The followers of Shalya! | Shalya-Parva-Section-18 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 18)
பதிவின் சுருக்கம் : தங்கள் தலைவனின் படுகொலைக்குப் பழிதீர்க்க முனைந்த சல்லியனின் தொண்டர்கள்; அவர்களைத் தடுத்த துரியோதனன்; துரியோதனனுக்குக் கீழ்ப்படியாத மத்ரகர்கள்; அவர்களைத் தாக்கி அழித்த பாண்டவர்கள்; மத்ரகர்களைக் காக்க துரியோதனனைத் தூண்டிய சகுனி; மத்கர்களைக் காக்க விரைந்த கௌரவவீரர்கள்; களத்தில் இருந்து மீண்டும் புறமுதுகிட்ட கௌரவர்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சல்லியன் கொல்லப்பட்ட பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மத்ர மன்னனை {சல்லியனைப்} பின்தொடர்ந்த எழுனூறு {700} வீரப் போர்வீரர்கள் பெரும் சக்தியுடன் போரிடச் சென்றனர்.(1) தலைக்கு மேல் வெண்குடை பிடிக்கப்பட்டு, எப்போதும் வெண்சாமரம் வீசப்பட்டு, மலை போன்ற ஒரு பெரிய யானையைச் செலுத்திக் கொண்டு வந்த துரியோதனன், "செல்லாதீர்கள், செல்லாதீர்கள்" என்று சொல்லி மத்ரகப் போர்வீரர்களைத் தடுத்தான்.(2) துரியோதனனால் மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டாலும், அவ்வீரர்கள், யுதிஷ்டிரனைக் கொல்லும் விருப்பத்தோடு பாண்டவப் படைக்குள் ஊடுருவினர்.(3) துரியோதனனிடம் மாறாப்பற்றுக் கொண்ட அந்தத் துணிச்சல்மிக்கப் போராளிகள், தங்கள் விற்களில் உரத்த நாணொலி எழுப்பியபடியே பாண்டவர்களுடன் போரிட்டனர்.(4)
அதேவேளையில், சல்லியன் கொல்லப்பட்டதையும், மத்ரக மன்னனின் {சல்லியனின்} நலனில் அர்ப்பணிப்புக் கொண்ட மத்ரகர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் யுதிஷ்டிரன் பீடிக்கப்படுவதையும் கேட்ட பெரும் தேர்வீரனான பார்த்தன் {அர்ஜுனன்}, தன் வில்லான காண்டீவத்தை வளைத்துக் கொண்டும், தன் தேரின் சடசடப்பொலியால் பூமியை நிறைத்துக் கொண்டும் அங்கே வந்தான்.(5,6) பிறகு, அர்ஜுனன், பீமன், பாண்டுவின் மூலமாக மாத்ரிக்குப் பிறந்த இரண்டு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, மனிதர்களில் புலியான சாத்யகி, திரௌபதியின் (ஐந்து) மகன்கள்,(7) திருஷ்டத்யும்னன், சிகண்டி, பாஞ்சாலர்கள், சோமகர்கள் ஆகியோர் யுதிஷ்டிரனைக் காக்க விரும்பி, அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து நின்றனர்.(8) மன்னனை {யுதிஷ்டிரனைச்} சுற்றித் தங்கள் நிலைகளை ஏற்றவர்களும், மனிதர்களில் காளைகளுமான அந்தப் பாண்டவர்கள், பெருங்கடலைக் கலங்கடிக்கும் மகரங்களைப் போலப் பகைவரின் படையைக் கலங்கடிக்கத் தொடங்கினர். உண்மையில், மரங்களை அசைக்கும் வலிமைமிக்கச் சூறைக்காற்றைப் போல அவர்கள் உமது படையை நடுங்கச் செய்தனர்.(9)
{ஆனாலும்} எதிர்க்காற்றால் கலங்கலடிக்கப்படும் பெரும் கங்கையாற்றைப் போல, மீண்டும் அந்தப் பாண்டவப் படை அதிகமாகக் கலக்கமடைந்தது.(10) அந்த வலிமைமிமிக்கப் படையைக் கலங்கச் செய்தவர்களும், சிறப்புமிக்கவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் (மத்ரகர்கள) அனைவரும், "எங்கே அந்த மன்னன் யுதிஷ்டிரன்?(11) துணிச்சல்மிக்க அவனது சகோதரர்கள் ஏன் இங்குத் தென்படவில்லை? பெரும் சக்தி கொண்ட பாஞ்சாலர்களுக்கும், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டிக்கும் என்ன ஆயிற்று? திருஷ்டத்யும்னன், சிநியின் பேரன் {சாத்யகி}, பெரும் தேர்வீரர்களான திரௌபதியின் (ஐந்து) மகன்கள் ஆகியோர் எங்கே சென்றுவிட்டனர்?" என்று உரக்கக் கூச்சலிட்டனர்.(12) இதனால், வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்கள், அந்த வார்த்தைகளைச் சொல்லி மூர்க்கமாகப் போரிட்டுக் கொண்டிருந்த மத்ர மன்னனின் தொண்டர்களைக் கொல்லத் தொடங்கினர்.(13) அந்தப் போரில் உமது துருப்புகளில் சிலர் தேர்ச்சக்கரங்களால் நசுக்கப்படுவதும், சிலர் உயர்ந்த கொடிமரங்களால் கொல்லப்படுவதும் அங்கே காணப்பட்டது.(14) எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையைச் சேர்ந்த துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், உமது மகனால் தடுக்கப்பட்டாலும் கூட, அந்த வீரப் பாண்டவர்களைக் கண்டதும், அவர்களை எதிர்த்து மேலும் விரைந்தனர்.(15)
மென்மையாகப் பேசிய துரியோதனன், அவ்வீரர்கள் எதிரியோடு போரிடுவதைத் தவிர்க்க முயன்றான். எனினும், பெரும் தேர்வீரர் எவரும் அவனது கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை.(16) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, காந்தார மன்னனின் மகனும், பேச்சுத்திறன் கொண்டவனுமான சகுனி, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(17) "நம் கண்களுக்கு முன்பாக மத்ரகப் படை கொல்லப்படும்போது, நாம் எவ்வாறு நின்று கொண்டிருக்கலாம்? ஓ! பாரதா {துரியோதனா}, நீ இங்கிருக்கும்போது இது {இப்படி நடப்பது} நல்லதாகத் தெரியவில்லை.(18) ஒற்றுமையுடன் நான் அனைவரும் போரிட வேண்டும் என்பதே நமது திட்டம். ஓ! மன்னா {துரியோதனா}, பிறகு ஏன் நீ, நமது துருப்புகள் இவ்வாறு எதிரிகளால் கொல்லப்படும்போதும் பொறுத்துக் கொள்கிறாய்?" என்று கேட்டான்.(19)
துரியோதனன் {சகுனியிடம்}, "என்னால் முன்பே தடுக்கப்பட்டாலும், அவர் என் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. இந்த மனிதர்கள் ஒன்றாக இந்தப் பாண்டவப்படைக்குள் சென்று விட்டனர்" என்றான்.(20)
சகுனி, "போரில் சினத்தால் தூண்டப்படும் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், தங்கள் தலைவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை. அம்மனிதர்களிடம் நீ கோபப்படுவது உனக்குத் தகாது. அக்கறையின்மைக்கு இது சமயமில்லை.(21) எனவே, மத்ர மன்னனின் தொண்டர்களான அந்தப் பெரும் வில்லாளிகளைக் காப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நமது தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுடன் செல்வோம்.(22) ஓ! மன்னா {துரியோதனா}, பெருங்கவனத்துடம் நாம் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்வோம்" என்றான் {சகுனி}. சகுனியின் நடத்தையைக் குறித்துச் சிந்தித்த கௌரவர்கள் அனைவரும், மத்ரர்கள் இருந்த அந்த இடத்திற்குச் சென்றனர்.(23) இவ்வாறு (தன் தாய்மாமனால்) சொல்லப்பட்ட துரியோதனனும், சிங்க முழக்கங்கள் செய்து கொண்டும், அவ்வொலியால் பூமியை எதிரொலிக்கச் செய்தபடியும், ஒரு பெரும் படை சூழ எதிரியை எதிர்த்துச் சென்றான்.(24) "கொல்வாயாக, துளைப்பாயாக, பிடிப்பாயாக, தாக்குவாயாக, வெட்டுவாயாக" என்ற இவ்வொலிகளே அங்கே அந்தத் துருப்புகளுக்கு மத்தியில் கேட்கப்பட்டன.(25)
அதேவேளையில், அந்தப் போரில் மத்ர மன்னின் {சல்லியனின்} தொண்டர்கள் ஒன்றுசேர்ந்து தங்களைத் தாக்குவதைக் கண்ட பாண்டவர்கள், மத்யமம் என்றழைக்கப்பட்ட வியூகத்தில் தங்களை அணிவகுத்துக் கொண்டு அவர்களை எதிர்த்துச் சென்றனர்[1].(26) கையோடு கையாகச் சிறிது நேரம் போரிட்டவர்களும், மத்ரமன்னனின் தொண்டர்களுமான அந்த வீரப் போர்வீரர்கள், அழிவைச் சந்திப்பது அங்கே காணப்பட்டது.(27) பிறகு நாங்கள் முன்னேறிக் கொண்டிருந்த போது, ஒன்று சேர்ந்து வந்த பாண்டவர்கள், பெரும் சுறுசுறுப்புடன் மத்ரகர்களின் படுகொலையை நிறைவுசெய்து, மகிழ்ச்சியில் நிறைந்து இன்பக்கூச்சலிட்டனர்.(28) அப்போது சுற்றிலும் அங்கே தலையில்லாத வடிவங்கள் எழுவது காணப்பட்டது. சூரிய வட்டலில் இருந்து பெரும் எரிநட்சத்திரங்கள் விழுவதும் தென்பட்டது.(29) பூமியானது, தேர்கள், உடைந்த அச்சுகள், நுகத்தடிகள், கொல்லப்பட்ட போர்வீரர்கள், உயிரற்ற குதிரைகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டது.(30)
[1] கும்பகோணம் பதிப்பில், "பாண்டவர்களோ, யுத்தத்தில் ஒன்றுசேர்ந்திருக்கிற மத்ரராஜனுடைய துணைவீரர்களைக் கண்டு அவர்களுடைய படைவரிசையின் நடுவிடத்தை அடைந்து அவர்களை எதிர்த்தார்கள்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் அடிக்குறிப்பாக, "மென்மையான அல்லது மிதமாக என்ற பொருளில் மத்யமம் என்ற வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அணிவகுப்புக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் குல்மம் என்பதாகும்; வியூகம் அல்ல. வியூகத்தின் வடிவில் மொத்த படையும் அணிவகுக்கப்படும், குல்மம் என்பதோ படைப்பிரிவு என்று சொல்லத்தக்க வகையில் இருக்கும் ஒரு சிறு பிரிவாகும். பாண்டவர்கள் இத்தாக்குதலை மிகத்தீவிரமாகத் தாக்கவில்லை என்பதுதான் இங்கே உள்ள அறிவுரையாகத் தெரிகிறது" என்றிருக்கிறது.
காற்றின் வேகத்தைக் கொண்டவையும், (வழிநடத்த சாரதிகளில்லாமல்) தேர்களில் இன்னும் பூட்டப்பட்டிருந்தவையுமான குதிரைகள், ஓ! ஏகாதிபதி, போர்க்களத்தில் இங்கேயும் அங்கேயும் போர்வீரர்களை இழுத்துச் செல்வது காணப்பட்டது.(31) சில குதிரைகள் உடைந்த சக்கரங்களைக் கொண்ட தேர்களை இழுத்துச் சென்றன, சில உடைந்த தேர்களின் பகுதிகளைச் சுமந்து கொண்டே அனைத்துப் பக்கங்களிலும் ஓடின.(32) பூட்டாங்கயிறுகளால் தணிவடைந்த சில குதிரைகளும் ஆங்காங்கே தென்பட்டன புண்ணியங்கள் தீர்ந்து சொர்க்கத்தில் இருந்து விழும் சொர்க்கவாசிகளைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து தேர்வீரர்கள் கீழே விழும்வதும் காணப்பட்டன.(33) மத்ரமன்னனின் துணிச்சல்மிக்கத் தொண்டர்கள் கொல்லப்பட்ட போது, தாக்குவதில் பெருந்திறன் கொண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான பார்த்தர்கள், தங்களை நோக்கி ஒரு குதிரைப்படை வருவதைக் கண்டு, வெற்றியடையும் விருப்பத்தால் அதை நோக்கி வேகமாக விரைந்தனர்.(34) தங்கள் கணைகளால் உரத்த விஸ் ஒலியை உண்டாக்கி, தங்கள் சங்கொலிகளுடன் கலந்து பல்வேறு வகை ஒலிகளையும் வெளியிட்டவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், தாக்குவதில் திறன்மிக்கவர்களுமான அவர்கள், தங்கள் விற்களை அசைத்துக் கொண்டு சிங்க முழக்கம் செய்தனர்.(35)
மத்ர மன்னனின் அந்தப் பெரும்படை அழிக்கப்பட்டதைக் கண்டும், அவர்களது வீர மன்னன் {சல்லியன்} போரில் கொல்லப்பட்டதைக் கண்டும் துரியோதனனின் மொத்த படையும் மீண்டும் களத்தில் இருந்து புறமுதுகிட்டது.(36) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உறுதிமிக்க வில்லாளிகளான பாண்டவர்களால் தாக்கப்பட்ட அந்தக் குரு படையானது, அச்சத்தால் தூண்டப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது" {என்றான் சஞ்சயன்}.(37)[2]
------------------------------------------------------------------------------------------[2] பிபேக் திப்ராயின் பதிப்பில், இந்தப் பகுதியில் இருந்து "ஹ்ரதபிரவேச {உப} பர்வம்" தொடங்குகிறது. ஆனால், கும்பகோணம், கங்குலி மற்றும் மன்மதநாததத்தரின் பதிப்புகளில் இந்தப் பகுதியும், "கதாயுத்த பர்வத்திற்கு" முன்பு அடுத்தடுத்து வரும் பகுதிகளும் "சல்யவதபர்வம்" என்ற உபபர்வத்தின் கீழேயே தொகுக்கப்பட்டிருக்கின்றன.
சல்லிய பர்வம் பகுதி – 18ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |