The encounter between Shalya and Yudhishthira! | Shalya-Parva-Section-16 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 16)
பதிவின் சுருக்கம் : குருக்களால் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள்; கிருபரையும், கிருதவர்மனையும் கணைகளால் மறைத்த அர்ஜுனன்; சல்லியனை எதிர்த்து உறுதியாக நின்ற யுதிஷ்டிரன்; சல்லியனிடம் இருந்து தப்பி ஓடிய பாண்டவர்கள்; கிருஷ்ணனிடமும், தன் தம்பிகளிடமும் பேசி, சல்லியனைக் கொல்வதற்கு உறுதியேற்ற யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் அருஞ்செயல்; சல்லியனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட அஸ்வத்தாமன்; மற்றொரு தேரில் மீண்டும் சல்லியனுக்கும், யுதிஷ்டிரனுக்கும் இடையில் மீண்டும் நடந்த போர்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அப்போது, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சல்லியனைத் தங்கள் தலைமையில் கொண்ட உமது துருப்புகள், பெரும் மூர்க்கத்துடன் பார்த்தர்களை எதிர்த்து மீண்டும் விரைந்தனர்.(1) போரில் கடுமையானவர்களான உமது துருப்பினர் பார்த்தர்களை எதிர்த்து விரைந்து பீடிக்கப்பட்டாலும், எண்ணிக்கையில் அதிகமானோராக இருந்ததன் விளைவால் மிகவிரைவில் அவர்களை {பார்த்தர்களைக்} கலங்கடித்தனர்.(2) இரு கிருஷ்ணர்களும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே குருக்களால் தாக்கப்பட்ட அந்தப் பாண்டவத் துருப்பினர், பீமசேனனால் தடுக்கப்பட்டாலும் களத்தில் நிற்கவில்லை.(3) இதன் காரணமாகச் சினத்தால் நிறைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, கிருபரையும், அவரைப் பின்தொடர்வோரையும், கிருதவர்மனையும் கணைமாரியால் மறைத்தான்.(4)
சகாதேவன் தன் படைகள் அனைத்துடன் சகுனியைத் தடுத்தான். நகுலன், அருகில் இருந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மீது தன் பார்வையைச் செலுத்தினான்.(5)
திரௌபதியின் (ஐந்து) மகன்கள், (குரு படையின்) பெரும் எண்ணிக்கையிலான மன்னர்களைத் தடுத்தனர்.
பாஞ்சால இளவரசனான சிகண்டி, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} தடுத்தான்.(6)
கதாயுதம் தரித்திருந்த பீமசேனன், மன்னனை {துரியோதனனைத்} தடுத்தான்.
குந்தியின் மகனான யுதிஷ்டிரன், {கௌரவப்} படைகளுக்குத் தலைவனாக இருந்த சல்லியனைத் தடுத்தான்.(7)
திரௌபதியின் (ஐந்து) மகன்கள், (குரு படையின்) பெரும் எண்ணிக்கையிலான மன்னர்களைத் தடுத்தனர்.
பாஞ்சால இளவரசனான சிகண்டி, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} தடுத்தான்.(6)
கதாயுதம் தரித்திருந்த பீமசேனன், மன்னனை {துரியோதனனைத்} தடுத்தான்.
குந்தியின் மகனான யுதிஷ்டிரன், {கௌரவப்} படைகளுக்குத் தலைவனாக இருந்த சல்லியனைத் தடுத்தான்.(7)
போரில் எப்போதும் புறமுதுகிடாதவர்களான எதிரிகளுக்கும், உமது போர்வீரர்களுக்கு மத்தியிலும், அந்த இணைக்கு இடையிலும் மீண்டும் போர் தொடங்கியது.(8) மொத்த பாண்டவப் படையையும் எதிர்த்து தனியொருவனாகப் போரிட்டுக் கொண்டிருந்த சல்லியனின் மிக அற்புதமான சாதனையை அப்போது நாங்கள் கண்டோம்.(9) அந்தப் போரில் யுதிஷ்டிரனின் அருகில் இருந்த சல்லியன், சந்திரனுக்கு அருகே இருக்கும் சனிக்கோளை {சனி கிரகத்தைப்} போலத் தெரிந்தான்.(10) கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகளால் மன்னனை {யுதிஷ்டிரனைப்} பீடித்த சல்லியன், கணைமாரியால் பீமனை மறைத்தபடி அவனை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(11) சல்லியனால் வெளிப்படுத்தப்பட்ட கரநளினம், மற்றும் ஆயுதங்களில் தேர்ச்சி ஆகியவற்றைக் கண்டு இரு படைகளின் துருப்புகளும் அவனை உயர்வாக மெச்சின.(12)
சல்லியனால் பீடிக்கப்பட்டுப் பெரும் சிதைவையடைந்த பாண்டவர்கள், நிற்குமாறு கட்டளையிட்ட யுதிஷ்டிரனின் கூச்சல்களையும் அலட்சியம் செய்தபடியே போரைவிட்டுவிட்டு தப்பி ஓடினர்.(13) மத்ரர்களின் ஆட்சியாளனால் அவனது {யுதிஷ்டிரனின்} துருப்புகள் இவ்வாறு கொல்லப்பட்டபோது, பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் சினத்தால் நிறைந்தான்.(14) தன் ஆற்றலில் நம்பிக்கைக் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், போரில் வெல்வது, அல்லது மரணத்தைச் சந்திப்பது என்ற தீர்மானத்துடன் மத்ரர்களின் ஆட்சியாளனைப் பீடிக்கத் தொடங்கினான்.(15)
அவன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பியர் அனைவரையும், மதுகுலத்தின் கிருஷ்ணனையும் அழைத்து, அவர்களிடம், "கௌரவர்களுக்காகத் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் பிற மன்னர்கள் அனைவரும் போரில் அழிந்துவிட்டனர். நீங்கள் அனைவரும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கின்படியே உங்கள் வீரத்தை வெளிப்படுத்திப் போராடிவருகிறீர்கள்.(17) வலிமைமிக்கத் தேர்வீரரான சல்லியரைக் கொண்ட என்னுடைய ஒரு பங்கு மட்டுமே மிச்சமிருக்கிறது. இன்றைய போரில் நான் மத்ரர்களின் ஆட்சியாளரை {சல்லியரை} வெல்ல விரும்புகிறேன். அந்தப் பணி நிறைவேறுவதற்காக நான் விரும்புவதனைத்தையும் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(18) வீரர்களான மத்ராவதியின் {மாத்ரியின்} மகன்கள் இருவரும் என் {தேர்ச்} சக்கரங்களின் பாதுகாவலர்களாகட்டும். அவர்கள் வாசவனாலும் {இந்திரனாலும்} வெல்லப்பட முடியாத வீரர்களாகக் கணக்கிடப்படுகிறார்கள்[1].(19) தங்கள் சபதங்களில் உறுதியானவர்களும், அனைத்துக் கௌரவங்களுக்குத் தகுதியானவர்களுமான அவர்கள் இருவரும், க்ஷத்திரியர்களின் கடமைகளைத் தங்கள் முன் நிறுத்தியபடியே தங்கள் தாய்மாமனுடன் {சல்லியனுடன்} போரிடுவார்கள்.(20)
[1] கும்பகோணம் பதிப்பில், "என் சக்ரரக்ஷகர்களும், வீரர்களும், இந்திரனாலும் வெல்ல முடியாதவர்களும், யுத்தத்தில் சூரர்களால் ஸம்மதிக்கப்பட்டவர்களும், நன்மதிப்புக்குத் தகுந்தவர்களும், ஸத்தியஸந்தர்களுமான மாத்ரீபுத்திரர்களிருவரும் யுத்தத்தில் க்ஷத்ரியதருமத்தை முன்னிட்டவர்களாக மாதுலனை எனக்காக நன்றாக எதிர்த்துப் போர்புரிய வேண்டும்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
ஒன்று, போரில் சல்லியர் கொல்லப்படுவார், அல்லது நான் அவரைக் கொல்வேன். நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. உலக வீரர்களில் முதன்மையானவர்களே, நான் சொல்லும் இந்த உண்மையான வார்த்தைகளைக் கேட்பீராக.(21) பூமியின் தலைவர்களே, க்ஷத்திரியக் கடமைகளை நோற்று, வெற்றியடையவோ, கொல்லப்படவோ உறுதியாகத் தீர்மானத்துக் கொண்டு, என் தாய்மாமனுடன் நான் போரிடப் போகிறேன்.(22) தேரைச் செய்வோர், அறிவியலின் விதிகளின்படி செய்யப்பட்ட என் வாகனத்தையும், சல்லியரை விட அதிகமாக அளவுகளில் பிற வகைக் கருவிகள் அனைத்தையும் வேகமாக எனக்குக் கொடுக்கட்டும்.(23) சிநியின் பேரன் {சாத்யகி} எனது வலது சக்கரத்தையும், திருஷ்டத்யும்னன் இடதையும் பாதுகாக்கட்டும். பிருதையின் மகனான தனஞ்சயன் இன்று என் பின்புறத்தைப் பாதுகாக்கட்டும்.(24) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான பீமன் என் முன்பு நின்று போரிடட்டும். இவ்வாறிருந்தால் நேரப்போகும் பெரும்போரில் நான் சல்லியரைவிட மேன்மையானவனாக இருப்பேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.(25)
இவ்வாறு மன்னன் {யுதிஷ்டிரன்} சொன்னதும், அவனது நலன்விரும்பிகள் அனைவரும் தாங்கள் வேண்டிக் கொள்ளப்பட்டதைப் போலவே செய்தனர்.(26) பாண்டவத் துருப்பினர், அதிலும் குறிப்பாகப் பாஞ்சாலர்கள், சோமகர்கள் மற்றும் மத்ஸ்யர்கள் ஆகியோர் மீண்டும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(27) மன்னன் இந்தச் சபதத்தைச் செய்த பிறகு, மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்துச் சென்றான். அப்போது பாஞ்சாலர்கள், எண்ணற்ற சங்குகள் மற்றும் பேரிகைகளை முழக்கி, சிங்க முழக்கம் செய்தனர்.(28) பெரும் சுறுசுறுப்புடைய அவர்கள் சினத்தால் நிறைந்து, குருக்களில் காளையான மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்து உரத்த மகிழ்ச்சிக் கூச்சல்களுடன் விரைந்து சென்றனர்.(29) மேலும் அவர்கள், யானைகளின் மணியோசையையும், சங்குகள் மற்றும் துந்துபிகளின் உரத்த முழக்கங்கங்களையும் பூமியில் எதிரொலிக்கச் செய்தனர்.(30)
அப்போது உமது மகனும் {துரியோதனனும்}, மத்ரர்களின் வீர ஆட்சியாளனும் {சல்லியனும்}, உதய மற்றும் அஸ்த மலைகளைப் போலத் தங்களைத் தாக்குபவர்களை வரவேற்றனர் {எதிர்கொண்டனர்}.(31) போரில் தன் ஆற்றல் குறித்துத் தற்பெருமை பேசிக் கொண்ட சல்லியன், மழையைப் பொழியும் மகவத்தை {இந்திரனைப்} போல, எதிரிகளைத் தண்டிக்கும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் மீது கணை மாரியைப் பொழிந்தான்.(32) உயர் ஆன்மா கொண்ட குருக்களின் மன்னனும் {யுதிஷ்டிரனும்}[2], தன் அழகிய வில்லை எடுத்துக் கொண்டு, துரோணர் தனக்குக் கற்றுத் தந்த பல்வேறு வகைகளிலான பாடங்களை வெளிப்படுத்தினான்.(33) அவன் பெருந்திறனுடனும், வேகமாகவும் அடுத்தடுத்த கணைமாரிகளை அழகாகப் பொழிந்தான். போரில் அவன்{யுதிஷ்டிரன்} திரிந்து கொண்டிருந்தபோது, எவராலும் அவனிடம் ஒரு குறையையும் காண முடியவில்லை.(34) போரில் பெரும் ஆற்றலைக் கொண்ட சல்லியன் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும் இறைச்சித் துண்டுக்காகப் போரிடும் புலிகளிரண்டைப் போல ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(35)
[2] குருக்களின் மன்னன் என்பதற்குத் துரியோதனன் பெயரும் பொருந்தினாலும்கூட, இங்கே சொல்லப்படுவது யுதிஷ்டிரனாகவே இருக்க வேண்டும் என்பது அடுத்தடுத்த வரிகளில் தெரிகிறது. கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் யுதிஷ்டிரனே இங்குச் சுட்டப்படுகிறான்.
பீமன், போரில் திளைப்பவனான உமது மகனுடன் {துரியோதனனுடன்} போரிட்டுக் கொண்டிருந்தான். பாஞ்சால இளவரசன் (திருஷ்டத்யும்னன்), சாத்யகி, பாண்டுவுக்குப் பிறந்த மாத்ரியின் இரு மகன்கள் {நகுல, சகாதேவன்} ஆகியோர் சகுனியையும், சுற்றிலும் இருந்த பிற குரு வீரர்களையும் வரவேற்றனர் {எதிர்கொண்டனர்}.(36) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கையின் விளைவால், அந்த இடத்தில், வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டிருந்த உமது போர் வீரர்களுக்கும், எதிரியின் போர்வீரர்களுக்கும் இடையில் பயங்கரமான போர் நிகழ்ந்தது.(37) அப்போது துரியோதனன், அந்தப் போரில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீமனின் கொடிமரத்தை நேரான கணையொன்றால் குறிபார்த்து, அதை வெட்டி வீழ்த்தினான்.(38) ஓ! கௌரவங்களை அளிப்பவரே, பல மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீமசேனனின் அந்த அழகிய கொடிமரம் கீழே விழுந்தது.(39) மீண்டும் அந்த மன்னன் {துரியோதனன்}, யானையின் துதிக்கையைப் போலத் தெரிந்த பீமனின் அழகிய வில்லை, கூரிய கத்தி முனை கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} வெட்டினான்.(40)
பெருஞ்சக்தி கொண்டவனும், வில்லற்றவனுமான பீமன், தன் ஆற்றலை வெளிப்படுத்தி, ஈட்டியொன்றால் உமது மகனின் {துரியோதனனின்} மார்பைத் துளைத்தான். இதனால் உமது மகன் {துரியோதனன்}, தனது தேர்த்தட்டில் கீழே அமர்ந்தான்.(41) {இவ்வாறு} துரியோதனன் மயங்கியதும், மீண்டும் விருகோதரன் {பீமன்}, கத்தி முனைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்}, அவனது சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(42) துரியோதனனின் தேரில் இருந்த குதிரைகள் தங்கள் சாரதியை இழந்து, தேரை இழுத்துக் கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் மூர்க்கமாக ஓடியதால் (குரு படையில்) உரத்த ஓலங்கள் எழுந்தன.(43) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் உமது மகனைக் {துரியோதனனைக்} காக்க விரும்பி அந்தத் தேரைப் பின்தொடர்ந்து சென்றனர்.(44) (இதைக் கண்ட கௌரவத்) துருப்புகள் மிகவும் கலக்கமடைந்தன. துரியோதனனைப் பின்தொடர்ந்தோர் பீதியடைந்தனர். அந்நேரத்தில், தன் வில்லை வளைத்த காண்டீவதாரி {அர்ஜுனன்}, தன் கணைகளால் அவர்களைக் கொல்லத் தொடங்கினான்.(45)
அப்போது, சினத்தால் தூண்டப்பட்ட யுதிஷ்டிரன், மனோவேகம் கொண்டவையும், தந்தத்தைப் போன்ற வெண்மையானவையுமான தன் குதிரைகளைத் தூண்டி, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்து விரைந்தான்.(46) பிறகு, குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம் அற்புதமான ஒன்றைக் கண்டோம். இதற்கு முன்பு வரை மெதுவாகவும், மென்மையாகவும் போரிட்டு வந்த அவன் {யுதிஷ்டிரன்} {அப்போது} மிக உக்கிரமாகப் போரிட்டான்.(47) அகலத் திறந்த கண்களுடனும், சினத்தால் நடுங்கிய உடலுடனும் இருந்த அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் கூரிய கணைகளால் பகைவரின் போர்வீரர்களை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வெட்டி வீழ்த்தினான்.(48) மூத்த பாண்டவன் எதிர்த்துச் சென்ற அந்தப் படைவீரர்கள், ஓ! மன்னா, இடியினால் பிளக்கப்பட்ட மலைச்சிகரங்களைப் போல அவனால் வீழ்த்தப்பட்டனர்.(49) குதிரைகள், சாரதிகள், கொடிமரங்கள் ஆகியவற்றுடன் கூடிய தேர்களை வீழ்த்தி, பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்களையும் வீழ்த்திய யுதிஷ்டிரன், மேகத்திரள்களை அழிக்கும் வலிமைமிக்கக் காற்றைப் போல எந்தத் துணையுமின்றி அந்த இடத்தில் விளையாடத் தொடங்கினான்.(50)
சினத்தால் நிறைந்த அவன் {யுதிஷ்டிரன்}, (அண்ட அழிவின்போது) வாழும் உயிரினங்களை அழிக்கும் ருத்திரனைப் போல, அந்தப் போரில் சாரதிகளுடன் கூடிய குதிரைகளையும், சாரதிகளற்ற குதிரைகளையும், ஆயிரக்கணக்கான காலாட்படை வீரர்களையும் அழித்தான்.(51) அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவி போர்க்களத்தை வெறுமையாகச் செய்த யுதிஷ்டிரன், "நில்லும், நில்லும்" என்று சொல்லியபடியே மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்து விரைந்தான்.(52) பயங்கரச் செயல்களைப்புரியும் அவ்வீரனின் சாதனைகளைக் கண்ட உமது வீரர்கள் அனைவரும் அச்சமடைந்தனர். எனினும் சல்லியன் அவனை எதிர்த்துச் சென்றான்.(53) சினத்தால் நிறைந்த அவர்கள் இருவரும் தங்கள் சங்குகளை முழக்கினர். ஒருவரையொருவர் அறைகூவி அழைத்துக் கொண்ட அவர்கள் இருவரும் மீண்டும் தங்களுக்குள் மோதிக் கொண்டனர்.(54) அப்போது சல்லியன் கணைமாரிகளால் யுதிஷ்டிரனை மறைத்தான். அதேபோல, குந்தியின் மகனும், மத்ரர்களின் ஆட்சியாளனை கணைமாரியால் மறைத்தான்.(55)
அப்போது மத்ரர்களின் ஆட்சியாளன் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய அவ்விரு வீரர்களும், அந்தப் போரில் ஒருவரையொருவர் கணைகளால் சிதைத்துக் கொண்டு, குருதியில் குளித்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சால்மலி {இலவ மரம்} மற்றும் கின்சுக {பலாச மரம்} மரங்களைப் போல அழகாகத் தெரிந்தனர். பெரும் காந்தியைக் கொண்டவர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களும், சிறப்புமிக்க வீரர்களுமான அவர்கள் இருவரும் உரத்த முழக்கங்களைச் செய்தனர்.(56,57) அவ்விருவரையும் கண்ட படைவீரர்களால் அவர்களில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைக்} கொன்று பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} பூமியை அனுபவிப்பானா? அல்லது சல்லியன், பாண்டுவின் மகனைக் கொன்று துரியோதனனுக்குப் பூமியை அளிப்பானா? என்பதை அங்கிருந்த போர்வீரர்களால் தீர்மானிக்க முடியவில்லை. அவ்வாறு போரிட்டுக் கொண்டிருக்கும்போதே மன்னன் யுதிஷ்டிரன் எதிரிகளைத் தன் வலப்புறத்தில் நிறைத்தினான்.(58,59) பிறகு சல்லியன் நூற்றுக்கணக்கான முதன்மையான கணைகளால் யுதிஷ்டிரன் மீது ஏவினான். பெருங்கூர்மை கொண்ட மற்றொரு கணையால் அவன் {சல்லியன்}, பின்னவனின் {யுதிஷ்டிரனின்} வில்லை அறுத்தான்.(60) மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட யுதிஷ்டிரன், முன்னூறு {300} கணைகளால் சல்லியனைத் துளைத்து, கத்தி முகக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} பின்னவனின் {சல்லியனின்} வில்லையும் அறுத்தான்.(61)
அப்போது அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சில நேரான கணைகளால் தன் எதிராளியின் நான்கு குதிரைகளைக் கொன்றான். மேலும் இரண்டு மிகக் கூரிய கணைகளால் அவன், சல்லியனின் பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் வெட்டி வீழ்த்தினான்.(62) பிறகு அவன், சுடர்மிக்கதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான மற்றொரு கூரிய கணையை எடுத்துக் கொண்டு, தன் முன்பு நின்றிருந்த சல்லியனின் கொடிமரத்தையும் அறுத்தான். அப்போது, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, துரியோதனனின் படையானது பிளந்தது.(63) அந்த நேரத்தில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்த அவல நிலைக்குத் தள்ளப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நோக்கி வேகமாகச் சென்று, தன் தேரில் அவனை ஏற்றிக் கொண்டு வேகமாகத் தப்பி ஓடினான்.(64) அவர்கள் இருவரும் சென்றபிறகு, யுதிஷ்டிரனின் உரத்த முழக்கத்தைக் கேட்டனர். அப்போது நின்ற மத்ரர்களின் ஆட்சியாளன், முறையாக ஆயத்தம் செய்யப்பட்டிருந்த மற்றொரு தேரில் ஏறிக் கொண்டான்.(65) அந்தச் சிறந்த தேரானது, மேகங்களின் முழக்கத்தைப் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலியைக் கொண்டிருந்தது. ஆயுதங்கள் மற்றும் பிற வகைக் கருவிகள் அனைத்தும் பொருத்தப்பட்டிருந்த அந்த வாகனமானது, எதிரிகளுக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியது" {என்றான் சஞ்சயன்}.(66)
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 16 ல் உள்ள சுலோகங்கள் : 66
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 16 ல் உள்ள சுலோகங்கள் : 66
ஆங்கிலத்தில் | In English |