The encounter between Arjuna and Aswaththaman! | Shalya-Parva-Section-14 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 14)
பதிவின் சுருக்கம் : பதினெட்டாம் நாள் போரில் அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த மோதல்; அஸ்வத்தாமனைத் தேரற்றவனாகச் செய்த அர்ஜுனன்; பாஞ்சாலத்தின் சுரதனைக் கொன்று அவனது தேரில் ஏறிக் கொண்ட அஸ்வத்தாமன்; தனியொருவனாகப் பலரிடம் போரிட்டுக் கொண்டிருந்த அர்ஜுனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அதேவேளையில் அந்தப் போரில் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அவனைப் பின் தொடர்ந்து வந்தோரும், வீரமிக்கோருமான திரிகர்த்தர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஆகியோரின் கணைகள் பலவற்றால் துளைக்கப்பட்ட அர்ஜுனன்,(1) துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} மூன்று கணைகளாலும், பிற வீரர்களில் ஒவ்வொருவரையும் இரண்டு கணைகளாலும் பதிலுக்குத் துளைத்தான்.(2) கூரிய கணைகளால் தாக்கப்பட்டு, அந்தக் கணைகள் தங்கள் அங்கங்களின் தைத்திருந்ததன் விளைவால் முள்ளம்பன்றிகளைப் போலத் தெரிந்தாலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது துருப்பினர் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து தப்பி ஓடாமலிருந்தனர்.(3) துரோணர் மகனைத் தங்கள் தலைமையில் கொண்ட அவர்கள், அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு அவனோடு போரிட்டனர்.(4) ஓ! மன்னா, அவர்களால் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகள், விரைவில் அர்ஜுனனின் தேர்த்தட்டை நிறைத்தன.(5)
பெரும் வில்லாளிகளும், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களுமான அந்த இரு கிருஷ்ணர்களும் கணைகளால் மறைக்கப்பட்டதைக் கண்ட அந்த வெல்லப்படமுடியாத (கௌரவப்) போராளிகள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(6) உண்மையில் அந்நேரத்தில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனுடைய தேரின் கூபரம், சக்கரங்கள், ஏர்க்கால், கடிவாளங்கள், நுகத்தடி, அனுஷ்கரம் ஆகியவை கணைகளால் முற்றிலும் மறைக்கப்பட்டிருந்தன.(7) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது உமது போர்வீரர்களால் பார்த்தனுக்குச் செய்யப்பட்டவற்றைப் போன்றவை இதற்கு முன்னர்ப் பார்க்கப்பட்டதோ, கேட்கப்பட்டதோ இல்லை.(8) அழகிய சிறகுகளைக் கொண்ட கூரிய கணைகளுடன் கூடிய அந்தத் தேரானது, பூமியில் நூற்றுக்கணக்கான தீப்பந்தங்களால் சுடர்விட்டெரியும் ஒரு தெய்வீக வாகனத்தை {விமானத்தைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(9) அப்போது அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி, மலைமீது மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போல நேரான கணைகளின் மாரியால் பகைவரின் படையை மறைத்தான்.(10)
அந்தப் போரில் பார்த்தனின் {அர்ஜுனனின்} பெயர் பொறிக்கப்பட்ட கணைகளால் தாக்கப்பட்ட அந்தப் போர்வீரர்கள், காரியங்களின் அந்நிலையைக் கண்டு, போர்க்களம் முழுவதும் பார்த்தனால் நிரம்பியிருப்பதாகக் கருதினர்.(11) அப்போது, கணைகளைத் தழல்களாகவும், காண்டீவத்தின் உரத்த நாணொலியைக் காற்றாகவும் கொண்ட பார்த்த நெருப்பானது, உமது துருப்புகளாலான விறகை எரிக்கத் தொடங்கியது.(12) பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வீழ்ந்துவிட்ட சக்கரங்கள், நுகத்தடிகள், அம்பறாத்தூணிகள், கொடிகள், கொடிமரங்கள், அவற்றைச் சுமந்திருந்த தேர்கள், அனுஷ்கரங்கள், திரிவேணுக்கள், அச்சுகள், பூட்டுவார்கள், கொறடாக்கள், காதுகுண்டலங்களாலும், தலைக்கவசங்களாலும் அலங்கரிக்கப்பட்ட போர்வீரர்களின் தலைகள், ஆயிரக்கணக்கான தொடைகள், விசிறிகளுடன் கூடிய குடைகள், கிரீடங்கள், மகுடங்கள் ஆகியவற்றின் குவியல்கள் பார்த்தனின் தேர் சென்ற வழித்தடமெங்கும் காணப்பட்டன.(13-16) உண்மையில், ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதர்களின் தலைவரே, அந்தக் கோபக்கார பார்த்தனின் தேர் சென்ற வழித்தடமெங்கும், குருதியால் சகதியான தரையானது, ருத்ரனின் விளையாட்டுக்களம் போலக் கடக்க முடியாததாக இருந்தது. அந்தக் காட்சியானது, கோழைகளை அச்சுறுத்தி, துணிச்சல்மிக்கோரை மகிழ்வித்தது.(17,18) எதிரிகளை எரிப்பவனான பார்த்தன், கூடுகளுடன் கூடிய இரண்டாயிரம் {2000} தேர்களை அழித்து, சுடர்மிக்கத் தழல்களுடன் கூடிய புகையற்ற நெருப்பைப் போலத் தெரிந்தான்.(19) உண்மையில் வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தப் பார்த்தன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றுடன் கூடிய அண்டத்தை (யுக முடிவில்) அழிப்பதற்காகச் சுடர்விட்டெரியும் சிறப்புமிக்க அக்னியைப்போலவே தெரிந்தான்.(20)
அந்தப் போரில் பாண்டு மகனின் {அர்ஜுனனின்} ஆற்றலைக் கண்டவனும், தன் தேரில் பல கொடிகளைக் கொண்டவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} அவனைத் தடுக்க முயற்சி செய்தான்.(21) வாகனங்களில் வெண்குதிரைகள் பூட்டியிருப்பவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பி விரைவில் ஒருவருடனொருவர் மோதிக் கொண்டனர்.(22) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவ்விருவராலும் ஏவப்பட்ட கணைமாரிகள், கோடையின் நெருக்கத்தில் இரு மேகத் திரள்களால் பொழியப்படும் மழைத்தாரைகளைப் போல அடர்த்தியானவையாகவும், பயங்கரமானவையாகவும் இருந்தன.(23) ஒருவரையொருவர் அறைகூவியழைத்த அந்த இரு போர்வீரர்களும், இரு காளைகள் தங்கள் கொம்புகளால் ஒன்றையொன்று கிழித்துக் கொள்வதைப் போலவே, அந்தப் போரில் நேரான கணைகளால் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(24) ஓ! மன்னா, அவர்களுக்கிடையில் நீண்ட நேரத்திற்குச் சமமான போரே நடைபெற்றது. ஆயுங்களின் மோதல் பயங்கரத்தை அடைந்தது.(25)
அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! பாரதரே, தங்கச் சிறகுகளையும் பெரும் சக்தியையும் கொண்ட பனிரெண்டு கணைகளால் அர்ஜுனனையும், பத்தால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தான்.(26) அந்தப் பெரும்போரில் ஆசானின் மகனுக்குச் சிறிது நேரம் கொஞ்சம் மதிப்பைக் காட்டிய பீபத்சு {அர்ஜுனன்}, பிறகு சிரித்துக் கொண்டே, தன் வில்லான காண்டீவத்தைப் பலமாக வளைத்தான்.(27) வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, விரைவில் தன் எதிராளியை குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும், தேரற்றவனாகவும் செய்து, அதிகப் பலத்தைச் செலுத்தாமலே மூன்று கணைகளால் அவனைத் துளைத்தான்.(28) குதிரைகளற்ற தேரில் நின்று கொண்டிருந்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சிரித்துக் கொண்டே இரும்பு முள் பதித்த கதாயுதம் {பரிகம்} ஒன்றைப் போலத் தெரிந்த ஒரு கனமான உலக்கையை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது வீசினான்.(29) தங்கத் துணியால் அலங்கரிக்கப்பட்ட அவ்வாயுதம் தன்னை நோக்கி வருவதைக் கண்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த வீரப் பார்த்தன் {அர்ஜுனன்}, அதை ஏழு துண்டுகளாக வெட்டினான்.(30)
தன் உலக்கை வெட்டப்பட்டதைக் கண்டவனும், பெரும் கோபம் கொண்டவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மலைச் சிகரத்தைப் போலத் தெரிந்ததும், இரும்பு முட்கள் பதிக்கப்பட்டதுமான ஒரு பயங்கரமான கதாயுதத்தை {பரிகத்தை} எடுத்துக் கொண்டான். போரில் சாதித்தவனான அந்தத் துரோணர் மகன் அதைப் பார்த்தன் மீது வீசினான்.(31) அந்த முட்கதாயுதம் {பரிகம்} சினம் கொண்ட அந்தகனைப் போலத் தன்னை நோக்கி வருவதைக் கண்ட பாண்டுவின் மகன் அர்ஜுனன், ஐந்து சிறந்த கணைகளால் அதை வேகமாக வெட்டினான்.(32) அந்தப் பெரும்போரில் பார்த்தனின் கணைகளால் வெட்டப்பட்ட அந்த ஆயுதம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (பகை) மன்னர்களின் இதயங்களைப் பிளப்பதைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(33) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் மூன்று பிற கணைகளால் துரோணரின் மகனைத் துளைத்தான். வலிமைமிக்கப் பார்த்தனால் துரோணரின் மகன் பெரும்பலத்துடன் ஆழத்துளைக்கப்பட்டாலும், ஆண்மையுடன் கூடியவனாக அச்சம் அல்லது கலக்கத்தின் எந்த அறிகுறியையும் வெளிக்காட்டவில்லை.(34)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்வீரனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, க்ஷத்திரியர்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாகவே சுரதனை {ஸுரதனைக்} கணைமாரியால் மறைத்தான்.(35) பாஞ்சாலர்களில் பெரும் தேர்வீரனான சுரதன் அந்தப் போரில் மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழ்ந்த சடசடப்பொலியைக் கொண்ட தன் தேரைச் செலுத்திக் கொண்டு துரோணரின் மகனை எதிர்த்து விரைந்தான்.(36) உறுதியானதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதுமான தன் முதன்மையான வில்லை வளைத்த அந்தப் பாஞ்சால வீரன், நெருப்பின் தழல்களுக்கோ, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கோ ஒப்பான கணைகளால் அஸ்வத்தாமனை மறைத்தான்.(37) கோபத்தில் தன்னை நோக்கி விரையும் பெரும் போர்வீரனான சுரதனைக் கண்ட துரோணரின் மகன், தடியால் தாக்கப்பட்ட பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்தான்.(38) புருவத்தை மூன்று கோடுகளாகச் சுருக்கிக் கொண்டு, தன் நாவால் கடவாயை நனைத்த அவன் {அஸ்வத்தாமன்}, சினத்துடன் சுரதனைப் பார்த்து, தன் வில்லின் நாண்கயிற்றைத் தேய்த்து, யமனின் மரணக்கோலுக்கு {யமதண்டத்துக்கு} ஒப்பான கூரிய துணிக்கோல் கணையொன்றை {நாராசத்தை} ஏவினான்.(39) பெரும் வேகம் கொண்ட அந்தக் கணையானது, சுரதனின் இதயத்தைத் துளைத்து வெளியேறி, வானத்தில் இருந்து வீசப்பட்ட சக்ரனின் வஜ்ரத்தைப் போலப் பூமியைப் பிளந்து கொண்டு உள்ளே நுழைந்தது.(40)
அந்தக் கணையால் தாக்கப்பட்ட சுரதன், இடியால் பிளப்பட்ட மலைச்சிகரம் ஒன்றைப் போலக் கீழே பூமியில் விழுந்தான்.(41) அந்த வீரன் வீழ்ந்த பிறகு, தேர்வீரர்களின் முதன்மையான அந்தத் துரோணரின் வீரமகன் {அஸ்வத்தாமன்}, கொல்லப்பட்ட தன் எதிரியின் {சுரதனின்} வாகனத்தில் வேகமாக ஏறிக் கொண்டான்.(42) பிறகு, ஓ! ஏகாதிபதி, போரில் வெல்லப்பட முடியாத போர்வீரனான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கவசமும், ஆயுதங்களும் தரித்துக் கொண்டு, சம்சப்தகர்களால் ஆதரிக்கப்பட்டு அர்ஜுனனோடு போரிட்டான்.(43) நடுப்பகல் வேளையில் ஒருவனுக்கும், பலருக்கும் இடையில் நடந்த அந்தப் போரானது, யமனின் ஆட்சிப்பகுதியில் உள்ளோரின் எண்ணிக்கையைப் பெருக்கியபடியே மிகவும் கடுமையான நிலையை அடைந்தது.(44) அப்போது அந்தப் போராளிகள் அனைவரின் ஆற்றலையும் கவனித்த அர்ஜுனன், தனியனாக, ஆதரவற்றவனாக ஒரே நேரத்தில் தன் எதிரிகள் அனைவருடனும் போரிட்ட அந்த அற்புதமான காட்சியை நாங்கள் கண்டோம்.(45) அர்ஜுனனுக்கும், அவனது எதிரிகளுக்கும் இடையில் நடைபெற்ற அம்மோதலானது, பழங்காலத்தில் இந்திரனுக்கும், அசுரர்களின் பரந்த படைக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக மிகக் கடுமையானதாக இருந்தது" {என்றான் சஞ்சயன்}.(46)
--------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 14ல் உள்ள சுலோகங்கள் : 46
--------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 14ல் உள்ள சுலோகங்கள் : 46
ஆங்கிலத்தில் | In English |