Don't be mad, govern! | Shanti-Parva-Section-14 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 14)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைச் சமாதானப்படுத்திய திரௌபதி; தண்ட நீதி மற்றும் மன்னரின் சிறப்பைச் சொன்னது; தார்தராஷ்டிரர்கள் நியாயமாகவே கொல்லப்பட்டதாகச் சொன்னது; ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்படி யுதிஷ்டிரனிடம் சொன்ன திரௌபதி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குந்தியின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், வேதங்களில் உள்ள இந்த உண்மைகளைச் சொல்லிக் கொண்டிருந்த தன் தம்பிகள் சொல்வதைப் பேச்சற்றவனாகக் கேட்டுக் கொண்டிருந்தபோது,(1) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெண்களில் முதன்மையானவளும், அகன்ற கண்களைக் கொண்டவளும், பேரழகியும், உன்னதப் பிறப்பைக் கொண்டவளுமான திரௌபதி, பல சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் ஒப்பானவர்களான தன் தம்பியருக்கு மத்தியில் யானை மந்தையின் தலைமையானையைப் போல அமர்ந்திருந்த அந்த மன்னர்களில் காளையிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னாள்.(2,3)
தன் கணவர்கள் அனைவரிடமும், குறிப்பாக யுதிஷ்டிரனிடம் எப்போதும் அன்பை எதிர்பார்த்தவளான அவள் {திரௌபதி}, அம்மன்னனால் எப்போதும் அக்கறையுடனும், பாசத்துடனும் நடத்தப்பட்டாள். கடமைகளை அறிந்தவளும், அவற்றை நடைமுறையில் நோற்பவளும், பெரிய இடைகளை {பின்புறத்தைக்} கொண்டவளுமான அந்த மங்கை, தன் தலைவனின் {யுதிஷ்டிரனின்} மீது கண்களைச் செலுத்தி, ஆறுதலளிக்கும் இனிய வார்த்தைகளில் அவனது கவனத்தை {திருப்ப} விரும்பி, பின்வருமாறு சொன்னாள்.(5)
திரௌபதி {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, சாதகப் பறவைகளைப் போல விழிகள் வற்ற உமது தம்பியர் அழுதாலும், நீர் அவர்களை மகிழ்விக்கவில்லை.(6) ஓ! ஏகாதிபதி, (ஆற்றலில்) மதங்கொண்ட யானைகளுக்கு ஒப்பானவர்களும், எப்போதும் துன்பக் கோப்பையையே அருந்திய வீரர்களுமான இந்த உமது தம்பிகளை முறையான வார்த்தைகளால் மகிழ்ச்சியடைச் செய்வீராக.(7)
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, துவைதத் தடாகத்தில் குளிர், காற்று மற்றும் சூரியனால் துன்புற்ற உமது தம்பிகள், உம்முடனிருந்தபோது, "வெற்றியடையும் விருப்பத்துடன் போரிட விரைந்து, துரியோதனனைக் கொன்று, அனைத்து விருப்பங்களையும் அருளவல்ல இந்தப் பூமியை நாம் அனுபவிப்போம். எதிரிகளைத் தண்டிப்பவர்களே, பெரும் தேர்வீரர்களை அவர்களது தேரை இழக்கச் செய்து, பெரும் யானைகளைக் கொன்று, தேர்வீரர்கள், குதிரை வீரர்கள் மற்றும் குதிரைகளின் உடல்களால் போர்க்களத்தை விரவிக் கிடக்கச் செய்து, பல்வேறு வகைகளிலான அபரிமிதமான கொடைகளால் பெரும் வேள்விகளை நீங்கள் செய்யப் போகிறீர்கள். நாடுகடத்தப்பட்டு காட்டில் வாழ்வதால் ஏற்படும் இந்தத் துன்பங்கள், இறுதியில் மகிழ்ச்சியிலேயே முடிவடையும்" என்று அவர்களிடம் நீர் சொல்லவில்லையா?(8-11)
ஓ! அறம்பயில்வோர் அனைவரிலும் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஓ! வீரரே, அப்போது உமது தம்பிகளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன நீர், இப்போது எங்கள் இதயங்களைத் துயரில் ஆழ்த்துவதேன்?(12) ஓர் அலியால் செல்வத்தை அனுபவிக்க முடியாது. (நீரற்ற) சேற்றில் மீன்கள் இல்லாததைப் போலவே, ஓர் அலியால் பிள்ளைகளைப் பெற முடியாது[1].(13) தண்டிக்கும் கோலில்லா {தண்டம் இல்லாத} க்ஷத்திரியன் ஒருவனால் ஒருபோதும் ஒளிர முடியாது. தண்டிக்கும் கோலில்லா க்ஷத்திரியன் ஒருவனால் ஒருபோதும் பூமியை அனுபவிக்க முடியாது. தண்டிக்கும் கோலில்லா மன்னன் ஒருவனின் குடிமக்கள் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைய முடியாது.(14) ஓ! மன்னர்களில் சிறந்தவரே, அனைத்துயிரினங்களிடமும் நட்பு, ஈகை, வேத கல்வி, தவங்கள் ஆகிய இவை ஒரு பிராமணனின் கடமைகளேயன்றி ஒரு மன்னனுக்குரியவையல்ல.(15) தீயோரைத் தடுப்பது, நேர்மையானவர்களைப் பாதுகாப்பது, போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதிருப்பது ஆகிய இவையே மன்னர்களுக்குரிய உயரிய கடமைகளாகும்[2].(16)
[1] சேற்றில் மீன்கள் உண்டு. இங்கே கங்குலி பிழை செய்திருக்க வேண்டும். கங்குலி மட்டுமல்ல; மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளிலும் இவ்வரி மேற்கண்டவாறே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "தைரியமில்லாதவன் பூமியை ஆளமாட்டான்; பொருளையும் அடைய மாட்டான். சேற்றிலுள்ள மீன்களைப் போலத் தைரியமில்லாதவனின் வீட்டில் பிள்ளைகள் நன்றாயிருக்க மாட்டார்கள்" என்றிருக்கிறது. இதுவே சரியான பொருள் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.[2] கும்பகோணம் பதிப்பில் இதன்பிறகு இரண்டு பக்கங்கள் நீளும் அளவிற்குத் தண்டநீதியைக் குறித்தும், தண்டத்தினால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் திரௌபதி விளக்குகிறாள். கங்குலியிலோ, மன்மதாநதாதத்தர் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளிலோ கும்பகோணம் பதிப்பில் சொல்லப்படும் இவை சொல்லப்படவில்லை.
மன்னிக்கும் தன்மையும் {பொறுமையும்} கோபமும், கொடுப்பதும் எடுப்பதும், பயங்கரமும் அச்சமற்றதன்மையும், தண்டனையும் வெகுமதியும் எவனிடம் இருக்கிறதோ, அவனே கடமைகளை அறிந்தவன் என்று சொல்லப்படுகிறது.(17) கல்வியாலோ, கொடையாலோ, துறவாலோ நீர் இந்தப் பூமியை அடையவில்லை.(18) ஓ! வீரரே, வலிமை அனைத்தையும் கொண்டு உம்மீது வெடித்துச் சிதற இருந்ததும், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவை நிறைந்திருந்ததும், மூவகைப் பலங்களைக் கொண்டிருந்ததும்,[3] துரோணர், கர்ணன், அஸ்வத்தாமர், கிருபர் ஆகியோரால் பாதுகாக்கப்பட்டதுமான எதிரியின் படையானது, உம்மால் வீழ்த்தப்பட்டு, கொல்லப்பட்டது. இதன் காரணமாகவே நான் உம்மை இந்தப் பூமியை அனுபவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.(19,20)
[3] மூவகை அங்கங்கள் என்று இங்கே சொல்லப்படுவது நீலகண்டரால் பின்வருமாறு விளக்கப்படுகிறது. அவை, 1) தலைவனைச் சார்ந்த பலம், 2) நல்லாலோசனைகளைச் சார்ந்த பலம், 3) மனிதர்கள் கொண்ட விடாமுயற்சி மற்றும் துணிவைச் சார்ந்த பலம் ஆகியனவாகும். பர்துவான் மொழிபெயர்ப்பாளர்கள் இதைத் தவறாக மொழிபெயர்த்திருக்கின்றனர். கே.பி.சின்ஹா வழக்கம்போலவே இங்கேயும் தவறுகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் இம்மூன்றும் பிரபுசக்தி, உத்ஸாஹசக்தி, மந்த்ரசக்தி என்று சொல்லப்படுகின்றன.
ஓ! பலமிக்கவரே {யுதிஷ்டிரரே}, ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களில் புலியே, மக்கள் தொகை அதிகம் கொண்ட மாவட்டங்கள் {ஊர்கள்} நிறைந்ததும், ஜம்பு என்றழைக்கப்பபடுவதுமான பகுதியை (முன்னர்) நீர் வலிமையுடன் அடக்கி ஆண்டீர்.(21) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, மகாமேருவுக்கு மேற்கில் அமைந்திருப்பதும், ஜம்புத்வீபத்திற்கு இணையானதுமான கிரௌஞ்சத்வீபம் என்ற பகுதியையும் நீர் வலிமையுடன் அடக்கி ஆண்டீர்.(22) ஓ! மன்னா, மகாமேருவின் கிழக்கில் இருப்பதும், கிரௌஞ்சத்வீபத்திற்கு இணையானதுமான சாகத்வீபமும் உம்மால் வலிமையுடன் அடக்கி ஆளப்பட்டது.(23) ஓ! மனிதர்களில் புலியே, மகாமேருவுக்கு வடக்கில் இருப்பதும், சாகத்வீபத்துக்கு இணையானதுமான பத்ராஸ்வம் என்ற பகுதியையும் நீர் அடக்கி ஆண்டீர்.(24) ஓ! வீரரே, பல ஊர்கள் அமைந்த தீவுகளும், பெருங்கடலில் உள்ள தீவுகளும் உம்மால் அடக்கி ஆளப்பட்டன.(25)
ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, இத்தகு அளவிலா சாதனைகளை அடைந்து, (அவற்றின் மூலம்) பிராமணர்களால் புகழப்பட்டும், உமது ஆன்மா நிறைவடையாததேன்?(26) ஓ! பாரதரே, வலிமையில் பெருகியவர்களும், (ஆற்றலில்) காளைகளுக்கோ, மதங்கொண்ட யானைகளுக்கோ ஒப்பானவர்களுமான இந்த உமது தம்பிகளைக் கண்டும், அவர்களிடம் இனிமை நிறைந்த சொற்களை ஏன் நீர் பேச மறுக்கிறீர்?(27) நீங்கள் அனைவரும் தேவர்களைப் போன்றவர்களாவீர். நீங்கள் அனைவரும் எதிர்களைத் தடுக்கவல்லவர்களாவீர். நீங்கள் அனைவரும் உங்கள் எதிரிகளை எரிக்கவல்லவர்களாவீர். உங்களில் ஒருவர் மட்டுமே எனது கணவராகியிருந்தாலும், என் மகிழ்ச்சி மிகப் பெரியதாகவே இருந்திருக்கும்.(28) ஓ! மனிதர்களில் புலியே, உடற்கட்டை ஈர்க்கும் ஐந்து புலன்களைப் போல நீங்கள் அனைவரும் என் கணவர்களாயிருக்கும்போது நான் என்ன சொல்வேன்?(29) பேரறிவும், பெரும் முன்னறிதிறனும் கொண்ட என் மாமியாரின் {குந்தியின்} வார்த்தைகளைப் பொய்க்க முடியாது. என்னிடம் பேசும்போது, அவள் {குந்தி}, "ஓ! பாஞ்சால இளவரசி {திரௌபதி}, ஓ! சிறந்த பெண்ணே, யுதிஷ்டிரன் உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பான்" என்றாள்.(30)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, சுறுசுறுப்பையும், ஆற்றலையும் கொண்ட ஆயிரக்கணக்கான மன்னர்களைக் கொன்ற பிறகு, அந்தச் சாதனையை வீணாகச் செய்யும் உமது மடமையை நான் காண்கிறேன்.(31) யாவருடைய அண்ணன் பித்தராகிறாரோ, அவர்களும் அவரைத் தொடர்ந்து பித்தராகிறார்கள். ஓ! மன்னா, உமது பித்தால், பாண்டவர்கள் அனைவரும் பித்தர்களாகப்போகிறார்கள்.(32) ஓ! ஏகாதிபதி, இந்த உமது தம்பியர் புலனுணர்வு கொண்டவர்களாக இருப்பின், அவர்கள் உம்மை நாத்திகர்கள் அனைவரோடும் சேர்த்து (ஒரு சிறையில்) அடைத்து வைத்து, பூமியின் அரசாட்சியை அவர்களே எடுத்துக் கொண்டிருப்பார்கள். அறிவு மங்கிய நிலையில் இவ்வழியில் செயல்படும் மனிதன் ஒருபோதும் செழிப்பை வெல்வதில்லை.(33) பித்துப் பாதையில் நடக்கும் மனிதன், சாம்பிராணி மற்றும் அஞ்சனம் ஆகியவற்றின் துணை கொண்டும், மூக்கின் மூலம் செலுத்தப்படும் மருந்துகள் மற்றும் பிற மருந்துகளின் துணைகொண்டும் மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.(34) ஓ! பாரதர்களில் சிறந்தவரே, பிள்ளைகளை இழந்தவளான நான் இன்னும் வாழ விரும்புவதால், நான் பெண்கள் அனைவரிலும் இழிந்தவளாவேன்.(35)
என்னாலும், (உமது நோக்கத்தில் இருந்து உம்மை விலகச் செய்ய) இவ்வாறு முயன்றுவரும் உமது சகோதரர்களாலும் சொல்லப்படும் வார்த்தைகளை நீர் அலட்சியம் செய்யாதீர். உண்மையில், மொத்த உலகத்தையும் கைவிடுவதால், நீர் கேட்டையும், உமக்கு ஆபத்தையும் வரவேற்கிறீர்.(36) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பூமியின் தலைவர்கள் அனைவராலும் மதிக்கப்படும் சிறந்த மன்னர்களான மாந்தாதா மற்றும் அம்பரீஷன் ஆகிய இருவரைப் போல நீர் இப்போது பிரகாசிக்கிறீர்.(37) உமது குடிகளை நீதியுடன் பாதுகாத்து, மலைகள், காடுகள் மற்றும் தீவுகளுடன் கூடிய பூமாதேவியை நீர் ஆட்சி செய்வீராக. ஓ! மன்னா, உற்சாகமிழக்காதீர்.(38) பல்வேறு வேள்விகளில் தேவர்களைத் துதிப்பீராக. உமது எதிரிகளுடன் போரிடுவீராக. ஓ! மன்னர்களில் சிறந்தவரே, செல்வம், துணிகள் மற்றும் பிற இன்பநுகர் பொருட்களைப் பிராமணர்களுக்குக் கொடையளிப்பீராக" என்றாள் {திரௌபதி}".(39)
சாந்திபர்வம் பகுதி – 14ல் உள்ள சுலோகங்கள் : 39
ஆங்கிலத்தில் | In English |