Uttara's piteous lament! | Stri-Parva-Section-20 | Mahabharata In Tamil
(ஸ்திரீவிலாப பர்வம் - 05) [ஸ்திரீ பர்வம் - 11]
பதிவின் சுருக்கம் : உத்தரை அழுதுகொண்டிருப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; அபிமன்யுவின் பெருமைகளைச் சொல்லி அழுத உத்தரை; உத்தரையை இழுத்துச் சென்ற மத்ஸ்யக் குலப் பெண்கள்; விராடன் இறந்து கிடப்பதைக் கண்டு அந்தப் பெண்களும் பெருந்துக்கத்தால் பீடிக்கப்படுவது; அபிமன்யுவைப் போன்றே மேலும் பல இளைஞர்கள் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கிருஷ்ணனிடம் சொன்ன காந்தாரி...
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, "எவன் அவனது தந்தையையும் {அர்ஜுனனையும்}, உன்னையும் விட வலிமையிலும், துணிவிலும் ஒன்றரை மடங்கு மேம்பட்டவனாகக் கருதப்பட்டானோ, எவன் செருக்குமிக்கதும், சீற்றமிக்கதுமான ஒரு சிங்கத்துக்கு ஒப்பானவனாக இருந்தானோ,(1) எவன் எந்தவொரு தொண்டனுமில்லாமல், தனியொருவனாக ஊடுருவப்பட முடியாத எனது மகனின் {துரியோதனனின்} வியூகத்தை ஊடுருவினானோ, எவன் பலருக்குக் காலனாகத் தன்னை நிரூபித்துக் கொண்டானோ, ஐயோ, அவன் {அந்த அபிமன்யு} இப்போது மரணத்திற்கு அடிபணிந்து இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான்.(2) ஓ! கிருஷ்ணா, அளவிலா சக்தி கொண்ட வீரனும், அர்ஜுனனின் மகனுமான அபிமன்யு இறந்த பிறகும்கூட அவனது ஒளி மங்காமல் இருப்பதை நான் காண்கிறேன்.(3) அங்கே விராடனின் மகளும், காண்டீவதாரியின் மருமகளும், களங்கமற்ற அழகுடையவளுமான அந்தப் பெண் {உத்தரை}, தன் வீரக் கணவனைக் கண்டு, துயரத்தில் மூழ்கி புலம்பிக் கொண்டிருக்கிறாள்.(4)
ஓ! கிருஷ்ணா, விராடனின் மகளான அந்த {அபிமன்யுவின்} இளம் மனைவி, தன் தலைவனை அணுகி, அவனைத் தன் கரங்களால் மென்மையாகத் தடவிக் கொண்டிருக்கிறாள்.(5) உயர்ந்த நுண்ணறிவையும், பெரும் அழகையும் கொண்ட அந்தப் பெண், முன்பெல்லாம் தேனூட்டப்பட்ட மதுவால் {மத்வீகமது} வெறியூட்டப்பட்டு, வெட்கத்துடன் தன் தலைவனைத் தழுவிக் கொண்டு, முற்றாக மலர்ந்த தாமரைக்கு ஒப்பானதும், சங்கு போன்று மூன்று கோடுகளுடன் கூடிய கழுத்தால் தாங்கிக் கொள்ளப்பட்டதுமான சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} முகத்தில் முத்தமிடுவாள்[1].(6,7) ஓ! வீரா, தன் தலைவனின் கவசத்தைக் கழற்றும் அந்தக் காரிகை {உத்தரை}, தன் துணைவனின் குருதிதோய்ந்த உடலை இப்போது வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.(8)
[1] கும்பகோணம் பதிப்பில், "நல்ல மனமுள்ளள்ளவும், ஆசைப்படத்தக்க ரூபமுள்ளவளுமான இந்த உத்தரையானவள், மலர்ந்த கமலம் போன்றதும் சங்குபோலத் திரண்டிருக்கும் கழுத்தையுடையதுமான அந்த அபிமன்யுவினுடைய முகத்தை மோந்து கட்டிக் கொள்ளுகிறாள். கோபமுள்ளவளான இவள், முன் லஜ்ஜையுள்ளவளாகவும், மதுமயக்கம் மிஞ்சினவளாகவும் இவனை ஆலிங்கனம் செய்து கொள்வாள்" என்றிருக்கிறது.
ஓ! கிருஷ்ணா, அந்தப் பெண் {உத்தரை}, தன் தலைவனைக் கண்டு, {உன்னை நோக்கி} உன்னிடம், "ஓ! தாமரைக் கண்ணா, உமக்கு ஒப்பான கண்களைக் கொண்ட இந்த வீரர் கொல்லப்பட்டார்.(9) ஓ! பாவமற்றவரே, வலிமையிலும், சக்தியிலும், ஆற்றலிலும் இவர் உமக்கு இணையானவராக இருந்தார். அழகிலும் இவர் உமக்கு ஒப்பானவரே. இருப்பினும் எதிரியால் கொல்லப்பட்டு வெறுந்தரையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்" என்கிறாள்.(10) பிறகு தன் தலைவனிடம் {அபிமன்யுவிடம்} பேசும் அந்தக் காரிகை, "அனைத்து ஆடம்பரங்களுடனும் நீர் வளர்க்கப்பட்டீர். ரங்கு மானின் மென்மையான தோலிலேயே நீர் உறங்குவீர். ஐயோ, இப்படி இன்று வெறுந்தரையில் கிடக்கும் உமது உடல் வலியை உணரவில்லையா?(11) தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், யானைகளின் துதிக்கைகள் இரண்டுக்கு ஒப்பானவையும், வில்லை அடிக்கடி பயன்படுத்துவதால் கடினமடைந்த தோலால் மூடப்பட்டிருப்பவையுமான உமது பருத்த கரங்களை விரித்துக் கொண்டு, ஓ! தலைவா, பயிற்சிக்கூடத்தில் அதிகப் பயிற்சியினால் களைப்படைந்தவரைப் போலவே அமைதியாக உறங்குகிறீர். ஐயோ, இவ்வாறு அழுது கொண்டிருக்கும் என்னிடம் நீர் ஏன் பேசாமலிருக்கிறீர்?(12,13) நான் உமக்கு எக்குற்றமும் இழைத்ததாக எனக்கு நினைவில்லையே. பிறகு ஏன் என்னிடம் நீர் பேசாமலிருக்கிறீர்? முன்பெல்லாம், தொலைவிலேயே என்னைக் கண்டாலும் பேசுவீரே.(14) ஓ! மதிப்புக்குரிய ஐயா, பெரும் மதிப்பிற்குரிய சுபத்திரையையும், தேவர்களுக்கு ஒப்பான இந்த உமது தந்தைமாரையும், துயரால் அழுது கொண்டிருக்கும் பாவியான என்னையும் விட்டுவிட்டு நீர் எங்கே செல்லப் போகிறீர்?" என்று சொல்லி அழுகிறாள்.(15)
ஓ! கிருஷ்ணா, அந்த அழகிய காரிகை {உத்தரை}, குருதி தோய்ந்த தன் தலைவனின் குழல்களைத் திரட்டி, அவனது தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, அவன் உயிரோடிருப்பதைப் போல அவனிடம் {பின்வருமாறு} பேசிக் கொண்டிருக்கிறாள்.(16) அவள் {உத்தரை அபிமன்யுவிடம்}, "வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கை {சுபத்திரை} மகனும், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} மகனுமான உம்மை, போருக்கு மத்தியில் அந்தப் பெரும் தேர்வீரர்களால் எவ்வாறு கொல்ல முடிந்தது?(17) ஐயோ, யாவரால் நீர் உயிரை இழக்கச் செய்யப்பட்டீரோ, தீச்செயல்களைச் செய்பவர்களான அந்தக் கிருபர், கர்ணர், ஜெயத்ரதர், துரோணர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்} உள்ளிட்ட போர்வீரர்களுக்கு ஐயோ.(18) இளம் வயதுடைய போர்வீரரான உம்மைச் சூழ்ந்து கொண்டு, என்னைத் துன்புறுத்த உம்மைக் கொன்ற அந்த நேரத்தில், அந்தப் பெரும் தேர்வீரர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? {அவர்களுடைய மனம் எவ்வாறு உம்மைக் கொல்லத் துணிந்தது}(19) ஓ! வீரரே, பல பாதுகாவலர்களைக் கொண்ட நீர், பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆதரவற்றவராக எவ்வாறு கொல்லப்பட்டீர்?(20)
ஓ! வீரரே {அபிமன்யுவே}, ஒன்று சேர்ந்த பலரால் போரில் நீர் கொல்லப்பட்டதைக் கண்டும், மனிதர்களில் புலியும், பாண்டுவின் மகனுமான உமது தந்தையால் {அர்ஜுனரால்} எவ்வாறு உயிரின் சுமையைத் தாங்கிக் கொள்ள முடிகிறது?(21) ஓ! தாமரைக் கண்ணைக் கொண்டவரே, உம்மை இழந்த பிறகு, பரந்த நாட்டை அடைந்ததோ, எதிரிகளை வீழ்த்தியதோ பார்த்தர்களுக்கு எந்த மகிழ்ச்சியையும் தராது.(22) ஆயுதங்களைப் பயன்படுத்தி அடையப்படும் அருள் உலகங்களுக்கு, நானும் அறம் மற்றும் தற்புலனடக்கப் பயிற்சிகளால் வெகு விரைவில் வந்துவிடுவேன்.(23) போரில் கொல்லப்பட்ட உம்மைக் கண்ட பிறகும், பாவியான நான் இன்னும் மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதால், நேரம் வராதபோது சாக முடியாது என்பது தெரிகிறது.(24) ஓ! மனிதர்களில் புலியே, பித்ருக்களின் உலகத்திற்குச் சென்று, புன்னகையுடன் கலந்த இனிய வார்த்தைகளை என்னிடம் போல வேறு யாரிடம் இப்போது நீர் பேசுவீர்?(25)
உமது பேரழகாலும், புன்னகை கலந்த உமது மென்மையான வார்த்தைகளாலும் சொர்க்கத்தின் அப்சரஸ்களுடைய இதயங்களை நீர் கலங்கடிப்பீர் என்பதில் ஐயமில்லை.(26) ஓ! சுபத்திரையின் மகனே, அறச்செயல்கள் புரிந்தோருக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அடைந்து, அந்த அப்சரஸ்களுடன் இப்போது நீர் கலக்கப் போகிறீர். அவர்களுடன் விளையாடும்போது, நான் உமக்குச் செய்த நற்செயல்களைச் சிற்சில நேரங்களிலாவது நினைத்துப் பார்ப்பீராக.(27) ஓ! வீரரே {அபிமன்யுவே}, {திருமணம் செய்து} ஏழாம் மாதத்தில் நீர் உயிரை இழந்திருப்பதால், இவ்வுலகத்தில் என்னுடனான உமது இணைப்பு ஆறு மாதங்களுக்கே[2] விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது" {என உத்தரை அபிமன்யுவோடு பேசிக் கொண்டிருக்கிறாள்}.(28)
[2] கும்பகோணம் பதிப்பில், "இவ்வுலகில் என்னுடன் உமக்கு இந்த ஆறுமாதகாலம் வரையில் தான் வாழ்க்கை ஏற்படுத்தப்பட்டது. ஏழாவது மாதத்தில் நீர் மரணத்தை அடைந்துவிட்டீர்" என்றிருக்கிறது. பாண்டவர்களின் தலைமறைவு வாசம் முடியும்போது உத்தரை அபிமன்யு திருமணம் நடக்கிறது. அந்தக் காலத்திலிருந்து ஆறு மாதங்களுக்குத் தொடர்ச்சியாகப் போர்த்தயாரிப்புகள் நடந்திருக்க வேண்டும் என்பதற்கு இவ்வரிகள் சான்று பகர்கின்றன.
ஓ! கிருஷ்ணா, தன் நோக்கங்கள் அனைத்தும் கலங்கடிக்கப்பட்டு இவ்வாறு புலம்பிக்கொண்டிருப்பவளும், துன்பத்தால் பீடிக்கப்பட்டிருப்பவளுமான உத்தரையை மத்ஸ்ய அரசக் குடும்பத்தின் பெண்கள் இழுத்துச் செல்கின்றனர்.(29) உத்தரையை இழுத்துச் செல்லும் அந்தப் பெண்களும், கொல்லப்பட்ட விராடனைக் கண்டு அந்தப் பெண்ணைவிட {உத்தரையைவிட} அதிகம் பீடிக்கப்பட்டு உரத்த ஓலமிட்டு அழுது கொண்டிருக்கின்றனர்.(30) துரோணரின் கணைகளாலும், ஆயுதங்களாலும் சிதைக்கப்பட்டு, குருதியால் மறைக்கப்பட்டிருந்த விராடன், அலறும் கழுகுகள், ஊளையிடும் நரிகள் மற்றும் கரையும் காகங்களால் சூழப்பட்டுத் தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறான்.(31) கரிய கண்களைக் கொண்ட அந்த மங்கையர், இன்பமாக அலறிக் கொண்டிருந்த ஊனுண்ணும் பறவைகள் அமர்ந்திருந்ததும், நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்ததுமான மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} உடலைப் புரட்ட முயற்சிக்கின்றனர். துயரால் மிகவும் பீடிக்கப்பட்டுப் பலவீனமடைந்திருக்கும் அவர்களால் தாங்கள் நினைத்ததைச் செய்ய முடியவில்லை {விராடனின் உடலைப் புரட்ட முடியவில்லை}.(32) சூரியனால் எரிக்கப்பட்டு, முயற்சியால் களைப்படைந்திருக்கும் அவர்களது முகங்கள் நிறமற்றவையாக மங்கியிருக்கின்றன.(33) ஓ! மாதவா, அபிமன்யுவைத் தவிர்த்து, {விராட இளவரசனான} உத்தரன், காம்போஜ இளவரசனான சுதக்ஷிணன், அழகன் லக்ஷ்மணன் ஆகிய மற்ற பிள்ளைகள் அனைவரும் கூடப் போர்க்களத்தில் {இவ்வாறே} கிடப்பதைப் பார்" என்றாள் {காந்தாரி}.(34)
ஸ்திரீ பர்வம் பகுதி – 20ல் உள்ள சுலோகங்கள் : 34
ஆங்கிலத்தில் | In English |