Shalya was offered with leadership of the army! | Shalya-Parva-Section-06 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : இமய மலையின் அடிவாரத்தில் உள்ள மேட்டுச் சமவெளியில் பதினேழாம் நாள் இரவைக் கழித்த கௌரவர்கள்; படைத்தலைவரை நியமிக்கும்படி துரியோதனனைக் கேட்டுக் கொண்ட படை வீரர்கள்; அஸ்வத்தாமனிடம் சென்று ஆலோசனை கோரிய துரியோதனன்; சல்லியனைப் படைத்தலைவராக நியமிக்கும்படி சொன்ன அஸ்வத்தாமன்; அவ்வாறே ஆகும்படி சல்லியனை வேண்டிக் கொண்ட துரியோதனன்; அதை ஏற்றுக் கொண்ட சல்லியன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இமய மலையின் அடிவாரத்தில், அந்த மேட்டுச் சமவெளியில் இருந்த அந்த வீரர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரின் எதிர்பார்ப்பில் மகிழ்ந்து ஒன்றாகத் திரண்டு அந்த இரவைக் கழித்தனர்.(1) உண்மையில், சல்லியன், சித்திரசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான சகுனி, அஸ்வத்தாமன், கிருபர், சாத்வதகுலத்தின் கிருதவர்மன்,(2) சுஷேனன், அரிஷ்டசேனன், பெரும் சக்தி கொண்ட திருதசேனன், ஜயத்சேனன் ஆகிய இந்த மன்னர்கள் அனைவரும் அங்கேயே தங்கள் இரவைக் கழித்தனர்.(3) வீரக் கர்ணன் போரில் கொல்லப்பட்ட பிறகு, வெற்றியை விரும்பிய பாண்டவர்களிடம் அச்சம் கொண்ட உமது மகன்கள், அந்த இமய மலைகளிலும் அமைதியை அடையத் தவறினர்.(4)
போரிடத் தீர்மானித்த அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னனை {துரியோதனனை} முறையாக வழிபட்டு, சல்லியனின் முன்னிலையில் அவனிடம் {துரியோதனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்.(5) அவர்கள், "உன் படைக்கு யாராவது ஒருவரைத் தலைவராக்கிய பிறகு எதிரியுடன் போரிடுவதே உனக்குத் தகும். அவரால் பாதுகாக்கப்பட்டே போரில் நாம் எதிரிகளை வெல்வோம்" என்றனர்.(6) அப்போது துரியோதனன், தன் தேரில் இருந்து இறங்காமலேயே, தேர்வீரர்களில் முதன்மையானவனும், போர்விதிகள் அனைத்தையும் அறிந்தவனும், போரில் அந்தகனுக்கு ஒப்பானவனுமாi வீரனை (அஸ்வத்தாமனை) நோக்கிச் சென்றான்[1].(7) அழகிய அங்கங்களைக் கொண்டவனும், தலையை நன்கு மறைத்திருந்தவனும், சங்கில் உள்ளதைப் போலக் கழுத்தில் மூன்று கோடுகளைக் கொண்டவனும், இனிய பேச்சைக் கொண்டவனும், முற்றாக மலர்ந்த தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனும், புலியைப் போன்ற முகத்தைக் கொண்டவனும், மேருவைப் போன்ற மேன்மை கொண்டவனும்,(8) மஹாதேவனின் {சிவனின்} காளைக்கு ஒப்பான கழுத்து, கண்கள், நடை மற்றும் குரலைக் கொண்டவனும், நன்கு இயைந்த, பருத்த, நீண்ட கரங்களைக் கொண்டவனும், நன்கு கட்டமைக்கப்பட்ட அகன்ற மார்பைக் கொண்டவனும்,(9) காற்றில் பறக்கும் கருடனுக்கு இணையான வேகத்தையும், பலத்தையும் கொண்டவனும், சூரியனின் கதிர்களைப் போன்ற காந்தியைக் கொடையாகக் கொண்டவனும், புத்திக்கூர்மையில் உசனசுக்கு {சுக்கிரனுக்குப்} போட்டியாளனும் {இணையானவனும்},(10) அழகு, வடிவம் மற்றும் முகத்தின் கவர்ச்சி ஆகியவற்றில் சந்திரனைப் போன்றவனும், எண்ணற்ற தங்கத் தாமரைகளால் அமைந்ததைப் போன்ற உடலைக் கொண்டவனும், இயைந்து பொருந்தும் மூட்டுகளைக் கொண்டவனும்,(11) நன்கு கட்டமைக்கப்பட்ட தொடைகள், இடை மற்றும் குறுக்கைக் கொண்டவனும், அழகிய பாதம், அழகிய விரல்கள், அழகிய நகங்கள் ஆகியவற்றைக் கொண்டவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, படைப்புகள் அனைத்தின் நற்பண்புகள் மற்றும் அழகு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக நினைத்துப் பார்த்த பிறகு, படைப்பாளனால் பெருங்கவனத்துடன் படைக்கப்பட்டவனாகத் தெரிந்தான்.(12)
[1] நோக்கிச் சென்றான் என்ற இந்த சொற்கள் 17ம் ஸ்லோகத்தில் வருகின்றன என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.
நற்குறிகள் அனைத்தையும் கொண்டவனும், ஒவ்வொரு செயலிலும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்பவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, கல்வியில் பெருங்கடலாவான். எப்போதும் தன் எதிரிகளைப் பெரும் வேகத்துடன் வெற்றிக் கொண்ட அவன், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(13) நான்கு பாதங்கள் மற்றும் பத்து அங்கங்களைக் கொண்ட ஆயுத அறிவியலின் அனைத்து விவரங்களையும் அறிந்தவனாக அவன் இருந்தான்[2]. நான்கு வேதங்களையும், அதன் அங்கங்களையும், ஐந்தாவதாக ஆக்யானங்களையும்[3] அறிந்தவனாக அவன் இருந்தான்.(14) பெரும் தவத் தகுதியைக் கொண்டவரும், பெண்ணிடம் பிறக்காதவருமான துரோணர், பெருங்கவனத்துடனும், தவ நோன்புகளுடனும் முக்கண் தேவனை வழிபட்டு, {அவரைப் போன்றே} பெண்ணிடம் பிறக்காத தன் மனைவியிடம் {கிருபியிடம்} அவனை {அஸ்வத்தாமனைப்} பெற்றெடுத்தார்.(15)
[2] பாதம் என்பது ஒரு குறிப்பிட்ட அறிவுத் தொகுப்பின் பெரும் பிரிவு என்பதாகும். அங்கம் என்பது உப பிரிவு அல்லது சிறு பிரிவு என்ற பொருளைக் கொண்டதாகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். நான்கு பாதங்கள் என்பது 1. சூத்ரம் = சாத்திரக் கல்வி, 2. சிக்ஷை = பயிற்சி, 3.ப்ரயோகம் = காலத்திற்குத் தகுந்தபடி பயன்படுத்துவது, 4. ரஹஸ்யம் = காரணக் காரியங்களின் தொடர்பை அறிவது. பத்து அங்கங்கள் 1. ஆதானம் = அம்பறாத்தூணியில் இருந்து கணையை எடுப்பது, 2. ஸந்தானம் = தொடுப்பது, 3. மோக்ஷணம் = நாணிலிருந்து விடுவது, 4. நிவர்த்தன் = எதிரி ஏவுவதை விலக்குவது, 5. ஸதானம் = வில்லாளியின் நிலை. 6. முஷ்டி = பிடி [அ] பற்றுவது, 7.ப்ரயோகம் = இலக்கை அடித்தல், 8. பிராயச்சித்தம் = தவறைத் திருத்திக் கொள்வது, 9. மண்டலம் = சுற்றித் திரிவது {நடப்பது}, 10. ரஹஸ்யம் = ஒலியைக் கொண்டு இலக்கை அடிப்பது.
[3] கும்பகோணம் பதிப்பில், "அங்கங்களுடன் கூடினவையும், இதிஹாஸத்தை ஐந்தாவதாகக் கொண்டவையுமான நான்கு வேதங்களையும் நன்குணர்ந்தவரும்" என்றிருக்கிறது.
அப்படிப்பட்ட ஒப்பற்ற சாதனைகளையும், புகழையும் கொண்டவனும், பூமியில் ஒப்பற்ற அழகைக் கொண்டவனும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் கற்றறிந்தவனும், சாதனைகளில் பெருங்கடலும், களங்கமற்றவனுமான அஸ்வத்தாமனை அணுகிய உமது மகன் {துரியோதனன்}, அவனிடம், "ஓ! ஆசான் மகனே {அஸ்வத்தாமரே}, நீரே இன்று எங்களது உயர்ந்த புகலிடமாக இருக்கிறீர். எனவே, இப்போது எவரை நமது படைத்தலைவராக நியமிப்பது? யாரைத் தலைமையாக்கிக் கொண்டு, ஒன்று சேர்ந்திருக்கும் நம் அனைவராலும் பாண்டவர்களை வெல்ல முடியும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக" என்றான் {துரியோதனன்}.(16-18)
இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, "சல்லியர் நமது படையின் தலைவராகட்டும். குலம், ஆற்றல், சக்தி, புகழ், அழகு மற்றும் பிற அனைத்து சாதனைகளிலும் அவரே மேன்மையானவராக இருக்கிறார்.(19) தமக்கு அளிக்கப்பட்ட சேவைகளால் மனம் நிறைந்த அவர் {சல்லியர்}, தன் சொந்த தங்கையின் {மாத்ரியின்} மகன்களைக் கைவிட்டுவிட்டு, நமது தரப்பை அடைந்திருக்கிறார். தாமே ஒரு பெரிய படையை வைத்திருக்கும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர், தேவர்ப்படையின் இரண்டாம் தலைவனை (கார்த்திகேயனை {முருகனைப்}) போன்றவராவார்.(20) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, அம்மன்னரை {சல்லியரை} நமது படைத்தலைவராக்கினால், வெல்லப்பட முடியாத ஸ்கந்தனை {முருகனைப்) படைத்தலைவனாக்கிய தேவர்களைப் போலவே நம்மால் வெற்றியை ஈட்ட முடியும்" என்றான் {அஸ்வத்தாமன்}.(21)
துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} இவ்வார்த்தைகளைச் சொன்னதும், சல்லியனைச் சூழ்ந்து கொண்ட மன்னர்கள் அனைவரும், அவன் வெற்றியடைவானென {வெற்றி} முழக்கமிட்டனர். போருக்குத் தங்கள் மனத்தை ஆயத்தம் செய்து கொண்ட அவர்கள் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர்.(22) அப்போது கரங்களைக் கூப்பியபடியே தன் தேரில் இருந்து இறங்கிய துரியோதனன், போரில் துரோணர் மற்றும் பீஷ்மருக்குப் போட்டியாளனும் {இணையானவனும்}, {அப்போது} தன் தேரில் இருந்தவனுமான சல்லியனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(23) "ஓ! நண்பர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவரே, நண்பர்களின் வடிவத்தில் இருக்கும் மனிதர்கள் உண்மையான நண்பர்கள்தானா? இல்லையா? என ஞானியர் சோதிப்பது போன்ற அப்படிப்பட்ட நேரம் இப்போது உமது நண்பர்களுக்கு வந்திருக்கிறது.(24) துணிச்சல்மிக்க நீரே எங்கள் படைத்தலைவராகி, எங்கள் படையின் முன்னணியில் இருக்க வேண்டும். நீர் போரிடச் செல்லும்போது பாண்டவர்களும், அவர்களது நண்பர்களும் உற்சாகத்தை இழப்பார்கள், பாஞ்சாலர்களோ தளர்வடைவார்கள்" என்றான் {துரியோதனன்}.(25)
சல்லியன், "ஓ! குருக்களின் மன்னா {துரியோதனா}, நீ என்னிடம் நிறைவேற்றச் சொல்வதை நான் நிறைவேற்றுவேன். உயிர்மூச்சு, நாடு, செல்வம் ஆகிய நான் கொண்ட அனைத்தும் உன் சேவைக்காகவே {உனக்காகவே} இருக்கின்றன" என்று பதிலுரைத்தான்.(26)
துரியோதனன், "ஓ! அம்மானே {தாய்மாமனே}, என் படையின் தலைமைப் பொறுப்பை அடைய நான் உம்மை வேண்டி நிற்கிறேன். ஓ! போர்வீரர்களில் முதன்மையானவரே, போரில் தேவர்களைப் பாதுகாக்கும் ஸ்கந்தனை {முருகனைப்} போலவே ஒப்பற்றவகையில் எங்களைக் காப்பீராக.(27) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, பாவகனின் {அக்னியின்} மகனான கார்த்திகேயன் {முருகன்}, தேவர்களின் (படை) தலைமையை ஏற்றதுபோலவே, நீரே உம்மைத் தலைமைப்பொறுப்பில் நிறுவிக் கொள்வீராக. ஓ! வீரரே, தானவர்களைக் கொல்லும் இந்திரனைப் போல, போரில் நமது எதிரிகளைக் கொல்வீராக" என்றான் {துரியோதனன்}."(28)
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 06ல் உள்ள சுலோகங்கள் : 28
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 06ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |