Bhima killed twenty one thousand Foot-soldiers! | Shalya-Parva-Section-19 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 19)
பதிவின் சுருக்கம் : புறமுதுகிட்ட கௌரவப் படை; பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டது; படையின் பின்புறத்தை அடைந்த துரியோதனன்; காலாட்படையினரில் இருபத்தோராயிரம் பேரைக் கொன்ற பீமன்; துரியோதனன் தன் வீரர்களிடம் பேசிய வீர உரை; மீண்டும் அணிதிரண்ட கௌரவப்படை...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "வலிமைமிக்கத் தேர்வீரனும், வெல்லப்பட முடியாத வீரனுமான அந்தப் பெரும் மன்னன் {சல்லியன்} போரில் கொல்லப்பட்டதும், உமது துருப்புகளும், உமது மகன்கள் அனைவரும் போரில் இருந்து புறமுதுகிட்டு ஓடினர்.(1) உண்மையில், சிறப்புமிக்க யுதிஷ்டிரனால் அவ்வீரன் {சல்லியன்} கொல்லப்பட்டதும், உமது துருப்புகள், ஆழ்ந்த கடலில் மரக்கலம் உடைந்து, அதைக் கடக்க ஒரு படகில்லாத வணிகர்களைப் போல இருந்தன.(2) மத்ர மன்னன் {சல்லியன்} வீழ்ந்ததும், ஓ! ஏகாதிபதி, உமது துருப்பினர், ஒரு பாதுகாவலனை விரும்பும் தலைவனற்ற மனிதர்கள் போலவோ, சிங்கம் ஒன்றால் பீடிக்கப்படும், ஒரு மான்கூட்டத்தைப் போலவோ இருந்தனர்.(3) கொம்புகளை இழந்த காளைகளைப் போலவோ, தந்தங்கள் உடைந்த யானைகளைப் போலவோ இருந்த உமது துருப்பினர், அஜாதசத்ருவால் {யுதிஷ்டிரனால்}, வீழ்த்தப்பட்டு நடுப்பகல் வேளையில் தப்பி ஓடினர்.(4) சல்லியன் வீழ்ந்த பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்பினரில் ஒருவனும் படையைத் திரட்டுவதிலோ, தன் ஆற்றலை வெளிப்படுத்துவதிலோ தன் இதயத்தை நிலைநிறுத்தவில்லை.(5)
ஓ! மன்னா, பீஷ்மர், துரோணர், சூதன் மகன் {கர்ணன்} ஆகியோர் வீழ்ந்த போது இருந்த அச்சமும், துயரமும், ஓ! பாரதரே, ஓ! ஏகாதிபதி, மீண்டும் நமதானது.(6) வலிமைமிக்கத் தேர்வீரனான சல்லியனின் வீழ்ச்சியில் வெற்றியை இழந்த குரு படையானது, கொல்லப்படும் தன் வீரர்களுடன் குழப்பமடைந்து, கூரிய கணைகளால் வெட்டுப்பட்டு வீழத் தொடங்கியது. மத்ர மன்னனின் படுகொலையால், ஓ! ஏகாதிபதி, உமது போர்வீரர்கள் அனைவரும் அச்சத்தால் தப்பி ஓடினர்.(7) சிலர் குதிரைமுதுகிலும், சிலர் யானைகளிலும், சிலர் தேர்களிலும் எனப் பெரும் தேர்வீரர்களும், காலாட்படைவீரர்களும் அச்சத்தால் பெரும் வேகத்துடன் தப்பி ஓடினர்.(8) மலைகளைப் போலத் தெரிந்தவையும், தாக்குவதில் சாதித்தவையுமான இரண்டாயிரம் யானைகள், சல்லியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அங்குசங்களாலும், கட்டை விரல்களாலும் தூண்டப்பட்டுத் தப்பி ஓடின.(9) உண்மையில், ஓ! பாரதர்களின் தலைவரே, உமது படைவீரர்கள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர். கணைகளால் பீடிக்கப்பட்ட அவர்கள், மூச்சுவாங்க ஓடுவதும் காணப்பட்டது.(10)
வீழ்ந்தவர்களாக, பிளந்து ஓடுபவர்களாக மனத்தளர்ச்சியால் ஓடும் அவர்களைக் கண்டு, பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், வெற்றி அடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, வேகமாக அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(11) வீரப் போர்வீரர்கள் வெளிப்படுத்திய கணைகளின் விஸ் ஒலிகளும், பிற ஒலிகளும், உரத்த சிங்க முழக்கங்களும், சங்கு முழக்கங்களும் பேராற்றல்வாய்ந்ததவையாக இருந்தன.(12) அச்சத்தால் கலக்கமடைந்து ஓடும் கௌரவப்படையைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் ஒருவருக்கொருவர்,(13) "உண்மையில் உறுதியுள்ள மன்னன் யுதிஷ்டிரன் இன்று தன் எதிரிகளை வென்றான். துரியோதனன் இன்று தன் காந்தியையும், அரச செழுமையையும் இழந்தான்.(14) இன்று மனிதர்களின் மன்னனான திருதராஷ்டிரன், தன் மகன் கொல்லப்பட்டதைக் கேட்டு மலைப்படைந்து, பூமியில் புரண்டு, கடும் வேதனையை உணரட்டும்.(15)
குந்தியின் மகனே {அர்ஜுனனே} வில்லாளிகள் அனைவரிலும் பெரும் வலிமை மிக்கவன் என்பதை அவன் {திருதராஷ்டிரன்} இன்று அறியட்டும். பாவியும், தீய இதயம் கொண்டவனுமான அந்த மன்னன் இன்று தன்னைத் தானே கடிந்து கொள்ளட்டும்.(16) இன்று அவன் காலத்தையும், விதுரனின் நன்மையான வார்த்தைகளையும் நினைவுகூரட்டும். இந்த நாள் முதல் அவன் பார்த்தர்களின் அடிமையாகக் காத்திருக்கட்டும் {பணி செய்யட்டும்}. பாண்டு மகன்கள் அனுபவித்த துயரத்தை இன்று அந்த மன்னனும் அனுபவிக்கட்டும்.(17) கிருஷ்ணனின் பெருமையை இன்று அம்மன்னன் அறியட்டும். அவன் {திருதராஷ்டிரன்}, போரில் அர்ஜுனனுடைய வில்லின் பயங்கரமான நாணொலியையும், அவனது ஆயுதங்கள் அனைத்தின் பலத்தையும், போரில் அவனது கரங்களின் வலிமையையும் இன்று கேட்கட்டும்.(18) இந்திரனால் கொல்லப்பட்ட அசுரன் பலியைப் போலவே போரில் துரியோதனன் கொல்லப்படும்போது, உயர்ஆன்ம பீமனின் பயங்கர வலிமையை இன்று அவன் அறிந்து கொள்வான்.(19) துச்சாசனனைக் கொன்று பீமன் அடைந்த சாதனையை அடைய, வலிமையும், பலமும் கொண்ட பீமனைத் தவிர, இவ்வுலகில் வேறு எவனும் இல்லை.(20) தேவர்களாலேயே வீழ்த்தப்பட முடியாதவனான மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} படுகொலையைக் கேட்டு, பாண்டுவுடைய மூத்த மகனின் {யுதிஷ்டிரனின்} ஆற்றலை இன்று அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} அறிந்து கொள்வான்.(21) சுபலனின் வீரமகனும் {சகுனியும்}, காந்தாரர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, அவன் பாண்டுவின் மூலம் மாத்ரிக்குப் பிறந்த இரண்டு மகன்களின் பலத்தை அறிந்து கொள்வான்.(22)
தனஞ்சயன் {அர்ஜுனன்}, சாத்யகி, பீமசேனன், பிருஷதனின் மகனான திருஷ்டத்யும்னான், திரௌபதியின் ஐந்து மகன்கள், மாத்ரியின் இரண்டு மகன்கள், வலிமைமிக்க வில்லாளியான சிகண்டி, மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரைத் தங்கள் போர்வீரர்களாகக் கொண்டவர்களால் ஏன் வெல்ல முடியாது?(23,24) அண்டத்தின் பாதுகாவலனும், ஜனார்த்தனன் என்றும் அழைக்கப்படுபவனுமான கிருஷ்ணனைத் தங்கள் பாதுகாவலனாகக் கொண்டவர்களால் ஏன் வெல்ல முடியாது? அறத்தையே தங்கள் புகலிடமாகக் கொண்டோரால் ஏன் வெல்ல முடியாது?(25) அறம் மற்றும் புகழின் புகலிடமான ரிஷிகேசனை {கிருஷ்ணனைத்} தன் பாதுகாவலனாகக் கொண்டவனும், பிருதையின் மகனுமான யுதிஷ்டிரனைத் தவிர, பீஷ்மர், துரோணர், கர்ணன், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மற்றும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பிற மன்னர்களையும் வெல்ல வேறு எவன் தகுந்தவன்?" என்று {பாண்டவ வீரர்களும், பாஞ்சால வீரர்களும் ஒருவருக்கொருவர்} பேசிக் கொண்டனர்.(26,27) இவ்வார்த்தைகளைச் சொல்லி இன்பத்தில் நிறைந்த சிருஞ்சயர்கள், அந்தப் போரில் கணைகளால் அதிகமாகச் சிதைக்கப்பட்டிருந்த உமது துருப்புகளைப் பின்தொடர்ந்து சென்றனர்.(28)
அப்போது பெரும் வீரம் கொண்ட தனஞ்சயன் பகைவரின் தேர்ப்படையை எதிர்த்துச் சென்றான். மாத்ரியின் இரு மகன்களும், வலிமைமிக்கப் போர்வீரனான சாத்யகியும் சகுனியை எதிர்த்துச் சென்றனர்.(29) பீமசேனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக வேகமாகத் தப்பி ஓடும் அவர்கள் அனைவரையும் கண்ட துரியோதனன், சிரித்துக் கொண்டே தன் சாரதியிடம்,(30) "பார்த்தன் {அர்ஜுனன்} தன் வில்லோடு அங்கு நின்று கொண்டு, என்னை மீறுகிறான். என் குதிரைகளை மொத்த படையின் பின்புறத்திற்குக் கொண்டு செல்வாயாக.(31) கரைகளை மீற முடியாத பெருங்கடலைப் போலவே, குந்தியின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பின்புறத்தில் நான் நிலைகொண்டால் என்னை மீறிச் செல்ல ஒருபோதும் துணியமாட்டான்.(32) ஓ! சாரதியே, பாண்டவர்களால் பின்தொடரப்படும் இந்தப் பரந்த படையைப் பார். துருப்புகள் நகர்வதன் விளைவால் அனைத்துப் பக்கங்களிலும் எழும் இந்தப் புழுதி மேகத்தைப் பார்.(33) பயங்கரமானவையும், பேரொலியுடன் கூடியவையுமான அந்தச் சிங்க முழக்கங்களைக் கேள். எனவே, ஓ சாரதியே, மெதுவாகச் சென்று பின்புறத்தில் நிலையெடுப்பாயாக.(34) போரில் நின்று பாண்டவர்களுடன் நான் போரிட்டால், ஓ! சாரதியே, என்படை மீண்டும் திரண்டு வந்து வீரத்துடன் போரிடும்" என்றான்.(35)
மதிப்புக்குரிய வீரன் ஒருவனுக்குத் தகுந்த உமது மகனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சாரதி, தங்க இழைகளுடன் கூடிய அந்தக் குதிரைகளை மெல்லத் தூண்டினான்.(36) யானைகள், குதிரைகள் ஆகியவற்றையும், தேர்வீரர்களையும் இழந்தவர்களும், தங்கள் உயிரையே விட ஆயத்தமாக இருந்தவர்களுமான இருபத்தோராயிரம் {21,000} காலாட்படை வீரர்கள் இன்னும் போரிட நின்று கொண்டிருந்தனர்.(37) பல்வேறு நாடுகளில் பிறந்தவர்களும், பல்வேறு நகரங்களில் இருந்து வந்தவர்களுமான அந்தப் போர்வீரர்கள், பெரும்புகழை வெல்ல விரும்பி களத்தில் நின்று கொண்டிருந்தனர்.(38) மகிழ்ச்சியால் நிறைந்து விரைந்து செல்லும் அந்தப் போர்வீரர்களுக்கிடையிலான மோதல் பேரொலியுடன் கூடியதாகவும், மிகவும் பயங்கரமானதாகவும் இருந்தது.(39) அப்போது, ஓ! மன்னா, பீமசேனனும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும், நால்வகைப் படைகளுடன் அவர்களைத் தடுத்தனர்.(40)
சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பிய சில காலாட்படைவீரர்கள், உரத்த கூச்சலிட்டபடியும், தங்கள் கக்கங்களை அறைந்தபடியும், பீமனை எதிர்த்துச் சென்றனர்.(41) போரில் வெல்லப்பட முடியாதவர்களான அந்தத் தார்தராஷ்டிரப் போராளிகள், சினத்தால் நிறைந்து, பீமசேனனை அடைந்து சீற்றத்துடன் கூச்சலிட்டனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. அந்தப் போரில் பீமனைச் சூழ்ந்த கொண்ட அவர்கள் அனைத்துப் பக்கங்களிலும் அவனைத் தாக்கத் தொடங்கினர்.(42) பெரும் எண்ணிக்கையிலான அந்தக் காலாட்படை வீரர்களால் சூழப்பட்டு, அந்தப் போரில் அவர்களால் தாக்கப்பட்ட பீமன், மைநாக மலையைப் போலத் தான் நின்ற இடத்திலேயே அசையாமால் நின்றிருந்தான்.(43) அதேவேளையில், ஓ! ஏகாதிபதி, அவனைத் தாக்கியவர்கள், சினத்தால் நிறைந்து, பாண்டவர்களின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரனைப் பீடிக்க முயற்சி செய்தபடியே, (அவனை {பீமனைக்} காக்க முயன்ற) பிற போராளிகளையும் தடுத்தனர்.(44) அவ்வீரர்களுடன் மோதிய பீமன் சினத்தால் நிறைந்தவனானான். வேகமாகத் தன் தேரைவிட்டு இறங்கி அவன், காலாளாக அவர்களை எதிர்த்துச் சென்றான்.(45)
தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தனது பெரும் கதாயுதத்தை எடுத்துக் கொண்ட பீமன், தண்டத்துடன் கூடிய யமனைப் போலவே உமது துருப்பினரைக் கொல்லத் தொடங்கினான்.(46) வலிமைமிக்கவனான பீமன், தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளற்றவர்களாக இருந்த அந்த இருபத்தோராயிரம் {21000} காலாட்படைவீரர்களையும் தன் கதாயுதத்தால் நொறுக்கினான்.(47) பலமான அந்தப் படைப்பிரிவினரைக் கொன்றவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், தன் முன்னிலையில் திருஷ்டத்யும்னனுடன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(48) இவ்வாறு கொல்லப்பட்ட அந்தத் தார்தராஷ்டிரக் காலாட்படை வீரர்கள், மலர்க்கொத்துகளுடன் கூடிய கர்ணிகாரங்கள் சூறாவளியால் வீழ்த்தப்பட்டதைப் போலக் குருதியில் குளித்துத் தரையில் கிடந்தனர்.(49) பல்வேறு வகை மலர்களால் அமைக்கப்பட்ட மாலையால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பல்வேறு வகைக் காது குண்டலங்களை அணிந்தவர்களும், பல்வேறு குலங்களைச் சார்ந்தவர்களும், பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து வந்தவர்களுமான அந்தப் போராளிகள் உயிரையிழந்து களத்தில் கிடந்தனர்.(50)
கொடிகள் மற்றும் கொடிமரங்களால் மறைக்கப்பட்ட அந்தப் பெரும் காலாட்படையானது, இவ்வாறு வெட்டப்பட்டுக் களத்தில் கிடக்கும்போது, கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், அச்சத்தை ஏற்படுத்துவதுமாகக் காணப்பட்டது.(51) யுதிஷ்டிரனின் தலைமையில் தங்கள் தொண்டர்களுடன் போரிட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும், உமது சிறப்புமிக்க மகன் துரியோதனனை {எதிர்த்து அவனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(52) அந்தப் பெரும் வில்லாளிகள், உமது துருப்பினர் போரில் இருந்து புறமுதுகிடுவதைக் கண்டு, துரியோதனனை எதிர்த்துச் சென்று, கரைகளைக் கடக்க முடியாத பெருங்கடலைப் போலவே அவனைக் கடக்க முடியாதவர்களானார்கள்.(53) ஒன்று சேர்ந்திருந்த பார்த்தர்களால், தனியொருவனான அவனை மீற முடியாதபோது, உமது மகனிடம் நாங்கள் கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(54)
அப்போது, அதிகத் தூரம் தப்பி ஓடாதவர்களும், கணைகளால் சிதைக்கப்பட்டிருந்தவர்களும், தப்பி ஓடுவதையே தங்கள் இதயங்களில் நிலைநிறுத்தியிருந்தவர்களுமான தன் படையினரிடம் பேசிய துரியோதனன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(55) "நீங்கள் ஓடினால், பாண்டவர்களால் உங்களைப் பின் தொடர முடியாது, அல்லது கொல்ல முடியாது என்று சொல்லும் அளவுக்கு, சமவெளியிலோ, மலையிலோ எந்த இடத்தையும் நான் காணவில்லை. பிறகு ஓடுவதால் என்ன பயன்?(56) பாண்டவர்களின் படையானது எண்ணிக்கையில் குறைக்கப்பட்டிருக்கிறது. இரு கிருஷ்ணர்களும் அதிகமாகச் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் நிலைத்து நின்றால், நிச்சயம் வெற்றி நமதாகும்.(57) முறையனைத்தையும் இழந்து நீங்கள் ஓடுவீர்கள் என்றால், பாவிகளான பாண்டவர்கள் பின்தொடர்ந்து வந்து உங்கள் அனைவரையும் கொள்வார்கள். மறுபுறம் நாம் நிலைத்து நின்றால், நமக்கு நல்ல விளைவு ஏற்படும்.(58) இங்கே தாக்கப்பட்டிருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரும் கேட்பீராக. வீரர்களையும், கோழைகளையும் யமன் கொல்வான் எனும்போது, க்ஷத்திரியன் என்று தன்னை அழைத்துக் கொண்டு எந்த மனிதன் போரிடாத மூடனாக இருப்பான்?(59) கோபக்கார பீமசேனனின் முன்னிலையில் நாம் நின்றால், நல்ல விளைவு நமக்கு ஏற்படும். க்ஷத்திரிய நடைமுறையின்படி போராடிக் கொண்டிருக்கும்போது போரில் மரணமேற்பட்டால் அது மகிழ்ச்சி நிறைந்ததே.(60) வெற்றியடைவதால் ஒருவன் இங்கே மகிழ்ச்சியை அடைகிறான். கொல்லப்பட்டாலோ, அவன் அடுத்த உலகில் பெரும் கனிகளை {பலன்களை} அடைகிறான். கௌரவர்களே, போர் அளிப்பதை விடச் சொர்க்கத்திற்கான சிறந்த பாதை வேறு எதுவும் கிடையாது. போரில் கொல்லப்படும் நீங்கள் எத்தாமதமும் இன்றி அருள் உலகங்கள் அனைத்தையும் அடைவீர்கள்" என்றான் {துரியோதனன்}.(61)
அவனது இவ்வார்த்தைகளைக் கேட்டு அவனை உயர்வாக மெச்சிய (குரு) மன்னர்கள் மீண்டும் பாண்டவர்களை எதிர்த்துப் போரிட விரைந்தனர்.(62) வேகமாக முன்னேறிவரும் அவர்களைக் கண்டவர்களும், போருக்காக அணிவகுத்திருந்தவர்களும், தாக்குவதில் திறம்படைத்தவர்களுமான பார்த்தர்கள், சினத்தால் நிறைந்து, வெற்றியடையும் விருப்பத்தால் அவர்களை எதிர்த்து விரைந்தனர்.(63) வீரமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, மூவுலகங்களிலும் கொண்டாடப்படும் தன் வில்லான காண்டீவத்தை வளைத்து, தன் தேரில் எதிரியை எதிர்த்துச் சென்றான்.(64) மாத்ரியின் இரு மகன்கள், சாத்யகி ஆகியோர் சகுனியை எதிர்த்து விரைந்தனர். பிற (பாண்டவ) வீரர்கள், சிரித்துக் கொண்டு, உமது படைகளை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தனர்" {என்றான் சஞ்சயன்}.(65)
---------------------------------------------------------------------------------------------சல்லிய பர்வம் பகுதி – 19ல் உள்ள சுலோகங்கள் : 65
ஆங்கிலத்தில் | In English |