Shalya encountered the Pandavas! | Shalya-Parva-Section-15 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 15)
பதிவின் சுருக்கம் : துரியோதனனைப் பீடித்த திருஷ்டத்யும்னன்; கிருபர் மற்றும் கிருதவர்மனுடன் போரிட்ட சிகண்டி, சாத்யகியுடன் மோதிய சல்லியன்; சல்லியனின் ஆற்றல்; தாய்மாமனைக் கொல்ல விரைந்த மருமக்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனும், பிருஷதனின் மகனான திருஷ்டத்யும்னனும், அபரிமிதமான கணைகளையும், ஈட்டிகளையும் பயன்படுத்தி ஒரு கடும்போரைச் செய்தனர்.(1) அவர்கள் இருவரும், ஓ! ஏகாதிபதி, மழைக்கால மேகங்கள் பொழியும் மழையைப் போலக் கணைமாரியை ஏவினர்.(2) (குரு) மன்னன் {துரியோதனன்}, துரோணரைக் கொன்றவனும், கடுங்கணைகளைக் கொண்டவனுமான பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} ஐந்து கணைகளால் துளைத்து, மீண்டும் ஏழு கணைகளால் அவனைத் துளைத்தான்.(3) பெரும் வலிமையும், உறுதியான ஆற்றலும் படைத்த திருஷ்டத்யும்னன், துரியோதனனை அந்தப் போரில் எழுபது கணைகளால் பீடித்தான்.(4) மன்னன் இவ்வாறு பீடிக்கப்படுவதைக் கண்டவர்களான அவனுடன் பிறந்த சகோதரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு பெரும் படையின் துணையுடன் அந்தப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனைச்} சூழ்ந்து கொண்டனர்.(5)
அனைத்துப் பக்கங்களிலும் அந்த அதிரதர்களால் சூழப்பட்ட அந்தப் பாஞ்சால வீரன் {திருஷ்டத்யும்னன்}, ஓ! மன்னா, ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் தன் வேகத்தை வெளிப்படுத்தியபடியே அந்தப்போரில் திரிந்து கொண்டிருந்தான்.(6) சிகண்டி, பிரபத்ரகர்களால் ஆதரிக்கப்பட்டவனானக் கிருதவர்மன் மற்றும் பெரும் தேர்வீரரான கிருபர் ஆகிய இரு குரு வில்லாளிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தான்.(7) மேலும், ஓ! ஏகாதிபதி, போர்வீரர்கள் அனைவரும் தங்கள் உயிரை விடத் தீர்மானித்துத் தங்கள் உயிரையே பணயம் வைத்துப் போரிட்டுக் கொண்டிருந்ததால், அந்தப் போரானது கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(8) சல்லியன், அனைத்துப் பக்கங்களிலும் கணைமாரிகளை ஏவியபடி, சாத்யகி மற்றும் விருகோதரனோடு {பீமனோடு} கூடிய பார்த்தர்களைப் பீடித்துக் கொண்டிருந்தான்.(9) ஓ! ஏகாதிபதி, பொறுமையும், பெரும் பலமும் கொண்ட அந்த மத்ரர்களின் மன்னன் {சல்லியன்}, ஆற்றலில் அந்தகனுக்கு ஒப்பானவர்களான இரட்டையர்களுடனும் (நகுலன் மற்றும் சகாதேவனோடும்) அதே நேரத்தில் போரிட்டுக் கொண்டிருந்தான்.(10)
அந்தப் பெரும்போரில் சல்லியனின் கணைகளால் சிதைக்கப்பட்ட பாண்டவப் பெருந்தேர்வீரர்கள், ஒரு பாதுகாவலனை அடையத் தவறினர்.(11) அப்போது மாத்ரியின் மகனான வீர நகுலன், பெரிதும் பீடிக்கப்படும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டு, தன் தாய்மாமனை {சல்லியனை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(12) அந்தப் போரில் (பலகணைகளால்) சல்லியனை மறைத்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான நகுலன் சிரித்துக் கொண்டே, முழுக்க இரும்பாலானவையும், கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், தன் வில்லில் இருந்து பெரும் வேகத்துடன் ஏவப்பட்டவையுமான பத்து கணைகளால் அவனது {சல்லியனின்} நடு மார்பைத் துளைத்தான்.(13, 14) சிறப்புமிக்கத் தன் மருமகனால் பீடிக்கப்பட்ட சல்லியன், நேரான கணைகள் பலவற்றால் பதிலுக்குத் தன் மருமகனை {நகுலனைப்} பீடித்தான்.(15)
அப்போது மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனன், சாத்யகி, மாத்ரியின் மகனான சகாதேவன் ஆகியோர் அனைவரும் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்து விரைந்தனர்.(16) எதிரிகளை வீழ்த்துபவனான அந்தக் குரு படையின் தலைவன் {சல்லியன்}, தேர்களின் சடசடப்பொலியால் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகளை நிறைத்து பூமியை நடுங்கச் செய்தபடியே தன்னை நோக்கி வேகமாக விரைந்து வந்த அந்த வீரர்கள் அனைவரையும் அந்தப் போரில் வரவேற்றான் {எதிர்த்தான்}.(17) யுதிஷ்டிரனை மூன்று கணைகளாலும், பீமனை ஏழாலும் துளைத்த சல்லியன், அந்தப் போரில் சாத்யகியை நூறு கணைகளாலும், சகாதேவனை மூன்றாலும் துளைத்தான்.(18) பிறகு அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்}, உயர் ஆன்ம நகுலனின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்தான்.(19) பெரும் தேர்வீரனான அந்த மாத்ரியின் மகன் {நகுலன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, சிறகுள்ள கணைகளால் மத்ரர்கள் ஆட்சியாளனை வேகமாக மறைத்தான்.(20)
யுதிஷ்டிரன், சகாதேவன் ஆகியோர் ஒவ்வொருவரும், ஓ! ஐயா, அந்த மத்ரர்களின் ஆட்சியாளனுடைய மார்பை பத்து கணைகளால் துளைத்தனர்.(21) பீமசேனன் மற்றும் சாத்யகி ஆகியோர் இருவரும், மத்ரர்களின் ஆட்சியாளனை நோக்கி விரைந்து, கங்க இறகுகளாலான சிறகுகள் படைத்த கணைகளைக் கொண்டு முன்னவன் {பீமன்} அறுபதாலும், பின்னவன் {சாத்யகி} ஒன்பதாலும் அவனைத் தாக்கினர்.(22) இதனால் சினத்தால் நிறைந்த அந்த மத்ரர்களின் ஆட்சியாளன், ஒன்பது கணைகளால் சாத்யகியைத் துளைத்து மீண்டும் எழுபது நேரான கணைகளால் அவனைத் துளைத்தான்.(23) பிறகு அவன் {சல்லியன்}, ஓ! ஐயா, சாத்யகியின் கணை பொருத்தப்பட்ட வில்லின் பிடியை அறுத்து, பின்னவனின் {சாத்யகியின்} நான்கு குதிரைகளையும் யமனின் உலகத்திற்கு அனுப்பி வைத்தான்.(24) சாத்யகியைத் தேரற்றவனாகச் செய்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த மத்ரர்களின் ஆட்சியாளன், அனைத்துப் பக்கங்களிலும் ஒரு நூறு கணைகளால் அவனை {சாத்யகியைத்} தாக்கினான்.(25) அடுத்ததாக அவன் {சல்லியன்}, மாத்ரியின் இரு கோபக்கார மகன்கள், பாண்டுவின் மகனான பீமசேனன், யுதிஷ்டிரன் ஆகியோர் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தான்.(26)
பார்த்தர்கள் ஒன்று சேர்ந்தும் கூட அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனை அணுக முடியாத அளவுக்கு மிக அற்புதமான அவனது ஆற்றலை அப்போது நாங்கள் கண்டோம்.(27) மற்றொரு தேரில் ஏறிக் கொண்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான அந்த வலிமைமிக்கச் சாத்யகி, மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} அடங்கிப் பீடிக்கப்படும் பாண்டவர்களைக் கண்டு அவனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(28) சபைகளின் ரத்தினமான சல்லியன், மதங்கொண்ட யானையொன்று மற்றொரு யானையை எதிர்ப்பதைப் போலச் சாத்யகியின் தேரை எதிர்த்துத் தன் தேரில் விரைந்தான்.(29) சாத்யகிக்கும், மத்ரர்களின் வீர ஆட்சியாளனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, பழங்காலத்தில் அசுரன் சம்பரனுக்கும், தேவர்களின் தலைவனுக்கும் இடையில் நடைபெற்றத்தைப் போலக் காண்பதற்குப் பயங்கரமானதாகவும், அற்புதமானதாகவும் இருந்தது.(30) அந்தப் போரில் தன் எதிரே நின்ற மத்ரர்களின் ஆட்சியாளனைக் கண்ட சாத்யகி, பத்து கணைகளால் அவனைத்துளைத்து, "நில்லும், நில்லும்" என்றான்.(31)
அந்த உயர் ஆன்மப் போர்வீரனால் ஆழத்துளைக்கப்பட்ட அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அழகிய இறகுகளுடன் கூடிய கூரிய கணைகளால் பதிலுக்குச் சாத்யகியைத் துளைத்தான்.(32) பெரும் வில்லாளிகளான அந்தப் பார்த்தர்கள், சாத்யகியால் தாக்கப்படும் மத்ரர்களின் மன்னனைக் கண்டு, தங்கள் தாய்மாமனான அவனைக் {சல்லியனைக்} கொல்ல விரும்பி அவனை நோக்கி வேகமாக விரைந்தனர்.(33) போராடிக்கொண்டிருந்த அந்த வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதலானது, குருதியின் பெரும்பாய்ச்சலால் அடையாளங்காணப்பட்டு, முழங்கிக் கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான சிங்கங்களுக்கு இடையில் நடைபெறும் மோதலைப் போல மிகப் பயங்கரமாக இருந்தது.(34) அந்தப் போராட்டமானது, ஓ! ஏகாதிபதி, முழங்கிக் கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான சிங்கங்கள், இறைச்சிக்காகத் தங்களுக்குள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதற்கு ஒப்பாக இருந்தது.(35) அவர்களால் ஏவப்பட்ட அடர்த்தியான கணைமாரியால் பூமியானது முற்றிலும் நிறைந்து, ஆகாயமும் கணைகளின் ஒரே திரளாக ஆனது.(36)
அந்தக் கணைகளால் களத்தைச் சுற்றிலும் இருள் உண்டானது. உண்மையில், அந்தச் சிறப்புமிக்க வீரர்களால் ஏவப்பட்ட கணைகளால், மேகங்களால் உண்டாவதைப் போன்ற நிழல் உண்டானது.(37) அப்போது, ஓ! மன்னா, போர்வீரர்களால் ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், சட்டை உரித்த பாம்புகளைப் போலத் தெரிபவையுமான சுடர்மிக்கக் கணைகளுடன் திசைப்புள்ளிகள் எதிர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(38) எதிரிகளைக் கொல்பவனான அந்தச் சல்லியன், தனியனாக, ஆதரவற்றவனாக அந்தப் போரில் பல கணைகளை ஏவிப் போரிட்டு அடைதற்கரிதான சாதனையை அடைந்தான்.(39) கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளைக் கொண்டவையும், மத்ரர்களின் ஆட்சியாளனுடைய கரங்களில் இருந்து ஏவப்பட்டுப் பாய்ந்தவையுமான அந்தக் கடுங்கணைகளால் பூமியானது மறைக்கப்பட்டது.(40) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் அசுரர்களின் அழிவின்போது இருந்த சக்ரனின் {இந்திரனின்} தேரைப் போல அந்தப் பயங்கரப் போரில் சல்லியனின் தேரானது திரிந்து கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்" {என்றான் சஞ்சயன்}.(41)
---------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 15ல் உள்ள சுலோகங்கள் : 41
---------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 15ல் உள்ள சுலோகங்கள் : 41
ஆங்கிலத்தில் | In English |