The prowess of Shalya! | Shalya-Parva-Section-13 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 13)
பதிவின் சுருக்கம் : சல்லியனை எதிர்த்த பாண்டவ வீரர்கள்; அனைவரையும் கலங்கடித்த சல்லியன்; பீமசேனனின் படையும், யுதிஷ்டிரனின் படையும் மட்டுமே தப்பி ஓடாமல் இருந்தது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இவ்வாறு மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} பீடிக்கப்பட்டபோது, சாத்யகி, பீமசேனன், பாண்டுவினால் மாத்ரிக்குப் பிறந்த இரண்டு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தங்கள் தேர்களுடன் சல்லியனைச் சூழ்ந்து கொண்டு அந்தப் போரில் அவனைப் பீடிக்கத் தொடங்கினர்.(1) ஆதரவற்றவனாக இருந்த சல்லியன் அந்தப் பெரும் தேர்வீரர்களால் இவ்வாறு பீடிக்கப்பட்டதை (அத்தாக்குதல்களை அவன் வெற்றிகரமாகத் தடுப்பதைக்) கண்டு, உரத்த பாராட்டொலிகள் கேட்கப்பட்டன, மேலும், (அம்மோதலைக் கண்ட) சித்தர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். (அந்தப் போரைப் பார்ப்பதற்காக) அங்கே கூடியிருந்த துறவிகள் அதை அற்புதமானதாக அறிவித்தனர்.(2) அம்மோதலில் பீமசேனன், ஆற்றலில் (அவனது பெயருக்கு ஏற்றபடியே} தடுக்கப்பட முடியாத ஈட்டியாக[1] இருந்த சல்லியனை ஒரு கணையால் துளைத்து, அடுத்ததாக ஏழால் மீண்டும் அவனைத் {சல்லியனைத்} துளைத்தான்.(3) தர்மனின் மகனை {யுதிஷ்டிரனைக்} காக்க விரும்பிய சாத்யகி, நூறு கணைகளால் சல்லியனைத் துளைத்து, சிங்க முழக்கம் செய்தான்.(4) நகுலன் ஐந்து கணைகளாலும், சகாதேவன் ஏழாலும் அவனைத் துளைத்தனர்; அதன் பிறகு பின்னவன் {சகாதேவன்} அதே அளவு கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(5)
[1] ஈட்டி போன்றிருக்கும் சல்லியம் என்ற ஆயுதத்தைப் போலவே
அந்தப் போரில் கவனமாகப் போராடிய மத்ரர்களின் வீர ஆட்சியாளன் {சல்லியன்}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் இவ்வாறு பீடிக்கப்பட்டதும், கணைகளை ஏவுவதில் பெரும் சக்தி கொண்டதும், பெருங்கடினத்தைத் தாங்கவல்லதும், உறுதிமிக்கதுமான ஒரு வில்லை எடுத்துக் கொண்டு,(6) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இருபத்தைந்து கணைகளால் சாத்யகியையும், எழுபத்திமூன்றால் பீமனையும், ஏழால் நகுலனையும் துளைத்தான்.(7) பிறகு ஓர் அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு, நாணில் கணை பொருத்தப்பட்ட சகாதேவனின் வில்லை அறுத்து, அந்தப் போரில் எழுபத்து மூன்று கணைகளால் சகாதேவனையும் துளைத்தான்.(8) அப்போது சகாதேவன், மற்றொரு வில்லில் நாண்பொருத்திக் கொண்டு, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கோ, சுடர்மிக்க நெருப்புக்கோ ஒப்பான ஐந்து கணைகளால் தன் தாய்மாமனை {சல்லியனைத்} துளைத்தான்.(9) பெரும் சினத்தால் நிறைந்த அவன் {சகாதேவன்}, அந்தப் போரில் தன் எதிராளியின் சாரதியை ஒரு நேரான கணையால் தாக்கி, மூன்று கணைகளால் சல்லியனையும் மீண்டும் துளைத்தான்.(10)
அப்போது பீமசேனன், எழுபது கணைகளால் அந்த மத்ரர்களின் ஆட்சியாளனைத் துளைத்தான், சாத்யகி ஒன்பதாலும், மன்னன் யுதிஷ்டிரன் அறுபதாலும் அவனைத் துளைத்தனர்.(11) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் இவ்வாறு துளைக்கப்பட்டதும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, செஞ்சுண்ண மலையின் சாரலில் ஓடும் சிவப்பு ஓடைகளைப் போல, சல்லியனின் உடலில் குருதி வழியத் தொடங்கியது.(12) எனினும், ஓ! மன்னா, சல்லியன் விரைவாக ஐந்து கணைகளால் அந்தப் பெரும் வில்லாளிகளைப் பதிலுக்குத் துளைத்தது மிகவும் அற்புதமானதாகத் தெரிந்தது.(13) ஓ! ஐயா, மற்றொரு அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} எடுத்துக் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சல்லியன்}, அம்மோதலில் நாண் பொருத்தப்பட்ட தர்மனின் {யுதிஷ்டிரனின்} வில்லை அறுத்தான்.(14) மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டவனும், பெரும் தேர்வீரனுமான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, சல்லியனையும், அவனது குதிரைகள், சாரதி, கொடிமரம், தேர் ஆகியவற்றையும் பல கணைகளால் மறைத்தான்.(15)
அந்தப் போரில் தர்மன் மகனின் {யுதிஷ்டிரனின்} கணைகளால் இவ்வாறு மறைக்கப்பட்ட சல்லியன், கூரிய பத்து கணைகளால் முன்னவனை {யுதிஷ்டிரனைத்} தாக்கினான்.(16) அப்போது, தர்மனின் மகன் கணைகளால் இவ்வாறு பீடிக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் நிறைந்த சாத்யகி, கணைமேகங்களால் அந்த மத்ரர்களின் வீர ஆட்சியாளனைத் {சல்லியனைத்} தடுத்தான்.(17) சல்லியன், கத்திமுகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் சாத்யகியின் உறுதிமிக்க வில்லை அறுத்து, பிற பாண்டவப் போர்வீரர்கள் ஒவ்வொருவரையும் மும்மூன்று கணைகளால் துளைத்தான்.(18) அப்போது, ஓ! ஏகாதிபதி, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகி, சினத்தால் நிறைந்து, தங்கக் கைப்பிடி கொண்டதும், பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு வேலை சல்லியன் மீது வீசினான்.(19) பீமசேனன், சுடர்மிக்கப் பாம்பொன்றைப் போலத் தெரிந்த துணிக்கோல் கணை {நாராசம்} ஒன்றை அவன் மீது ஏவினான்; நகுலன் அவன் மீது ஈட்டி ஒன்றை வீசினான், அவனைக் கொல்லும் விருப்பம் கொண்டவர்களான சகாதேவன் ஒரு கதாயுதத்தையும், தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} சதக்னி ஒன்றையும் அவன் மீது வீசினர்.(20)
எனினும், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அந்த ஐந்து போர்வீரர்களின் கரங்களால் வீசப்பட்ட அவ்வாயுதங்கள் அனைத்தும் தன் தேரை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே அந்தப் போரில் அவற்றைக் கலங்கடித்தான்.(21) சல்லியன், பெரும் எண்ணிக்கையிலான அகன்ற தலை கணைகளை {பல்லங்களைக்} கொண்டு, சாத்யகியால் ஏவப்பட்ட வேலை அறுத்தான். வீரமும், பெரும் கரநளினமும் கொண்ட அவன் {சல்லியன்}, பீமனால் ஏவப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான கணையை இரு துண்டுகளாக வெட்டினான்.(22) மேலும் அவன், நகுலனால் ஏவப்பட்ட தங்கப்பிடி கொண்ட அந்தப் பயங்கரமான ஈட்டியையும், சகாதேவனால் வீசப்பட்ட கதாயுதத்தையும் கணை மேகங்களால் தடுத்தான்.(23) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் அவன் {சல்லியன்}, மன்னனால் {யுதிஷ்டிரனால்} தன் மீது ஏவப்பட்ட சதக்னியை, பாண்டு மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இரு கணைகளால் வெட்டி, உரத்த சிங்க முழக்கம் செய்தான். எனினும், அந்தப் போரில் தன் ஆயுதம் வீழ்த்தப்பட்டதைச் சிநியின் பேரனால் {சாத்யகியால்} தாங்கிக் கொள்ள முடியவில்லை.(24) சினத்தால் உணர்ச்சியை இழந்த சாத்யகி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, இரண்டு கணைகளால் மத்ரர்களின் ஆட்சியாளனையும் {சல்லியனையும்}, மூன்றால் அவனது சாரதியையும் துளைத்தான்.(25)
இதனால் சினம் தூண்டப்பட்ட சல்லியன், ஓ! ஏகாதிபதி, வலிமைமிக்க யானைகளைக் கூரிய வேல்களால் துளைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் போல இருந்த அவர்கள் அனைவரையும் பத்து கணைகளால் ஆழத் துளைத்தான்.(26) இவ்வாறு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} தடுக்கப்பட்டவர்களான அந்த எதிரிகளைக்கொல்பவர்களால், சல்லியனுக்கு முன்னிலையில் நிற்கவும் முடியவில்லை.(27) சல்லியனின் ஆற்றலைக் கண்ட மன்னன் துரியோதனன், பாண்டவர்களும், பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவே கருதினான்.(28) அப்போது, ஓ! மன்னா, வலிமைமிக்கக் கரங்களையும், பெரும் ஆற்றலையும் கொண்ட பீமசேனன், தன் உயிர் மூச்சை விட்டுவிட மனத்தில் தீர்மானித்துக் கொண்டு மத்ரர்களின் ஆட்சியாளனுடன் மோதினான்.(29) நகுலன், சகாதேவன் மற்றும் பெரும் வலிமை கொண்ட சாத்யகி ஆகியோர் சல்லியனைச் சூழ்ந்து கொண்டு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவன் மீது தங்கள் கணைகளை ஏவினர்.(30)
பெரும் வில்லாளிகளும், பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்களுமான அந்த நால்வரால் சூழப்பட்டாலும்கூட, மத்ரர்களின் வீர ஆட்சியாளன் {சல்லியன்} தொடர்ந்து அவர்களுடன் போரிட்டுக் கொண்டே வந்தான்.(31) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பயங்கரப் போரில் சல்லியனுடைய தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களில் ஒருவனைக் கத்தித் தலை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் விரைவாக வெட்டினான்.(32) துணிச்சல்மிக்கவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தச் சல்லியனுடைய தேர்ச்சக்கரப் பாதுகாவலன் இவ்வாறு கொல்லப்பட்டதும், பெரும் பலம் கொண்ட சல்லியன், பாண்டவத் துருப்புகளைக் கணைமாரியால் மறைத்தான்.(33) ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் தன் துருப்புகள் கணைகளால் மறைக்கப்படுவதைக் கண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், இவ்வகையில் சிந்தித்தான்,(34) "உண்மையில், மாதவனின் {கிருஷ்ணனின்} அந்த முக்கியத்துவம்வாய்ந்த வார்த்தைகள் எவ்வாறு உண்மையாகப் போகின்றன? சினத்தால் தூண்டப்பட்டிருக்கும் மத்ரர்களின் ஆட்சியாளர் {சல்லியர்} போரில் என் படையை அழித்துவிடமாட்டார் என நம்புகிறேன்" {என்று யுதிஷ்டிரன் சிந்தித்தான்}.(35)
அப்போது, ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றோடு கூடிய பாண்டவர்கள், மத்ரர்களின் ஆட்சியாளனை அணுகி, அனைத்துப் பக்கத்தில் இருந்தும் அவனைப் பீடிக்கத் தொடங்கினர்.(36) பெரும் மேகத்திரள்களை விலக்கும் காற்றைப் போல, அந்தப் போரில் மத்ரர்களின் மன்னன், அங்கே எழுந்த கணைமாரியையும், பல்வேறு வகைகளைச் சேர்ந்த அபரிமிதமான ஆயுதங்களையும் விலக்கினான்.(37) பிறகு, சல்லியனால் ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான கணைமழையானது, வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போல ஆகாயத்தில் செல்வதை நாங்கள் கண்டோம்.(38) உண்மையில், போரின் முன்னணியில் இருந்து மத்ரர்களின் ஆட்சியாளனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள், பறவைக்கூட்டங்கள் பாய்ந்து செல்வதைப் போலக் காணப்பட்டன.(39) மத்ர மன்னனின் வில்லில் இருந்து வெளிப்பட்டவையும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகளால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் ஓர் அங்குலம் இடம் கூட இல்லாத அளவுக்கு நிரம்பியிருந்தது.(40)
அந்தப் பயங்கரப் போரில், வலிமைமிக்கவனும், அதீத கரநளினம் கொண்டவனுமான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஏவிய கணைகளால், அடர்த்தியான இருள் உண்டானபோதும்,(41) பாண்டவர்களின் பரந்த படையானது அந்த வீரனால் இவ்வாறு கலங்கடிக்கப்படுவதைக் கண்ட போதும், தேவர்களும், கந்தர்வர்களும் பேராச்சரியத்தால் நிறைந்தனர்.(42) அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளால் பாண்டவ வீரர்கள் அனைவரையும் சீற்றத்துடன் பீடித்த சல்லியன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனையும் மறைத்து, ஒரு சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கினான்.(43) அந்தப் போரில் சல்லியனால் இவ்வாறு மறைக்கப்பட்ட பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அந்த வீரனை எதிர்த்துப் போரிட முடியாதவர்களாக ஆனார்கள்.(44) எனினும், பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்ட பாண்டவர்களும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் வழிநடத்தப்பட்டவர்களும், போர்க்கள ரத்தினமான துணிச்சல்மிக்கச் சல்லியனிடம் இருந்து தப்பி ஓடவில்லை" {என்றான் சஞ்சயன்}.(45)
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 13ல் உள்ள சுலோகங்கள் : 45
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 13ல் உள்ள சுலோகங்கள் : 45
ஆங்கிலத்தில் | In English |