைகளாக இருக்கின்றனர். சிங்கங்களைக் கைவிட்டு, நரிகளைப் பாதுகாக்கிறீர்! ஓ! மன்னா, நேரம் வரும்போது, இவை அனைத்துக்காகவும் நீர் வருந்த வேண்டி வரும்” {என்றான் விதுரன்}.