Friday, July 21, 2017

சல்லியனைக் கொன்ற யுதிஷ்டிரன்! - சல்லிய பர்வம் பகுதி – 17

Yudhishthira slays Shalya! | Shalya-Parva-Section-17 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 17)


பதிவின் சுருக்கம் : சல்லியனைத் தாக்கிய பாண்டவத் தலைவர்கள்; சல்லியனோடு போரிட்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்ற சல்லியன்; சல்லியனின் கவசத்தை அறுத்த பீமசேனன்; தெய்வீக ஈட்டியால் சல்லியனைக் கொன்ற யுதிஷ்டிரன்; சல்லியனின் தம்பிக்கும், யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த மோதல்; யுதிஷ்டிரனிடம் இருந்து தப்பி ஓடிய கௌரவப் படை; கிருதவர்மனுக்கும், சாத்யகிக்கும் இடையில் நடந்த மோதல்; கிருதவர்மனை வீழ்த்திய சாத்யகி; கிருதவர்மனைக் காத்த கிருபர்; துரியோதனனின் வீரம்; கிருதவர்மனைத் தேரற்றவனாக்கிய யுதிஷ்டிரன்; கிருதவர்மனைக் காத்த அஸ்வத்தாமன்; யுதிஷ்டிரனோடு போரிட்ட கிருபர்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, மிக உறுதியானதும், மேலும் கடினமானதுமான மற்றொரு வில்லை எடுத்து யுதிஷ்டிரனைத் துளைத்து ஒரு சிங்கத்தைப் போல முழங்கினான்.(1) அப்போது, அளவிலா ஆன்மா கொண்ட அந்த க்ஷத்திரியக் காளை {சல்லியன்}, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களின் தேவனைப் போல க்ஷத்திரியர்கள் அனைவரின் மேலும் கணைமாரிகளைப் பொழிந்தான்.(2) பத்து கணைகளால் சாத்யகியையும், மூன்றால் பீமனையும், அதே அளவுக்குச் சகாதேவனையும் துளைத்த அவன் {சல்லியன்} யுதிஷ்டிரனைப் பெரிதும் பீடித்தான்.(3) மேலும் அவன், சுடர்மிக்கப் பந்தங்களால் யானைகளைப் பீடிக்கும் ஒரு வேடனைப் போலவே, குதிரைகள், தேர்கள், யானைகளுடன் கூடிய பெரும் வில்லாளிகளான பிறர் அனைவரையும் பல கணைகளால் பீடித்தான்.(4) உண்மையில், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {சல்லியன்}, யானைகள், யானை வீரர்கள், குதிரைகள், குதிரைவீரர்கள், தேர்கள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியோரை அழித்தான்.(5) ஆயுதங்களைப் பிடித்திருந்த போராளிகளின் கரங்களையும், வாகனங்களின் கொடிமரங்களையும் வெட்டிவீழ்த்திய அவன், குசப்புல் ஈக்குகள் விரவிக் கிடக்கும் ஒரு வேள்விப்பீடத்தைப் போல (கொல்லப்பட்ட) போர்வீரர்களைப் பூமியில் விரவிக் கிடக்கச் செய்தான்.(6)


அப்போது சினத்தால் நிறைந்தவர்களான பாண்டுக்கள், பாஞ்சாலர்கள், சோமகர்கள் ஆகியோர், அனைத்தையும் அழிக்கும் காலனைப் போலத் தங்கள் துருப்புகளை இவ்வாறு கொன்றுவரும் அந்த வீரனை {சல்லியனைச்} சூழ்ந்து கொண்டனர்.(7) அந்தப் போர்வீரன் பயங்கர வலிமை கொண்ட (பாண்டவ) மன்னனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும்போது, பீமசேனன், சிநியின் பேரன் {சாத்யகி}, முதன்மையான மனிதர்களான மாத்ரியின் இரு மகன்கள் {நகுல சகாதேவன்} ஆகியோர் அவனைச் {சல்லியனைச்} சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் அவனைப் போருக்கு அறைகூவியழைத்தனர்.(8) பிறகு அந்தப் போர்க்களத்தில், போர்வீரர்களில் முதன்மையான மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} அடைந்த அந்த வீரர்கள், அம்மோதலில் அந்த முதன்மையான மனிதனை {சல்லியனைத்} தடுத்து, கடும் சக்தி கொண்ட சிறகு படைத்த கணைகளால் அவனைத் தாக்கத் தொடங்கினர்.(9) பீமசேனன், மாத்ரியின் இரு மகன்கள், மதுகுலத்தோன் {சாத்யகி} ஆகியோரால் பாதுகாக்கப்பட்டவனான தர்மனின் அரசமகன் {யுதிஷ்டிரன்}, கடும் சக்தி கொண்ட, சிறகு படைத்த கணைகளால் மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} நடுமார்பைத் தாக்கினான்.(10) அப்போது கவசமும், ஆயுதங்களும் தரித்திருந்த உமது படையின் தேர்வீரர்கள் மற்றும் பிற போராளிகள், அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளன் கணைகளால் அதிகமாகப் பீடிக்கப்பட்டதைக் கண்டு, துரியோதனனின் கட்டளையின் பேரில் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(11)

போரில் அந்நேரத்தில் மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஏழு கணைகளால் யுதிஷ்டிரனை வேகமாகத் துளைத்தான். அந்தப் பயங்கர மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த உயர் ஆன்மப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, ஒன்பது கணைகளால் தன் எதிரியைப் பதிலுக்குத் துளைத்தான்.(12) பெரும் தேர்வீரர்களான மத்ர ஆட்சியாளன் {சல்லியன்} மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும், எண்ணெயில் துவைக்கப்பட்டவையும், அவர்களின் காது வரை வளைக்கப்பட்ட வில்லின் நாண்கயிறுகளில் இருந்து ஏவப்பட்டவையுமான கணைகளால் ஒருவரையொருவர் மறைக்கத் தொடங்கினர்.(13) பெரும் பலம் கொண்டவர்களும், எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாதவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், அடுத்தவரின் கவனக்குறைவில் கவனமாக இருப்பவர்களுமான அந்தச் சிறந்த மன்னர்கள் இருவரும், தங்கள் கணைகளால் வேகமாகவும், ஆழமாகவும் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.(14) உயர் ஆன்மப் போர்வீரர்களான துணிச்சல்மிக்க மத்ர ஆட்சியாளனும், அந்த வீரப் பாண்டவனும் ஒருவரின் மீது ஒருவர் எண்ணற்ற கணைகளைப் பொழிந்த போது, அவர்களுடைய விற்கள், நாண்கயிறுகள், உள்ளங்கைகள் ஆகியவற்றில் உண்டான உரத்த ஒலியானது, இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பானதாக இருந்தது.(15) அவர்கள், ஆழ்ந்த கானகத்தில் இறைச்சித் துண்டுக்காகப் போரிடும் இளம்புலிகள் இரண்டைப் போல அந்தப் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தனர். ஆற்றல் செருக்கு பெருகியவர்களான அவர்கள், பலமிக்கத் தந்தங்களுடன் கூடிய மதங்கொண்ட இரண்டு யானைகளைப் போல ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(16)

அப்போது, பெரும் மூர்க்கம் கொண்டவனான மத்ரர்களின் சிறப்புமிக்க ஆட்சியாளன் {சல்லியன்}, தன் வீரத்தை வெளிப்படுத்தி, பயங்கர வலிமை கொண்ட வீரனான யுதிஷ்டிரனின் மார்பை, நெருப்பு அல்லது சூரியனின் காந்தியைக் கொண்ட கணையொன்றால் துளைத்தான்.(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வாறு ஆழத் துளைக்கப்பட்டவனும், குரு குலத்துக் காளையுமான சிறப்புமிக்க யுதிஷ்டிரன், நன்கு ஏவப்பட்ட கணையொன்றால் மத்ரர்களின் ஆட்சியாளனைத் தாக்கி மகிழ்ச்சியால் நிறைந்தான்.(18) கண்ணிமைக்கும் நேரத்தில் தன் புலனுணர்வுகள் மீண்டவனும், ஆயிரங்கண் கொண்டவனுக்கு {இந்திரனுக்கு} இணையான ஆற்றலைக் கொண்டவனுமான அந்த மன்னர்களில் முதன்மையானவன் (சல்லியன்), கோபத்தால் கண்கள் சிவந்து, அந்தப் பிருதையின் மகனை{யுதிஷ்டிரனை} நூறு கணைகளால் வேகமாகத் தாக்கினான்.(19) இதன்காரணமாகச் சினத்தால் நிறைந்த தர்மனின் சிறப்புமிக்க மகன் {யுதிஷ்டிரன்}, சல்லியனின் மார்பை வேகமாகத் துளைத்து, ஒரு கணத்தையும் இழக்காமல், ஆறு கணைகளால் அவனுடைய தங்கக் கவசத்தையும் தாக்கினான்.(20)

அப்போது, மகிழ்ச்சியால் நிறைந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, தன் வில்லை வளைத்துப் பல கணைகளை ஏவி, இறுதியாகத் தன் அரச எதிரியான அந்தக் குரு குலத்துக் காளையின் வில்லை கத்தி முகக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்} இரண்டால் அறுத்தான்.(21) பிறகு அந்தப் போரில், புதியதும், மேலும் உறுதிமிக்கதுமான வில்லொன்றை எடுத்துக் கொண்ட சிறப்புமிக்க யுதிஷ்டிரன், அசுரன் நமுசியைத் துளைக்கும் இந்திரனைப் போலக் கூர்முனை கணைகள் பலவற்றால் சல்லியனைத் துளைத்தான்.(22) சிறப்புமிக்கச் சல்லியன், ஒன்பது கணைகளால் பீமன் மற்றும் மன்னன் யுதிஷ்டிரனின் தங்கக் கவசங்களை வெட்டி, அவ்விருவரின் கரங்களையும் துளைத்தான்.(23) பிறகு, நெருப்பு அல்லது சூரியனின் காந்தியைக் கொண்ட மற்றொரு கத்தி முகக் கணையால் {க்ஷுரப்ரத்தால்} யுதிஷ்டிரனின் வில்லையும் அவன் அறுத்தான். இந்நேரத்தில் கிருபர், ஆறு கணைகளை ஏவி மன்னனின் {யுதிஷ்டிரனின்} சாரதியைக் கொன்றதன் காரணமாக, அவன் {அந்த சாரதி} தேருக்கு முன்பு கீழே விழுந்தான்.(24) பிறகு மத்ரர்களின் ஆட்சியாளன் நான்கு கணைகளைக் கொண்டு யுதிஷ்டிரனின் நான்கு குதிரைகளைக் கொன்றான். மன்னனின் குதிரைகளைக் கொன்ற உயர் ஆன்ம சல்லியன், பிறகு தர்மனின் அரச மகனுடைய துருப்பினரைக் கொல்லத் தொடங்கினான்.(25)

அந்த (பாண்டவ) மன்னன் அந்த அவல நிலைக்குக் கொண்டு வரப்பட்டபோது, சிறப்புமிக்கப் பீமசேனன், பெரும் வேகத்தைக் கொண்ட ஒரு கணையால் மத்ர மன்னனின் {சல்லியனின்} வில்லை வேகமாக அறுத்து, மேலும் இரு கணைகளால் அம்மன்னனையும் ஆழமாகத் துளைத்தான்.(26) மற்றொரு கணையால் அவன், சல்லியனுடைய சாரதியின்  கவசம் பொருந்திய உடலில் இருந்து அவனது தலையை வெட்டினான். பெருஞ்சினத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், ஒரு கணமும் தாமதியாமல் அடுத்ததாகத் தன் எதிரியின் நான்கு குதிரைகளையும் கொன்றான்.(27) பிறகு, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான பீமன், பெரும் வேகம் கொண்ட நூறு கணைகளால் அவ்வீரனை மறைத்து, அந்தப் போரில் தனியொருவனாகத் திரிந்து வந்தான். மாத்ரியின் மகனான சகாதேவனும் அதையே செய்தான். அக்கணைகளால் சல்லியன் திகைப்படைந்ததைக் கண்ட பீமன், வேறு கணைகளால் அவனது கவசத்தையும் அறுத்தான்.(28) பீமசேனனால் கவசம் வெட்டப்பட்டவனான அந்த உயர் ஆன்ம மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, ஒரு வாளையும், ஆயிரம் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, தன் தேரில் இருந்து கீழே குதித்து, குந்தியின் மகனை நோக்கி விரைந்தான். பயங்கரப் பலத்தைக் கொண்ட சல்லியன், நகுலனுடைய தேரின் ஏர்க்காலை வெட்டி, யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தான்.(29) சினத்துடன் விரையும் யமனைப் போல, மன்னனை நோக்கி மூர்க்கமாக விரையும் அவனைக் கண்ட திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் (ஐவர்), மற்றும் சிநியின் பேரன் {சாத்யகி} ஆகியோர் திடீரென அவனை நோக்கிச் சென்றனர்.(30)

அப்போது சிறப்புமிக்கவனான பீமன், முன்னேறிவரும் அவ்வீரனின் {சல்லியனின்} ஒப்பற்ற கேடயத்தைப் பத்து கணைகளால் அறுத்தான். மேலும் அவன் {பீமன்}, மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அந்தப் போர்வீரனின் வாளையும் கைப்பிடியில் அறுத்தான். இதனால் மகிழ்ச்சியில் நிறைந்த அவன் {பீமன்}, துருப்புகளுக்கு மத்தியில் உரக்க முழங்கினான்.(31) பீமனின் அந்த அருஞ்செயலைக் கண்ட பாண்டவத் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர். உரக்கச் சிரித்த அவர்கள், கடும் முழக்கங்களைச் செய்தபடியே, சந்திரனைப் போன்று வெண்மையான தங்கள் சங்குகளை முழக்கினர்.(32) வியர்வையில் நனைந்து, குருதியில் குளித்து, மிகவும் துயருற்றிருந்த உமது படையின் வீரர்கள், அந்தப் பயங்கர ஒலியால் கிட்டத்தட்ட உயிரற்றவர்களைப் போல தங்கள் உற்சாகத்தை இழந்தனர்.(33) பீமசேனன் தலைமையிலான அந்த முதன்மையான பாண்டவ வீரர்களால் தாக்கப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளன், (அவர்களைப் பொருட்படுத்தாமல்) ஒரு மானைக் கைப்பற்றப்போகும் சிங்கத்தைப் போல யுதிஷ்டிரனை நோக்கிச் சென்றான்.(34) அப்போது, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக இருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கோபத்தில் தூண்டப்பட்டதன் விளைவால் சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்தான். தன் எதிரே மத்ர ஆட்சியாளனைக் {சல்லியனைக்} கண்ட அவன் {யுதிஷ்டிரன்}, அந்த எதிரியை நோக்கி மிக மூர்க்கமாக விரைந்தான்.(35)

கோவிந்தனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளை நினைவுகூர்ந்த அவன், சல்லியனின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். உண்மையில் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், குதிரைகளற்ற, சாரதியற்ற தன் தேரில் நின்று கொண்டு, ஓர் ஈட்டியை எடுக்க விரும்பினான்.(36) அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சல்லியனின் அருஞ்செயலைக் கண்டும், தன் பங்காக ஒதுக்கப்பட்ட அந்த வீரன் இன்னும் கொல்லப்படாமல் இருப்பதை நினைவுகூர்ந்தும், இந்திரனின் தம்பி {கிருஷ்ணன்} தன்னிடம் செய்யச் சொன்ன செயலை நிறைவேற்றுவதில் தன் இதயத்தை நிலைக்கச் செய்தான்.(37) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தங்கம் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்டதும், தங்கத்தைப் போன்ற பிரகாசமான ஒளியைக் கொண்டதுமான ஓர் ஈட்டியை எடுத்தான். அகன்று விரிந்திருந்த தன் விழிகளை உருட்டிய அவன், சினம் நிறைந்த இதயத்துடன் தன் பார்வையை மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மீது செலுத்தினான்.(38) ஓ மனிதர்களில் தேவரே {திருதராஷ்டிரரே}, இவ்வாறு தூய ஆன்மா கொண்டவனும், பாவங்களனைத்தும் கழுவப்பட்டவனுமான அம்மன்னனால் பார்க்கப்பட்டும், மத்ரர்களின் அந்த ஆட்சியாளன் {சல்லியன்} சாம்பலாகக் குறையாமல் {எரிந்து சாம்பலாகாமல்} இருந்தான். இஃது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, எங்களுக்குப் பேராச்சரியத்தை ஏற்படுத்தியது.(39) பிறகு, குருக்களின் அந்தச் சிறப்புமிக்கத் தலைவன் {யுதிஷ்டிரன்}, கடினமான அழகிய கைப்பிடியுடன் கூடியதும், ரத்தினங்கள் மற்றும் பவழங்களால் பிரகாசித்ததுமான அந்தச் சுடர்மிக்க ஈட்டியை {சக்தி ஆயுதத்தை}, மத்ரர்களின் மன்னன் {சல்லியன்} மீது பெரும்பலத்துடன் வீசினான்.(40)

பெரும் பலத்துடன் வீசப்பட்டு, ஆகாயத்தினூடே சென்ற அந்தச் சுடர்மிக்க ஈட்டியானது {சக்தி ஆயுதம்}, யுகமுடிவில் வானத்தில் இருந்து விழும் எரிநட்சத்திரத்தைப் போல நெருப்புப்பொறிகளை உமிழ்வதைக் கௌரவர்கள் அனைவரும் கண்டனர்.(41) அந்தப் போரில், நீதிமானானான மன்னன் யுதிஷ்டிரன், மரணத்தைத் தரும் பாசக்கயிற்றைத் தரித்திருக்கும் கால இரவுக்கோ {காலராத்திரிக்கோ}, அச்சந்தரும் யமனின் தன்மையைக் கொண்ட வளர்ப்புத் தாய்க்கோ ஒப்பானதும், பிராமணச் சாபத்தைப் போன்றதும், கலங்கடிக்கப்பட முடியாததுமான அந்த ஈட்டியை மிகக் கவனமாக வீசினான்[1].(42) பாண்டுவின் மகன்கள், நறுமணப்பொருட்கள், மாலைகள், சிறந்த இருக்கைகள், சிறந்த வகை உணவுகள் மற்றும் பானங்களுடன் எப்போதும் அவ்வாயுதத்தைக் கவனமாக வழிபட்டு வந்தனர். சம்வர்த்தக நெருப்பைப் போலச் சுடர்விடுவதாகத் தெரிந்த அவ்வாயுதம், அங்கீரசின் அதர்வணச் சடங்கைப் போலக் கடுமையானதாக இருந்தது.(43) ஈசானனின் பயன்பாட்டுக்காக (தெய்வீகத் தச்சனான) தஸ்த்ரியால் {விஸ்வகர்மாவால்} உண்டாக்கப்பட்ட அஃது, எதிரிகள் அனைவரின் உயிர் மூச்சுகளையும், உடலையும் எரிக்கவல்லதாய் இருந்தது. அது தன் சக்தியால் பூமி, ஆகாயம், அனைத்து நீர் கொள்ளிடங்கள் மற்றும் அனைத்து வகை உயிரினங்களையும் அழிக்கவல்லதாய் இருந்தது.(44) மணிகள், கொடிகள், ரத்தினங்கள், வைரங்கள், வைடூரியங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், தங்கக் கைப்பிடி கொண்டதுமான அது, பல நோன்புகளை நோற்ற பிறகு, தஸ்திரியாலேயே {விஸ்வகர்மனாலேயே} கவனமாக வடிவமைக்கப்பட்டதாகும். தவறாமல் மரணத்தைத் தரக்கூடிய அது பிரம்ம வெறுப்பாளர்கள் அனைவரையும் அழிக்கவல்லதாகும்.(45)

[1] கும்பகோணம் பதிப்பில், "முயற்சியுள்ள தர்மராஜர் யுத்தத்தில் காலராத்திரி போன்றதும், பாசத்தைக் கையிற்கொண்ட யமனை வளர்த்த தாய் போன்ற உக்ர ரூபமுள்ளதும், பிரம்மதண்டத்திற்கொப்பானதும், வீணாகாததுமான அந்தச் சக்தியைப் பிரயோகித்தார்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "மன்னன் யுதிஷ்டிரன் அந்தப் போரில் பயங்கரப் பாசக்கயிற்றைத் தரித்த கால இரவுக்கோ, யமனின் பயங்கரமான தாய்க்கோ ஒப்பானதும், பிராமணனின் சாபத்தைப் போன்றதும், உறுதியான விளைவை ஏற்படுத்துவதுமான அந்த ஈட்டியைக் கவனமாக வீசினான்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "அஃது அழிவை ஏற்படுத்தும் இரவைப் போன்றும், கையில் பாசக்கயிற்றைக் கொண்ட யமனைப் போலவும் இருந்தது. அஃது அழிவின் பேறுகால மருத்துவச்சியைப் போன்ற கடுமையான வடிவம் கொண்டதாக இருந்தது. அது பிரம்ம தண்டத்தைப் போலவும், வெல்லப்பட்ட முடியாததாகவும் இருந்தது" என்றிருக்கிறது.

கடுமையான பல மந்திரங்களால் அஃதை {அந்த ஈட்டியை} ஈர்த்து, பெரும் பலம் மற்றும் பெருங்கவனத்தால் அதற்குப் பயங்கர வேகத்தை அளித்த மன்னன் யுதிஷ்டிரன், மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} அழிவுக்காக {பறவைகளின்} சிறந்த வழித்தடத்தின் ஊடாக அதை வீசினான்.(46) அந்த மன்னன் {யுதிஷ்டிரன் சல்லியனிடம்}, "ஓ! இழிந்தவரே, நீர் கொல்லப்பட்டீர்" என்ற வார்த்தைகளை உரத்த குரலில் சொல்லி, பழங்காலத்தில் அந்தகாசுரனின் அழிவுக்காகத் தன் கணையை ஏவிய ருத்ரனைப் போல, வெளிப்படையாகக் கோபத்தில் ஆடியபடியே, வலுவானதும், அழகானதுமான தன் (வலக்) கரத்தை வளைத்து அஃதை {அந்த ஈட்டியை} ஏவினான்.(47) இருப்பினும் உரக்க முழங்கிய சல்லியன், நெருப்பானது, தன் மேல் ஊற்றப்படும் தெளிந்த நெய்யைப் பிடிக்கத் தாவுவதைப் போலவே, வலிமையனைத்தையும் பயன்படுத்தி யுதிஷ்டிரனால் ஏவப்பட்டதும், தடுக்கப்பட முடியாத சக்தி கொண்டதுமான அந்தச் சிறந்த ஈட்டியைப் பிடிக்க முயற்சித்தான்.(48) அவனது முக்கிய அங்கங்களையும், அவனது அகன்ற அழகிய மார்பையும் துளைத்த அந்த ஈட்டியானது, சிறு தடையுமில்லாமல் (மத்ரத்தைச் சார்ந்த) அம்மன்னனின் உலகம் பரந்த புகழை (தன்னோடு) கவர்ந்து சென்று, நீர் நுழைவது போலவே பூமிக்குள் எளிதாக நுழைந்தது.(49) நாசித்துளைகள், கண்கள், காதுகள், வாய் ஆகியவற்றில் இருந்தும், காயங்களில் வழிந்தும் வெளிப்பட்ட குருதியால் நனைக்கப்பட்ட அவன் {சல்லியன்}, ஸ்கந்தனால் துளைக்கப்பட்ட பெருவடிவ கிரௌஞ்ச மலையைப் போலத் தெரிந்தான்.(50)

குரு குல வழித்தோன்றலால் கவசம் அறுபட்டவனும், இந்திரனின் யானையைப் போன்ற பலவானுமான அந்தச் சிறப்புமிக்கச் சல்லியன், தன் கரங்களை அகல விரித்து, இடியால் பிளக்கப்பட்ட ஒரு மலைச்சிகரத்தைப் போலக் கீழே பூமியில் விழுந்தான்.(51) இந்திரனை வழிபட நிறுவப்பட்ட நெரும் கொடிமரமொன்று தரையில் விழுவதைப் போல அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, தன் கரங்களை அகல விரித்தபடி நீதிமானான மன்னன் யுதிஷ்ட்டிரனை நோக்கிய முகத்துடன் கீழே பூமியில் விழுந்தான்[2].(52) தன் மார்பில் விழப்போகும் அன்புத்தலைவனை வரவேற்கும் ஓர் அன்புமனைவியைப் போலவே, சிதைந்து குருதியில் குளித்த அங்கங்களுடன் விழும் அந்த மனிதர்களில் காளையை வரவேற்பதற்காகப் பூமியானவள் பாசத்துடன் சற்றே எழுந்தது போலத் தெரிந்தது.(53) பலமிக்கச் சல்லியன், அன்பு மனைவியைப் போலப் பூமியை நீண்ட காலம் அனுபவித்த பிறகு, தன் அங்கங்கள் அனைத்தாலும் பூமியை அணைத்தபடியே, அவளது மார்பில் உறங்குவதைப் போல அப்போது தெரிந்தது.(54) நியாயமான போரில் நீதிமிக்க ஆன்மாவான தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} கொல்லப்பட்ட சல்லியன், வேள்வி மேடையில் தணிந்து கிடக்கும் நன்னெருப்பின் தன்மையை ஏற்றதாகத் தெரிந்தது.(55) ஆயுதங்களையும் கொடிமரத்தையும் இழந்து, இதயம் துளைக்கப்பட்டிருந்தாலும், உயிரற்றுக் கிடந்த அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் தன் அழகைக் கைவிட்டதாகத் தெரியவில்லை.(56)

[2] மேலே சுட்டப்பட்டிருக்கும் படம் இங்கே சொல்லப்படும் இந்தக் காட்சிக்குப் பொருந்துவதாக இல்லை. வேறு படம் கிடைக்கவில்லை.

அப்போது யுதிஷ்டிரன், இந்திரனின் வில்லுக்கு ஒப்பான காந்தியைக் கொண்ட தன் வில்லை எடுத்து, பாம்புகளை அழிக்கும் பறவைகளின் அரசனைப் போல, அந்தப் போரில் தன் எதிரிகளை அழிக்கத் தொடங்கினான். பிறகு தனது கூர்முனைக் கணைகளால் தன் எதிரிகளின் உடல்களைப் பெரும் வேகத்துடன் வெட்டத் தொடங்கினான்.(57) அப்போது அந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} ஏவிய கணைமாரிகளால், உமது துருப்புகள் முற்றிலும் மறைக்கப்பட்டன. அச்சத்தால் தங்கள் கண்களை மூடிக் கொண்ட அவர்கள், (திகைத்துப் போய்) ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். அவர்கள் தங்கள் உடல்களில் இரத்தம் வழிய, தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் உண்டான தங்கள் ஆயுதங்களை இழந்து, தங்கள் உயிர் மூச்சுகளையும் விட்டனர்.(58)

சல்லியன் வீழ்ந்ததும், இளமையுடன் கூடியவனும், (இறந்து போன) தன் அண்ணனுக்கு அனைத்து சாதனைகளிலும் இணையானவனும், வலிமைக்க ஒரு தேர்வீரனாகக் கருதப்பட்டவனுமான மத்ர மன்னனின் தம்பி, யுதிஷ்டிரனை எதிர்த்துச் சென்றான்.(59) போரில் வெல்லப்பட முடியாதவனும், தன் அண்ணனுக்கு இறுதி மரியாதைகளைச் செலுத்த விரும்பியவனுமான அந்த மனிதர்களில் முதன்மையானவன், பல கணைகளால் அந்தப் பாண்டவனை {யுதிஷ்டிரனை} வேகமாகத் துளைத்தான்.(60) பெரும் வேகத்துடன் கூடியவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், ஆறு கணைகளால் அவனைத் துளைத்தான். அவன், கத்திமுகக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்} இரண்டால் தன் எதிராளியின் வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான்.(61) பிறகு அவன், அகன்ற தலையும், கூர்முனையும், பெரும் சக்தியும் கொண்ட சுடர்மிக்கக் கணையொன்றால் தன் முன் நின்றிருந்த தன் எதிரியின் தலையைத் தாக்கி வீழ்த்தினான்.(62) காது குண்டலங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தலையானது, புண்ணியங்கள் தீர்ந்து விழும் ஒரு சொர்க்கவாசியைப் போல அந்தத் தேரில் இருந்து கீழே விழுவதை நான் கண்டேன்.(63)

முழுவதும் குருதியால் குளித்திருந்த அவனது தலையற்ற உடலான தேரில் இருந்து கீழே விழுவதைக் கண்ட கௌரவத் துருப்புகள் பிளந்து ஓடின.(64) உண்மையில், அழகிய கவசம் பூட்டியிருந்தவனான மத்ரனின் அந்தத் தம்பி கொல்லப்பட்டதும், ஓ! என்றும், ஐயோ என்றும் கதறியபடியே குருக்கள் பெரும் வேகத்தோடு தப்பி ஓடினர்.(65) சல்லியனின் தம்பி கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், புழுதியால் மறைக்கப்பட்டவர்களுமான உமது துருப்பினர், பாண்டவர்களிடம் ஏற்பட்ட அச்சத்தால், தங்கள் வாழ்வில் நம்பிக்கையிழந்து தப்பி ஓடினர்.(66) பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சிநியின் பேரனான சாத்யகி, அச்சமடைந்து தப்பி ஓடும் கௌரவர்களை எதிர்த்துச் சென்றான்.(67) அப்போது ஹிருதிகனின் மகன் {கிருதவர்மன்}, ஓ! மன்னா, (வீழ்த்தப்பட்ட படையை எதிர்த்து) முன்னேறுபவனும், தடுக்கப்பட முடியாதவனும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்த வெல்லப்பட முடியாத போர்வீரனை {சாத்யகியை} அச்சமில்லாமல் வேகமாக எதிர்த்தான்.(68)

விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த சிறப்புமிக்கவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} மற்றும் சாத்யகி ஆகியோர் இருவரும், சீற்றமிக்க இரு சிங்கங்களைப் போல ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(69) பிரகாசத்தில் சூரியனுக்கு ஒப்பான அவர்கள் இருவரும் சூரியக் கதிர்களுக்கு ஒப்பான சுடர்மிக்கக் காந்தியைக் கொண்ட கணைகளால் ஒருவரையொருவர் மறைத்தனர்.(70) விருஷ்ணி குலத்தின் அந்த இரு சிங்கங்கள் தங்கள் விற்களில் இருந்து ஏவிய அந்தப் பலமிக்கக் கணைகளை, ஆகாயத்தில் வேகமாகச் செல்லும் பூச்சிகளைப் போல நாங்கள் கண்டோம்.(71) சாத்யகியைப் பத்து கணைகளாலும், அவனது குதிரைகளை மூன்றாலும் துளைத்த அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, ஒரு நேரான கணையால் அவனது {சாத்யகியின்} வில்லையும் அறுத்தான்.(72) இவ்வாறு வெட்டப்பட்ட தனது சிறந்த வில்லை அப்பால் கிடத்திய அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, முதலில் இருந்ததைவிடக் கடினமான மற்றொரு வில்லை வேகமாக எடுத்துக் கொண்டான்.(73)

முதன்மையான வில்லை எடுத்துக் கொண்ட அந்த முதன்மையான வில்லாளி {சாத்யகி}, பத்து கணைகளால் ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} நடுமார்பைத் துளைத்தான்.(74) பிறகு நன்கு ஏவப்பட்ட கணைகள் பலவற்றால் அவனது தேரையும், அந்தத் தேரின் ஏர்க்காலையும் வெட்டிய சாத்யகி, பிறகு தன் எதிராளியின் குதிரைகளையும், அவனது பார்ஷினி சாரதிகள் இருவரையும் வேகமாகக் கொன்றான்.(75) அப்போது, சரத்வானின் மகனான வீரக் கிருபர், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ஹிருதிகன் மகன் தேரற்றவனாகச் செய்யப்பட்டதைக் கண்டு, அவனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து அவனைக் கொண்டு சென்றார்.(76) மத்ரர்களின் மன்னன் {சல்லியன்} கொல்லப்பட்டு, கிருதவர்மன் தேரற்றவனாகச் செய்யப்பட்ட பிறகு, துரியோதனனின் மொத்தப் படையும் அந்தப் போரில் மீண்டும் புறமுதுகிட்டது.(77) அந்நேரத்தில் அந்தப் படையானது புழுதி மேகத்தால் மறைக்கப்பட்டது. எங்களால் எதையும் காண முடியவில்லை. எனினும் உமது படையின் பெரும்பகுதி வீழ்ந்தது. உயிரோடு எஞ்சியவர்களும் போரில் இருந்து தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு புறமுதுகிட்டோடினர்.(78)

விரைவில், அனைத்துப் பக்கங்களிலும் பாய்ந்த பல்வேறு குருதி ஓடைகளின் விளைவால் பூமியின் புழுதி தணிவது தெரிந்தது.(79) அப்போது தன் படை பிளப்பதை அருகில் இருந்து கண்ட துரியோதனன், முன்னேறிவரும் பார்த்தர்கள் அனைவரையும் தனியொருவனாகத் தடுத்தான்.(80) பாண்டவர்களும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும், ஆனர்த்தர்களின் வெல்லப்பட முடியாத தலைவனும் (சாத்யகியும்) தங்கள் தேர்களில் இருப்பதைக் கண்ட குரு மன்னன் {துரியோதனன்}, அவர்கள் அனைவரையும் கூரிய கணைகளால் மறைத்தான்.(81) (அந்நேரத்தில்) தங்கள் முன் நிற்கும் யமனை அணுக அஞ்சும் உயிரினங்களைப் போல, எதிரிகள் அவனை {துரியோதனனை} நெருங்கவில்லை. அதேவேளையில், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, அந்த இடத்திற்குச் சென்றான்.(82) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான யுதிஷ்டிரன், நான்கு கணைகளால் கிருதவர்மனின் நான்கு குதிரைகளைக் கொன்று, பெரும் சக்தி கொண்ட ஆறு அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} கௌதமர் மகனையும் {கிருபரையும்} துளைத்தான்.(83)

அப்போது அஸ்வத்தாமன், (பாண்டவ) மன்னனால் குதிரைகளற்றவனாகவும், தேரற்றவனாகவும் செய்யப்பட்ட ஹிருதிகன் மகனை {கிருதவர்மனைத்} தன் தேரில் ஏற்றிக் கொண்டு, யுதிஷ்டிரனின் முன்னிலையில் இருந்து அவனை அப்பால் கொண்டு சென்றான்.(84) சரத்வான் மகன் {கிருபர்}, பதிலுக்கு எட்டு கணைகளால் யுதிஷ்டிரனைத் துளைத்து, மேலும் எட்டு கூரிய கணைகளால் அவனது குதிரைகளையும் துளைத்தார்.(85) ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இவ்வாறு உமது மகன் மற்றும் உமது தீய கொள்கைகளால் அந்தப் போரின் தணல்கள் அங்குமிங்கும் எரியத் தொடங்கின.(86) அந்தப் போர்க்களத்தில், குரு குலத்துக் காளையால் {யுதிஷ்டிரனால்}, அந்த வில்லாளிகள் முதன்மையானவன் {சல்லியன்} கொல்லப்பட்ட பிறகு, சல்லியன் கொல்லப்பட்டதைக் கண்ட பார்த்தர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியால் நிறைந்து, தங்கள் சங்குகள் முழக்கினர்.(87) பழங்காலத்தில் விருத்திரன் கொல்லப்பட்ட பிறகு இந்திரனை மெச்சிய தேவர்களைப் போலவே, அந்தப் போரில் அனைவராலும் யுதிஷ்டிரன் பாராட்டப்பட்டான். அவர்கள் பல்வேறு வகைகளிலான இசைக்கருவிகளை இசைத்து முழக்கி, அவ்வொலியைப் பூமியின் அனைத்துப் பக்கங்களிலும் எதிரொலிக்கச் செய்தனர்" {என்றான் சஞ்சயன்}.(88)
------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 17ல் உள்ள சுலோகங்கள் : 88

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்