Agni and Kuvera Tirthas! | Shalya-Parva-Section-47 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 16)
பதிவின் சுருக்கம் : நீர்நிலைகளின் தலைவனாக வருணனை நிறுவிய தேவர்கள்; அக்னி தீர்த்தம் மற்றும் கௌபேர தீர்த்தம் ஆகியவற்றுக்குச் சென்ற பலராமன்; அத்தீர்த்தங்களின் மகிமை...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, முறையான சடங்குகளுடன் ஸ்கந்தன் பட்டமேற்றதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து கேட்ட இந்த வரலாறு மிக அற்புதமானதாகும்.(1) ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, இந்த விவரிப்பைக் கேட்டதனால் தூய்மையடைந்தவனாக என்னை நான் கருதுகிறேன். என் மனம் மிகவும் உற்சாகமடைவதால், எனக்கு மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது.(2) குமாரனின் பட்டமேற்பையும், தைத்தியர்களின் அழிவையும் கேட்ட பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனினும், எனக்கு மற்றொரு காரியம் குறித்து மிகுந்த ஆவல் ஏற்படுகிறது.(3) பழங்காலத்தில் நீர்நிலைகளின் தலைவன் {வருணன்} எவ்வாறு அந்தத் தீர்த்ததில் வைத்து பட்டமேற்கச் செய்யப்பட்டான்? ஓ மனிதர்களில் சிறந்தவரே, பேரறிவையும், உரைப்பதில் திறனையும் கொண்டுள்ள நீர் அவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(4)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, உண்மையில் முந்தைய கல்பத்தில் நடந்தவாறே இந்த அற்புத வரலாற்றைக் கேட்பாயாக. பழங்காலத்தில், கிருத யுகத்தில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, வருணனை முறையாக அணுகிய தேவர்கள் அனைவரும், அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்:(5) "தேவர்களின் தலைவனான சக்ரன் {இந்திரன்}, அனைத்து அச்சங்களில் இருந்தும் எங்களை எப்போதும் பாதுகாப்பதைப் போல, நீயும் ஆறுகள் அனைத்தின் தலைவனாக இருப்பாயாக.(6) ஓ! தேவா, நீ எப்போதும் மகரங்களின் வீடான பெருங்கடலில் வசிக்கிறாய். ஆறுகளின் தலைவனான இந்தப் பெருங்கடல் உனது ஆட்சிப்பகுதியாகட்டும்.(7) சோமனுடன் சேர்ந்து நீ வளர்ந்து, தேய வேண்டும்" என்றனர். (இவ்வாறு சொல்லப்பட்ட) வருணன், அவர்களிடம், "அப்படியே ஆகட்டும்" என்றான்.(8)
பிறகு, ஒன்றாகச் சேர்ந்த தேவர்கள் அனைவரும், பெருங்கடலையே தன் வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் வருணனை, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி, நீர்நிலைகள் அனைத்தின் தலைவனாக நிறுவினார்கள்.(9) நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக வருணனை நிறுவிய தேவர்கள், முறையாக அவனை வழிபட்டுத் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(10) தேவர்களால் நிறுவப்பட்டவனான சிறப்புமிக்க வருணன், தேவர்களைக் காக்கும் சக்ரனைப் போலவே, கடல்கள், தடாகங்கள், ஆறுகள் மற்றும் பிற நீர்க்கொள்ளிடங்களை முறையாகக் காக்கத் தொடங்கினான்.(11) பிரலம்பனைக் கொன்றவனும், பெரும் அறிவைக் கொண்டவனுமான பலதேவன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்திலும் நீராடி, பல்வேறு வகையான தானங்களைச் செய்து, அடுத்ததாக, தெளிந்த நெய்யை உண்பவனான அக்னி, வன்னிமரத்திற்குள் ஒளிந்து கொண்டு, காட்சிக்குப் புலனாகாதபடி எந்த இடத்தில் மறைந்து போனானோ, அந்த அக்னி தீர்த்தத்திற்குச் சென்றான்.(12) உலகங்கள் அனைத்தின் ஒளியும் இவ்வாறு மறைந்தபோது, ஓ! பாவங்களற்றவனே, தேவர்கள் அண்டத்தின் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றனர்.(13) அவர்கள், "போற்றுதலுக்குரிய அக்னி மறைந்துவிட்டான். தன் காரணத்தை நாங்கள் அறியவில்லை. அனைத்து உயிரினங்களும் அழிக்கப்படாமல் இருக்கட்டும். ஓ! பலமிக்கத் தேவா, நெருப்பை உண்டாக்குவீராக" என்றனர்".(14)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "எக்காரணத்தினால் உலகங்கள் அனைத்தையும் உண்டாக்குபவனான அக்னி மறைந்து போனான்? மேலும் தேவர்களால் அவன் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டான்? இவை அனைத்தையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக" என்றான்.(15)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெருஞ்சக்தி கொண்ட அக்னி, பிருகுவின் சாபத்தால் பெரும்பீதியை அடைந்தான். அதனால் வன்னிமரத்திற்குள் ஒளிந்து கொண்டு, அந்தப் போற்றுதலுக்குரிய தவன் காட்சியில் இருந்து மறைந்து போனான்.(16) அக்னி மறைந்ததும், வாசவனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரும், பெரும் துன்பத்தை அடைந்து, காணாமல் போன அந்தத் தேவனைத் தேடினார்கள்.(17) அவர்கள் அக்னியைக் கண்டுபிடித்த போது, அந்தத் தேவன் வன்னிமரத்திற்குள் கிடப்பதைக் கண்டனர்.(18) ஓ! மனிதர்களில் புலியே, பிருஹஸ்பதியைத் தங்கள் தலைமையாக் கொண்ட தேவர்கள், அந்தத் தேவனைக் கண்டுபிடிப்பதில் வெற்றியை அடைந்து, வாசவனுடன் சேர்ந்து மகிழ்ச்சியை அடைந்தனர்.(19) பிறகு அவர்கள் எங்கிருந்து வந்தனரோ அந்த இடத்திற்கே திரும்பி சென்றனர். அக்னியும், பிருகுவின் சாபத்தினால், பிரம்மத்தை உச்சரிப்பவரான அந்தப் பிருகு சொன்னது போலவே அனைத்தையும் உண்பவனானான்.(20)
நுண்ணறிவு கொண்ட பலராமன், அங்கே நீராடிய பிறகு, உலகங்கள் அனைத்தின் போற்றுதலுக்குரிய பெரும்பாட்டன் {பிரம்மன்} எங்குத் தன் படைப்பு வேலைகளைச் செய்தானோ அந்தப் பிரம்மயோனிக்குச் சென்றான்.(21) பழங்காலத்தில், தலைவன் பிரம்மன், அனைத்துத் தேவர்களுடன் சேர்ந்து அங்கே நீராடிய பிறகு, முறையான சடங்குகளைச் செய்து தேவர்களுக்காகத் தீர்த்தங்கள் அனைத்தையும் படைத்தான்.(22) பலதேவன் அங்கே நீராடி, பல்வேறு வகைத் தானங்களைச் செய்த பிறகு, ஓ! மன்னா, பலமிக்க ஐலபிலன் {குபேரன்} கடுந்தவங்களைச் செய்து எங்கே பொக்கிஷங்கள் அனைத்தின் தலைமையை அடைந்தானோ அந்தக் கௌபேரம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(23) அவன் {குபேரன்} (தவத்தில் ஈடுபட்டபடி) அங்கே வசித்தபோது அனைத்து வகைச் செல்வங்களும், அனைத்து விலைமதிப்புமிக்க ரத்தினங்களும் தாமாகவே அவனிடம் வந்தன. பலதேவன், அந்தத் தீர்த்தத்திற்குச் சென்று, அதன் நீரில் நீராடி, பிராமணர்களுக்கு முறையே அதிகச் செல்வத்தைக் கொடுத்தான்.(24)
அந்த இடத்தில் ராமன் {பலராமன்}, குபேரனின் சிறந்த நந்தவனத்தைக் கண்டான். பழங்காலத்தில், யக்ஷர்களின் தலைவனான உயர் ஆன்ம குபேரன், அங்கே கடுந்தவங்களைச் செய்து, பல வரங்களை அடைந்தான்.(25) பொக்கிஷங்களின் தலைமைப் பொறுப்பு, அளவிலா சக்தி கொண்ட ருத்ரனிடம் நட்பு, தேவன் என்ற நிலை, குறிப்பிட்ட திசைப் புள்ளியில் (வடக்குத் திசையின்) ஆதிக்கப் பொறுப்பு, நளகுபேரன் என்ற பெயரைக்கொண்ட ஒரு மகன் ஆகியவற்றை அங்கேதான் பெற்றான். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இவை யாவையும் அங்கேதான் அந்த யக்ஷர்களின் தலைவன் {குபேரன்} வேகமாக அடைந்தான்.(26) அங்கே வந்த மருத்துக்கள், அவனை (ஆட்சிப்பொறுப்பில்) முறையாக நிறுவினர். மேலும் அவன், தன் வாகனமாக நன்கு ஆயத்தம் செய்யப்பட்டதும், மனோ வேகம் கொண்டதுமான தெய்வீகத் தேர் ஒன்றையும், தேவர்களின் செல்வங்கள் அனைத்தையும் அடைந்தான்.(27) வெண்சந்தனத்தைப் பயன்படுத்துபவனான அந்தப் பலன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, அதிகச் செல்வத்தைத் தானமளித்து, வேகமாக மற்றொரு தீர்த்தத்திற்குச் சென்றான்.(28) அனைத்து வகை உயிரினங்களையும் கொண்ட அந்தத் தீர்த்தம் பதரபாசனை என்ற பெயரால் அறியப்படுகிறது. அங்கே ஒவ்வொரு பருவகாலத்தின் கனிகளும் எப்போதும் காணப்படும், மேலும், மலர்களும், அனைத்து வகைக் கனிகளும் எப்போதும் அபரிமிதமாகக் கிடைக்கும்" {என்றார் வைசம்பாயனர்}.(29)
-----------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 47 ல் உள்ள சுலோகங்கள் : 29-----------------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தில் | In English |