The wisdom of Nakula! | Shanti-Parva-Section-12 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 12)
பதிவின் சுருக்கம் : துறவைக் காட்டிலும் செயலே மேன்மையானது என யுதிஷ்டிரனிடம் சொன்ன நகுலன்; நான்கு வாழ்வுமுறைகளிலும் இல்லறமே மேன்மையானது எனச் சொன்னது; இல்லத்தைக் கைவிட்டுக் காட்டில் திரிவதாலேயே ஒருவன் துறவியாகிவிட மாட்டன் என்று சொன்னது; மன்னர்களின் கடமை இல்லறம் நோற்று வேள்விகளை ஆதரிப்பதே என்பதை அழுத்தமாகச் சொன்ன நகுலன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, வலிமைமிக்கக் கரங்கள், அகன்ற மார்பு ஆகியவற்றைக் கொண்டவனும், அளவாகப் பேசுபவனும், பெரும் ஞானம் கொண்டவனும், தாமிரத்திற்கு ஒப்பான நிறத்தில் முகத்தைக் கொண்டவனுமான நகுலன், அர்ஜுனனின் வார்த்தைகளைக் கேட்டு, நீதிமான்கள் அனைவரிலும் முதன்மையான மன்னனைப் {யுதிஷ்டிரனைப்} பார்த்து, தன் அண்ணனின் இதயத்தை (அறிவால்) முற்றுகையிட்டபடியே இவ்வார்த்தைகளைப் பேசினான்.(1,2)
நகுலன் {யுதிஷ்டிரனிடம்}, "விசாகயூபம் என்ற இடத்தில் தேவர்கள் தங்கள் நெருப்புகளை {யாக அக்னிகளை} நிறுவியுள்ளனர். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தேவர்களே தங்கள் செயல்பாடுகளின் கனிகளைச் சார்ந்தே இருக்கின்றனர் என்பதை அறிவீராக.(3) ஓ! மன்னா, நம்பிக்கையற்றோர் அனைவரின் வாழ்வையும் (மழையால்) ஆதரிக்கும் பித்ருக்கள், (படைப்பாளனால் வேதங்களில் அறிவிக்கப்பட்ட) விதிகளை நோற்றபடியே செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.(4) (செயல்களை மனத்தில் ஆழப் பதியச் செய்யும்) வேதங்களின் தீர்மானங்களை மறுப்போரை ஒளிவுமறைவற்ற நாத்திகர்களாக அறிவீராக. ஓ! பாரதரே, வேதங்களைக் கற்ற மனிதன், தன் செயல்பாடுகள் அனைத்திலும் அதன் தீர்மானங்களைப் பின்பற்றி,(5) தேவர்களின் வழியில் உயர்ந்த சொர்க்கலோகத்தை அடைகின்றனர். மேலும் இது (இந்த இல்லற வாழ்வானது), வேத உண்மைகளை அறிந்தவர்கள் அனைவராலும் (பிற) வாழ்க்கை முறைகள் அனைத்திலும் மேன்மையானதாகச் சொல்லப்பட்டுள்ளது.(6)
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நீதியுடன் தன்னால் அடையப்பட்ட செல்வத்தை, வேதங்களை நன்கறிந்த பிராமணர்களுக்குத் தானமளிப்பவனே,(7) ஓ! ஏகாதிபதி, தன் ஆன்மாவைக் கட்டுப்படுத்திய உண்மையான துறவியாகக் கருதப்படுகிறான்.(8) எனினும், பெரும் இன்பத்தின் ஊற்றை (இல்லற வாழ்வுமுறையை) அலட்சியம் செய்பவன், தன்னையே துறக்கும்[1] அடுத்த வாழ்வுமுறைக்குக் குதித்து, இருளின் தன்மையிலான {தமோகுணத்திலான} துறவையே கைக்கொள்கிறான்.(9) எவன் வீடற்றவனாக இருக்கிறானோ, எவன் இவ்வுலகத்தில் (பிச்சையெடுப்பவனாகத்) திரிகிறானோ, எவன் தன் உறைவிடத்தை மரத்தடியில் கொண்டுள்ளானோ, எவன் எண்ணங்களை வெளியிடாமல் அமைதி காக்கும் பேசா நோன்பை (மௌன விரதத்தை) நோற்கிறானோ, எவன் தன் புலன்களின் செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறானோ, அவனே பிச்சாடன {பிச்சையெடுத்து வாழும் துறவு} வாழ்வை நோற்கும் ஒரு துறவியாவான்[2].(10)
[1] "உணவை மறுத்துத் தன் உடலையே வற்றச் செய்வதால் தன்னையே துறப்பவனாகிறான்" என்று கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஓ மஹாராஜரே, கிருஹஸ்த தர்மத்திலுள்ள ஸுகபோகங்களைப் பாராமல் அப்படியே (அரண்யத்தில்) உயர்ந்த நிஷ்டையை அடைபவனாகிச் சரீரத்தை விடுகிறவன் எவனோ அவன் தாமஸமனத் தியாகியாவான்" என்றிருக்கிறது.[2] "அப்படிப்பட்ட ஒரு மனிதனும் உண்மையான துறவி கிடையாது. ஏனெனில், ஒரு க்ஷத்திரியன் அத்தகு வாழ்வுமுறையை நோற்றால் அது பாவம் நிறைந்த வாழ்வாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
எந்தப் பிராமணர், கோபம் மற்றும் இன்பம் ஆகியவற்றையும், குறிப்பாக வஞ்சனையையும் அலட்சியம் செய்து, எப்போதும் தன் நேரத்தை வேத கல்வியில் ஈடுபடுத்திக் கொள்கிறானோ, அவனே பிச்சாடன நோன்பை நோற்கும் ஒரு துறவியாவான்[3].(11) ஒரு காலத்தில் நான்கு வாழ்வு முறைகளும் தராசில் எடைகாண நிறுத்திப் பார்க்கப்பட்டன. ஓ! மன்னா, தராசின் ஒரு பக்கத்தில் இல்லறத்தை வைத்தபோது, அதைச் சரியாக நிறுத்த, மறுபக்கத்தில் மற்ற மூன்று வாழ்வுமுறைகளையும் வைக்க வேண்டியிருந்தது என்று ஞானியர் சொல்கின்றனர்.(12) ஓ! பார்த்தரே, ஓ பாரதரே, மேலும், சொர்க்கமும், இன்பமும் இல்லறத்தில் மட்டுமே இருக்கிறது என்பதைக் கண்டதால், அதுவே {இல்லறமே} பெரும் முனிவர்களும், உலக வழிகளை அறிந்த மனிதர்கள் அனைவரின் புகலிடமாக இருப்பவர்களும் நோற்கும் வழியானது.(13) எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்த வாழ்வுமுறையில் வாழ்ந்து, அதையே தன் கடமையாக எண்ணி, கனியின் மீது கொண்ட விருப்பம் அனைத்தையும் எவன் கைவிடுகிறானோ, அவனே உண்மையான துறவியாவான். இல்லறத்தையும், சுற்றத்தையும் கைவிட்டு மூட புத்தியுடன் காட்டுக்குச் செல்லும் மனிதன் துறவியாகமாட்டான்.(14) மேலும், போலியாக அறப்போர்வைக்குள் இருக்கும் ஒருவன் (காட்டில் வாழ்ந்தாலும்) தன் ஆசைகளை மறக்க முடியாமல், தன் கழுத்தைச் சுற்றி இரக்கமற்றவனான யமனின் பயங்கரத் தளையால் கட்டப்படுகிறான்.(15)
[3] "இந்த வரியின் நோக்கமே, அத்தகு வாழ்வும் ஒரு பிராமணனுக்கேயன்றி ஒரு க்ஷத்திரியனுக்கில்லை என்று நீலகண்டர் நினைக்கிறார். இல்லையெனில், யுதிஷ்டிரன் ஆட்சி செய்யாமல், தன் தம்பிகளில் எவரோ ஒருவரால் ஆட்சி செய்யப்படும் நாட்டில் அமைதியாக வாழ்ந்தாலும் அவன் வென்றதாகவே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பகட்டால் செய்யப்படும் செயல்கள் கனியை விளைவிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. ஓ! ஏகாதிபதி, மறுபுறம் துறவெண்ணத்துடன் செய்யப்படும் அந்தச் செயல்கள், அபரிமிதமான கனிகளைக் கொண்டு வருகிறது.(16) அமைதி, தற்கட்டுப்பாடு, மனோவுறுதி, உண்மை, தூய்மை, எளிமை, வேள்விகள், விடாமுயற்சி, நீதி ஆகியவையே எப்போதும் முனிவர்களால் நல்லறங்களாகக் கருதப்படுகின்றன.(17) இல்லறத்தில் பித்ருக்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர்களுக்காகவே செயல்கள் செய்யப்படுகின்றன. ஓ! ஏகாதிபதி, இந்த வாழ்வு முறையில் மட்டுமே மூவகைக் குறிக்கோள்களும் அடையப்படுகின்றன[4].(18) அனைத்துச் செயல்களையும் கட்டுப்பாடில்லாமல் செய்யும் வாழ்வுமுறையைக் கடுமையாகப் பின்பற்றும் ஒரு துறவி, இம்மையிலோ மறுமையிலோ அழிவைச் சந்திப்பதில்லை.(19) அனைத்துயிரினங்களின் பாவமற்ற தலைவனான அற ஆன்மா {பரமாத்மா}, உயிரினங்கள், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளால் தன்னைத் துதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவற்றை உண்டாக்கினான்.(20)
[4] "மூவகைக் குறிக்கோள்களாவன: அறம், இன்பம் மற்றும் பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தூய்மையாக இருக்கும் மரங்கள், செடி, கொடிகள், விலங்குகள் ஆகியனவும், தெளிந்த நெய்யும், வேள்வியின் உட்பொருளாகவே உண்டாக்கப்பட்டன.(21) இல்லறம் நோற்பவன், தடைகள் நிறைந்த வேள்வியைச் செய்ய வேண்டும். இதன் காரணமாகவே, அவ்வாழ்வு முறை மிகக் கடினமானதும், அடைதற்கரியதுமாகும்.(22) ஓ! ஏகாதிபதி, எனவே, செல்வம், தானியம் மற்றும் விலங்குகளைக் கொண்டவர்களும் இல்லறம் நோற்பவர்களுமான மனிதர்கள், வேள்விகளைச் செய்யவில்லையெனில் அழிவில்லா பாவத்தையே ஈட்டுவார்கள்.(23) முனிவர்களில் சிலர் வேத கல்வியையே வேள்வியாகக் கருதுகின்றனர்; சிலர் தங்கள் மனங்களில் செய்யும் தியானத்தையே பெரும் வேள்வியாகக் கருதுகின்றனர்.(24) ஓ! ஏகாதிபதி, குவிந்த மனநிலையைக் கொண்ட இந்தப் பாதையில் நடப்பதன் விளைவால் பிரம்மனுக்கு இணையான நிலையை அடையும் இது போன்ற மறுபிறப்பாள மனிதனின் தோழமையைத் தேவர்களே நாடுகின்றனர்.(25)
உமது எதிரிகளிடம் இருந்து நீர் அடைந்த பல்வேறு வகையான செல்வங்களை வேள்வியில் செலவிட மறுத்தால், நீர் நம்பிக்கையில்லாதவர் என்பதை மட்டுமே வெளிக்காட்டுகிறீர்.(26) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இல்லறம் நோற்கும் ஒரு மன்னன், தன் செல்வத்தை ராஜசூயம், அஸ்வமேதம் மற்றும் பிற வகை வேள்விகளைத் தவிர்த்து வேறு வழியில் தனது செல்வத்தைத் துறப்பதை ஒரு போதும் நான் கண்டதில்லை.(27) ஓ! ஐயா, தேவர்களின் தலைவனான சக்ரனைப் போல, பிராமணர்களால் புகழப்படும் பிற வேள்விகளைச் செய்வீராக.(28) எவனுடைய அலட்சியத்தின் விளைவாகக் கள்வர்களால் குடிமக்கள் கொள்ளையடிக்கப் படுகின்றனரோ, தன்னை ஆட்சி செய்ய அழைப்போருக்கு எவன் பாதுகாப்பை வழங்கவில்லையோ, அந்த மன்னன், கலியின் வடிவமானவன் என்று சொல்லப்படுகிறான்.(29) குதிரைகள், பசுக்கள், பெண் பணியாட்கள், இழைகளால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், கிராமங்கள், ஊர்கள், களங்கள் வீடுகள் ஆகியவற்றைப் பிராமணர்களுக்குக் கொடாமலும், உறவினர்களிடம் நட்புணர்வில்லாமலும் நாம் காட்டுச் சென்றோமானால், நாமும் அரச வகையைச் சேர்ந்த கலிகளே ஆவோம்.(30,31)
(பிறருக்குப்) பாதுகாப்பை வழங்காத, ஈகைபயிலாத அரச வகையினர் பாவத்தையே இழைக்கின்றனர். மறுமையில் அவர்களுக்குத் துயரே அல்லாமல் அருளில்லை.(32) ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, பெரும் வேள்விகளையும், இறந்து போன உமது மூதாதையருக்கான சடங்குகளைச் செய்யாமல், புனித நீர்நிலைகளில் நீராடாமல், காட்டில் திரியும் வாழ்வை நீர் கைக்கொண்டால்,(33) திரளில் இருந்து பிரியும் சிறு மேகமானது காற்றால் அலைக்கழிக்கப்படுவதைப் போல நீரும் அழிவையே அடைவீர். இம்மையிலும், மறுமையிலும் {அறம் வழுவி} வீழ்ந்து, பிசாசங்களின் வகையில் நீர் பிறப்பை எடுக்க வேண்டியிருக்கும்.(34) வெறுமனே இல்லத்தைக் கைவிட்டுக் காட்டில் வசிப்பதால் மட்டும் அல்ல; அக மற்றும் புறப்பற்றுகள் அனைத்தையும் கைவிடும் மனிதனே உண்மையான துறவியாகிறான்.(35)
எந்தத் தடங்கலும் இல்லாத இந்த விதிமுறைகளை நோற்று வாழும் ஒரு பிராமணன், இம்மையிலோ, மறுமையிலோ வீழ்வதில்லை.(36) பழங்காலத்தவரால் மதிக்கப்படும், மனிதர்களில் சிறந்தோரால் பயிலப்படும் கடமைகளான ஒருவனுடைய சொந்த கடமைகளை நோற்றால், ஓ! பார்த்தரே, தைத்தியப்படையைக் கொன்ற சக்ரனைப் போலச் செழிப்பில் பெருகியவர்களான தன் எதிரிகளைப் போரில் கொன்றபிறகும் எவனாவது வருந்துவானா?(37) க்ஷத்திரியக் கடமைகளை நோற்று, உமது ஆற்றலின் துணை கொண்டு உலகத்தை அடக்கிய நீர், ஓ! ஏகாதிபதி, வேதங்களை அறிந்தோருக்கு கொடைகளை அளித்த பிறகு, சொர்க்கத்தை விட உயர்ந்த உலகங்களுக்குச் செல்லலாம். ஓ! பார்த்தரே, வருந்துவது உமக்குத் தகாது" {என்றான் நகுலன்}.(38)
சாந்திபர்வம் பகுதி – 12ல் உள்ள சுலோகங்கள் : 38
ஆங்கிலத்தில் | In English |