The carnage caused by Karna! | Karna-Parva-Section-78 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : பீமன் தார்தராஷ்டிரர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்தபோது, கர்ணன் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதைத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன சஞ்சயன்; கர்ணனும், பீமனும் தங்கள் எதிரிகளின் படைகளை அழித்தது; பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்ற கர்ணன்; கர்ணனைச் சூழ்ந்து கொண்ட பாண்டவப் படை வீரர்கள்; அவர்களைப் புறமுதுகிடச் செய்த கர்ணன்; கர்ணன் ஏற்படுத்திய பேரழிவு; துரியோதனன் அடைந்த மகிழ்ச்சி; பாஞ்சாலர்களின் வீரம்; பாண்டவப் போர்வீரர்கள் ஏற்படுத்திய பேரழிவு...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “அந்தப் போரில் பீமசேனனால் நமது துருப்புகள் பிளக்கப்பட்டபோது, ஓ! சஞ்சயா, துரியோதனனும், சுபலனின் மகனும் {சகுனியும்} என்ன சொன்னார்கள்?(1) அல்லது, வெற்றியாளர்களில் முதன்மையான கர்ணனோ, அந்தப் போரில் என் தரப்பைச் சேர்ந்த போர்வீரர்களோ, கிருபரோ, கிருதவர்மனோ, துரோணரின் மகனோ {அஸ்வத்தாமனோ}, துச்சாசனனோ என்ன சொன்னார்கள்?(2) என் படையின் போர்வீரர்கள் அனைவருடன் அந்தப் போரில் தனியொருவனாகப் போரிட்ட அந்தப் பாண்டுமகனின் {பீமனின்} ஆற்றல் மிக அற்புதமானது என நான் நினைக்கிறேன்.(3) ராதையின் மகன் {கர்ணன்}, தன் சபதத்தின் படி (பகை) துருப்புகளிடம் நடந்து கொண்டானா? ஓ! சஞ்சயா, எதிரிகளைக் கொல்பவனான அந்தக் கர்ணனே, கௌரவர்களின் செழிப்பும், கவசமும், புகழும், வாழ்வின் நம்பிக்கையுமாவான்.(4) அளவற்ற சக்தி கொண்ட அந்தக் குந்தியின் மகனால் {பீமனால்} படை பிளக்கப்படுவதைக் கண்டு, அதிரதன் மற்றும் ராதையின் மகனான கர்ணன் அந்தப் போரில் என்ன செய்தான்?(5) போரில் வீழ்த்தக் கடினமானவர்களான என் மகன்களோ, நமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களோ, பிற மன்னர்களோ என்ன செய்தனர்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(6)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் பிற்பகலில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் வீரம் கொண்டவனான சூதன் மகன் {கர்ணன்}, பீமசேனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சோமகர்கள் அனைவரையும் தாக்கத் தொடங்கினான்.(7) பெரும்பலம் கொண்ட பீமனும், தார்தராஷ்டிரத் துருப்புகளை அழிக்கத் தொடங்கினான். அப்போது கர்ணன், (தன் சாரதியான) சல்லியனிடம், “பாஞ்சாலர்களிடம் என்னைக் கொண்டு செல்வீராக” என்றான்.(8) உண்மையில், பெரும் நுண்ணறிவு கொண்ட பீமசேனனால் தன் படை முறியடிக்கப்படுவதைக் கண்ட கர்ணன், மீண்டும் தன் சாரதியிடம் {சல்லியனிடம்}, “பாஞ்சாலர்களிடம் மட்டுமே என்னைக் கொண்டு செல்வீராக” என்றான்.(9) இவ்வாறு தூண்டப்பட்டதும்,பெரும் வலிமையைக் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளனான சல்லியன், மனோ வேகம் கொண்ட அந்த வெண்குதிரைகளைச் சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் காருஷர்களை நோக்கிச் செலுத்தினான்.(10)
பகைவீரர்களைக் கலங்கடிப்பவனான அந்தச் சல்லியன், வலிமைமிக்க அந்தப் படைக்குள் ஊடுருவி, போர்வீரர்களில் முதன்மையான கர்ணன் எந்த இடத்திற்கெல்லாம் செல்ல விரும்பினானோ அந்த இடங்கள் அனைத்திற்கும் அந்தக் குதிரைகளை உற்சாகமாக நடத்தினான்.(11) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, புலித்தோல்களால் மறைக்கப்பட்டதும், மேகத்தைப் போலத் தெரிந்ததுமான அந்தத் தேரைக் கண்ட பாண்டுக்களும், பாஞ்சாலர்களும் பீதியடைந்தனர்.(12) அந்தப் பயங்கரப் போரில் இடியொலி, அல்லது துண்டுகளாகப் பிளக்கும் மலையின் ஒலிக்கு ஒப்பாக அந்தத் தேரின் சடசடப்பொலியானது கேட்டது.(13) கர்ணன், வில்லின் நாணைத் தன் காதுவரை இழுத்து ஏவிய நூற்றுக் கணக்கான கூரிய கணைகளைக் கொண்டு பாண்டவப்படையின் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான போர்வீரர்களைத் தாக்கினான்.(14)
வெல்லப்படாத கர்ணன் அந்த அருஞ்செயல்களைச் செய்து கொண்டிருந்த போது, பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்களும், வலிமைமிக்க வில்லாளிகள் பலரும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(15) உண்மையில், சிகண்டி, பீமன், பிருஷதனின் மகன் திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலியின் (ஐந்து) மகன்கள், சாத்யகி ஆகியோர், அந்த ராதையின் மகனைச் {கர்ணனைச்} சூழ்ந்து கொண்டு அவனை அடுத்த உலகத்திற்கு அனுப்பும் விருப்பத்தால், அவன் மீது கணைமாரியைப் பொழிந்தனர்.(16) மனிதர்களில் சிறந்தவனான அந்த வீரச் சாத்யகி, அந்தப் போரில் இருபது கணைகளால் கர்ணனைத் தோள்ப்பூட்டில் தாக்கினான்.(17) சிகண்டி இருபத்தைந்து கணைகளாலும், திருஷ்டத்யும்னன் ஏழாலும், திரௌபதியின் மகன்கள் அறுபத்துநான்காலும், சகாதேவன் ஏழாலும், நகுலன் ஒரு நூறாலும் அந்தப் போரில் அவனைத்தாக்கினர்.(18) வலிமைமிக்கப் பீமசேனன் அம்மோதலில், சினத்தால் நிறைந்து, நேரான தொண்ணூறு கணைகளால் ராதையின் மகனைத் {கர்ணனைத்} தாக்கினான்.(19)
அப்போது பெரும் வலிமைமிக்க அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, ஏளனமாகச் சிரித்துக் கொண்டே, தன் அற்புத வில்லை வளைத்து, தன் எதிரிகளைக் பீடிக்கும்படி கூரிய கணைகள் பலவற்றை விடுத்தான்.(20) அந்த ராதையின் மகன் அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் பதிலுக்குத் துளைத்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் வில்லையும், அவனது கொடிமரத்தையும் அறுத்த கர்ணன், சாத்யகியின் நடுமார்பைத் தொண்ணூறு கணைகளால் துளைத்தான். கோபத்தால் நிறைந்த அவன் {கர்ணன்}, பிறகு பீமசேனனை முப்பது கணைகளால் துளைத்தான்.(21,22) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அடுத்ததாக ஓர் அகன்ற தலைக் கணையை {பல்லத்தைக்} கொண்டு, சகாதேவனின் கொடி மரத்தை அறுத்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {கர்ணன்}, மூன்று பிற கணைகளால், சகாதேவனின் சாரதியையும் பீடித்தான்.(23) ஓ! பாரதக் குலத்தின் காளையே, கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக, திரௌபதியின் (ஐந்து) மகன்களைத் தேரிழக்கச் செய்த அவனது செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(24) உண்மையில், தன் நேரான கணைகளால் அந்த வீரர்களைப் போரில் புறமுதுகிடச் செய்த அந்த வீரக் கர்ணன், பாஞ்சாலர்களையும், சேதிக்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரையும் கொல்லத் தொடங்கினான்.(25)
இவ்வாறு அந்தப் போரில் தாக்கப்பட்ட சேதிகளும், மத்ஸ்யர்களும், கர்ணனை மட்டுமே எதிர்த்து விரைந்து, அவன் மீது கணை மாரியைப் பொழிந்தனர்.(26) எனினும், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தன் கூரிய கணைகளால் அவர்களைத் தாக்கத் தொடங்கினான். பெரும் ஆற்றலைக் கொண்டவனும், அந்தப் போரில் எந்த ஆதரவுமின்றி, தனியொருவனாகப் போரிட்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, முழு ஆற்றலோடு போராடிய அந்த வில்லாளிகள் அனைவருடனும் போரிட்டு,(27,28) ஓ! ஏகாதிபதி, பாண்டவப் போர்வீரர்கள் அனைவரையும் தன் கணைகளால் தடுத்த பெரும் சாதனையை நான் கண்டேன். ஓ! பாரதரே, அந்தச் சந்தர்ப்பத்தில் கரநளினம் கொண்ட அந்த உயர் ஆன்ம கர்ணனிடம்,(29) தேவர்கள், சித்தர்கள் மற்றும் சாரணர்கள் அனைவரும் நிறைவு கொண்டனர். ஓ! மனிதர்களில் சிறந்தவரே, தார்தராஷ்டிரர்களில் பெரும் வில்லாளிகள் அனைவரும்,(30) பெரும் தேர்வீரர்களில் முதன்மையானவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதல்வனுமான கர்ணனைப் புகழ்ந்தனர்.
அப்போது கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பகைவரின் அந்தப் படையை,(31) வலிமைமிக்கதும், சுடர்மிக்கதுமான காட்டுநெருப்பானது, கோடைக்காலத்தில் உலர்ந்த புற்குவியலை எரிப்பதைப் போல எரித்தான். இவ்வாறு கர்ணனால் கொல்லப்பட்ட பாண்டவத் துருப்புகள், அச்சத்தால் பீடிக்கப்பட்டு, கர்ணனின் கண் முன்பாகவே அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடியது. கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கூரிய கணைகளால் அந்தப் போரில் இவ்வாறு தாக்கப்பட்டபோது, பாஞ்சாலர்களுக்கு மத்தியில் உரத்த ஓலங்கள் எழுந்தன. அவ்வொலியைக் கேட்டு அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களும், கர்ணனின் எதிரிகளுமான அந்தப் பரந்த பாண்டவப் படையானது,(32-34) கர்ணனையே அந்தப் போரின் ஒரே போர்வீரனாகக் கருதியது. பிறகு எதிரிகளை நொறுக்குபவனான அந்த ராதையின் மகன், மீண்டும் ஓர் அற்புத சாதனையை அடைந்தான்.(35) ஒன்று சேர்ந்திருந்தவர்களான பாண்டவர்களால் அதன்காரணமாக அவனை {கர்ணனைப்} பார்க்கக்கூட முடியவில்லை.
பெருகும் நீர்த்திரளானது மலையை அடையும்போது பிளக்கப்படுவதைப் போலவே,(36) அந்தப் பாண்டவப் படையும், கர்ணனைச் சந்தித்ததும் பிளந்தது. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தக் கர்ணன், அந்தப் பரந்த பாண்டவப் படையை எரித்து, புகையற்ற சுடர்மிக்க நெருப்பைப் போல அங்கே நின்று கொண்டிருந்தான். ஓ! மன்னா, பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அந்த வீரன், துணிச்சல் மிக்கத் தன் எதிரிகளின் கரங்களையும், சிரங்களையும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட காதுகளையும் தன் கணைகளால் வெட்டினான். தந்தக் கைப்பிடிகள் கொண்ட வாள்கள், கொடிமரங்கள், ஈட்டிகள், குதிரைகள், யானைகள்,(37-39) பல்வேறு வகையான தேர்கள், கொடிகள், அச்சுகள், நுகத்தடிகள், பல்வேறு வகைகளினான சக்கரங்கள் ஆகியன,(40) ஓ! மன்னா, ஒரு போர்வீரனின் சபதத்தை நோற்கும் கர்ணனால் பல்வேறு வழிகளில் வெட்டப்பட்டன.
ஓ! பாரதரே, அங்கே கர்ணனால் கொல்லப்பட்ட யானைகள், குதிரைகள் ஆகியவற்றுடன் கூடியவையும்,(41) சதைகள் மற்றும் குருதியால் சேறானவையுமான பூமி கடக்கமுடியாததாகியது. கொல்லப்பட்ட குதிரைகள், காலாட்கள், முறிந்த தேர்கள், இறந்த யானைகள் ஆகியவற்றின் விளைவால் அந்தக் களத்தில் சமமற்ற மற்றும் சமமான இடங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(42) கர்ணனின் (தெய்வீக) ஆயுதம் வெளிப்படுத்தப்பட்ட போது கணைகளால் உண்டான அந்த அடர்த்தியான இருளில், போராளிகளால் நண்பர்களையும், எதிரிகளையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(43) ஓ! ஏகாதிபதி, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகளால் பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் முற்றாக மறைக்கப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் இவ்வாறு வீரியத்துடன் போராடிக்கொண்டிருந்த பாண்டவர்களின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், காட்டில் ஒரு கோபக்கார சிங்கத்தால் முறியடிக்கப்படும் மான்கூட்டத்தைப் போலவே, ராதையின் மகனால் {கர்ணனால்} மீண்டும் மீண்டும் பிளக்கப்பட்டனர்.(44-46)
பாஞ்சாலத் தேர்வீரர்களில் முதன்மையானவர்களையும், (பிற) எதிரிகளையும் முறியடித்தவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான கர்ணன், அந்தப் போரில், சிறு விலங்குகளைக் கொல்லும் ஓர் ஓநாயைப் போலப் பாண்டவப் போர்வீரர்களைக் கொன்றான். போரில் புறமுதுகிடும் பாண்டவப் படையைக் கண்டவர்களும், பெரும் வலிமைமிக்கத் தார்தராஷ்டிர வில்லாளிகள்,(47,48) பின்வாங்கிச் செல்லும் அந்தப் படையைப் பயங்கரக் கூச்சலிட்டபடியே தொடர்ந்து சென்றனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்போது பெரும் மகிழ்ச்சியில் நிறைந்த துரியோதனன்,(49) படையின் அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கச்செய்தான். மனிதர்களில் முதன்மையானவர்களான அந்தப் பாஞ்சாலப் பெரும் வில்லாளிகள் பிளந்தாலும் கூட,(50) மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு மீண்டும் போரிடுவதற்காக வீரமாகத் திரும்பினர்.
எனினும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் மனிதர்களில் காளையும், எதிரிகளை அழிப்பவனுமான ராதையின் மகன், திரும்பி வந்த அந்த வீரர்களைப் பல்வேறு வழிகளில் பிளந்தான். ஓ! பாரதரே, அங்கே பாஞ்சாலர்களில் இருபது தேர்வீரர்களும், சேதி போர்வீரர்களில் நூறு பேரும் கர்ணனின் கணைகளால் கொல்லப்பட்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தேர்த்தட்டுகளையும், குதிரைகளின் முதுகுகளையும் வெறுமையாகச் செய்து,(51-53) யானைகளின் கழுத்திலிருந்து போரிட்ட போராளிகளைக் கொன்று, காலாட்படை வீரர்களை முறியடித்தவனும் எதிரிகளை எரிப்பவனும், பெரும் துணிச்சல்மிக்கவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, நடுப்பகல் சூரியனைப் போலக் காணப்பட முடியாதவனாகி, யுக முடிவின் அந்தகனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். இவ்வாறு, ஓ! ஏகாதிபதி, எதிரிகளைக் கொல்பவனும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்தக் கர்ணன், காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியவற்றைக் கொன்றபடியே தன் தேரில் நின்றிருந்தான். உண்மையில், உயிரினங்கள் அனைத்தையும் கொன்றுவிட்டு நின்று கொண்டிருக்கும் வலிமைமிக்கக் காலனைப் போலவே,(54-56) அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் கர்ணனும், சோமகர்களைக் கொன்றுவிட்டுத் தனியாக நின்று கொண்டிருந்தான். பிறகு, பாஞ்சாலர்களிடம் நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாகத் தெரிந்தது,(57) கர்ணனால் இவ்வாறு தாக்கப்பட்டாலும் கூட அவர்கள் போரில் முகப்பில் இருந்த அந்த வீரனிடம் இருந்து தப்பி ஓட மறுத்தனர்
அந்த நேரத்தில், மன்னன் (துரியோதனன்), துச்சாசனன், சரத்வானின் மகன் கிருபர்,(58) அஸ்வத்தாமன், கிருதவர்மன், பெரும் வலிமையைக் கொண்ட சகுனி ஆகியோர் பாண்டவப் போர்வீரர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றனர்.(59) ஓ! ஏகாதிபதி, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சகோதரர்களான கர்ணனின் மகன்கள் இருவரும், சினத்தால் நிறைந்து, களத்தின் பல்வேறு பகுதிகளில் பாண்டவப் படையைக் கொன்று கொண்டிருந்தனர்.(60) பேரழிவு நேர்ந்த அந்தப் போர் நடந்த இடம் பயங்கரமானதாகவும், கொடூரமானதாகவும் இருந்தது. அதே போலப் பாண்டவ வீரர்களான திருஷ்டத்யும்னன், சிகண்டி,(61) திரௌபதியின் மகன்கள் (ஐவர்) ஆகியோரும் சினத்தால் நிறைந்து உமது படையைக் கொன்றனர். இவ்வாறே பாண்டவர்களுக்கு மத்தியில் களத்தின் அனைத்திடங்களிலும் பேரழிவு நேர்ந்தது, மேலும் இவ்வாறே உமது படையும், வலிமைமிக்கப் பீமனின் கரங்களில் நேர்ந்த பேரிழப்பால் துன்புற்றது” {என்றான் சஞ்சயன்}.(62)
---------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி - 78ல் உள்ள சுலோகங்கள் : 62
ஆங்கிலத்தில் | In English |