Death is mine and Brahma not mine! | Shanti-Parva-Section-13 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 13)
பதிவின் சுருக்கம் : மிருத்யு மற்றும் பிரம்மம் குறித்து யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்த சகாதேவன்; இவ்விரண்டும் கலந்த ஆத்மாவானது அழிவற்றதானாலும், அழிவையுடையதானாலும் செயலே ஒருவனுக்குச் சிறந்தது என்று சொன்னது; தன் வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ளுமாறு யுதிஷ்டிரனிடம் வேண்டிய சகாதேவன்...
சகாதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதரே, புறப்பொருட்கள் அனைத்தையும் கைவிடுவதால் மட்டுமே ஒருவன் வெற்றியை அடைந்துவிடுவதில்லை. அகப்பற்றுகளைக் {மனப்பற்றுகளைக்} கைவிட்டாலும் கூட வெற்றியை அடைவது ஐயத்திற்கிடமானதே.(1) மனத்தின் அகத்தில் ஆசைகளைக் கொண்டு, புறப்பொருட்களைக் கைவிடுபவனின் அறத்தகுதியும், மகிழ்ச்சியும் நமது எதிரிகளுடைய பங்காக இருக்கட்டும்.(2) மறுபுறம், அகப்பற்றையும் கைவிட்டு, பூமியை ஆள்பவனுடைய அறத்தகுதியும், மகிழ்ச்சியும், நமது நண்பர்களின் பங்காக இருக்கட்டும்.(3) மம (எனது) என்ற ஈரெழுத்துகளைக் கொண்ட வார்த்தையானது மிருத்யுவாகும்; அதே வேளையில் அதன் எதிர்ச்சொல்லான நமம (எனதில்லை) என்று மூன்று எழுத்துகளைக் கொண்ட வார்த்தையானது அழிவில்லா பிரம்மமாகும்[1].(4) ஓ! மன்னா, பிரம்மமும், மிருத்யுவும் கண்ணுக்குப் புலனாகாதவகையில் அனைத்து ஆன்மாவுக்குள்ளும் நுழைந்து, அனைத்துயிரினங்களையும் செயல்பட வைக்கின்றன என்பதில் ஐயமில்லை.(5)
[1] "இங்கே சகாதேவன் சொல்ல விரும்புவது என்னவென்றால், ’தன்னலத்தால் விளையும் அனைத்தும் மரணத்தையே உண்டாக்கும், அதே வேளையில், அதற்கு எதிர் மனநிலையில் விளையும் அனைத்தும் பிரம்மன், அல்லது அழிவில்லா நிலைக்கு வழிநடத்தும்’ என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, {பிரம்மமும் மிருத்யுவும் கலந்த} இதுவே ஆன்மா என்றழைக்கப்படுமானால், இஃது அழிவடையக்கூடியதில்லை. இவ்வாறெனில் உடல்களை அழிப்பதால் ஒருவன் கொலைக்குற்றத்திற்கு ஆளாகமாட்டான்.(6) மறுபுறம், ஒருவனின் ஆன்மாவும், உடலும் ஒன்றாகப் பிறந்தோ, இறந்தோ போகின்றன என்றால், உடல் அழியும்போது, ஆன்மாவும் அழிவை அடைகிறது. அவ்வாறெனில், (சாத்திரங்களில் பரிந்துரைக்கப்படும்) சடங்குகள் மற்றும் செயல்களும் பயனற்றனவாகிவிடும்.(7) எனவே, நுண்ணறிவு கொண்ட ஒரு மனிதன், ஆன்மாவின் அழியாத் தன்மை குறித்த ஐயங்கள் அனைத்தையும் விலக்கிவிட்டு, பழங்காலத்தில் பெரியோர்களால் நடக்கப்பட்ட பாதையையே பின்பற்ற வேண்டும்.(8) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த பூமியையும் அடைந்த ஒரு மனிதன், அவளை {பூமியை} அனுபவிக்காமல் போவானெனில் அவனது வாழ்வு நிச்சயம் பயனற்றதே.(9) காட்டுக் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு காட்டில் வாழ்ந்தாலும், உலகப்பொருட்களின் மீது கொண்ட பற்றை விடாத ஒரு மனிதனைப் பொறுத்தவரை, ஓ! மன்னா, அவன் மிருத்யுவின் கோரப்பற்களுக்கிடையில் வாழ்பவனே ஆவான்.(10)
ஓ! பாரதரே, உயிரினங்கள் அனைத்தின் இதயங்களும், அவற்றின் வெளித்தோற்றங்களும், உமது சொந்த வெளிப்பாடுகளேயன்றி வேறில்லை என்பதைக் காண்பீராக. அனைத்துயிரையும் தங்களைப் போலவே காண்பவர்கள் (அழிவின்) பேரச்சத்திலிருந்து விடுபடுகிறார்கள்[2].(11) நீர் எனது தந்தையும், {தாயும்}, பாதுகாவலரும், தமையனும், மூத்தவரும், ஆசானுமாவீர். எனவே, துன்பத்தில் பீடிக்கப்பட்டுச் சோகத்தில் நான் சொல்லும் தொடர்பற்ற வார்த்தைகளை மன்னிப்பதே உமக்குத் தகும் {பொறுத்தருள்வீராக}.(12) ஓ! பூமியின் தலைவரே, ஓ! பாரதர்களில் சிறந்தவரே, நான் சொல்வது உண்மையோ, பொய்யோ, இவற்றை உம்மிடம் கொண்ட பெருமதிப்பாலேயே நான் உம்மிடம் சொல்கிறேன்" என்றான் {சகாதேவன்}".(13)
[2] "சுய வெளிப்பாடு எனும் Swabhavam சுவபாவம் என்ற வார்த்தையையே இதன் பொருள் முற்றிலும் சார்ந்திருக்கிறது. இரண்டாவது வரியில், vrittam என்பது Bhutam என்றானாலும், அதன் பொருள் மாறாது. கே.பி.சின்ஹா இந்த வரியைத் தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அகத்தும், புறத்துமிருக்கிற வஸ்துக்களுடைய தன்மையைப் பாரும். எவர்கள் அதன் உண்மையைக் காண்கிறார்களோ அவர்கள் பெரிய பயத்திலிருந்து விடுபடுகிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ பாரதக் குலத்தவரே, அனைத்துயிர்களுக்குள்ளும் இருக்கும் பிரம்மத்தைக் கருதிப் பாரும். அந்தத் தன்மையைக் காணும் ஒருவன் பேரச்சத்திலிருந்து விடுபடுகிறான்" என்றிருக்கிறது. சாந்தி பர்வத்தைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு வரியும், வெவ்வேறு பதிப்புகளில், வெவ்வேறு பொருள்களிலேயே விளக்கப்பட்டிருக்கின்றன. நாம் கங்குலியையே பின்பற்றிச் செல்கிறோம். முக்கியமான இடங்களிலும், கங்குலியே ஐயங்கொண்டு அடிக்குறிப்பிட்டிருக்கும் இடங்களிலும் மட்டும் ஒவ்வொரு பதிப்பிலும் அந்த இடம் எவ்வாறு விளக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காண்போம்.
சாந்திபர்வம் பகுதி – 13ல் உள்ள சுலோகங்கள் : 13
ஆங்கிலத்தில் | In English |