Bhima defeated Sakuni! | Karna-Parva-Section-77 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் கௌரவப் படைகளுக்கு ஏற்படுத்திய பேரழிவு; கர்ணனின் படையை நோக்கிச் சென்ற அர்ஜுனன்; அர்ஜுனன் வருவதை உணர்ந்த பீமன் உற்சாகமாகப் போரிட்டது; பீமனைத் தடுக்கத் தன் படையை ஏவிய துரியோதனன்; இரண்டு லட்சத்து இருநூறு வீரர்களைக் கொன்ற பீமன் அங்கே ஒரு குருதிப் புனலை உண்டாக்கியது; பீமனைத் தாக்கச் சகுனியை ஏவிய துரியோதனன்; பீமனுடன் சகுனி புரிந்த வீரப் போர்; பீமனைச் சரமாரியாகத் தாக்கிய சகுனி; இருவருக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர்; சகுனியின் வில், குதிரைகள், சாரதி, தேர் ஆகியவற்றை அழித்து அவனை மயக்கமடையச் செய்த பீமன்; பீமனிடம் இருந்து தப்பி ஓடிய துரியோதனனும், கௌரவர்களும்; கர்ணனைத் தஞ்சமடைந்த கௌரவர்கள்; கர்ணனின் படையை நோக்கிச் சென்ற பீமன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தேரொலிகளையும், (போர்வீரர்களின்) சிங்க முழக்கங்களையும் கேட்ட அர்ஜுனன், “குதிரைகளைப் பெரும் வேகத்தில் தூண்டுவாயாக” என்று கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்} சொன்னான்.(1) அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவிந்தன், அவனிடம், “பீமர் எங்கிருக்கிறாரோ அங்கே நான் பெரும் வேகத்தோடு செல்லப்போகிறேன்” என்றான்.(2) அப்போது கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், தேர்கள், குதிரைகள், யானைகள் மற்றும் காலாட்களின் பெரும்படைகளோடு சென்று, தங்கள் கணைகளின் விஸ் ஒலி, தங்கள் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, தங்கள் குதிரைக் குளம்படிகளின் ஒலிகள் ஆகியவற்றால் பூமியை எதிரொலிக்கச் செய்தவர்களுமான (கௌரவப் படைக்குச் சொந்தமான) மனிதர்களில் சிங்கங்கள் பலர், பனி, அல்லது சங்கு போன்று வெண்மையானவையும், தங்கம், முத்து, ரத்தினங்களால் ஆன கடிவாளங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகளால் சுமக்கப்பட்டு வெற்றிபெற முன்னேறிச் சென்றவனும், (அசுரன்) ஜம்பனைக் கொல்வதற்காக வஜ்ரத்தைத் தரித்துக் கொண்டு அவனை எதிர்த்துப் பெருங்கோபத்தோடு சென்ற தேவர்கள் தலைவனை {இந்திரனைப்} போன்றவனுமான ஜயனை (அர்ஜுனனை) எதிர்த்துச் சென்றனர்.(3-4) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவர்களுக்கும், பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் உடல், உயிர், பாவம் ஆகியவற்றுக்கு அழிவைத் தருவதும், மூவுலகங்களின் நிமித்தமாக அசுரர்களுக்கும், வெற்றியாளர்களில் முதன்மையானவனான தேவன் விஷ்ணுவுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போன்றதுமான ஒரு பெரும்போர் நடந்தது.(5)
கிரீடம் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனான பார்த்தன் {அர்ஜுனன்}, தனியொருவனாகவே அவர்கள் ஏவிய வலிமைமிக்க ஆயுதங்களையும், அவர்களது சிரங்கள் மற்றும் கரங்களையும் பல்வேறு வழிகளில், பெரும் கூர்மை கொண்ட கத்தி முக, பிறைவடிவ, அகன்ற தலை கணைகளால் {க்ஷுரப்ரம், அர்த்தச்சந்திரக்கணை, பல்லங்கள் ஆகியவற்றால்} வெட்டினான்.(6) குடைகள், விசிறுவதற்கான சாமரங்கள், கொடிமரங்கள், குதிரைகள், தேர்கள், காலாட்படை கூட்டங்கள், யானைகள் ஆகியன பல்வேறு வழிகளில் வடிவம் சிதைக்கப்பட்டு, புயலால் முறிந்து விழும் காட்டைப் போலப் பூமியில் விழுந்தன.(7) தங்க அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்டு, (முதுகுகளில்) வெற்றிக்கொடிகள் மற்றும் போர்வீரர்களைக் கொண்ட பெரும் யானைகள், தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் துளைக்கப்பட்ட போது, ஒளியுடன் எரியும் மலைகளைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தன.(8) யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றை வாசவனின் வஜ்ரத்திற்கு ஒப்பான சிறந்த கணைகளால் துளைத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, பழங்காலத்தில் (அசுரன்) பலனைப் பிளக்கச் சென்ற இந்திரனைப் போலவே கர்ணனைக் கொல்ல வேகமாகச் சென்று கொண்டிருந்தான்.(9) மனிதர்களில் புலியும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் {அர்ஜுனன்}, பெருங்கடலுக்குள் பாயும் மகரத்தைப் போல உமது படைக்குள் ஊடுருவினான்.(10).
அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்ட உமது போர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், காலாட்கள், பெரும் எண்ணிக்கையிலான யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றுடன் அவனை எதிர்த்து விரைந்தனர்.(11) அவர்கள் பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்ற போது உண்டாக்கிய ஆரவாரமானது, புயலின் சீற்றத்தால் அடிக்கப்படும் பெருங்கடலின் நீரால் உண்டாக்கப்பட்டதற்கு ஒப்பாகப் பேராற்றல் வாய்ந்ததாக இருந்தது.(12) (ஆற்றலில்) புலிகளுக்கு ஒப்பான அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் அனைவரும், மரணம் குறித்த அச்சமனைத்தையும் கைவிட்டு, அந்தப் போரில், அந்த மனிதர்களில் புலியை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தனர்.(13) எனினும் அர்ஜுனன், குரு தலைவர்களின் அந்தத் துருப்புகள் அவன் மீது ஆயுதமாரியை ஏவியபடி முன்னேறி வருகையிலேயே கூடித்திரண்ட மேகத் திரள்களை விரட்டும் புயல் காற்றைப் போல அவற்றை முறியடித்தான்.(14) தாக்குவதில் திறம்பெற்றவர்களா அந்தப் பெரும் வில்லாளிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அர்ஜுனனை எதிர்த்துச் சென்று, கூரிய கணைகளால் அவனைத் துளைக்கத் தொடங்கினர்.(15)
அப்போது அர்ஜுனன், தன் கணைகளால் பல்லாயிரக்கணக்கான தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(16) அர்ஜுனனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் இவ்வாறு அந்தப் போரில் தாக்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரர்கள், தங்கள் தேர்களில் இருந்து ஒருவருக்கடுத்து ஒருவராகக் காணாமல் போவதாகத் தெரிந்தது.(17) மொத்தமாக அர்ஜுனன், அந்தப் போரில் வீரத்துடன் முயன்று கொண்டிருந்த அந்த வீரத் தேர்வீரர்களில் நானூறு பேரைத் தன் கூரிய கணைகளால் கொன்றான்.(18) பல்வேறு வகைகளிலான கூரிய கணைகளால் தாக்கப்பட்ட அவர்கள், அர்ஜுனனைத் தவிர்த்துவிட்டு அனைத்துப் பக்கங்களில் தப்பி ஓடினர்.(19) பொங்கும் கடலானது மலையோடு மோதி சிதறும்போது உண்டாவதைப் போல அந்தப் போர்வீரர்கள் பிளந்து, தப்பி ஓடியபோது உண்டான ஆரவாரம் பேராற்றல் வாய்ந்ததாக இருந்தது.(20)
அந்தப் படையைத் தன் கணைகளால் முறியடித்து, அதை அச்சுறுத்திய பிருதையின் மகன் அர்ஜுனன், ஓ! ஐயா, அதன்பிறகு சூதன் மகனின் {கர்ணனின்} படைப்பிரிவை எதிர்த்துச் சென்றான்.(21) பழங்காலத்தில் பாம்புகளைப் பிடிக்கப் பாய்ந்திறங்கிய கருடன் உண்டாக்கியதைப் போன்ற பேரொலியுடன் அர்ஜுனன் தன் எதிரிகளைச் சந்தித்தான்.(22) பார்த்தனைப் {அர்ஜுனனைப்} பார்க்கவிரும்பிய வலிமைமிக்கப் பீமசேனன், அவ்வொலியைக் கேட்டு மகிழ்ச்சியால் நிறைந்தான்.(23) பார்த்தனின் வருகையைக் கேட்டுணர்ந்த வீர பீமசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் உயிரையே துச்சமாக மதித்து உமது துருப்புகளைக் கலங்கடிக்கத் தொடங்கினான்.(24) காற்றுக்கு இணையான ஆற்றலைக் கொண்டவனும், காற்று தேவனின் மகனுமான வீர பீமன், காற்றைப் போலவே அந்தக் களத்தில் திரியத் தொடங்கினான்.(25)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனால் தாக்கப்பட்ட உமது படையானது, கடலுக்கு மத்தியில் உடைந்த கப்பலைப் போலச் சுழலத் தொடங்கியது.(26) தன் கரநளினத்தை வெளிப்படுத்திய பீமன், தன் கடுங்கணைகளால் அந்தப் படையை வெட்டிச் சிதைக்கத் தொடங்கி, பெரும் எண்ணிக்கையிலானோரை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.(27) அந்தச் சந்தர்ப்பத்தில், யுக முடிவில் தோன்றும் அந்தகனைப் போல, மனித சக்திக்கு அப்பாற்பட்ட பீமனின் வலிமையைக் கண்ட உமது போர்வீரர்கள் அச்சத்தால் நிறைந்தனர்.(28) வலிமைநிறைந்த தன் படைவீரர்கள் இவ்வாறு பீமசேனனால் பீடிக்கப்படுவதைக் கண்ட மன்னன் துரியோதனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளையும், பெரும் வில்லாளிகள் அனைவரையும் அழைத்து, ஓ! பாரதக் குலத்தின் காளையே, பீமன் வீழ்த்தப்பட்டால் பாண்டவத் துருப்புகளை ஏற்கனவே கொல்லப்பட்டனவாகக் கருதலாம் என்பதால் அந்தப் போரில் அவர்களிடம் பீமனைக் கொல்ல ஆணையிட்டான்.(29,30)
உமது மகனின் {துரியோதனனின்} ஆணையை ஏற்ற மன்னர்கள் அனைவரும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கணைமாரியால் பீமனை மறைத்தனர்.(31) ஓ! மன்னா, வெற்றி பெறும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற யானைகளும், மனிதர்களும், ஓ! ஏகாதிபதி, தேர்களும், குதிரைகளும் விருகோதரனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டன.(32) இவ்வாறு அந்தத் துணிச்சல்மிக்க வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனும், பாரதக் குலத்தின் தலைவனுமான அந்த வீரன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விண்மீன்களால் சூழப்பட்ட நிலவைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(33) உண்மையில் முழு நிலவானது தன் ஒளிவட்டத்திற்குள் அழகாகத் தெரிவதைப் போலவே அந்த மனிதர்களில் சிறந்தவனும் {பீமனும்} அந்தப் போரில் மிக அழகானவனாகத் தெரிந்தான்.(34) கொடூர நோக்கம் கொண்ட அந்த மன்னர்கள் அனைவரும் கோபத்தால் சிவந்த கண்களுடனும், விருகோதரனை {பீமனைக்} கொல்லும் விருப்பத்தால் உந்தப்பட்டும் தங்கள் கணை மழையை அவன் மீது பொழிந்தனர்.(35)
நேரான கணைகளால் அந்த வலிமைமிக்கப்படையைத் துளைத்த பீமன், வலையில் இருந்து வெளிப்படும் மீன் ஒன்றைப் போல, பின்வாங்காத பத்தாயிரம் {10,000} யானைகளையும், இருநூறாயிரத்து இருநூறு (இரண்டு லட்சத்து இருநூறு- 2,00,200} மனிதர்களையும், ஓ! பாரதரே, ஐந்தாயிரம் {5,000} குதிரைகளையும், நூறு தேர்வீரர்களையும் கொன்றுவிட்டு அந்த முற்றுகையில் இருந்து வெளிவந்தான். இவை யாவையும் கொன்ற பீமன் அங்கே ஒரு குருதிப் புனலை {இரத்த ஆற்றைப்} பாயச் செய்தான்.(36-38) குருதியே அதன் நீரானது, தேர்கள் சுழல்களாகின; யானைகள் அதில் நிறைந்திருக்கும் முதலைகளாகின. மனிதர்கள் அதன் மீன்களாகவும், குதிரைகள் அதன் சுறாக்களாகவும், விலங்குகளின் முடிகள் அதன் பாசியாகவும் ஆகின.(39) உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட கரங்கள் அதன் முதன்மையான பாம்புகளாகின. எண்ணற்ற ஆபரணங்களும், ரத்தினங்களும் அவ்வோடையில் அடித்துச் செல்லப்பட்டன. தொடைகள் அதன் முதலைகளாகவும், ஊனீர் சேறாகவும் ஆகின. மேலும் தலைகள் அதன் பாறைகளாகின.(40)
விற்களும் கணைகளும், அந்தப் பயங்கர ஆற்றைக் கடந்த செல்ல மனிதர்களால் வேண்டப்பட்ட தெப்பங்களாகவும், கதாயுதங்களும், பரிகங்களும் அதன் பாம்புகளாகின. குடைகள், கொடிமரங்கள் அதன் அன்னங்களாகவும், தலைப்பாகைகள் அதன் நுரையாகவும் ஆகின.(41) கழுத்தணிகள் அதன் தாமரைகளாகவும், அங்கே எழுந்த மண் தூசு அதன் அலைகளாகவும் அமைந்தன. உன்னதக் குணங்களைக் கொண்டோர் அதை எளிமையாகக் கடந்தனர், மருண்டோரும், அச்சமடைந்தோரும் கடப்பதற்குக் கடினமானதாக அதைக் கண்டனர்.(42) போர்வீரர்களையே அதன் முதலைகளாகக் கொண்ட அது யமனின் உலகத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. உண்மையில், அந்த மனிதர்களில் புலி {பீமன்}, அந்நதியை வெகுவிரைவில் உண்டாக்கிவிட்டான்.(43) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோருக்கு வைதரணீயைக் கடப்பது கடினம் என்பதைப் போல, பயங்கரமானதும், மருண்டோரின் அச்சத்தை அதிகரிப்பதுமான அந்தக் குருதிப் புனலைக் கடப்பதும் கடினமானதாக இருந்தது.(44) தேர்வீரர்களில் சிறந்தவர்களான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} எங்கே ஊடுருவினானோ, அங்கே அவன் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பகை போர் வீரர்களை வீழ்த்தினான்.(45)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே},போரில் பீமசேனனால் அடையப்பட்ட அந்தச் சாதனைகளைக் கண்ட துரியோதனன், சகுனியிடம், “ஓ! மாமா, போரில் வலிமைமிக்கப் பீமசேனனை வெல்வீராக. அவன் {பீமன்} வீழ்த்தப்பட்டால், வலிமைமிக்கப் பாண்டவப் படையும் வீழ்த்தப்படதாகவே கருதப்படும்” என்றான்.(47) இவ்வாறு சொல்லப்பட்டவனும், பயங்கரப் போரைச் செய்யவல்லவனுமான அந்தச் சுபலனின் வீர மகன் {சகுனி}, ஓ! ஏகாதிபதி, தன் தம்பிகள் சூழ அங்கிருந்து சென்றான்.(48) பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமனை அந்தப் போரில் அணுகிய அந்த வீரச் சகுனி, பெருங்கடலையைத் தடுக்கும் கரையைப் போல அவனைத் தடுத்தான்.(49) கூரிய கணைகளால் பீமன் தடுக்கப்பட்டாலும், அவை யாவையும் அலட்சியம் செய்த பீமன், சுபலன் மகன்களை எதிர்த்துச் சென்றான்.(50)
அப்போது சகுனி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எண்ணற்ற துணிக்கோல் கணைகளை {நாராசங்களை} பீமனுடைய மார்பின் இடது பக்கத்தில் ஏவினான்.(51) அந்த உயர் ஆன்மப் பாண்டு மகனின் {பீமனின்} கவசத்தைத் துளைத்துச் சென்றவையும், கங்க மற்றும் மயில் இறங்குகளைக் கொண்டவையுமான அந்தக் கடுங்கணைகள், ஓ! ஏகாதிபதி, அவனது உடலில் ஆழமாக மூழ்கின.(52) அந்தப் போரில் ஆழத் துளைக்கப்பட்ட பீமன், ஓ! பாரதரே, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணையொன்றைச் சுபலன் மகன் {சகுனி} மீது திடீரென ஏவினான்.(53) எனினும், ஓ! மன்னா, எதிரிகளை எரிப்பவனும், பெரும் கரநளினம் கொண்டவனுமான சகுனி, தன்னை நோக்கி வந்த அந்தப் பயங்கரக் கணையை ஏழு துண்டுகளாக வெட்டினான்.(54) தன் கணை பூமியில் விழுந்த போது, ஓ! மன்னா, மிகவும் கோபமடைந்த பீமன், ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} சுபலன் மகனின் வில்லை மிக எளிதாக வெட்டினான்.(55)
அப்போது அந்த வீரச் சுபலன் மகன் {சகுனி}, முறிந்த அந்த வில்லை விட்டு விட்டு, மற்றொரு வில்லையும், பதினாறு அகன்ற தலை கணைகளையும் {பல்லங்களையும்} எடுத்தான்.(56) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த அகன்ற தலை கணைகளில் நேரான இரண்டைக் கொண்டு பீமனைத் தாக்கி;(57) மற்றொன்றால் பீமனின் கொடிமரத்தை வெட்டி, இன்னும் இரண்டால் அவனது குடையையும் அவன் {சகுனி} அறுத்தான். அந்தச் சுபலன் மகன் {சகுனி}, எஞ்சியிருப்பவற்றில் நான்கைக் கொண்டு தன் எதிராளியின் நான்கு குதிரைகளைத் துளைத்தான்.(58) இதனால் சினத்தால் நிறைந்த வீரப் பீமன், ஓ! ஏகாதிபதி, இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடியைக் கொண்டதுமான ஓர் ஈட்டியை அந்தப் போரில் வீசினான்.(59) பாம்பின் நாக்கைப் போல ஓய்வற்றதும், பீமனின் கரங்களில் இருந்து ஏவப்பட்டதுமான அந்த ஈட்டியானது, உயர் ஆனமச் சுபலன் மகனுடைய தேரின் மீது வேகமாக விழுந்தது.(60)
அப்போது கோபத்தால் நிறைந்த பின்னவன் {சகுனி}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அதே ஈட்டியை எடுத்து, அதைப் பீமசேனன் மீது திரும்ப வீசினான்.(61) உயர் ஆன்மப் பாண்டு மகனின் {பீமனின்} இடது கரத்தைத் துளைத்த அது, வானத்தில் இருந்து கீற்றுகளாக விழும் மின்னலைப் போலப் பூமியில் விழுந்தது.(62) ஓ! ஏகாதிபதி, இதனால் தார்தராஷ்டிரர்கள் சுற்றிலும் பெரும் முழக்கத்தை வெளியிட்டனர். எனினும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட தன் எதிரிகளின் அந்தச் சிங்க முழக்கங்களைப் பீமனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(63) அப்போது அந்த வலிமைமிக்கப் பாண்டுவின் மகன் {பீமன்} நாண் பொருத்தப்பட்ட மற்றொரு வில்லை ஒரு கணத்தில் எடுத்துக் கொண்டு, ஓ! ஏகாதிபதி, தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்துப் போரிட்டுக் கொண்டிருந்த சுபலன் மகனின் {சகுனியின்} படைவீரர்களைக் கணைகளால் மறைத்தான்.(64) அவனது நான்கு குதிரைகளையும், பிறகு அவனது சாரதியையும் கொன்றவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், ஓ! மன்னா, அடுத்ததாக, ஒரு கணத்தையும் இழக்காமல் தன் எதிராளியின் கொடிமரத்தை ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அறுத்தான்.(65)
அந்தக் குதிரைகளற்ற தேரை வேகமாகக் கைவிட்டவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்தச் சகுனி, சினத்தால் சிவந்த கண்களுடனும், தயாராகத் தன் கரங்களில் வளைத்து வைக்கப்பட்ட வில்லுடனும் தரையில் நின்று கொண்டு, பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவன் பிறகு, ஓ!மன்னா {திருதராஷ்டிரரே}, எண்ணற்ற கணைகளால் பீமனை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தாக்கினான்.(66) அந்தக் கணைகளாக் கலங்கடித்த வீரப் பீமன், சினத்தால் சகுனியின் வில்லை அறுத்து, கூரிய கணைகள் பலவற்றால் சகுனியையும் துளைத்தான்.(67) பலமிக்கத் தன் எதிராளியால் ஆழத் துளைக்கப்பட்ட அந்த எதிரிகளை எரிப்பவன் {சகுனி}, ஓ! மன்னா, கிட்டத்தட்ட உயிரற்றவனைப் போலப் பூமியில் விழுந்தான்.(68) அவன் {சகுனி} மயக்கமடைந்ததைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, பீமசேனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் தேரில் அவனைப் {சகுனியைப்} போரிலிருந்து கொண்டு சென்றான்.(69) மனிதர்களில் புலியான அந்தச் சகுனி, துரியோதனனின் தேரில் இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட போது, போரில் இருந்து தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்ட தார்தராஷ்டிரத் துருப்புகள், பீமசேனனால் அந்தப் பயங்கரச் சந்தர்ப்பத்தில் அச்சமடைந்து அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(70)
பெரும் வில்லாளியான அந்தப் பீமசேனனால், சுபலன் மகன் {சகுனி} தோற்கடிக்கப்பட்டதும், பெரும் அச்சத்தால் நிறைந்த உமது மகன் துரியோதனன், தன் தாய்மாமனின் {சகுனியின்} உயிர் மீது கொண்ட மதிப்பால், தன் வேகமானக் குதிரைகளால் சுமக்கப்பட்டுப் பின்வாங்கினான்.(71) போரில் இருந்து மன்னனே {துரியோதனனே} பின்வாங்குவதைக் கண்டத் துருப்புகள், ஓ! பாரதரே, அவ்விருவருக்கும் இடையில் நடந்த மோதலில் இருந்து தப்பிச் சென்றனர்.(72) போரில் இருந்து தார்தராஷ்டிரத் துருப்புக்ள அனைத்தும் பின்வாங்குவதையும், அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுவதையும் கண்ட பீமன், வேகமாக விரைந்து, அவர்கள் மீது பாய்ந்து, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவினான்.(73) பீமனால் கொல்லப்பட்டுப் பின்வாங்கிய தார்தராஷ்டிரர்கள், ஓ! மன்னா, கர்ணன் இருந்த இடத்தை அடைந்து, அவனைச் சுற்றி நின்று மீண்டும் போரில் நிலை கொண்டனர்.(74)
பெரும் வலிமையும், பெரும் சக்தியும் கொண்ட கர்ணனே அவர்களுக்குப் புகலிடமாக அமைந்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கர்ணனைக் கண்ட உமது துருப்புகள் ஆறுதலையடைந்து, கப்பல் உடைந்த மாலுமிகள், ஓ! மனிதர்களில் புலியே, துன்பம் நிறைந்த தங்கள் அவல நிலையில், இறுதியாக ஒரு தீவை அடைவதைப் போல, ஒருவரையொருவர் நம்பி உற்சாகமாக நின்றனர். பிறகு அவர்கள், மீண்டும் மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக விரைந்தனர்” {என்றான் சஞ்சயன்}”.(75-77)
---------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி - 77ல் உள்ள சுலோகங்கள் : 77
ஆங்கிலத்தில் | In English |