Bhima awards Visoka! | Karna-Parva-Section-76 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : தனியொருவனாகப் போரிட்டுக் கொண்டிருந்த பீமன்; பீமனிடம் இருந்து தப்பி ஓடிய கௌரவப் படை; யுதிஷ்டிரன் ஓடிவிட்டதாகவும், அர்ஜுனன் இறந்துவிட்டதாகவும் ஐயுற்ற பீமன், ஆயுதங்கள் போதுமான அளவுக்கு இருக்கின்றவா என்று தன் தேரோட்டியான விசோகனிடம் ஆய்வு செய்யுமாறு சொன்னது; அர்ஜுனன் வருவதைக் கண்டு பீமனுக்குச் சொன்ன விசோகன்; மகிழ்ச்சியடைந்த பீமன் விசோகனுக்குப் பரிசுகளை அளிப்பது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தக் கடும்மோதல் நடக்கையில், தனி ஒருவனாகப் போரிட்டுக் கொண்டிருந்த பீமன், எண்ணற்ற எதிரிகளால் சூழப்பட்டபோது, {பீமன்} தன் சாரதியிடம் {விசோகனிடம்}, “தார்தராஷ்டிரப் படைக்கு மத்தியில் என்னைக் கொண்டு செல்வாயாக.(1) ஓ! தேரோட்டியே, இந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்டு வேகமாகச் செல்வாயாக. இந்தத் தார்தராஷ்டிரர்கள் அனைவரையும் நான் யமனின் முன்னிலைக்கு அனுப்புவேன்” என்றான். இவ்வாறு பீமசேனனால் தூண்டப்பட்ட தேரோட்டி, பீமன் எந்த இடத்தில் உமது மகனின் {துரியோதனனின்} படையை அழிக்க விரும்பினானோ, அந்த இடத்திற்கு அதை எதிர்த்து மிக மூர்க்கமாகவும், வேகமாகவும் சென்றான். அப்போது யானைகள், தேர்கள், குதிரை மற்றும் காலாட்கள் ஆகியவற்றோடு கூடிய எண்ணற்ற கௌரவத் துருப்புகள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனை எதிர்த்து விரைந்தன.(2,3) பிறகு ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும், பீமனுக்குச் சொந்தமான முதன்மையான வாகனங்களைத் தங்கள் எண்ணற்ற கணைகளால் அவர்கள் {கௌரவர்கள்} தாக்கினர். எனினும், உயர் ஆன்ம பீமன், தன்னை நோக்கி வரும் எதிரிகளின் கணைகள் அனைத்தையும் தங்கச்சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் அறுத்தான்.(4)
இவ்வாறு பீமனின் கணைகளால் இரண்டு, அல்லது மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அவனது எதிரிகளின் கணைகள் பூமியில் விழுந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் கணைகளால் தாக்கப்பட்ட முதன்மையான க்ஷத்திரியர்களுக்கு மத்தியில், யானைகள், தேர்கள், குதிரை மற்றும் காலாட்கள் ஆகியன,(5) ஓ! ஏகாதிபதி, இடியால் பிளக்கப்படும் மலைகள் உண்டாக்கும் ஆரவாரத்திற்கு ஒப்பாக உரக்க ஓலமிட்டன. இவ்வாறு பீமனால் தாக்கப்பட்ட அந்த முதன்மையான க்ஷத்திரியர்கள், பீமனின் பலமிக்கக் கணைகளால் தங்கள் அங்கங்கள் துளைக்கப்பட்டு, புதிதாக வளர்ந்த பறவைகள் ஒரு மரத்தை நோக்கிச் செல்வதைப் போல, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பீமனை எதிர்த்து விரைந்தனர். இவ்வாறு அவனை {பீமனை} எதிர்த்து உமது துருப்புகள் சென்ற போது, சீற்றமும், மூர்க்கமும் கொண்ட அந்தப் பீமன், யுக முடிவின்போது கதாயுதம் தரித்த காலன், உயிரினங்கள் அனைத்தையும் எரித்து அழிப்பதைப் போலத் தன் வேகமனைத்தையும் வெளிப்படுத்தினான்.(6-7) யுக முடிவில் வாயை அகல விரித்து அனைத்து உயிர்களையும் அழிக்கும் காலனைப் போலச் சீற்றமும், வேகமும் கொண்டிருந்த அந்தப் பீமனை உமது படைவீரர்களால் தடுக்க முடியவில்லை.(8) பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, புயலால் சிதறடிக்கப்படும் மேகத்திரள்களைப் போல, உயர் ஆன்மப் பீமனால் அந்தப் போரில் இவ்வாறு சிதைத்து எரிக்கப்பட்ட அந்தப் பாரதப் படையானது அனைத்துப் பக்கங்களிலும் பிளக்கப்பட்டுத் தப்பி ஓடியது. அப்போது, வலிமைமிக்கவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான பீமசேனன், தன் தேரோட்டியிடம் உற்சாகமாக,(9,10) “ஓ! சூதா {விசோகா}, என்னை நோக்கி வரும் அந்தத் தேர்களும், கொடிமரங்களும் நமக்குச் சொந்தமானவையா? எதிரிகளுக்குச் சொந்தமானவையா? என்பதை உறுதி செய்வாயாக. போரில் உள்ளிழுக்கப்பட்டிருப்பதால், அவற்றை வேறுபடுத்திப் பார்க்க என்னால் இயலவில்லை. என் கணைகளால் என் துருப்புகளையே நான் மறைக்காமல் இருக்க வேண்டும்.(11)
ஓ! விசோகா, அனைத்துப் பக்கங்களிலும் பகை போர்வீரர்களையும், தேர்களையும், அவர்களது கொடிமரங்களின் உச்சிகளையும் {மட்டுமே} காண்பதால் நான் பெரிதும் பீடிக்கப்பட்டிருக்கிறேன். மன்னரோ {யுதிஷ்டிரரோ} துன்பத்தில் இருக்கிறார். கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனும் இன்னும் வரவில்லை. ஓ! சூதா, இக்காரியங்கள் என் இதயத்தைக் கவலையால் நிறைக்கின்றன.(12) ஓ! தேரோட்டி, எதிரிகளுக்கு மத்தியில் என்னை விட்டுவிட்டு நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் சென்று விட்டார் என்பதே என் துயரமாகும். பீபத்சுவும் {அர்ஜுனனும்} உயிரோடிருக்கிறானா? அல்லது இறந்துவிட்டானா? என்பதை நான் அறியவில்லை. இஃது என் துயரத்தை இன்னும் அதிகரிக்கிறது.(13) எனினும், பெரும் துன்பத்தில் நிறைந்திருந்தாலும், பெரும் வலிமையைக் கொண்ட இந்தப் பகைவரின் துருப்புகளை நான் அழிப்பேன். கூடியிருக்கும் எதிரிகளுடனான போருக்கு மத்தியில் இவ்வாறு அழிவை உண்டாக்கி, இன்று நான் உன்னை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்வேன்.(14) ஓ! சூதா, கணைகளைக் கொண்ட என் அம்பறாத்தூணிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, என் தேரில் எஞ்சியிருக்கும் கணைகளின் அளவையும், வகைகளையும், நன்றாக உறுதி செய்வாயாக” என்றான் {பீமன்}.(15)
இவ்வாறு ஆணையிடப்பட்ட விசோகன், “ஓ! வீரரே {பீமரே}, கணைகளில் நீர் இன்னும் அறுபதாயிரத்தைக் {60,000} கொண்டிருக்கிறீர், உமது கத்தித் தலைக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்}, அகன்ற தலை கணைகள் {பல்லங்கள்} ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் {10,000} எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறீர். ஓ! வீரரே, துணிக்கோல் கணைகளில் {நாராசங்களில்} இன்னும் இரண்டாயிரம் {2,000} இருக்கின்றன, ஓ, பார்த்தரே {பீமரே}, பிரதரங்களில் {சிறப்பு வகைக் கணைகள்} இன்னும் மூவாயிரம் {3,000} இருக்கின்றன. உண்மையில், ஓ! பார்த்தரே {பீமரே}, ஆறு எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகளில் சுமக்க முடியாத அளவுகளுக்கான ஆயுதங்கள் இன்னும் இருக்கின்றன.(16) ஓ! கல்விமானே, கரங்களைக் கொண்டு மட்டுமே பயன்படுத்தும் ஆயுதங்களில் கதாயுதங்கள் மற்றும் வாள்கள் மட்டுமே இன்னும் ஆயிரம் ஆயிரமாக இருக்கின்றன. அதே அளவுக்கு வேல்கள், குறுவாள்கள், ஈட்டிகள், சூலங்கள் ஆகியனவும் இருக்கின்றன. உமது ஆயுதங்கள் தீர்ந்து போகும் என்று ஒருபோதும் அஞ்சாதீர்” என்றான் {விசோகன்}.(17)
பீமன் {தேரோட்டி விசோகனிடம்}, “ஓ! சூதா, இந்தப் பயங்கரமான போரில் என் வில்லில் இருந்து சீற்றத்துடன் ஏவப்படும் வேகமான கணைகளால், என் எதிரிகள் அனைவரையும் சிதைத்து, அனைத்தையும் மறைக்கப்போவதால் சூரியன் மறைந்து யமனின் இருள் உலகங்களுக்கு ஒப்பாக இந்தப் போர்க்களத்தை ஆக்கப்போகிறது.(18) ஓ! சூதா, போரில் பீமசேனன் அடிபணிந்தான், அல்லது குருக்கள் அனைவரையும் அவன் அடியபணியச் செய்தான் என்பதைக் குழந்தைகள் உள்ளிட்ட க்ஷத்திரியர்கள் அனைவரும் இன்று அறியப் போகிறார்கள்.(19) கௌரவர்கள் அனைவரும் போரில் வீழ்வார்கள், அல்லது என் கடந்த காலச் சாதனைகளைத் தொடக்கமாகக் கொண்டு உலகமனைத்தும் என்னை இன்று மெச்சப் போகிறது. தனி ஒருவனாக நான் அவர்கள் அனைவரையும் வீழ்த்தப் போகிறேன், அல்லது அவர்கள் அனைவரும் பீமசேனனைத் தாக்கி வீழ்த்தப் போகிறார்கள்.(20) நற்செயல்களைச் சாதிக்க உதவி செய்யும் தேவர்கள் எனக்கு அருள் வழங்கப் போகிறார்கள். முறையாக இருப்புக்கு அழைக்கப்படும் சக்ரன் {இந்திரன்}, வேகமாக ஒரு வேள்விக்கு வருவதைப் போல எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன் இப்போது இங்கே வரப்போகிறான்.(21) பாரதப்படை பிளப்பதைப் பார். அந்த மன்னர்கள் ஏன் தப்பி ஓடுகிறார்கள்? மனிதர்களில் முதன்மையான சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் கணைகளால் அந்தப் படையை மறைக்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(22)
ஓ! விசோகா, அந்தக் கொடிமரங்கள், யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்படைவீரர்களின் கூட்டம் ஆகியன ஓடிப்போவதைப் பார். ஓ! சூதா, கணைகள் மற்றும் ஈட்டிகளால் தாக்கப்படும் இந்தத் தேர்கள், சிதறடிக்கப்படுவதைப் பார்.(23) தங்கச் சிறகுகள் மற்றும் மயிலின் இறகுகள் ஆகியவற்றைக் கொண்டவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் அதிகமாகக் கொல்லப்பட்டாலும், இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளும் அந்தக் கௌரவப் படையை அதோ பார்.(24) தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியன காலாட்படைவீரர்களின் கூட்டத்தை நசுக்கிக் கொண்டு தப்பி ஓடுகின்றன. உண்மையில், தங்கள் உணர்வுகளை இழந்த கௌரவர்கள் அனைவரும், எரியும் காட்டில் அச்சத்தால் நிறைந்த யானைகளைப் போலத் துன்பக் குரலை வெளியிட்டபடியே தப்பி ஓடுகின்றனர். ஓ! விசோகா, அந்தப் பெரும் யானைகளும் கணைகளால் தாக்கப்பட்டு உரக்கப் பிளிறுகின்றன” என்றான் {பீமன்}.(25,26)
விசோகன் {பீமனிடம்}, “ஓ! பீமரே, பார்த்தரால் {அர்ஜுனரால்} கோபத்துடன் வளைக்கப்படும் காண்டீவத்தின் நாணொலியை நீர் கேட்காமலிருப்பது எவ்வாறு? இந்த உமது காதுகள் இரண்டும் செயலிழந்துவிட்டனவா?[1](27) ஓ! பாண்டுவின் மகனே {பீமரே}, உமது விருப்பங்கள் யாவும் நிறைவேறிவிட்டன. (எதிரியின்) யானைப்படைக்கு மத்தியில் (அர்ஜுனரின் கொடியில் உள்ள) குரங்கு அதோ காணப்படுகிறது. நீல மேகங்களுக்கு மத்தியில் மின்னலைப் போலக் காண்டீவத்தின் நாண்கயிறுகள் கீற்றுகளாகத் தெரிவதைப் பாரும்.(28) அதோ தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கொடிமரத்தின் உச்சியில் உள்ள குரங்கானது இந்தப் பயங்கரப் போரில் பகைவரின் படைப்பிரிவுகளை அனைத்துப் பக்கங்களிலும் அச்சுறுத்துகிறது. நான் கூட அதைப் பார்க்கும்போது அச்சத்தால் தாக்கப்படுகிறேன்.(29) அங்கே, அர்ஜுனரின் அழகிய கிரீடம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கிரீடத்தில் உள்ள ரத்தினம் சூரியனின் காந்தியோடு மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.(30)
[1] வேறொரு பதிப்பில், “இச்சமயத்தில் காண்டீவத்தினுடைய அதிகோரமான இந்தத்வனியை நீர் கேட்கவில்லையா? கோபங்கொண்டிருக்கின்ற பார்த்தனால் இழுக்கப்பட்ட நாண்கயிற்றின் ஒலியினால் உம்முடைய இந்த இரு காதுகளும் செவிடாகாமலிருக்கின்றனவா?” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் இத்தகவல் {இந்த ஒரு சுலோக வரி} இல்லை.
அவருக்குப் பக்கத்தில் உரத்த சங்கொலியைக் கொண்டதும், வெண்மேகங்களின் வண்ணத்தைக் கொண்டதுமான அவரது தேவதத்த சங்கை அங்கே பாரும். கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு, பகைவரின் படைக்குள் ஊடுருவும் ஜனார்த்தனருக்கு {கிருஷ்ணருக்குப்} பக்கத்தில் சூரியப் பிரகாசத்தைக் கொண்டதும், கத்தி போன்ற கூர்மை கொண்டதுமான அவரது சக்கரத்தைப் பாரும். ஓ! வீரரே, எப்போதும் யதுக்களால் வழிபடப்படுவதும், புகழைப் பெருக்குபவனான கேசவனுடையதுமான அந்தச் சக்கரத்தைப் பாரும்.(31,32) முற்றிலும் நேராக உயர்ந்திருக்கும் மரங்களுக்கு ஒப்பானவையான பெரும் யானைகளின் அந்தத் துதிக்கைகள், கிரீடியால் {அர்ஜுனனால்} வெட்டப்பட்ட பூமியில் விழுகின்றன. அந்தப் பெரும் உயிரினங்களும், கணைகளால் துளைத்துப் பிளக்கப்பட்டு, இடியால் பிளக்கப்பட்ட மலைகளைப் போலத் தங்கள் பாகர்களுடன் அங்கே கீழே விழுகின்றன.(33) ஓ! குந்தியின் மகனே {பீமரே}, மிக அழகானதும், சந்திரனின் நிறத்தைக் கொண்டதுமான கிருஷ்ணரின் பாஞ்சஜன்யத்தையும், அவரது மார்பில் சுடர்விடும் கௌஸ்துபத்தையும், அவரது வெற்றி மாலையையும் அங்கே காண்பீராக.(34)
தேர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், முதலானவருமான பார்த்தர் {அர்ஜுனர்}, வெண்மேகங்களின் நிறத்தைக் கொண்டவையும், கிருஷ்ணரால் தூண்டப்பட்டவையுமான தன் முதன்மையான குதிரைகளால் சுமக்கப்பட்டு, பகைவரின் படையைக் கொன்றபடியே வருகிறார் என்பதில் ஐயமில்லை.(35) தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} சக்தியைக் கொண்ட உமது தம்பியால் {அர்ஜுனனால்} சிதைக்கப்பட்ட அந்தத் தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்களின் கூட்டத்தைப் பாரும். கருடனின் சிறகுகளால் உண்டாக்கப்பட்ட புயலில் வேரோடு பிடுங்கப்பட்ட காட்டைப் போல அவை விழுந்து கொண்டிருப்பதைப் பாரும்.(36) தங்கள் குதிரைகள் மற்றும் சாரதிகளுடனும் கூடிய நானூறு தேர்வீரர்களும், எழுநூறு யானைகளும், எண்ணற்ற காலாட்படைவீரர்கள் மற்றும் குதிரைவீரர்களும் கிரீடியின் {அர்ஜுனரின்} வலிமைமிக்கக் கணைகளால் இந்தப் போரில் கொல்லப்படுவதைப் பாரும்.(37) குருக்களைக் கொன்றபடியே வலிமைமிக்க அர்ஜுனன், சித்திரை நட்சத்திரக்கூட்டத்தைப் போல உமது பக்கத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். உமது விருப்பங்கள் யாவும் நிறைவேறுகின்றன. உமது எதிரிகள் அழிக்கப்படுகிறார்கள். உமது வலிமையும், உமது வாழ்நாளும் எப்போதும் அதிகரிக்கட்டும்” என்றான் {விசோகன்}.(38)
பீமன் {தேரோட்டி விசோகனிடம்}, “ஓ! விசோகா, அர்ஜுனனின் வருகையை நீ சொன்னதாலும், நீ சொன்ன அந்தச் செய்தியால் உன்னிடம் எனக்கு மகிழ்ச்சி உண்டானதாலும், மக்கள் தொகை நிறைந்த பதினான்கு கிராமங்களையும், நூறு அடிமைப்பெண்களையும், இருபது தேர்களையும் நான் உனக்குத் தருகிறேன்” என்றான் {பீமன்}”.(39)
----------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி - 76ல் உள்ள சுலோகங்கள் : 39
ஆங்கிலத்தில் | In English |