Skanda pierced the Krauncha mountain! | Shalya-Parva-Section-46 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 15)
பதிவின் சுருக்கம் : ஸ்கந்தனின் போர்த்துணைவர்களாக இருந்த தாய்மாரின் பெயர்கள்; மயிலையும், சேவலையும் அடைந்த ஸ்கந்தன்; தாரகாசுரன், மஹிஷன், திரிபாதன், ஹிரதோததரன் மற்றும் பாணன் ஆகியோரை ஸ்கந்தன் கொன்றது; கிரௌஞ்ச மலையைப் பிளந்த ஸ்கந்தன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! வீரா, எதிரிகளைக் கொல்பவர்களும், குமாரனின் துணைவர்களானவர்களுமான தாய்மாரின் பெருங்கூட்டத்தில் அடங்கியோரின் {மாத்ருகணங்களின்} பெயர்களை இப்போது சொல்லப் போகிறேன்.(1) ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தச் சிறப்புமிக்கத் தாய்மாரின் பெயர்களைக் கேட்பாயாக. இவ்வண்டத்தில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றில் இந்த மங்கலமானவர்கள் படர்ந்தூடுருவியிருக்கிறார்கள்.(2)
அவர்கள், பிரபாவதி, விசாலாக்ஷி, பாலிதை, கோனாசி {கோஸ்தனி}, ஸ்ரீமதி, பகுலை, பகுபுத்திரிகை,(3) அப்சுஜாதை, கோபாலி, பிருஹதம்பாலிகை, ஜயாவதி, மாலதிகை, திருவரத்னை, பயங்கரி,(4) வசுதாமை, சுதாமை, விசோகை, நந்தினி, ஏகசூடை, மஹாசூடை, சக்ரநேமி,(5) உத்தேஜனை, ஜயத்ஸேனை, கமலாக்ஷி, சோபனை, சத்ருஞ்சயை, குரோதனை, சலபி, கரி,(6) மாகதி {மாதவி}, சுபவக்தரை, தீர்த்தசேனி, கீதப்பிரியை, கல்யாணி, கோத்ருரோமை {ருத்ரரோமை}, அமிதாசனை,(7) மேகஸ்வனை, போகவதி, சுப்ரு, கனகாவதி, அலாதாக்ஷி, வீர்யவதி, வித்யுஜ்ஜிஹ்வை,(8) பத்மாவதி, சுநக்ஷத்ரை, கந்தரை, பகுயோஜனை, சந்தாநிகை, கமலை, மஹாபலை,(9) சுதாமை, பகுதாமை, சுப்ரபை, யசஸ்விநி, நிருத்யப்பிரியை, சதோலூகலமேகலை,(10) சதகண்டை, சதாநந்தை, பகநந்தை, பாவிநி, வபுஷ்மதி, சந்திரசீதை, பத்ரகாளி,(11) ஜங்காரிகை {ருக்ஷாம்பிகை}, நிஷ்குந்திகை {நிஷ்குடிகை}, வாமை, சத்வரவாஸிநீ, சுமங்கலை, ஸ்வஸ்திமதி {ஸ்வஸ்திமி}, பிருத்திகாமை {புத்திகாமை}, ஜயப்பிரியை,(12) கனதை {தனதை}, சுப்ரசாதை, பவதை, ஜலேஸ்வரி, ஏடீ, பேடீ, சமேடீ, வேதாளோஜநநி,(13) கண்டூதி, காலிகை, தேவமித்திரை, தம்புசி {வசுஸ்ரீ}, கேதகி {கோடரை}, சித்திரசேனை, அசலை,(14) குக்குடிகை, சங்கலிகை, சகுனிகை, குண்டாரிகை, கோகுலிகை {கௌகுலிகை}, கும்பிகை, சதோதரி,(15) உத்கிராதினி, ஜலேலை, மஹாவேகை, கங்கணை, மனோஜவை, கண்டகினி, பிரஹஸை, பூதனை {பீதனை},(16) கேசயை {கேசயந்தரி}, அந்தர்கதி {த்ருடி}, வாமை, குரோசனை, தடித்பிரபை, மந்தோதரி, துஹுண்டி {முண்டி}, கோடரை, மேகவாஹிநி,(17) சுபாகை {சுபிகை}, லம்பினி, லம்பை, வசுசூடை {தாம்ரசூடை}, விகாதினி {விகாசினி}, ஊர்த்வவேணிதரை, பிங்காக்ஷி, லோஹமேகலை,(18) பிருதுவக்தரை {பிருதுவஸ்திரை}, மதுலிகை, மதுகும்பை, யக்ஷாலிகை, மத்சுனிகை {மத்குலிகை}, ஜராயு, ஜர்ஜராநனை,(19) கியாதை, தஹதஹை, தமதமை, கண்டகண்டை, பூஷணை, மணிகுட்டிகை,(20) அமோகை, லம்பபயோதரை, வேணுவீணாதரை, பிங்காக்ஷி, லோஹமேக்ஷலை,(21) சசோலூகமுகி, கிருஷ்ணை, கரஜங்கை, மஹாஜவை, சிசுமாரமுகி, ஸ்வேதை, லோஹிதாக்ஷி, விபீஷணை,(22) ஜடாலிகை, காமசரி, தீர்க்கஜிஹ்வை, பலோத்கடை, காலேஹிகை, வாமனிகை, முகுடை,(23) லோஹிதாக்ஷி, மஹாகாயை, ஹரிபிண்டை, ஏகத்வசை, சுகுசுமை, கிருஷ்ணகர்ணி,(24) க்ஷுரகர்ணி, சதுஷ்கர்ணி, கர்ணப்பிராவரணை, சதுஷ்பதநிகேதை, கோகர்ணி, மஹிஷாநனை,(25) கரகர்ணி, மஹாகர்ணி, பேரீஸ்வனமஹாஸ்வனை, சங்ககும்பஸ்ரவை, பகதை,(26) {மஹாபலை}, கணை, சுகணை, பீநி, காமதை, சதுஷ்பதரதை, பூதிதீர்த்தை, அந்யகோசரை,(27) பசுதை, வித்ததை, சுகதை, மஹாயசை, பயோதை, கோமஹிஷதை, ஸவிசாலை,(28) பிரதிஷ்டை, சுப்ரதிஷ்டை, ரோசமானை, சுரோசனை, நௌகர்ணி {கௌகர்ணி}, முககர்ணி, வசிரை, மந்தினி, ஏகவக்தரை {ஏகசந்திரை}, மேகரவை {மேககர்ணை}, மேகமாலை, விரோசனை ஆகியோர் ஆவர்.(29) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, இவர்களும், பல்வேறு வடிவங்களைக் கொண்ட இன்னும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் பலரும் கார்த்திகேயனின் தொண்டர்களானார்கள்.(30)
அவர்களது நகங்கள் நீளமானைவையாக இருந்தன, ஓ! பாரதா, அவர்களின் பற்களும், உதடுகளும் அகன்றனவையாகத் துருத்திக் கொண்டு இருந்தன. நேரான வடிவங்களும், இனிய பண்புகளைக் கொண்டு இளமையுடன் இருந்த அவர்கள் அனைவரும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.(31) தவத் தகுதியைக் கொண்ட அவர்கள் அனைவரும் விரும்பிய வடிவை ஏற்றுக்கொள்ளவல்லவர்களாகவும் இருந்தனர். அவர்கள், தங்கள் அங்கங்களில் அதிகச் சதைப்பற்றில்லாதவர்களாகவும், நல்ல நிறத்தைக் கொண்டவர்களாகவும், தங்கத்தின் காந்தியையும் கொண்டிருந்தனர்.(32) அவர்களில் கருப்பாக இருந்த சிலர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மேகங்களின் வண்ணத்தில் இருந்தனர், சிலர் புகையின் வண்ணத்தில் இருந்தனர். காலைச் சூரியனின் காந்தியைக் கொண்டிருந்த சிலர் உயர்ந்த அருள் கொண்டவர்களாக இருந்தனர். நீண்ட குழல்களை {கேசத்தைக்} கொண்டிருந்த அவர்கள் வெள்ளுடை உடுத்தியிருந்தனர்.(33) சிலரின் சடை மேல் நோக்கிப் பின்னப்பட்டிருந்தது, சிலரின் கண்கள் பழுப்பு நிறத்தில் இருந்தன, சிலரது இடுப்புக் கச்சைகள் மிக நீண்டவையாக இருந்தன. சிலர் நீண்ட வயிறுகளையும், நீண்ட காதுகளையும், நீண்டு தொங்கும் முலைகளையும் கொண்டிருந்தனர்.(34) சிலர் தாமிரக் கண்களையும், தாமிர நிறத்தையும், பச்சைக் கண்களையும் கொண்டிருந்தனர். அவர்கள், வரங்களை அருளவல்லவர்களாகவும், விருப்பப்படி திரிபவர்களாகவும் எப்போதும் உற்சாகத்துடன் கூடியவர்களாகவும் இருந்தனர்.(35)
ஓ! எதிரிகளை எரிப்பவனே {ஜனமேஜயா}, பெரும் பலம் கொண்ட சிலர், யமனின் இயல்பையும், சிலர் ருத்திரனின் இயல்பையும், சிலர் சோமன், சிலர் குபேரன், சிலர் வருணன், சிலர் இந்திரன், சிலர் அக்னி என அவரவர் இயல்புகளிலும் பங்கு கொண்டனர்.(36) ஓ! பாரதக்குலத்தின் காளையே, சிலர், வாயு, குமாரன், பிரம்மன், விஷ்ணு, சூரியன், வராஹன் ஆகியோரின் இயல்புகளிலும் பங்கு கொண்டனர்.(37) இனிய அழகிய பண்புகளைக் கொண்ட அவர்கள் அப்சரஸ்களைப் போன்ற அழகுடையவர்களாக இருந்தனர். குரலில் கோகிலத்தை {குயிலைப்} போலவும், செழிப்பில் பொக்கிஷத் தலைவனை {குபேரனைப்} போலவும் அவர்கள் இருந்தனர்.(38)
போரில், அவர்களது சக்தி சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானதாக இருந்தது. காந்தியில் அவர்கள் நெருப்புக்கு ஒப்பானவர்களாக இருந்தனர். போரில் அவர்கள் எப்போதும் தங்கள் எதிரிகளைப் பீதியடையச் செய்தனர்.(39) விரும்பிய வடிவத்தை ஏற்க வல்லவர்களாகவும், காற்றின் வேகத்தைக் கொண்டவர்களாகவும் அவர்கள் இருந்தனர். கற்பனைக்கெட்டாத வலிமையும், சக்தியும் கொண்ட அவர்களின் ஆற்றலும் கற்பனைக்கெட்டாத வகையிலேயே இருந்தது.(40) மரங்கள், திறந்தவெளிகள் மற்றும் சாலைகளின் நாற்சந்திகள் ஆகியவற்றில் அவர்கள் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டிருந்தனர். குகைகள், சுடலை {சுடுகாடு}, மலைகள் மற்றும் அருவிகளிலும் அவர்கள் வாழ்ந்தனர்.(41) அவர்கள் பல்வேறு வகையிலான ஆபரணங்களைப் பூண்டிருந்தனர், பல்வேறு வகையான ஆடைகளை உடுத்தியிருந்தனர், பல்வேறு மொழிகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.(42) எதிரிகளை அச்சத்தில் ஆழ்த்தவல்ல இவர்களும், (தாய்மாரின்) இன்னும் பிற இனங்களும் சேர்ந்து, தேவர்களின் தலைவனுடைய {இந்திரனுடைய} ஆணைக்கிணங்க உயர் ஆன்ம கார்த்திகேயனைப் பின்பற்றினர்.(43)
பகனைத் தண்டித்த போற்றுதலுக்குரியவன் {இந்திரன்}, ஓ! மனிதர்களில் புலியே அந்தக் குஹனுக்கு (கார்த்திகேயனுக்கு), தேவர்களின் எதிரிகளை அழிக்கவல்ல ஓர் ஈட்டியை {வேலைக்} கொடுத்தான்.(44) விஸ் என்ற பேரொலியை உண்டாக்கும் அந்த ஈட்டி பல பெரிய மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெரும் காந்தியைக் கொண்டிருந்த அஃது, ஒளியால் சுடர்விடுவதாகத் தெரிந்தது. மேலும் இந்திரன் அவனுக்குக் காலைச் சூரியனைப் போன்ற ஒரு பிரகாசமான கொடியையும் கொடுத்தான்.(45)
சிவன், கடுஞ்சீற்றமிக்கதும், பல்வேறு வகை ஆயுதங்களைத் தரித்திருப்பதும், தவத்தால் பெறப்பட்ட பெருஞ்சக்தியைக் கொண்டதுமான ஒரு பெரும் படையை அவனுக்குக் {கார்த்திகேயனுக்குக்} கொடுத்தான்.(46) ஒரு நல்ல படைக்குண்டான நல்ல குணங்கள் அனைத்தையும் கொண்டதும் வெல்லப்பட முடியாததுமான அந்தப் படை தனஞ்சயம் என்ற பெயரால் அறியப்பட்டது. ருத்திரனுக்கு இணையான வலிமையைக் கொண்ட முப்பதாயிரம் {30,000} போர்வீரர்களால் அது பாதுகாக்கப்பட்டது. அந்தப் படைக்குப் போரில் இருந்து தப்பி ஓடுவது எவ்வாறு என்பது தெரியாது.(47)
விஷ்ணு, சூடிக் கொள்பவரின் வலிமையை அதிகரிக்கவல்ல ஒரு வெற்றிமாலையை அவனுக்குக் {கார்த்திகேயனுக்குக்} கொடுத்தான். உமை, சூரியனுக்கு ஒப்பான இரண்டு துண்டு துணிகளைக் கொடுத்தாள்.(48) கங்கை, அமுதத்தைக் கொண்ட ஒரு தெய்வீக நீர்க்குடத்தை அந்தக் குமாரனுக்குப் பெரும் மகிழ்வுடன் கொடுத்தாள். பிருஹஸ்பதி ஒரு புனிதமான தடியை {தண்டத்தை} அவனுக்குக் கொடுத்தான்.(49) கருடன், தனக்குப் பிடித்தமான மகனும், அழகிய இறகுகளையுடையதுமான ஒரு மயிலை அவனுக்குக் கொடுத்தான்.(50) அருணன், கூரிய அலகுகளைக் கொண்ட ஒரு சேவலை அவனுக்குக் கொடுத்தான். அரசன் வருணன், பெரும் சக்தியும், வலிமையும் கொண்ட ஒரு பாம்பை அவனுக்குக் கொடுத்தான்.(51) தலைவன் பிரம்மன், பிரம்மத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்தத் தேவனுக்கு {ஸ்கந்தனுக்கு} ஒரு கருப்பு மான்தோலைக் கொடுத்தான். உலகங்கள் அனைத்தையும் படைத்தவனான அவன் {பிரம்மன்}, போர்கள் அனைத்திலும் வெற்றியையும் கொடுத்தான்.(52)
தெய்வீகப் படைகளின் தலைமைப் பொறுப்பை அடைந்த ஸ்கந்தன், பிரகாசமான தழல்களுடன் கூடிய ஒரு சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(53) அந்தத் துணைவர்கள் மற்றும் தாய்மாரின் துணையுடன் கூடிய அவன், தேவர்களில் முதன்மையான அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம், தைத்தியர்களை அழிக்கச் சென்றான்.(54) மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களைக் கொண்டதும், பேரிகைகள், சங்குகள், முரசுகள் ஆகியவற்றைக் கொண்டதும், கொடிகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான தேவர்களின் அந்தப் பயங்கரப் படையானது, கோள்களும், நட்சத்திரங்களும் சிதறிக் கிடக்கும் கூதிர்கால ஆகாயம் போல மிக அழகாகத் தெரிந்தது.(55)
பிறகு, தேவர்களின் அந்தப் பெருங்கூட்டமும், பல்வேறு வகையிலான உயிரினங்களும், ஆயிரக்கணக்கான பேரிகைகளை இசைத்துத் தங்கள் சங்குகளை முழக்கினர்.(56) அவர்கள், படகங்கள் {தம்பட்டங்கள்}, ஜர்ஜரங்கள், கிரகசங்கள், மாட்டுக் கொம்புகள் {கோவிஷாணிகங்கள்}, ஆடம்பரங்கள், கோமுகங்கள் டிண்டிமங்கள் ஆகியவற்றைப் பேரொலியுடன் முழக்கினர்.(57) வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் அனைவரும் அந்தக் குஹனைப் {கார்த்திகேயனைப்} புகழ்ந்தனர். தேவர்களும், கந்தர்வர்களும் பாடினர், அப்சரஸ்கள் நர்த்தனம் புரிந்தனர்.(58) (இந்தக் கவனிப்புகளால்) மிகவும் மகிழ்ந்த ஸ்கந்தன், தேவர்கள் அனைவருக்கும் ஒரு வரம் தரும் வகையில், "உங்களைக் கொல்ல விரும்பும் உங்கள் எதிரிகள் அனைவரையும் நான் கொல்வேன்" என்றான்.(59) அந்தத் தேவர்களில் சிறந்தவனிடம் {ஸ்கந்தனிடம்} இருந்து இவ்வரத்தை அடைந்த சிறப்புமிக்கத் தேவர்கள், தங்கள் எதிரிகள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகக் கருதினர்.(60)
ஸ்கந்தன் அவ்வரத்தை அருளிய பிறகு, மகிழ்ச்சியடைந்த அந்த உயிரினங்கள் அனைத்திடமிருந்தும் மூவுலகங்களையும் நிறைக்கும் வகையில் பேரொலி எழுந்தது.(61) அந்தப் பரந்த படையுடன் கூடிய ஸ்கந்தன், சொர்க்கவாசிகளைப் பாதுகாக்க, தைத்தியர்களை அழிக்கப் புறப்பட்டான்.(62) ஓ! மன்னா {ஜனமேஜயா}, (உடல் கொண்டு வந்தவையான) முயற்சி, வெற்றி, அறம், நிறைவு, செழிப்பு, துணிவு மற்றும் சாத்திரங்கள் ஆகியவை கார்த்திகேயனின் படைக்கு முன்னணியில் சென்றன.(63) வேல்கள், முத்கரங்கள், எரிகொள்ளிகள், கதாயுதங்கள், உலக்கைகள், நாராசங்கள், ஈட்டிகள், சூலங்கள் ஆகியவற்றைத் தரித்ததும், செருக்கில் கொழுத்த சிங்கம் போல முழங்கிக் கொண்டிருந்ததுமான அந்தப் பயங்கரப் படையோடு தெய்வீகக் குஹன் புறப்பட்டான்.(64,65)
தைத்தியர்கள், ராட்சசர்கள் மற்றும் தானவர்கள் அனைவரும் அவனைக் கண்டு, அச்சத்தால் கவலையடைந்து, அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(66) பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த தேவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். சக்தியும், வலிமையும் கொண்டவனான ஸ்கந்தன், இதை (எதிரிகள் தப்பி ஓடுவதைக்) கண்டு கோபத்தால் தூண்டப்பட்டான்.(67) அவன் (அக்னியிடம் இருந்து பெற்றிருந்த) பயங்கர ஆயுதமான ஈட்டியை {வேலை} மீண்டும் மீண்டும் ஏவினான். அப்போது அவன் வெளிப்படுத்திய சக்தியானது, தெளிந்த நெய்க் காணிக்கைகளால் ஊட்டப்பட்ட நெருப்புக்கு ஒப்பானதாக இருந்தது.(68) அளவிலா சக்தி கொண்டவனான ஸ்கந்தனால், அந்த ஈட்டி மீண்டும் மீண்டும் ஏவப்பட்டபோது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பூமியில் நெருப்புக் கீற்றுகள் விழுந்தன.(69) பேரொலியுடன் கூடிய இடிகளும், பூமியில் விழுந்தன. ஓ! மன்னா, அண்ட அழிவு நாளில் {பிரளயத்தின் போது) ஏற்படும் பீதியை அனைத்தும் அடைந்தன.(70)
அக்னியின் மகனால் {கார்த்திகேயனால்} அந்தப் பயங்கர ஈட்டி ஒரு முறை ஏவப்பட்டபோது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, அதிலிருந்து லட்சக்கணக்கான ஈட்டிகள் வெளிவந்தன.(71) இறுதியாக, பலமிக்கவனும், போற்றுதலுக்குரியவனுமான ஸ்கந்தன், மகிழ்ச்சியால் நிறைந்து, (அந்தப் போரில்) லட்சக்கணக்கான, வலிமைமிக்க வீர தைத்தியர்களால் சூழப்பட்டவனும், பெரும் வலிமையும், ஆற்றலும் கொண்டவனும், தைத்தியர்களின் தலைவனுமான தாரகனைக் கொன்றான்.(72) பிறகு அவன், எட்டுப் பத்மம் எண்ணிக்கையிலான தைத்தியர்களால் சூழப்பட்டவனான மஹிஷனை அந்தப் போரில் கொன்றான். அடுத்ததாக, ஆயிரம் ஆஜுதங்கள் எண்ணிக்கையிலான தைத்தியர்களால் {நூறு லட்சம் பேரால்} சூழப்பட்ட திரிபாதனைக் கொன்றான்.(73) பிறகு அந்தப் பலமிக்க ஸ்கந்தன், பத்து நிகர்வ எண்ணிக்கையிலான தைத்தியர்களால் {லட்சம் கோடி பேரால்} சூழப்பட்ட ஹிரதோததரனை, பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த அவனுடைய தொண்டர்களுடன் சேர்த்துக் கொன்றான்.(74) ஓ! மன்னா, அந்தத் தைத்தியர்கள் கொல்லப்பட்டபோது, திசைகளின் பத்து புள்ளிகளும் நிறையும்படி பேரொலி எழுப்பிய குமாரனின் தொண்டர்கள், ஆடி, குதித்து, மகிழ்ச்சியுடன் சிரத்துக் கொண்டிருந்தனர்.(75)
ஓ! மன்னா, ஸ்கந்தனின் ஈட்டியில் இருந்து வெளிப்பட்ட தழல்களில் ஆயிரக்கணக்கான தைத்தியர்கள் எரிந்தனர், அதே வேளையில் ஸ்கந்தனின் முழக்கங்களால் பீதியடைந்த சிலர், தங்கள் இறுதி மூச்சையும் விட்டனர்.(76) ஸ்கந்தனுடைய படைவீரர்களின் கொட்டாவிகளில் மூவுலகங்களும் பீதியடைந்தன. ஸ்கந்தனால் உண்டாக்கப்பட்ட தழல்களில் எதிரிகள் எரிந்தனர். பலர், அவனது வெறும் முழக்கங்களிலேயே கொல்லப்பட்டனர்.(77) தேவர்களின் எதிரிகளில் சிலர், கொடிகளால் தாக்கப்பட்டு உயிரை இழுந்தனர். சிலர், மணிகளின் ஒலியால் பீதியடைந்து பூமியின் பரப்பில் விழுந்தனர். சிலர், ஆயுதங்களால் சிதைக்கப்பட்டுக் கீழே விழுந்து உயிரை விட்டனர்.(78) இவ்வகையில், வீரனும், வலிமைமிக்கவனுமான கார்த்திகேயன், தன்னோடு போரிட வந்த பெரும் பலம் கொண்டவர்களான தேவர்களின் எதிரிகளில் எண்ணிலடங்காதோரைக் கொன்றான்.(79)
பெரும் வலிமை கொண்டவனும், பலியின் மகனுமான பாணன், கிரௌஞ்ச மலையில் ஏறி அந்தத் தேவர்களின் படையுடன் போரிட்டான்.(80) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், பெரும் படைத்தலைவனுமான ஸ்கந்தன், தேவர்களின் அந்த எதிரியை {பாணனை} எதிர்த்து விரைந்து சென்றான். கார்த்திகேயனிடம் அச்சம் கொண்ட அவன், அந்தக் கிரௌஞ்ச மலைக்குள் பதுங்கினான்.(81) சினத்தால் நிறைந்தவனும், போற்றுதலுக்குரியவனுமான அந்தக் கார்த்திகேயன், அக்னியால்[1] அவனுக்கு அளிக்கப்பட்ட ஈட்டியைக் கொண்டு அம்மலையை {கிரௌஞ்ச} மலையைப் பிளந்தான். அம்மலை வெளியிடும் ஒலியானது நாரைக்கு {கிரௌஞ்சத்திற்கு} ஒப்பானதாக இருந்ததால் அது கிரௌஞ்சம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.(82) சால மரங்களுடன் கூடிய அம்மலை பலவண்ணங்களைக் கொண்டிருந்தது. அதிலிருந்த {அம்மலையிலிருந்த} குரங்குகளும், யானைகளும் பீதியடைந்தன. அதில் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டிருந்த பறவைகள் எழுந்து, ஆகாயத்தில் சுற்றிக் கொண்டிருந்தன. பாம்புகள், அதன் சாரலில் வெளியேற தொடங்கின.(83) அச்சத்தால் அங்கேயும், இங்கேயும் ஓடிக்கொண்டிருந்த சிறுத்தைகள் மற்றும் கரடிகளின் ஓலத்தை அஃது எதிரொலித்தது. அதில் இருந்த பிற காடுகளும், நூற்றுக்கணக்கான விலங்குகளின் ஓலத்தை வெளியிட்டன.(84) திடீரெனச் சரபங்களும், சிங்கங்களும் வெளியே ஓடின. அம்மலை இந்த அவலநிலைக்குக் குறைக்கப்பட்டாலும், இவையனைத்தின் விளைவால் அஃது அழகிய தன்மையை ஏற்றது.(85)
[1] "44ம் சுலோகத்தில் இந்த ஈட்டி இந்திரனால் அளிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது" என இங்கே கங்குலி நினைவூட்டுகிறார். ஆனால் அங்கே நேரடியாக இந்திரன் என்ற சொல் கையாளப்படவில்லை. பகனைக் கொன்றவன் என்றே சொல்லப்பட்டுள்ளது. மேலும் 68ம் சுலோகத்தில், கங்குலியே அஃது அக்னி கொடுத்த ஈட்டி என்று அடைப்புக்குறிக்குள் சொல்லியிருக்கிறார்.
அதன் சிகரங்களில் வசித்த வித்யாதரர்கள் காற்றில் பறந்து சென்றனர். கின்னரர்களும், ஸ்கந்தனின் ஈட்டி பாய்ந்த அச்சத்தால் கலக்கமடைந்து கவலையில் மூழ்கினர்.(86) அழகிய ஆபரணங்களும், மாலைகளும் அணிந்திருந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தைத்தியர்கள், அந்தச் சுடர்மிக்க மலையில் இருந்து வெளியே வந்தனர். அந்தப் போரில் அவர்களை விஞ்சிய குமாரனின் தொண்டர்கள், அவர்கள் அனைவரையும் கொன்றனர்.(87) போற்றுதலுக்குரிய ஸ்கந்தன், சினத்தால் நிறைந்து, (பழங்காலத்தில்) விருத்திரனைக் கொன்ற இந்திரனைப் போலவே, அந்தத் தைத்திய தலைவனின் (பலியின்) மகனை, அவனுடைய தம்பியுடன் சேர்த்துக் கொன்றான்.(88) பகைவீரர்களைக் கொல்பவனான அந்த அக்னியின் மகன், சிலநேரங்களில் தன்னைப் பலராகவும், சில நேரங்களில் தன் அனைத்துப் பகுதிகளை ஒன்றாகத் திரட்டியும், தன் ஈட்டியால் அந்தக் கிரௌஞ்ச மலையைப் பிளந்தான்.(89) அவனது கரங்களில் இருந்து மீண்டும் மீண்டும் ஏவப்பட்ட அந்த ஈட்டியானது, மீண்டும் மீண்டூம் அவனிடமே திரும்பி வந்தது. இவ்வாறே போற்றுதலுக்குரிய அக்னியின் மகனுடைய வலிமையும், மகிமையும் இருந்தது.(90)
இரட்டிப்பான வீரம், சக்தி, ஆற்றல், நிறைவு ஆகியவற்றைக் கொண்ட அந்தத் தேவன் {ஸ்கந்தன்}, அம்மலையை {கிரௌஞ்ச மலையைப்} பிளந்து, நூற்றுக்கணக்கான தைத்தியர்களைக் கொன்றான்.(91) இவ்வாறு தேவர்களின் எதிரிகளைக் கொன்ற அந்தப் போற்றுதலுக்குரிய தேவன், தேவர்களால் வழிபடப்பட்டு, கௌரவிக்கப்பட்டுப் பெரும் மகிழ்வை அடைந்தான்.(92) கிரௌஞ்ச மலை பிளக்கப்பட்டு, சந்தனின் மகன் கொல்லப்பட்ட பிறகு பேரிகைகள் முழக்கப்பட்டன.(93) யோகிகளின் அந்தத் தெய்வீகத் தலைவன் {ஸ்கந்தன்} மீது, தெய்வீக மாதர்கள் அடுத்தடுத்து மலர்மாரியைப் பொழிந்தனர்.(94) தெய்வீக நறுமணத்தைச் சுமந்து வந்த மங்கலமான தென்றல் அங்கே வீசத் தொடங்கியது. கந்தர்வர்களும், வேள்வி செய்வதில் எப்போதும் ஈடுபடுபவர்களான பெரும் முனிவர்களும் அவனைத் துதித்துப் பாடினர்.(95)
சிலர் அவனை {ஸ்கந்தனை} பெரும்பாட்டனின் பலமிக்க மகனும், பிரம்மனின் மகன்கள் அனைவரிலும் மூத்தவனுமான சனத்குமாரன் என்று சொல்கின்றனர்.(96) சிலர் அவனை மகேஸ்வரனின் {சிவனின்} மகன் என்று சொல்கின்றனர். சிலரோ அக்னியின் மகன் என்று சொல்கின்றனர். மேலும் சிலர் அவனை உமையின் மகனென்றோ, கிருத்திகைகள், அல்லது கங்கையின் மகனென்றோ சொல்கின்றனர்.(97) அவர்களில் ஒருவரின் மகனென்றோ, அவர்களில் இருவரின் மகனென்றோ, நால்வரில் ஒருவரின் மகன் என்றோ, சுடர்மிக்க வடிவமும், பெரும் வலிமையும் கொண்ட அந்த யோகியரின் தலைவனைக் குறித்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் சொல்கின்றனர்.(98)
ஓ! மன்னா {ஜனமேஜயனிடம்}, இவ்வாறே கார்த்திகேயனின் பட்டமேற்பு குறித்த அனைத்தையும் உனக்கு நான் சொல்லிவிட்டேன். இப்போது சரஸ்வதியின் தீர்த்தங்களில் முதன்மையான, புனிதமான தீர்த்தத்தின் {சோம தீர்த்தத்தின்} வரலாற்றைக் கேட்பாயாக.(99) ஓ! ஏகாதிபதி, தேவர்களின் எதிரிகள் கொல்லப்பட்ட பிறகு அந்த முதன்மையான தீர்த்தம் {சோம தீர்த்தம்}, இரண்டாவது சொர்க்கமானது.(100) அக்னியின் பலமிக்க மகன் {ஸ்கந்தன்}, தேவர்களில் முதன்மையானோர் ஒவ்வொருவருக்கும், பல்வேறு வகையான ஆட்சிப்பகுதிகள், வளங்கள் மற்றும் இறுதியாக மூவுலகங்களின் அரசுரிமையையும் கொடுத்தான்.(101) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வாறே தைத்தியர்களை அழித்தவனான அந்தப் போற்றுதலுக்குறியவன், தேவர்களால் தங்கள் படைத்தலைவனாக நிறுவப்பட்டான்.(102) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பழங்காலத்தில் தேவர்களால் நீர்நிலைகளின் தலைவனாக வருணன் நிறுவப்பட்ட மற்றொரு தீர்த்தம் தைஜஸம் {ஔசனம்} என்ற பெயரால் அறியப்படுகிறது.(103) அந்தத் தீர்த்தத்தில் நீராடி, ஸ்கந்தனைப் போற்றிய ராமன் {பலராமன்}, தங்கம், துணிகள், ஆபரணங்கள் மற்றும் பிற பொருட்களைப் பிராமணர்களுக்குக் கொடுத்தான்.(104) பகைவீரர்களைக் கொல்பவனான அந்த மாதவன் {பலராமன்}, அங்கே ஓரிரவைக் கழித்து, அந்த முதன்மையான தீர்த்தத்தைத் துதித்து, அதன் நீரைத்தீண்டி, உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அடைந்தான்.(105) தேவகூட்டத்தால் எவ்வாறு தெய்வீக ஸ்கந்தன் {படைத்தலைவனாக} நிறுவப்பட்டான் என்பது குறித்து நீ கேட்ட அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன்" {என்றார் வைசம்பாயனர்}.(106)
--------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 46 ல் உள்ள சுலோகங்கள் : 106
--------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 46 ல் உள்ள சுலோகங்கள் : 106
ஆங்கிலத்தில் | In English |