Lamentation of Gandhari for her sons! | Stri-Parva-Section-19 | Mahabharata In Tamil
(ஸ்திரீவிலாப பர்வம் - 04) [ஸ்திரீ பர்வம் - 10]
பதிவின் சுருக்கம் : தன் மகன்களான விகர்ணன், துர்முகன், சித்திரசேனன், விவிம்சதி, துஸ்ஸகன் ஆகியோரைச் சுட்டிக்காட்டி, அவர்களது அவல நிலையையும், அவர்களது பெருமையையும் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி...
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "ஓ! மாதவா, ஞானியரால் மெச்சப்பட்ட என் மகன் விகர்ணன், பீமனால் கொல்லப்பட்டுப் பயங்கரமாகச் சிதைந்த நிலையில் வெறுந்தரையில் கிடக்கிறான்.(1) ஓ! மதுசூதனா, உயிரை இழந்து (கொல்லப்பட்ட) யானைகளுக்கு மத்தியில் கிடக்கும் விகர்ணன், நீல மேகங்களால் சூழப்பட்ட கூதிர் கால வானத்தத்தில் இருக்கும் சந்திரனைப் போல இருக்கிறான்.(2) தோலுரை பூட்டப்பட்டதும், தொடர்ந்து வில்லேந்துவதால் வடு நிறைந்ததுமான அவனது {விகர்ணனின்} அகன்ற உள்ளங்கையை உண்ணும் விருப்பத்தால் கழுகுகளால் அது கடுமையாகத் துளைக்கப்பட்டிருக்கிறது.(3) ஓ! மாதவா, ஆதரவற்றவளான அவனது மனைவி, அழுகும் பிணத்தை உண்ண விரும்பும் அந்தக் கழுகுகளைச் சிரமத்துடன் விரட்டிக் கொண்டிருக்கிறாள்.(4) ஓ! மாதவா, ஓ! மனிதர்களில் காளையே, இளமை நிறைந்தவனும், துணிச்சல்மிக்கவனும், அழகனும், ஆடம்பரத்திலேயே வளர்க்கப்பட்டவனும், அனைத்து வகை இன்பங்களுக்குத் தகுந்தவனுமான அந்த விகர்ணன், இப்போது புழுதிக்கு மத்தியில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.(5) துணிக்கோல் கணைகளாலும் {கர்ணிகளாலும்}, முள்பதித்த கணைகளாலும் {நாராசங்களாலும்}, நாளீங்களாலும் அவனது முக்கியப் பகுதிகள் அனைத்தும் துளைக்கப்பட்டிருந்தாலும், அந்தச் சிறந்த பாரதக் குலத்தவனின் அழகு அவனைக் கைவிடவில்லை.(6)
எதிரிகளின் பெருங்கூட்டத்தைக் கொல்பவனான என் மகன் துர்முகன், சபதத்தை நிறைவேற்றுபவனான வீரப் பீமசேனனால் கொல்லப்பட்டு, எதிரியை நோக்கிய முகத்துடன் அதோ உறங்கிக் கொண்டிருக்கிறான்.(7) ஓ! கிருஷ்ணா, ஓ! குழந்தாய், இரைதேடும் விலங்குகளால் அவனது பாதிமுகம் உண்ணப்பட்டிருந்தாலும், ஏழாம் நாள் வளர்பிறைச் சந்திரனைப் போல அஃது அழகாகத் தெரிகிறது.(8) ஓ! கிருஷ்ணா, நான் சொன்னது போலவே இருக்கும் என் வீர மகனின் {துர்முகனின்} முகத்தைப் பார். அந்த என் மகன் எதிரிகளால் கொல்லப்பட்டு, எவ்வாறு இப்படிப் புழுதியை உண்ணும்படி செய்யப்படலாம்?(9) ஓ! இனியவனே, ஓ! தேவலோகத்தை வெல்பவனே, எவன் முன்னிலையில் எந்த எதிரியாலும் நிற்க முடியாதோ, அந்தத் துர்முகன் எவ்வாறு எதிரிகளால் கொல்லப்படலாம்?(10)
ஓ! மதுசூதனா, வில்லாளிகள் அனைவருக்கும் உதாரண வீரனும், திருதராஷ்டிரரின் மற்றொரு மகனுமான சித்திரசேனன், இதோ கொல்லப்பட்டுத் தரையில் கிடப்பதைப் பார்.(11) மலர்களாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அவனது அழகிய வடிவத்தைச் சுற்றிலும், துயரத்தால் பீடிக்கப்பட்டு, பரிதாபகரமாக அழுது கொண்டு, இரைதேடும் விலங்குகளுடன் இப்போது அமர்ந்திருக்கும் அந்த இளம்பெண்களைப் பார்.(12) ஓ! கிருஷ்ணா, அந்தப் பெண்கள் வெளியிடும் உரத்தத் துன்ப ஓலங்களும், இரை தேடும் விலங்குகளின் இரைச்சலும், முழக்கங்களும் எனக்கு மிக ஆச்சரியமானவையாகத் தெரிகின்றன.(13)
ஓ! மாதவா, இளமை நிறைந்தவனும், அழகனும், எப்போதும் மிக அழகிய பெண்களால் கவனித்துக் கொள்ளப்பட்டவனுமான என் மகன் விவிம்சதி, புழுதிக் கறையுடன் அதோ உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்.(14) அவனது கவசம் கணைகளால் துளைக்கப்பட்டிருக்கிறது. பேரிடருக்கு மத்தியில் கொல்லப்பட்ட அந்த வீர விவிம்சதியை, ஐயோ, இப்போது கழுகுகள் சூழ்ந்து {அவனை உண்பதற்காகக்} காத்திருக்கின்றன.(15) போரில் பாண்டவப் படையணிக்குள் ஊடுருவிய அந்த வீரன், பெருமைக்குரிய க்ஷத்திரியனின் படுக்கையில் இப்போது கிடக்கிறான்.(16) ஓ! கிருஷ்ணா, சிறந்த மூக்காலும், அழகிய புருவங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சந்திரனுக்கு ஒப்பாக, புன்னகையுடனும், பேரழகுடனும் கூடிய அவனது {விவிம்சதியின்} முகத்தைப் பார்.(17) கந்தர்வனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தெய்வீக மங்கையரைப் போல முன்பெல்லாம், பெரும் எண்ணிக்கையிலான மிக அழகிய பெண்கள் அவனுக்காகக் காத்திருப்பார்கள்.(18)
எதிரிகளைக் கொல்லும் வீரனும், சபைகளின் ரத்தினமும், தடுக்கப்பட முடியாத போர்வீரனும், எதிரிகளைத் தடுப்பவனுமான என் மகன் துஸ்ஸஹனை எவரால் தாங்கிக் கொள்ள முடியும்?(19) கணைகளால் மறைக்கப்பட்டிருக்கும் துஸ்ஸஹனின் உடலானது, மலர்ந்திருக்கும் கர்ணீகரங்களால் {கோங்கு மரங்களால்} நிறைந்திருக்கும் ஒரு மலையைப் போலப் பிரகாசமாகத் தெரிகிறது.(20) தங்க மாலையுடனும், பிரகாசமான கவசத்துடனும் கூடிய துஸ்ஸஹன், உயிரையிழந்திருந்தாலும், ஒரு வெண்மலையையோ, நெருப்பையோ போன்று பிரகாசமாகத் தெரிகிறான்" என்றாள் {காந்தாரி}.(21)
ஸ்திரீ பர்வம் பகுதி – 19ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |